அந்த நாள் ஞாபகம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
1866,அக்டோபர் 3-ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு வழக்கம்போல் பி.எம். ஆல்கின் என்ற ஸ்டெனோக்ராஃபி ஆசிரியரின் வகுப்பிற்கு நான் சென்றேன். வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. தாமதமாக வரும் மாணவர்களுக்காக அங்கிருந்தவர்கள் காத்திருந்தார்கள். நான் எப்போதும் உட்காரும் இடத்தில் அமர்ந்து என்னுடைய எழுதும் உபகரணங்களை வெளியே எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆல்கின் என்னருகில் வந்து நின்றார். நான் அமர்ந்திருந்த பெஞ்சில் எனக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்தார்.
“ஸ்டெனோக்ராஃபரா வேலை செய்ய உனக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பண்ணுறியா?” அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். “ஒரு ஸ்டெனோக்ராஃபரோட உதவி எனக்குத் தேவைப்படுதுன்னு ஒரு ஆளு என்கிட்ட சொன்னாரு. அந்த வேலைக்கு நீ சரியா இருப்பேன்னு நான் நினைக்கிறேன்.”
“உண்மையிலேயே அப்படி ஒரு வேலையில் சேர்றதுக்கு நான் ரொம்பவும் ஆர்வமா இருக்கேன். ஒரு வேலையில் சீக்கிரம் சேரணும்ன்றதுதான் என்னோட திட்டமும். நான் இப்படியொரு வாய்ப்புக்காக எவ்வளவு காலமா காத்திருக்கேன் தெரியுமா? அந்த அளவுக்கு முழுமையா அந்த வேலையைச் செய்யிற அளவுக்கு நான் இந்த விஷயத்துல பயிற்சி பெற்றிருக்கிறேனான்றதுலதான் எனக்குச் சந்தேகமா இருக்கு.” -நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
நான் இதுவரை ஸ்டெனோக்ராஃபியில் பெற்றிருக்கும் பயிற்சியே இப்போது நான் சேரப்போகும் வேலைக்குப் போதுமானது என்று சொன்னார் ஆல்கின்.
“நான் யாரிடம் வேலைக்குப் போறேன் சார்?” நான் கேட்டேன். “எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கிக்குத்தான் ஒரு ஸ்டெனோக்ராஃபர் தேவைப்படுது. ஒரு சுருக்கெழுத்து தெரிஞ்ச பெண்ணின் உதவியுடன் அவர் கதை எழுத விரும்புறாரு. சம்பளமா ஐம்பது ரூபிள் தருவார்.” ஆல்கின் சொன்னார்.
மிகவும் ஆர்வத்துடன் இந்த வேலையை நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே எனக்கு மிகவும் நன்றாக அறிமுகமான ஒரு பெயர் தாஸ்தாயெவ்ஸ்கி என்பது. சொல்லப் போனால் நான் அவரின் தீவிர ரசிகை. என் தந்தைக்குக்கூட தாஸ்தாயெவ்ஸ்கி என்றால் உயிர். "மரண வீடு' என்ற அவரின் புதினத்தைப் படித்துவிட்டு குலுங்கிக் குலுங்கி நான் அழுதிருக்கிறேன். புகழ் பெற்ற ஒரு பெரிய எழுத்தாளருடன் அறிமுகமாகப் போகிறோம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவரின் படைப்புகளுடன் நேடியாகத் தொடர்பு கொள்வதற்கான அருமையான வாய்ப்பு. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.
தாஸ்தாயெவ்ஸ்கியின் முகவரி எழுதப்பட்ட துண்டுச் சீட்டை ஆல்கின் எனக்கு முன்னால் நீட்டினார். அவர் சொன்னார்: “நாளைக்கு காலையில் பதினொண்ணரை மணிக்கு நீ தாஸ்தாயெவ்ஸ்கியோட வீட்டுல இருக்கணும். தாமதமா போயிடாதே. அதற்காக சொன்ன நேரத்துக்கு முன்னாடியும் போயிட வேண்டாம். அப்படித்தான் அவர் என்கிட்ட இன்னைக்குச் சொன்னாரு!”
கடிகாரத்தைப் பார்த்தவாறு ஆல்கின் தன்னுடைய மேஜைக்கு அருகில் போனார். அன்றைய வகுப்பில் எந்த விஷயத்திலுமே என் கவனம் போகவில்லை என்பதே உண்மை. இறுதியில் எத்தனையோ ஆண்டுகளாக நான் மனதில் நினைத்திருந்த ஒரு விஷயம் நடக்கப் போகிறது. எனக்கொரு வேலை கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி தரக் கூடிய அந்த விஷயத்தையே நான் திரும்பத் திரும்ப மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அதிகம் பேசாத எங்களின் ஸ்டெனோ க்ராஃபி ஆசிரியரான ஆல்கின்கூட சுருக்கெழுத்தில் எனக்கு இருக்கும் வேகத்தை மனம் திறந்து பல முறை பாராட்டியிருக்கிறார். என்னுடைய திறமையைப் பற்றி அவருக்கு இருந்த நல்லெண்ணம் காரணமாகவே அவர் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் என் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அவர் தலையிடவே மாட்டார். நான் இதை நினைக்க நினைக்க என் திறமைமீது எனக்கே அதிக நம்பிக்கை வந்தது.
இப்போது என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்தத் திறமையைக் கொண்டு பணம் சம்பாதிக்கிற அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்பதையும் தெரிந்து கொண்டேன். அதாவது- வாழ்க்கையில் ஒரு சுதந்திரப் பறவையாக மாறப்போகிறேன். விலை மதிக்க முடியாத இலட்சியமாக நான் மனதில் பூட்டி வைத்திருந்த ஒரு எண்ணம் அது. எல்லாவற்றையும்விட எனக்கு ஆச்சரியத்தையும் மன மகிழ்ச்சியையும் தந்த விஷயம் என்ன தெரியுமா? நான் சிறு பிராயத்திலிருந்து விரும்பிப் படிக்கும் எழுத்தாளரான தாஸ்தாயெவ்ஸ்கியின் அறிமுகம் நமக்குக் கிடைக்கப் போகிறது- அவருடன் இணைந்து படைப்புகள் உண்டாக்குவதில் நாமும் பங்களிக்கப் போகிறோம் என்பதுதான்.
கொஞ்சம்கூட எதிர்பார்க்காமல் என்னைத் தேடி வந்த அந்த வேலை வாய்ப்பை, வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் என் தாயிடம் சொன் னேன். நான் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று மனப் பூர்வமாக ஆசைப்படும் என் தாயருக்கு நான் சொன்ன செய்தி மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. பலவித எண்ணங்களுடன் கண்களை மூடாமல் விழித்தே படுத்துக் கிடந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி நேரில் பார்க்க எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். அவரைப் பற்றி பல்வேறு மாதிரி கற்பனை பண்ணிப் பார்த்தேன். அவர் என் தந்தையின் காலத்தைச் சேர்ந்த மனிதர் என்பதால், என் தந்தையின் வயதுதான் அவருக்கும் இருக்கும் என்று நான் கணக்கு போட்டேன். ஒரு நிமிடம் அவரை ஒரு வழுக்கைத் தலையைக் கொண்ட மனிதராக கற்பனை பண்ணி னேன். இன்னொரு நிமிடம் சற்று மெலிந்து ஒல்லியாகத் தெரியும் ஒரு மனிதராக அவரை நினைத்துப் பார்த்தேன். ஆனால் எப்படிஅவரை கற்பனை பண்ணிப் பார்த்தாலும், தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் மட்டும் பிரகாசமானதாகத் தோன்றியது. காரணம்- ஆல்கின் அவரைப் பற்றி என்னிடம் சொன்ன சில வர்ணனைகள். எல்லாவற்றையும்விட என்னிடம் சஞ்சலம் உண்டாக்கிய விஷயம்- தாஸ்தாயெவ்ஸ்கியுடன் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி நான் உரையாடுவது?அவரின் புதினங்களில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களைக்கூட நான்- சொல்லப்போனால்- மறந்துவிட்டிருந்தேன். தன்னுடைய படைப்புகளைப் பற்றி நிச்சயம் பேசுவார். என்னுடைய நண்பர்கள் வட்டத்தைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்கிற மாதிரி எழுத்தாளர்களாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது கலை சம்பந்தப்பட்ட மனிதர்களாகவோ யாரும் இல்லை என்பதே உண்மை. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை ஒரு பிரத்யேக விசேஷப் பிறவிகளாக நினைத்தேன். அவர்களுடன் பேசுவது என்றால் அதற்கென தனியான ஒரு மொழிநடை வேண்டும். இப்போது அந்த நாட்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால் எவ்வளவு சிறு பிள்ளைத்தனமாக நான் சிந்தித்திருக்கிறேன் என்று எனக்கே வெட்கமாக இருக்கிறது.