இதோ இங்கு வரை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
ஒரு படகு அப்போது கடந்து சென்றது. சற்றி மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு வயதான மனிதன் துடுப்பை வேகமாக நீருக்குள் செலுத்தியவாறு அவனை ஆர்வத்துடன் பார்த்தான். படகின் நடுவில் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு குடையை விரித்துப் பிடித்திருந்த பெண் நீர்ப்பரப்பிற்குக் கீழே அசைந்து கொண்டிருந்த அமைதி நிலையைப் பார்த்து பதைபதைத்துப் போய் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவன் ஒரு சிறு குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு படகை நோக்கி நீந்திச் சென்றான். படகு அவனுக்குப் பிடி கொடுக்காமல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
படகுக்கு மேலே காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றின் உதவியுடன் குதித்துப் போய்க் கொண்டிருக்கும் படகைப் பார்த்து விஸ்வநாதனுக்குப் பொறாமை உண்டானது. “இந்தக் காற்று எனக்கும் சொந்தமானது தானே? என்னையும் ஏன் அது தன்னுடன் கொண்டு போகல?- அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
தூரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தபோது வேறொரு படகு அருகில் வந்தது. விஸ்வநாதனின் படகு அவனைத் தேடி வந்து கொண்டிருந்தது. படகோட்டியின் பதைபதைப்பை அவனால் உணர முடிந்தது. ஒருவேளை இதற்கிடையில் நாணுவைப் பார்த்து வீட்டுக்கான முன்பணத்தைக் கூட கொடுத்து முடித்து விட்டு அவன் வந்திருக்கலாம். படகுத்துறையில் தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும் நாணுவின் முகத்தில் தெரியும் பரபரப்பை ஒருநிமிட நேரத்தில் அவனால் காணமுடிந்தது.
பாவம். விஸ்வநாதன் நினைத்தான். கதீஸின் பெயரைச் சொல்லி சங்கரி சித்தி வாங்கியபோது நாணுவிற்கு ஒரு ரூபாய் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். வீட்டிற்காக சங்கரி சித்தி ஒரு ரூபாய் வாங்குகிறபோது...?
“நாணுவிற்கு மட்டுமே இருக்கும்படி ஒரு ரூபா தரணும்”- தனக்குள் விஸ்வநாதன் கூறிக் கொண்டான்.
படகு பார்வைக் கெட்டிய தூரத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
விஸ்வநாதன் மீண்டும் நீருக்கடியில் மூழ்கினான். படகோட்டியின் பதைபதைப்பு மேலும் அதிகமாகட்டும். அவனுடைய வழி தவறட்டும் நிமிடங்களுக்குப் பிறகு நிர்வாணமாக ஒரு நீர் வாழ் உயிரினம் மேலே வரும்போது படகோட்டி அதிர்ந்து போய் கூப்பாடு போடட்டும்.
அவன் குளிர்ந்த நீருக்கடியில் ஒரு ஆமையைப் போல தன்னை மறைத்துக் கொண்டான்.
4
மணலில் அடையாளம் உண்டாக்கி காணாமற்போன மூத்திரத்தைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றிலும் பிச்சைக்காரர்களைப் போல திரிந்து கொண்டிருந்தன பக்கத்து வீடுகளைச் சேர்ந்த மெலிந்து போன கோழிகள். அழுகிப்போன தேங்காய்களின் வாசனை நிறைந்திருந்த காற்றைக் கிழித்துக் கொண்டு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் ஆங்காங்கே நின்றிருந்த குளம்...
இங்கு வருவதற்கு முன்பே இங்குதான் வரப்போகிறோம் என்பது விஸ்வநாதனுக்கு நன்கு தெரியும். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு ஒரு வாடகைக்காரனாக செல்ல முடியும் என்ற உறுதி அவனுக்கு இருந்தது.
இங்குதான் விஸ்வநாதன் பிறந்தான். இந்த வாசலில் விஸ்வநாதன் எட்டு வைத்து நடந்தான். இந்த வாய்க்காலிலும் வரப்பிலும் அவனுடைய மூன்று அன்னைமார்களும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு விஸ்வநாதனைத் தங்களின் தோள்மீது ஏற்றி காக்கா, பூனை கதைகளைச் சொல்லி உணவு ஊட்டினார்கள். இந்தத் திண்ணையில் விஸ்வநாதனை தன் தந்தையைப் பார்த்தான். தந்தையைப் பார்த்துப் பயந்தான். இந்த முற்றத்தில் ஓண நாட்கள் அவனைத் தேடி வந்தன. வயலிலும் ஆற்றின் பள்ளங்களிலும் அவனுடைய மலம் கலந்தது. அங்கு முளைத்த இலைகளும் கிழங்குகளும் ஆற்றில் ஓடிவந்த மீன்களும் நண்டுகளும் அவனுக்கு உணவாயின.
இங்குள்ள காற்று அவனுக்கு நிறம் தந்தது. இந்த வயல் வழியே ஓடி நடந்த வெயில் அவனுடைய தோலிலிருந்து வியர்வையை உறிஞ்சி எடுத்தது. மழை அவனை நினைத்து எடுத்தது. மழை அவனை நனைத்து எடுத்தது. ஏரிகளிலிருந்து கிளம்பி வரும் நீரை முத்தமிட்டு வரும் காற்று விஸ்வநாதனின் தாடை எலும்புகளை மோதி உலுக்கியது. இங்கு விஸ்வநாதன் வளர்வதற்குத் தேவையான அனைத்தும் அவனுக்காகப் படைக்கப்பட்டிருந்தன. கடைசியில் இந்த மண்ணில் விஸ்வநாதனின் தந்தை வெட்டப்பட்டு இறந்துகிடந்தான். அவனுடைய இரத்தம் பட்டிருந்த மணலின் ஈரம் காய்வதற்கு முன்பு அவனுடைய அன்னையின் இரத்தமும் விழுந்தது. இரண்டையுமே விஸ்வநாதன் பார்த்தான். அன்னையின் பிணத்தையும் தந்தையின் பிணத்தையும் அருகருகில் இருக்கும்படி குழிதோண்டி புதைப்பதை ஏழு வயது சிறுவன் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான். அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கடந்தபிறகு, வீட்டிற்குள் இரவுகள் சத்தம் நிறைந்ததாக ஆகி, சங்கரி சித்தியும் ஜானு பெரியம்மாவும் ஆணுக்காக ஒருவரோடொருவர் அடித்துக் கொள்ள, சங்கரி சித்திக்கு வேண்டிய ஒரு ஆள் கள்ளு அருந்திவிட்டு வந்து விஸ்வநாதனின் கன்னத்தில் அடிக்க இந்த மண் அவனிடம் கூறியது. இங்கிருந்து போ. உன்னுடைய நாளையை நான் வேறொரு மண்ணில் உண்டாக்கியிருக்கேன். நாளை முடிந்து, பிறகு பல நாட்களும் கடந்தபின்னர் நீ என்னை வந்து பார்க்கணும், அன்று நான் உன்னை வரவேற்று உபசரிப்பேன்.
விஸ்வநாதன் திரும்ப வந்திருக்கிறான். எங்கெங்கெல்லாமோ சுற்றித் திறந்துவிட்டு கடைசியில் தனக்கே தெரியாமல் இதே மண்ணைத் தேடி அவன் வந்திருக்கிறான்.
மாலை நேரம் முற்றத்தில் தன் பலத்தை அடக்கி வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. விஸ்வநாதன் வாசலில் விரித்திருந்த புல்லால் ஆன பாயில் சாய்ந்து படுத்தான். தூரத்தில் எரிந்து நீங்கிக் கொண்டிருக்கும் சூரியனின் கவலை நிறைந்த முகம் தெரிகிறது.
பிய்ந்து போய்க் காணப்பட்ட வேலிக்கு அந்தப் பக்கத்திலிருந்து சதைப்பிடிப்பான ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தான். நிலத்தின் மூலையில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆடு அவளைப் பார்த்தவுடன் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தது. அதை அவிழ்த்து விட, அது அவளின் பின்பாகத்தில் தன்னுடைய உடம்பால் உரசியவாறு முன்னோக்கி நடந்தது. அவள் சிரித்துக் கொண்டே விஸ்வநாதனைப் பார்த்தாள். பிறகு கையை உயர்த்தி வயிற்றுப் பகுதி மேலும் சற்று அதிகமாகத் தெரியும்படி காண்பித்தவாறு, தலைக்கு மேலே இன்னொரு கைக்கு கயிறை மாற்றியவாறு, பின்பகுதியை அசைத்துக் கொண்டே ஆட்டிற்குப் பின்னால் அவள் வேகமாக ஓடினாள்.
“அவளுடன் பழக்கம் உண்டாக்கிக் கொள்ளலாமா? வேண்டாம். அதற்காக வேண்டியா நான் இங்கு தங்கியிருக்கிறேன்? இந்த ஊர்ல யார் கூடவும் அறிமுகம் ஆகவேண்டாம். பயணம் செய்யும் ஒருத்தனின் பயணத்தில் ஒரு கால்சுவடு இங்கேயும் பதிகிறது. அவ்வளவுதான் இங்கேயிருந்து போறப்போ கால் பாதத்துல ஒரு சின்ன மணங்கூட ஒட்டியிருக்கக் கூடாது”- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.