இதோ இங்கு வரை - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
பிரிந்து போவதன் வேதனைக்குப் பயந்து அவன் இப்படித் தனக்குத்தானே கூறிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் எந்தவொரு பிரிவும் அவனுக்கு வேதனை தரக்கூடிய ஒன்றாக இருந்ததில்லை என்பதே உண்மை.
காலையில் அவன் படகோட்டியைப் போகச் சொன்னான். படகோட்டிக்கு அவனைப் பிரிந்து செல்வதில் சற்று வருத்தம் இருப்பதைப்போல் தோன்றியது. அது ஏன் என்பதற்கான காரணம் அவனுக்குத் தெரியவில்லை. குறைந்த நாட்களே நீடித்திருந்த அந்த நட்பு இயற்கையாகவே அதன் முடிவில் போய் சேர்ந்திருக்கிறது. அதை நினைத்து அந்த மனிதன் எதற்காக வருத்தம் கொள்ள வேண்டும்?
அவன் எந்தச் சமயத்திலும் தனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. ஏதாவது சொல்லாமல் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டபோது, அவன் ஒரு தொகையைச் சொன்னான். அது மிகவும் குறைவான தொகை என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அந்தப் படகோட்டி கேட்டதைவிட அதிகமாக அவன் பணம் கொடுத்தான். பத்து ரூபாய்.
படகுத்துறை அரை அவன் படகோட்டியுடன் சென்றான். நாணு பெட்டியையும் பேக்கையும் எடுத்தான். துடுப்பைக் கரையில் ஊன்றியவாறு படகோட்டி அசட்டுத்தனமாகச் சிரித்தான். கதை தூரத்தில் இருந்தது. படகு தூரத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்ததை விஸ்வநாதன் வெறுப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தான். படகோட்டியின் வாய் நிறைந்த சிரிப்பை இனி அவன் பார்க்க முடியாது.
நாணு கிடைத்தது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது. எந்தத் தேவைக்கும் அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கஷ்டங்களும் புகார்களும் அவனிடம் நிறைய இருந்தன. அவன் வீட்டில் கணக்கிலடங்காத குழந்தைகள் எப்போதும் அழுதவண்ணம் இருக்கின்றன.
கடைசி குழந்தை ஒன்றைத் தவிர, மீதி எல்லாமே ஆண் குழந்தைகள். நாணுவிற்குத் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.
மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு மனிதன் வீட்டு வாசல் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனிதராக இருக்க வேண்டும். எங்கோ தூரத்திலிருந்து வந்திருக்கும் ஒரு புதிய வேற்று ஊர் மனிதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அந்த மனிதர் அங்கு வந்திருக்க வேண்டும்.
விஸ்வநாதன் எழுந்து நின்றான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு உபசரிப்பாளர் வேடத்தை அவன் இப்போது அணிகிறான்.
வந்த மனிதர் திண்ணையில் ஏறத் தயங்கி நின்றிருந்தார்.
“சாயங்காலம் வயல்ல இருந்து வந்தப் போதான் வந்திருக்குற விஷயமே தெரியும்”- அந்த மனிதரின் குரலில் ஒரு பண்பாடு தெரிந்தது.
விஸ்வநாதன் பணிவுடன் சிரித்துக் கொண்டான்.
“இங்கே உட்காருங்க.”
“வேண்டாம்... நான் இங்கேயே நிற்கிறேன்.”
அந்த மனிதரை ஒரு அடி முன்னால் நகர வைப்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டிய வந்தது. கடைசியில் திண்ணையில் ஏறி உட்காராவிட்டால் விஸ்வநாதன் ஒரு வார்த்தைகூட பேசமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட பிறகுதான் அந்த மனிதர் வேறு வழியே இல்லாமல் அவன் சொன்னதைக் கேட்டார். மிகவும் தயங்கியவாறு அவர் வெற்றிலையைப் போட்டார்.
முதுகு வளைந்திருந்த உடலில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. இவ்வளவு வயதான பிறகும், முகத்தில் சிறு சிறு ரோமங்கள் வளர்ந்து காடென காட்சியளித்தன. அவ்வப்போது சிறிதும் எதிர்பாராமல் பேசும்போது தொண்டைக் கமறல் எடுத்துக் கொண்டிருந்தது. உடம்பு சரியான நிலையில் இல்லை என்பதை அறிவிக்கிற மாதிரி விக்கலும் இடையில் தலைகாட்டிக் கொண்டிருந்தது. இவை எல்லாமே அவரிடம் முன்பும் இருந்தன. சிவராமன் அண்ணனிடம் எந்தவித மாற்றமும் இல்லை. அவரிடம் வளர்ச்சியும் இல்லை. முன்பும் இதேபோலத்தான் இருந்தார். யாராக இருந்தாலும் மிகவும் சீக்கிரமே நெருங்கும் விதத்திலும், வீசி எறிய முடியாத மாதிரியும் இருக்கக் கூடிய ஒரு நட்பு முறைகளை அவரால் வளர்த்தெடுக்க முடியும்.
சிவராமன் அண்ணன் தன் பெயரைச் சொன்னார். தன் மூன்று பிள்ளைகளைப் பற்றிக் கூறினார். மூத்தவன் ஆலப்புழையில் இருக்கிறான். கயிறு தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தான். இப்போது அந்தத் தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். ஒரு மருந்து தொழிற்சாலையில் மருந்து அரைக்கும் வேலையில் தற்போது அவன் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலைப்பணிக்குப் போய் கொண்டிருக்கிறாள். இரண்டாவது மகன் ஆலப்புழையில் ஒரு முதலாளியிடம் ஓட்டுநராக வேலை பார்க்கிறான். வீட்டிலுள்ளவர்களுடன் சண்டை மூன்றாவது மகள் பெயர் சுசீலா. அவள்தான் முன்பு அவன் பார்த்த அழகி.
விஸ்வநாதன் கடந்து போன காலத்தைத் திரும்பிப் பார்த்தான். அந்தக் குடும்பப் புராணம் அவன் ஏற்கெனவே கேட்டதுதான். விஸ்வநாதன் ஊரைவிட்டுப் போகும்போது சந்திரன் சிறுவனாக இருந்தான். விஸ்வநாதனுக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தவன் கொச்சு கிருஷ்ணன் தான். இந்தப் பயணத்திற்கு முதல்நாள் இரவு முழுவதும் அவனிடம் தான் ஊரைவிட்டுச் செல்லும் விஷயத்தைக் கூறுவதா, வேண்டாமா என்று சிந்தித்து உறங்காமலேயே அவன் கிடந்தான். கடைசியில் கூறவே வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். அதற்குப் பிறகு இதுவரையில் யாரிடமும் எங்கும் அவன் நினைத்துப் பார்த்து கொச்சு கிருஷ்ணனிடம் அவன் சொல்லாமல் கிளம்பியபோதுதான்.
குடும்பப் புராணத்தை நிறுத்திவிட்டு இடையில் சிவராமன் அண்ணன் விஸ்வநாதனைப் பற்றி விசாரித்தார். விஸ்வநாதன் தன் பெயரை மறைத்து வைக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லையே. மீது அவன் சொன்ன எல்லா விஷயங்களும் உண்மை அற்றவையே. யாரோ ஒரு தந்தையைப் பற்றியும், யாரோ ஒரு தாயைப் பற்றியும் கூறினான். தனக்கே தெரியாத ஊரிலிருக்கும் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு வீட்டின் பெயரைச் சொன்னான். வேறொரு மனிதனின் வாழ்க்கைக் கதை அது.
“சாப்பாடு எங்கே?”- கடைசியில் கிழவர் கேட்டார்.
“அதை நாணு வாங்கிக் கொண்டு வருவான். தேநீர்க் கடையில ஏற்பாடு பண்ணியிருக்கு...”
அது சிவராமன் அண்ணனுக்குத் திருப்தி தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கவில்லை. நாணுவைப் பற்றி அவருக்கு ஒரு விருப்பமின்மை இருப்பதைப் போல் தோன்றியது. “ஒரு பால் கலக்காத தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”- பேச்சுக்கு வெப்பம் கிடைத்தபோது சிவராமன் அண்ணன் கேட்டார்.
“வேணும். நான் அங்கே சொல்லலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.”
அவர் வாசலில் நின்றவாறு உரத்த குரலில் சுசீலாவை அழைத்தார். “ரெண்டு பால் இல்லாத தேநீர் கொண்டு வா.”
விஸ்வநாதன் பாயில் மல்லாக்கப் படுத்திருந்தான். அவனையே அறியாமல் அவனுக்குள் ஒருவித கவலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தனக்குள் அவன் மூடி வைத்திருந்த இந்த விளையாட்டு இப்போதும் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. என்றாவதொரு நாள் யாரிடமாவது தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்த முடியுமா என்று அவனுக்கே சந்தேகம் உண்டாக ஆரம்பித்தது.