அந்த நாள் ஞாபகம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அதற்குப் பக்கத்தில் ஒரு டெஸ்க் இருந்தது. அதற்கு அருகில் இருந்துதான் பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லச் சொல்ல நான் நாவலைச் சுருக்கெழுத்தில் எழுதினேன். இந்த அறையைப் பொறுத்தவரை பெரிய அளவில் ஆடம்பரமாக ஒன்றுமில்லை. மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பெரிய வசதிகள் இல்லாத ஒரு மனிதரின் வீடு எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்த அறை.
படிப்பு அறைக்கு வெளியே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு பார்த்தேன். ஒரு கைக்குழந்தையின் அழுகைக் குரலோ, பொம்மை, இல்லாவிட்டால் வேறு ஏதாவது விளையாட்டுப் பொருட்கள் எழுப்பும் ஓசை- இவை ஏதாவதோ காதில் விழாதா என்று காத்திருந்தேன். சற்று முன்பு நான் ஓவியமாகக் கண்ட பெண் ஏதாவதொரு கதவைத் திறந்து எந்த நேரத்திலும் இந்த அறைக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன்.
ஆனால், தான் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டவாறு தாஸ்தாயெவ்ஸ்கிதான் மீண்டும் அறைக்குள் வந்தார். நான் எவ்வளவு காலமாக சுருக்கெழுத்து பயின்று கொண்டிருக்கிறேன் என்று என்னைப் பார்த்து அவர் கேட்டார்.
“கடந்த ஆறு மாசமாகத்தான்.”- நான் பதில் சொன்னேன்.
“உங்களோட ஆசிரியர்கிட்ட நிறைய மாணவர்கள் இருக்காங்களா?”
“ஆரம்பத்துல கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் சுருக்கெழுத்து படிப்பதற்காகச் சேர்ந்தாங்க. ஆனா, இப்போ கத்துக்கிட்டு இருக்குறது இருபத்தஞ்சு பேர்கள்தான்!”
“ஏன்? என்னாச்சு?”
“அவங்கள்ல பெரும்பாலானவங்க நினைச்சிக்கிட்டு இருந்தது ஸ்டெனோக்ராஃபியை ரொம்பவும் சாதாரணமா, எந்தவித சிரமும் இல்லாம கத்துக்கலாம்னு. ஆனா, அவங்க நினைச்சது மாதிரி அது அவ் வளவு ஈஸியான விஷயம் இல்லைன்றது தெரிஞ்ச உடனே அவங்கஅதை விட்டுட்டுப் போயிட்டாங்க. அவ்வளவுதான்.”
“நம்ம ஆளுங்க எந்த ஒரு புதிய வேலையை ஒத்துக்கிட்டாலும் அவங்க போக்கு இப்படித்தான் இருக்கு.”- தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “எந்த விஷயத்திலயும் மக்கள் ரொம்பவும் வேகமாக- பயங்கரமான நம்பிக்கையுடன் காலைத் தூக்கி வைக்கிறாங்க. ஆனா, கொஞ்ச நாட்கள்லயே அந்த நம்பிக்கையை இழந்து, வந்த வேகத்துலயே விஷயத்தை விட்டுட்டு வேற வழியில போயிடுறாங்க. எந்தக் காரியத்திலயும் வெற்றி பெறணும்னா, அதற்கு முதல் தேவை கடுமையான உழைப்பு. இந்தக் காலத்துல கஷ்டப்பட்டு உழைக்கணும்னு யார் நினைக்கிறாங்க?”
முதலில் பார்த்தவுடன் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நடுத்தர வயதைக் கொண்ட மனிதர் என்பதாக என் மனதில் பட்டது. ஆனால் அவர் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒரு இளைஞராக மாறிவிட்டதைப்போல் இருந்தது. முப்பத்தேழு வயதிற்குமேல் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்று அந்தச் சமயத்தில் நான் நினைத்தேன். நல்ல தேக பலத்தையும் சராசரியான உயரத்தையும் கொண்டிருந்தார். அவரின் அடர்த்தி குறைவான தவிட்டு நிறத் தலைமுடியயில் சிவந்த வண்ணத்தில் ஒரு பிரகா சம் தெரிந்தது. நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியை அவர் வாரி விட்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவரின் அந்தக் கண்கள்தாம். அவற்றில் ஒரு வித்தியாசம் தெரிந்ததைப் பார்த்தேன். ஒரு கண்ணின் கருமணி இன்னொன்றைவிடப் பெரியதாக இருந்தது. (வலிப்பு நோய் முற்றி தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு முறை எங்கோ கீழே விழுந்தபோது, கூர்மையான ஏதோ ஒரு பொருள் அவரின் கண்ணில் பட்டு இப்படி ஆகிவிட்டது). கண்களில் தெரிந்த இந்த வித்தியாசம் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு மாறுபட்ட தோற்றத்தைத் தந்தது. அவரின் முகம் மிகவும் வெளிறிப்போய் இருந்தது. உடல் நலக்கேடு அவரை ரொம்பவும் பாதித்து விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவ ரின் முகத்தை எவ்வளவோ காலமாக நான் பல பத்திரிகைகளிலும் பலமுறை பார்த்திருப்பதால், எனக்கு அவரைப் பார்த்தவுடன் ஏதோ அதிக நாட்கள் பழகிய ஒரு மனிதரைப்போல அவர் தெரிந்தார். அடர்த்தியான நீலநிறத்தில் ஒரு மேலாடையை அவர் அப்போது அணிந்திருந்தார். காலர் வெண்மை நிறத்தில் இருந்தது.
இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீருடன் ஐந்து நிமிடங்களில் கிழவி அறைக்குள் வந்தாள். இன்னொரு பாத்திரத்தில் ரொட்டித் துண்டுகள் இருந்தன. அறைக்குள் கடுமையான வெப்பம் இருந்தாலும், எனக்கென்னவோ தாகம் எதுவும் எடுக்கவில்லை. தேநீர் இப்போது வேண்டாம் என்று சொன்னால் அவர் வேறு ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ என்றெண்ணி நான் தேநீரை அருந்தினேன். புகை பிடித்தவாறு தாஸ்தாயெவ்ஸ்கி அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடக்கத் தொடங்கினார். ஏகப்பட்ட சிகரெட்டுகளை அவர் பிடித்தார், அணைத்தார்... மீண்டும் இங்குமங்குமாய் நடந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ, ஒரு சிகரெட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன்.
“மரியாதைக் குறைவாக இருக்கும்னு சிகரெட் வேண்டாம்னு சொல்றீங்களா?” அவர் கேட்டார். நான் சிகரெட் பிடிப்பதில்லை என்றும், பெண்கள் புகைபிடிப்பதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை என்றும், நான் மிகவும் தீவிரமாக வெறுக்கக்கூடிய ஒரு விஷயம் அது என்றும் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
கொஞ்சம்கூட தொடர்பே இல்லாமல் நாங்கள் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு விஷயத்தைப் பேசுவோம். திடீரென்று அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு விஷயத்திற்குப் போய் விடுவோம்.
தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு விஷயத்தை விட்டு இன்னொரு விஷயத்திற்கு தாவிக்கொண்டே இருந்தார். அவருக்கு உடல் நலக்கேடு இருந்ததால், அவர் படும் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்த உடனே, தனக்கு அவ்வப்போது வலிப்பு வரும் என்றும், சமீபத்தில் அந்த நோயின் பாதிப்பிற்கு தான் உள்ளானதாகவும் தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் சொன்னார். அவர் அப்படி எந்தவித தயக்கமும் இல்லாமல் மனம் திறந்து கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிஅவர் பேச ஆரம்பித்தார்.
“ம்... காரியங்கள் எப்படி நடக்குதுன்னு பார்ப்போம். நாம முதல்ல இதைச் சோதித்துப் பார்க்கணும். இதுனால வளர்ச்சி இருக்குமா இல்லையான்னு பார்க்கணும். என்ன சொல்றீங்க?”
நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதென்பது நடக்கப் போகிற ஒன்றல்ல என்றுதான் அப்போது நான் நினைத்தேன். தான் மனதில் நினைக்கிறபடி செயல் வடிவில் கொண்டு வர சுருக்கெழுத்தால் முடியுமா என்று அவர் சந்தேகம் கொள்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஏற்பாட்டை நிச்சயம் அவர் விரும்பப் போவதில்லை என்ற முடிவுக்கே நான் வந்தேன். எது எப்படியோ, அவரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற தீர்மானத்திற்கு வந்த நான் சொன்னேன்: