இதோ இங்கு வரை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
ஏரியின் நடுவில் இப்படியும் அப்படியுமாக அசைந்தவாறு நகர்ந்து கொண்டிருக்கும் படகுகளின் கைப்பிடிகளின் வழியாகத் தெரிந்த மனிதர்களின் களைத்துப் போன முகங்களைப் பார்த்து அவன் சிரித்தவாறு கைகளை அசைத்தான். வழியில் பார்க்கும் படகுத் துறைகளில் கிடைக்கும் உணவை வாங்கிச் சாப்பிட்டான். நீருக்கு மேலே சூரியன் மூக்கைப் பொத்திக் கொண்டு மூழ்குவதையும் நீர் வளையங்கள் அதில் குளித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தான். நீரின் மேற்பரப்பில் நிலவு உயிர்த்துடிப்புடன் வந்து தெரிந்து கொண்டிருந்ததையும் அவன் பார்த்தான்.
பசியெடுத்து சாப்பிட்டு உறங்கினான்.
மாலை நேரம் வந்துவிட்டால் ஏதாவதொரு படகுத்துறையை அடைவார்கள். படகோட்டியை கரைக்குப் போகச் சொல்லிவிட்டு, படகுத் துறையிலேயே அவன் இருந்து விடுவான். அருகிலிருக்கும் கடைகள், இல்லாவிட்டால் தென்னை மரங்கள், அடர்ந்து நின்றிருக்கும் இடத்தையொட்டி இருக்கும் படகுத்துறை, அதுவும் இல்லாவிட்டால் எப்போதோ பயன்படுத்தி இடிந்து போய்க் கிடக்கும் படகுகள் நிறுத்தும் இடம்- இவற்றில் ஏதாவதொரு இடத்தில் அவன் ஒதுங்கியிருப்பான். படகோட்டி திரும்பி வரும்போது தன் இடுப்பில் சாராயப் புட்டியுடன் வருவான்.
படகு நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது நிலவு தன் முகத்தைக் காட்டியது. சுய உணர்வு படிப்படியாக விடை வாங்கிக் கொண்டிருந்தது. ஏரியின் நடுப்பகுதியில் ஒளிர்ந்து கொண்டிருந்த சந்திரனின் முகத்தை நோக்கி புட்டியை வேகமாக வீசியெறிந்த அவன் உரத்த குரலில் பாடினான். படகோட்டி தெளிவற்ற குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தான். வாய்க்கு வந்தபடி பாடிக் கொண்டிருந்த பாட்டுகளுக்கு மத்தியில் விஸ்வநாதன் தன்னை மறந்து தூங்கி விட்டான். மீண்டும் பொழுது புலர்கிற நேரத்தில் கண்களை விழித்தபோது இதற்கு முன்பு பார்த்திராத ஒரு படகுத் துறையை விட்டு படகு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
மூன்றாவது நாள் காலையில் இங்கு வந்து சேர்ந்தான். அதற்கு முந்தைய நாள் போதை அதிகமாகி விட்டிருந்தது. அவன் மட்டும் தனியாக ஒரு புட்டி குடித்தான். காலையில் கண்விழித்தபோது தலைக்குள் யாரோ பழுக்க வைத்த கம்பிகளால் என்னவோ செய்வதைப் போல அவனுக்கு இருந்தது. தலையை உயர்த்துவதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. சரியாகப் பார்க்க முடியவில்லை. கண் இமைகள் எந்த நிமிடத்திலும் கீழே இறங்குவதற்குத் தயாராக இருந்தன.
“நேற்று கொஞ்சம் அதிகமாயிடுச்சு...”- படகோட்டி சொன்னான்.
“அதை நீ சொல்ல வேண்டாம்”- என்று அவன் பதிலுக்குக் கூறியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அதற்காக மனநிலையில் அவன் இல்லை.
அவன் கரையையே பார்க்கவில்லை. மல்லாந்து படுத்தவாறு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தூங்குகிறானா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதைப் போன்று காலை வேளைகளில் அவனால் தூங்க முடியாது. தளர்ச்சி... சோர்வு சோர்வால் உண்டான தளர்ச்சியில் பிறந்த தூக்கநிலை... அதற்குப் பிறகு எதுவுமே முடியாது. சத்தங்கள் காதுகளில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். வந்து விழும் சத்தங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கும். மூளைக்கு எதுவும் கடந்து செல்லாது.
அப்படிப் படுத்துக் கொண்டே காற்று நீரின் மீது வேகமாக வந்து பாய்வதையும் நீ பதைபதைத்துப் போய் முணுமுணுப்பதையும் அவன் கேட்டான். தூக்கம் கலைந்து எழும் நீர் உதடுகளை விரித்து விசில் அடிப்பதைப் போல காற்றை முத்தமிடுவதையும் அவன் கேட்டான். துள்ளிக் கீழே விழுந்து கொண்டிருக்கும் காலை மீன்களின் சந்தோஷத்தின் தாளத்தை அவனால் உணர முடிந்தது. அத்துடன் படகோட்டியின் சத்தமும் கேட்டது. அவன் நாக்கை வளைத்துக் கொண்டு ஸ்... ஸ்... என்று கூறி அழைத்துக் கொண்டிருந்தான். முதலில் அந்த அழைப்பைக் கேட்டபோது ஒருவகை மெல்லிய வெறுப்பு மனதில் தோன்றினாலும் இப்போது அது தோன்றவில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எந்தச் சத்தத்தைப் பயன்படுத்தியும் அழைக்கலாம். அழைப்பைக் கேட்கும் மனிதன் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.
படகோட்டி மீண்டும் அழைத்தான். அவனுடைய குரலில் அவசரம் தெரிந்தது. அக்கறை இருப்பதை உணர முடிந்தது. அது தெரிந்ததும் அவன் கண்களைத் திறந்து பார்த்தான். படகு நின்று கொண்டிருந்தது. துடுப்பைச் சுற்றி நீர் வளையமிட்டுக் கொண்டிருந்தது.
“சார், பார்த்தீங்களா?”
“என்ன?”
அவன் கரையை நோக்கிக் கண்களைக் காட்டினான். அவனுடைய கண்களில் இருந்த ஆர்வத்தையும் தளர்ந்து போன கன்னங்களில் தெரிந்த ஆபாசமான சிரிப்பையும் பார்த்து அவன் தன்னை மறந்து அங்கு பார்த்தான்.
கரையில், படகுத் துறையில் ஒரு பெண் குளித்து முடித்து ஏறிக் கொண்டிருந்தாள். அதைப் புரிந்து கொள்வதற்கு முன்பு அவன் தன்னை மறந்து எழுந்தான். நனைந்து ஒட்டியிருந்த துணிக்குள் அந்தப் பெண்ணின் பொன் நிறத்தில் இருந்த கால்கள் தெரிந்தன. ஆடை எதுவும் இல்லாத மார்பகங்கள் மீது லட்சக்கணக்கான சூரியன்கள் வந்து விழுந்து கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில் உறைந்து போன அவன் படகை முழுமையாக மறுந்துவிட்டான். படகோட்டியை மறந்துவிட்டான். பிரபஞ்சத்தையே மறந்துவிட்டான். “நான் ஒரு சூரியனாக இருக்கக் கூடாதா?” என்று தன்னை மீறி அவன் ஆசைப்பட்டான்.
பிறகு எல்லாமே பூமியில் நடக்கக் கூடிய விஷயங்கள்தான். அந்த இளம்பெண் தன் தலைமுடியைத் துணியால் துவட்டி பின்பக்கம் இட்டாள். சிவந்து காணப்பட்ட அவளுடைய கையிடுக்கிலிருந்து அவன் தன் கண்களால் அவளுடைய வெறித்துப் பார்க்கும் கண்களைப் பார்த்தான். அப்படிப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து ஓடிவிடுவாள் என்று அவன் நினைத்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவன் துணியை நீருக்குள் நனைத்துப் பிழிந்து கரையில் ஏறி நின்று துணியை மாற்றினாள். பிறகு ஜாக்கெட்டை தலைவழியாக நுழைத்து அணிந்தாள். மார்பிலிருந்து நழுவி துணி கீழே விழும் நிமிடத்திற்காகக் காத்திருந்த இளைஞன் உணர்ச்சிவசப்படும் வண்ணம் படுவேகமாக அவள் ஜாக்கெட்டை அணிந்தாள். நனைத்துப் பிழிந்து வைத்திருந்த துணிகளைக் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தபோது, திடீரென்று திரும்பி தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்களின் முகத்தில் துப்புவதைப்போல அவள் நீரின் மீது காறித் துப்பிவிட்டு, கரையில் மறைந்து போனாள்.
“சரக்கு எப்படி?”- படகோட்டி கேட்டான்.
“பரவாயில்ல...”
“வருவாள்னு தோணுது.”
“எதை வச்சு சொல்றீங்க?”
“அவளுக்குக் கொஞ்சமாவது வெட்கம் இருக்கான்னு பார்த்தீங்களா? ரெண்டு ஆம்பளைங்க தன்னைப் பார்க்குறாங்கன்னு தெரிஞ்சும் அவள்கிட்ட கொஞ்சமாவது சலனம் இருந்ததா?”
அதைக்கேட்டு உரத்த குரலில் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பு அலைகளுக்கு மத்தியில் நீர் மீண்டும் ஓட ஆரம்பித்தது. சிரிப்புச் சத்தம் உண்டாக்கிய உற்சாகத்தில் அவன் துடுப்பை வேகமாகப் போட்டான்.