இதோ இங்கு வரை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
“விளக்கை இங்கே வைக்கவா?”- தீர்மானம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்ட கேள்வி.
“வையிங்க.”
தரையின் மூலையில் விளக்கை வைத்துவிட்டு வாசல் கதவை அடைத்துவிட்டு அவள் வெளியே சென்றாள். போவதற்கு முன்பு பணத்தை எண்ணி வாங்குவதற்கு மறக்கவில்லை.
“என் பேர் என்ன?”
“கதீஸு!”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த அந்தப் பொம்பளை உனக்கு என்ன வேணும்?”
“அவங்க எனக்கு யாருமில்ல. அவங்க வேற ஜாதிக்காரங்க.”
அவள் சொன்ன பதில் விஸ்வநாதனை மிகவும் கவலைப்படச் செய்தது. அழைத்துக் கொண்டு வந்த பெண் கதீஸின் தாயாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். அதனால் குறிப்பிட்டுக் கூறும்படியான ஆதாயம் எதுவும் அவனுக்கு இல்லை. வெறுமனே ஒரு ஆசை. உறவுகள் அர்த்தமே இல்லாமல் தனக்கு முன்னால் கெட்டு நாறிப் போய் கீழே விழுவதைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள். அவ்வளவுதான். சொல்லப் போனால் ஒரு தரக்குறைவான சந்தோஷம்... இங்கு அப்படி எதுவும் இல்லை. ஒரு சாதாரண விபசாரம் நடக்கும் வீடு.
“இங்கே வேற பெண்களும் இருக்காங்களா?”
“இருந்தாங்க. இப்போ நான் மட்டும்தான் இருக்கேன்.”
சத்திரம்! விஸ்வநாதன் தரையில் மல்லாக்கப் படுத்தான். மேலே மேற்கூரைக்கு அப்பால் இரவு காத்து நின்று கொண்டிருக்கும். இந்த விளக்கைக் கொஞ்சம் அணைத்தால் ஓலை இடைவெளி வழியாக இரவு உள்ளே நுழைந்து வரும். அறை முழுவதும் இரவு நுழைந்திருக்கும். இரவுக்கு அடியில் கதீஸும் விஸ்வநாதனும் மூழ்கிச் சாவார்கள்.
விஸ்வநாதன் விளக்கை வாயால் ஊதி அணைத்தான். இரவை உள்ளே அவனே அழைத்து நுழையச் செய்தான்.
தூங்கி எழுந்தபோது பொழுது நன்கு விடிந்துவிட்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே வந்ததும், வாசலின் மூலையில் தூங்கிக் கொண்டிருந்த மாமா பணிவும் ஞாபக சக்தியும் கொண்ட ஒரு நாயைப் போல திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து வாலை ஆட்டியவாறு நின்றான். அவன் காத்துக்கிடந்தது இந்தத் தருணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.
உள்ளே ஒரு அறையில் தீப்பெட்டி உரசும் சத்தம் கேட்டது. தொடர்ந்து வாசல் கதவைத் திறந்து உச்சிக்கு மேல் தலைமுடியை இழுத்துக் கட்டியிருந்த பெண் வெளியே வந்தான். நடுத்தர வயதைக் கொண்ட வீட்டின் தலைவி.
“என்ன, புறப்பட்டாச்சா?”
அவளுடைய வெளிப்படையான சிரிப்பும், குரலில் இருந்த லேசான காந்தத் தன்மையும், காற்றில் பரவியிருந்த கெட்ட நாற்றமும்... மொத்தத்தில் அச்சத்தைத் தரக் கூடிய ஒரு சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருப்பதைப் போல் விஸ்வநாதனுக்குத் தோன்றியது.
“இல்ல... இங்கேயே தங்கப் போறேன்.”
அந்தப் பெண் அதற்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
அவன் முற்றத்தை நோக்கி நடந்தான். கதவுக்குப் பக்கத்திலிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணும் அவனுக்குப் பின்னால் வந்தாள்.
“சார், உங்களுக்கு ஒரு வீடு வேணும்னு நாணு சொன்னான்.”
“ஆமா...”
அது இருக்கட்டும். நாணு என்ற இரவு உறவுக்காரன் தன்னுடைய இந்தத் தேவையை எப்படித் தெரிந்து கொண்டான் என்று அவன் ஆச்சரியப்பட்டான். ஒருவேளை காலை நேரத்தில் தேநீர்க் கடையின் மனிதர்கள் கூட்டத்தின் ஏதாவதொரு மூலையில் பொழுது விடிந்ததற்காகக் கவலைப்பட்டுக் கொண்டு அந்த மாமா உட்கார்ந்திருப்பான். படகோட்டி முதலில் அந்தத் தேவையைச் சொல்ல அவனுடன் அறிமுகமாகியிருக்க வேண்டும்.
“அப்படி ஒரு வீடு இருக்கு. தேவைன்னா வந்து பாருங்க.”
அதற்கு வெறுமனே விஸ்வநாதன் ‘உம்’ மட்டும் கொட்டினான். ஒரு நிரந்தர வாடிக்கையாளரை உருவாக்குவதற்கான முயற்சியில் அவன் இருந்தாள்.
“ஒரு வாரத்துக்குப் போதும்னா சொன்னீங்க? காலையில நாணுவை அழைச்சிக்கிட்டுப் போய்ப் பாருங்க. பிடிச்சிருந்தா ரெண்டு ரூபா கொடுத்தா போதும்.”
அடக்கி வைக்க முடியாத வெறுப்பு கால்களை நகர்த்த முடியாமற் செய்தது.
அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொல்ல வேண்டும் போல ஒரு வெறி அவனிடம் தோன்றியது.
“ஒரு ரூபா போதாதா?”- வெறுமனே ஒரு பேரம் பேசும் செயலுக்கு அவன் தொடக்கம் இட்டான்.
“சார், அய்யோ...”
“ஒரு ரூபான்னா பரவாயில்ல...”- குரூரமான ஒரு சந்தோஷத்துடன் ஒரு ரூபாயை இழந்தால் உயிரே போய் விடுவதைப் போல அவன் தான் நின்ற இடத்திலேயே நின்றிருந்தான்.
அந்தப் பெண் விளக்கைக் கையில் வைத்தவாறு நின்றிருந்தான். மண்ணெண்ணெய் விளக்கின் திரி வயல்களில் இருந்து வந்த காற்றுப் பட்டு அவளுடைய முகத்தை நோக்கி திரும்பி எரிந்தது. புகை அவளுடைய முகத்தில் பட்டு அழியாத அடையாளங்களை உண்டாக்கி கொண்டிருந்தது.
“வீடு என்னோடதல்ல. என் வீடா இருந்தா சும்மாகூட நான் தந்திடுவேன். அது என் ஒரு அக்காவுக்குச் சொந்தமானது. அவர் இறந்துட்டாங்க. இப்போ இருக்குறது அவங்களோட மகள் மட்டும்தான். அவ இங்கே இல்ல. வர்றப்போ ஒரு ரூபாய்க்கு ஏன் வீட்டை வாடகைக்கு விட்டேன்னு அவ கேட்டா, நான் ஏதோ தப்பு செஞ்சிட்டேன்றது மாதிரி ஆயிடாதா?”
அந்தப் பெண்ணின் குரலில் இருந்த பரிதாபத் தன்மையுடன் அக்கறையும் விஸ்வநானின் மனதைத் தொட்டன. ஒரு ரூபாய் மீது அவளுக்கிருந்த விருப்பம் விஸ்வநாதனின் இதயத்தை ஈரமாக்கியது.
“ஒரு ரூபாய்க்கு மேல ஒரு பைசாகூட நான் தரமாட்டேன்”- நீர்க்குமிழியைப் போல மலர்ந்த ஒரு சிரிப்பை உள்ளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு விஸ்வநாதன் சொன்னான்.
அவள் அதற்கு உடனே எந்த பதிலும் கூறவில்லை. அவனுடைய முகத்தைப் பரிதாபமாக அவள் பார்க்க மட்டும் செய்து கொண்டிருந்தாள்.
விஸ்வநாதன் அப்போதுதான் முதல் தடவையாக அந்தக் கண்களைக் கூர்மையாகப் பார்த்தான். அந்த குரலின் ஆழத்திற்குள் அப்போதுதான் அவன் சென்று கவனித்தான்.
“ஒண்ணரை ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு விடுங்க, சங்கரி அக்கா”- பின்னாலிருந்து நாணு சொன்னான்.
அதற்கு சங்கரி அக்கா எந்த பதிலும் கூறவில்லை. விஸ்வநாதன் அதிர்ச்சியடைந்து நின்றிருந்தான். திடீரென்று அவனுக்கு எல்லாமே புரிந்தது. தூரத்தில் உதயமாகிக் கொண்டிருந்த சூரியன் அவனுக்குச் சொந்தமானது. தலைக்கு மேலே வீசிப் போய்க் கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுது காற்று அவனுக்குச் சொந்தமானது. வீட்டின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால் உண்டாக்கும் இசை அவன் கேட்பதற்காகப் பிறந்தது.
“இந்த இடத்தோட பேர் என்ன?”- அவன் திடீரென்று கேட்டான்.
நாணு பெயரைச் சொன்னான்.
இருபது வருடங்களுக்கு முன்னால் விஸ்வநாதன் உதறிவிட்டுப் போன ஊரின் பெயர் அவனுடைய காதுகளில் வந்து விழுந்தது.
“உங்க பேர் என்ன?”- விஸ்வநாதன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.