அந்த நாள் ஞாபகம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
2
இறுதியில் அந்த நாள் வந்தது. மிகவும் உற்சாகத்துடன் படுக்கையை விட்டு நான் எழுந்தேன். அக்டோபர் 4. என் எதிர்கால கணவரான தாஸ்தாயெவ்ஸ்கியை முதல் தடவையாக நான் சந்தித்த நாள் அது. நான் சிறு வயது முதல் மனதில் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு விஷயம் நடைமுறையில் சாத்தியமான நாள் அது. வெறும் மாணவியாக மட்டும் இதுவரை இருந்த ஒரு பெண், இன்று முதல் ஒரு பணி செய்யும் பெண்ணாக மாறப்போகிறாள். தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு வேலையில் அவள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறாள்.
நான் நல்ல நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியே இறங்கி னேன். புதிதாக சில எழுதுபொருட்களை வாங்க வேண்டும், ஒரு புதிய ப்ரீஃப்கேஸ் வாங்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டேன் அது என் கையில் இருக்கும் பட்சம், இளமைக்கு ஒரு கம்பீரத்தையும் புதிய தோற்றத்தையும் அது தந்தது மாதிரியும் இருக்கும். பதினொரு மணிக்கு முன்பே நான் வாங்க வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கி முடித்தேன். ஆல்கின் சொன்னபடி பதினொன்றரை மணிக்கு முன்போ பின்போ நான் அங்கு இருக்கக்கூடாது அல்லவா? நான் கடிகாரத்தை அடிக்கொரு தரம் பார்த்துக்கொண்டே தாஸ்தாயெவ்ஸ்கி வசிக்கும் இடத்தை லட்சியம் வைத்து நடந்தேன். அவர் இருக்கும்அந்த ஃப்ளாட்டிற்கு அலோன்கின் ஹவுஸ் என்று பெயர். வெளிக்கதவை அடைந்து, அங்கு நின்றிருந்த காவலாளியிடம் ஃப்ளாட் எண் 13 எங்கே இருக்கிறது என்று வினவினேன். இரண்டாம் மாடியில் இருப்பதாக அவன் சொன்னான். படிகளில் ஏறி நான் மேலே போனேன். அந்த குடியிருப்புக் கட்டிடத்தில் பெரும்பாலும் வர்த்தகர்களும் அலுவல கங்கள் வைத்துக் கொண்டிருந்தோரும் வாடகைக்கு இருந்தார்கள். நான் என்ன காரணத்தாலோ ரஸ்கால் நிக்கோஃப்பை அப்போது மனதில் நினைத்துப் பார்த்தேன். ("குற்றமும் தண்டனையும்" புதினத்தின் கதாநாயகன்). அவன் இதே மாதிரியான ஒரு அறையில்தான் வசித்திருப்பானோ?
நான் மணியை ஒலிக்கச் செய்தேன். 13-ஆம் எண் கொண்ட வீட்டின் வாசல் கதவு திறந்தது. பூப்போட்ட ஒரு சால்வையை தோளில் அணிந்த ஒரு வயதான மூதாட்டி வந்து நின்றாள். மர்மலதோவ் குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்த சால்வைதான் அந்தக் கிழவியின் தோளில் இப்போது கிடக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு உண்டானது. (மர்மலதோவ்: "குற்றமும் தண்டனையும்" நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்). நான் "குற்றமும் தண்டனை'யும் புதினத்தை சமீபத்தில்தான் படித்து முடித்திருந்தேன். நான் யாரைத் தேடி வந்திருக்கிறேன் என்று அந்த வயதான பெண் விசாரித்தாள். ஆல்கின் கூறி நான் வந்திருப்பதாகவும், அந்தக் கிழவியின் எஜமானர் இப்போது எனக்காகக் காத்திருக்கிறார் என்பதையும் நான் சொன்னேன். நான் இங்கு வரப்போகும் விஷயத்தை ஆல்கின் ஏற்கெ னவே தாஸ்தாயெவ்ஸ்கிக்கும் அறிவித்திருப்பார் அல்லவா?
இலேசாகக் கசங்கியிருந்த என் ஆடையை நான் சரிப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஹாலைத் தாண்டி இருந்த சிறிய அறைக்குள் இருந்த விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளைஞனின் உருவம் கண்ணில் பட்டது. கறுத்த முடி. மேலே அணிந்திருந்த சட்டையின் கழுத்துப் பகுதி திறந்து விடப்பட்டிருந்தது. திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஸ்தம்பித்து சிறிது நேரம் நின்றுவிட்ட அந்த இளைஞன், அடுத்த நிமிடம் பக்கவாட்டுக் கதவு வழியாகக் காணாமல் போனான். (தாஸ்தாயெவ்ஸ்கியின் வளர்ப்பு மகன் அவன். தாஸ்தாயெவ்ஸ்கியின் முதல் மனைவிக்கு- அதற்கு முன்பு இருந்த உறவின் மூலம் பிறந்த மகன். யாருக்கும் அடங்காத அந்த இளைஞனை வாழ்க்கையின் கடைசி காலம் வரை தாஸ்தாயெவ்ஸ்கி பார்த்துக் கொண்டார். இவனின் முழுப்பெயர் பாவல் அலெக்ஸான்ட்ரோவிச் இஸயேவ்).
கிழவி என்னைப் பக்கத்து அறையில் போய் அமரச் சொன்னாள். அது உணவு உண்ணும் அறை என்பதைப் பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடிந்தது. எது எப்படியோ, அறை மிகவும் ஒழுங்காகவும் அழகாகவும் வைக்கப்பட்டிருந்தது. எதிரே இருந்த சுவரில் மிகவும் பெரிய ஒரு கடிகாரம் தொங்கிக் கொண்டிருந்தது. அது அப்போது மணி பதினொன்றரை என்பதை அறிவித்தது. நான் சாப்பாட்டு அறையை நோக்கி நடக்கிறபோது இந்த கடிகாரத்தின் மணிச் சத்தம் ஒலித்தது. எனக்கு அப்போது சந்தோஷமாக இருந்தது.
ஒரு நிமிடத்தில் எஜமான் வந்துவிடுவார் என்றும், அதற்காகக் காத்திருக்கவும் என்றும் கிழவி சொன்னாள். அவள் சொன்னபடி இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும். ஃபயதோர் தாஸ்தாயெவ்ஸ்கி அறைக்குள் வந்தார். அவர் என்னை படிக்கும் அறைக்குள் வரச்சொன் னார். மீண்டும் ஒரு நிமிடம் எங்கோ உள்ளே போனார். எனக்கு தேநீர் கொண்டு வரச் சொல்வதற்காக அவர் அப்போது போனார் என்பது பின்னால் எனக்குத் தெரிய வந்தது.
அந்த அறை விசாலமாக- இரண்டு சாளரங்களைக் கொண்டிருந்தது. வெயில் தேவைக்கும் அதிகமாகவே சாளரத்தின் வழியே அறைக்குள் வந்து கொண்டிருந்தது. அதே அறை பின்னர் பல நாட்கள் இருண்டுபோய், இனம் புரியாத அமைதி சூடிகொண்டதாய் எனக்கு இருந்திருக்கிறது.
அறையின் ஒரு பக்கத்தில் கட்டிலொன்று போடப்பட்டிருந்தது. அதில் இலேசாக நிறம் மங்கிப் போயிருந்த தவிட்டு நிறமுடைய ஒரு போர்வை விரிக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு அருகில் இடப்பட்டிருந்த ஒரு வட்ட வடிவமான மேஜைமேல் சிவப்பு வண்ணத்தில் ஒரு பருத்தித் துணி விரிக்கப்பட்டிருந்தது. மேஜைமேல் ஒரு விளக்கு இருந்தது. விளக்கின் அருகில் இரண்டு மூன்று புத்தகங்கள். அதைச் சுற்றி நாற்காலிகள் இருந்தன. மிகவும் மெலிந்துபோய் காணப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் கட்டிலுக்கு மேலே சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது. ஓவியத்தில் இருந்த அந்தப் பெண் கறுத்த தொப்பியும், கறுப்பு வண்ணத்தில் ஆடைகளும் அணிந்திருந்தாள். "இதுதான் தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி' என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அப்போது அவர் ஒரு மனைவியை இழந்த மனிதர் என்ற உண்மையை நான் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு ஜன்னல்களுக்கும் நடுவில் கறுப்பு வண்ணத்தில் சட்டமிடப்பட்ட ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. வலது பக்கம் அது சற்று ஒதுங்கி இருந்ததால், அந்த இடம் சரியாகப் பராமரிக்கப்படாதது போல் இருந்தது. ஒவ்வொரு சாளரத்தின் பீடத்திலும் அழகான ஒரு சைனீஸ் பூந்தொட்டி இருந்தது. அறையின் இன்னொரு பக்கத்தில் வேறொரு சிறிய படுக்கையும், அதற்கு அருகில் ஒரு சிறு மேஜையும் போடப்பட்டிருந்தன. அந்த மேஜைமீது தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கூஜா இருந்தது.