
இரண்டாவது நாள் வந்தபோதுதான் விஸ்வநாதனுக்கே அதிர்ச்சியுடன் தெரியவந்தது தான் வந்து சேர்ந்திருப்பது தன்னுடைய சொந்த இடம்- தான் பிறந்து வளர்ந்த கிராமம் என்ற உண்மை.
ஒருமுறைகூட இங்கு வரவேண்டுமென்று அவன் மனதில் நினைத்ததேயில்லை. வாழ்க்கையே இங்கிருந்து தப்பிப்பதாக இருந்தது. பத்து வயது நடக்கிறபோது இந்த இடத்தைவிட்டு அவன் விடைபெற்றான். போகும்போது மனதில் இலக்கு என்ற ஒன்று இருந்தது.
அதை அடையும் வரை அலையோ அலையென்று அலைய வேண்டியதிருக்கும் என்பது அவன் எதிர் பார்த்ததுதான். ஆனால், பிறகு இலக்குகள் மாறி விட்டன. நோக்கங்கள் ஒவ்வொரு நாட்களின் வரையறைக்குள் ஒடுங்கிப் போய்விட்டன கடைசியில். நாளொன்றுக்கு ஒரு இலக்கு என்ற கணக்கில் அது போய் முடிந்திருந்தது.
இருபது வருடங்களில் ஊரில் பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகவில்லை. வயல்களும், ஆறுகளும் குளங்களும் இப்போதும் வயல்களாகவும் ஆறுகளாகவும் குளங்களாகவும்தான் இருந்தன. மூலையில் ஒன்றிரண்டு புதிய கடைகள் வந்து சேர்ந்திருந்தன. வானத்திற்குக் குறுக்கே கோடுகள் போட்டுக் கொண்டு மின் கம்பிகள் தெரிந்தன. பரந்து கிடக்கும் வயல்களுக்கு அந்தப் பக்கம் எங்கோயிருந்து அவ்வப்போது வரும் டாங்கர்களின் இரைச்சல் சத்தம் கேட்டது. ஆற்றன் அக்கரையில் இருக்கும் திரைப்படக் கொட்டகையிலிருந்து மாலை நேரக்காட்சிக்கு முன்னால் ஒலிக்கும் கிராமஃபோனின் ‘கரகர’ சத்தம் கேட்டது. இவையெல்லாம் புதியவை. மீதி அனைத்தும் முன்பு இருந்ததைப் போலத்தான்.
பழைய கிளிகள், பழைய கிண்டல்- கேலிகள், பழைய சாராயக் கடைகள், பழைய மனிதர்கள்.
விஸ்வநாதனுக்கு அவை எதுவுமே புதியவில்லை. மனிதர்களின் முகங்களை அவன் உற்றுப் பார்க்கவேயில்லை. உற்றுப் பார்த்து, அப்படிப் பார்த்த முகத்தை ஞாபகமென்னும் பழைய செப்புப் பெட்டகத்திலிருந்து தோண்டி எடுத்துப் பார்த்தால் ஒருவேளை அவனுக்குப் புரிந்திருக்கலாம். ஓ... பாச்சுநாயர்! பாலன் பிள்ளை! வர்க்கிச்சன்! வஹீது மாப்பிள்ளை... அப்படிச் செய்வதாக இருந்தால், அதனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கவேண்டும். நோக்கம் இருக்க வேண்டும்.
இங்கு அப்படி எதுவுமே இல்லை. இந்த ஊருக்குத் திரும்பி வருவது என்பதுகூட ஒரு அவசியமாக இருக்கவில்லை. பிறகு எதற்குத் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும்? வேறு எந்த இடத்தை அடைந்தாலும் இங்கு வரவேண்டும் என்றோ இங்கு வந்து தங்க வேண்டும் என்றோ மனதில் தோன்றியதே இல்லை. அலட்சியமாக, எந்தவிதமான குறிக்கோளும் இல்லாத மனதுடன் போய்க் கொண்டிருக்கும் அவன் எதற்கு இங்கு வந்து தங்க வேண்டும்? தன்னுடைய சொந்த ஊர் இதுதான் என்பதைத் தெரிந்து கொண்டதாலா? அப்படி இருக்கும் என்று தோன்றவில்லை. காரணம்- பயணத்திற்கு முடிவு இருக்கிறபோதும் ஒரு இரவில் கிராமத்தின் காற்றை சுவாசிக்கிற போதும் அந்த ஒரு உண்மையை அவன் அறிந்திருக்கவே இல்லையே!
படகு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக அதே படகில்தான் அவன் இருக்கிறான். ஏரிகளையும், ஆறுகளையும் தாண்டி படகு பயணித்துக் கொண்டிருந்தது.
விரித்து விடப்பட்டிருந்த பாய்க்குள் காற்று நுழையும்போது பலநேரங்களில் படகின் போக்கு மாறியது. படகோட்டி வேகமாக எழுந்து துடுப்பை எடுக்க முயற்சித்தபோ, அவன் தடுத்தான்.
“வேண்டாம்... அது எவ்வளவு தூரம் போகும்னு தெரியும்.”
“அய்யோ... வந்த வழியிலேயே திரும்பவும் போகுது”- படகோட்டி சொன்னான்.
“போகட்டும்...”
மற்றொரு காற்று வரும். மீண்டும் பயணம் தொடரும்.
படகோட்டிக்கு ஆச்சரியம் தோன்றியிருக்க வேண்டும். இவன் என்ன மனிதன்! பைத்தியம் ஏதாவது பிடித்திருக்கிறதா இவனுக்கு என்று முதலில் சந்தேகம் உண்டாகியிருக்க வேண்டும். இந்தக் காலத்தில் யார் இவ்வளவு தூரம் படகில் பயணம் செய்கிறார்கள்?
அவனுடைய பயத்தைப் புரிந்து கொண்ட அவன் சொன்னான்: “எனக்கு பைத்தியம் கியித்தியம் எதுவும் பிடிக்கல. நான் ஒரு ஓவியன். இந்த ஊர், இதுல இருக்குற நீர் நிலைகள்... இவற்றோட அழகை நான் இதுவரை பார்த்தது இல்ல. எனக்குப் போதும்னு தோணுறது வரை இந்தப் பயணம் தொடரும். உங்களுக்குத் தோணுறப்போ ஓய்வு எடுத்துக்கலாம். அப்படியொண்ணும் அவசரம் இல்ல. ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு கூலி வேணுமோ அதை நான் தந்திருக்கிறேன். ஒருவேளை ரெண்டே நாட்கள்ல என் பயணம் முடிஞ்சாலும் முடிஞ்சிடலாம். சில வேளை அதுவே ரெண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். என் கூட இருக்குற நாட்கள்ல உங்களுக்கு என்ன வேணுமோ அதை நான் தர்றேன்!”
இவ்வளவு விஷயங்களையும் கூறுவதற்கு அவனுக்கு நேரம் கொஞ்சம் அதிகமானது. ஒவ்வொன்றையும் கூறும்போது படபோட்டிக்கு நூற்றுக்கணக்கான சந்தேகங்கள் தோன்றின. பொழுது புலர்வதற்கு முன்னால் வந்து தட்டியெழுப்பி இப்படியெல்லாம் கூறிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றி சந்தேகம் தோன்றாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இந்த மனிதன் பைத்தியமாக இருப்பானோ? கொலைகாரனாக இருப்பானோ? யாராலும் பிடிக்க முடியாத மனிதனாக இருப்பானோ? கள்ளக்கடத்தல் செய்யக் கூடியவனாக இருப்பானோ?
படகோட்டியின் குரலில் இந்தச் சந்தேகங்களெல்லாம் இருந்தன. எனினும், வந்திருக்கும் மனிதனின் விலை மதிப்பு கொண்ட ஆடைகளையும் வீங்கியிருக்கும் பாக்கெட்டையும் பார்த்தபோது அவனுக்கு எதையும் கேட்பதற்கான தைரியம் வரவில்லை. “நான் வர்றேன்”- கடைசியில் அவன் சம்மதித்தான். “ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்திடலாம், வா”- அவன் சொன்னான். மனதிற்குள் அவன் முணுமுணுத்தான்: “உன்னை நான் விடமாட்டேன்- நீ என்ன சொல்லி என்கிட்ட இருந்து தப்ப நினைச்சாலும். அதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.”
அதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கடைசியில் கையில் கிடைத்த ஆள் என்ற முறையில் அவனுடைய தேவை அவசியமாக இருந்தது.
“ஒரு வாரம் நான் வீட்டுல இல்லைன்னா இங்கே பல பிரச்சினைகள் உண்டாகிடும். சம்பாத்தியம்னு எதுவுமே இல்லாத ஆளுங்க நாங்க.”
அவனுடைய முட்டாள்தனமான சிரிப்பை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது என்ன விஷயம் என்பது புரிந்தது. முன் பணம்!
குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி நம்பி அவன் வருவான்? ஒரு நூறு ரூபாய் நோட்டில் அவனுடைய சந்தேகங்களும் பயங்களும் முழுமையாக மறைந்தன.
இதுதான் ஆரம்பம். இன்னொரு புதிய அனுபவம். கணக்கில் அடங்காத பயணங்களின் தொடர்ச்சியில் இன்னொரு புதிய பயணம்.
காலை நேரங்களில் நீர் எழுவதையும் மெலிதாக அசைவதையும் கேட்டான். மதிய நேரத்தில் உஷ்ணம் தகிக்கிறபோது, நிழல்கள் வழியாகப் படகு பயணித்தது.
நிழல்களில் ஒதுங்கியிருக்கும் மீன்கள் படகைச் சுற்றி வளையமிட்டு தங்களின் இருப்பைத் தெரிவிக்கும். அவ்வப்போது அவற்றுக்கு நடுவில் எச்சிலைத் துப்பியபோது உணவுக்காக அவை பண்ணும் போராட்டத்தைப் பார்க்க முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook