இதோ இங்கு வரை - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
மாலை நேரம் வந்துவிட்டால் வாத்துக் கூட்டம் தென்னந்தோப்பைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வலைக்குள் தங்களை அடக்கிக் கொண்டன. வெளியே பெண் வாத்துக்கள் பரிதாபமாக அழுதன. உள்ளே ஒரு தனி அறையில் மூன்று பெண்கள் அவனுடைய தந்தையைச் சுற்றி நெருக்கமாகப் படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் போவதற்கு ஒரு இடம் இல்லை.
வாத்துக் கூட்டத்திற்குப் பின்னார் தொப்பிக் குடை அணிந்து விரிந்த மார்புகளைக் கொண்ட அப்பச்சனும் பைலிக்குஞ்ஞும் படகில் மிதந்து வந்தார்கள். அவர்கள் அவனுடைய தந்தையின் நண்பர்கள். மாலை நேரங்களில் அவர்கள் கொண்டுவரும் சுத்தமான பட்டைச் சாராயத்தின் வாசனை வீட்டின் திண்ணைப் பகுதியில் நிறைந்திருந்தது. அவனுடைய தந்தை அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பான். இரும்பைப் போல உறுதி படைத்த அந்தச் சகோதர்கள் அவனுடைய தந்தைக்குப் பயந்தார்கள். சொல்லப் போனால் வாசுவைப் பார்த்தாலே இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் பயம்தான்.
சிவராமன் அண்ணன் விக்கிவிக்கி கூறுகிறார்:- அவனுடைய தனிப்பட்ட குணத்தைத் தெரிந்திருந்தால் பைலில்குஞ்ஞு அல்ல, அவனுடைய தந்தையே நினைத்தால்கூட ஜானு மீது கை வைக்க தைரியம் வராது என்று ஜானு பெரியம்மா அவனுடைய தந்தையிடம் வந்து விஷயத்தைச் சொன்னாள். அவன் தந்தை பைலிக்குஞ்ஞுவைக் கத்தியால் குத்தினான். அவர்கள் பழிக்குப் பழி வாங்கினார்கள். விஸ்வநாதனின் தந்தையை அவர்கள் கோடரியால் வெட்டி வீழ்த்தினார்கள். விஸ்வநாதனின் கால்களுக்குக் கீழே அவனுடைய தந்தையின் இரத்தம் வழிந்து ஓடியது. தடுத்துப் பிடிக்கப்போன அவனுடைய தாயும் அங்கேயே விழுந்து இறந்தாள். அவன் இறந்ததோடு இந்த வீடு நாலாவிதமாகிவிட்டது. கண்ட கழுதைகளும் வீட்டுக்குள் நுழைந்து அந்த இரு பெண்களையும் ஒரு வழி பண்ணின. “இருந்த ஒரே மகனான சின்னப்பையன் எங்கேயோ கிளம்பிப் போயிட்டான். கொஞ்ச நாட்கள் ஆனவுடனே சின்ன பொண்ணை ஒரு மந்திரவாதி மயக்கிக் கொண்டு போயிட்டான். எங்கே கொண்டு போனான்னே தெரியல. ஆறேழு வருடங்கள் ஆனபிறகு, கையில கொஞ்சம் காசோட அவள் திரும்பி வந்தா. இங்கே ஒரு சின்ன வீட்டை வாங்கி வசிக்க ஆரம்பிச்சா. இப்போ முடியாது. வயதாயிடுச்சு. இருந்தாலும் தொழிலை விடல”- சிவராமன் அண்ணன் கூறினார்.
விஸ்வநாதன் தான் அறிந்த அந்தக் கதை மீண்டும் கூறப்படுவதைக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தான். உள்ளுக்குள் ஒருவகை விரக்தி உணர்வு உண்டானது. வெறுப்பு கலந்த காற்றில் அமைதி கூடிக் கொண்டிருந்தது.
“பெண்களுக்கு நன்றி இல்லைன்னு சொல்றது சும்மா இல்ல? சார்...”- சத்தம் காதுகளில் வந்து மோதுகின்றன. “சிறையில் இருந்து வந்த அன்னைக்கு பைலிக்குஞ்ஞு அந்த மலடி கூடத்தான் படுத்தான்.”
விஸ்வநாதன் அந்தக் கணமே எழுந்தான். அவனுடைய பாலப் பருவத்தின் குறுகிய காலம் ஒரு ஆவேசத்திற்குள்ளேயே அடங்கிப் போனது. ஊரைவிட்டுப் போகும்போது? ஒரேயொரு இலட்சியம் மட்டுமே அவனிடம் இருந்தது. நான் அவர்களைக் கொல்வேன். தேடிப்பிடிச்சுக் கொல்வேன். என் தந்தையைக் கொலை செய்தவர்களை, தாயைக் கொன்றவர்களை என்பதே அது. வருடக்கணக்கான அந்த ஒரே வெறி அவனுடைய இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடந்தது. நகரங்கள் மாறின. முகங்கள் மாறின. பகல் இரவுகளின் தன்மைகள் மாறின. வாழ்க்கை மாறியது. அறியாத கூட்டங்களுக்கு மத்தியில் அவன் முதலில் அவர்களைத் தேடினான். தூர இடங்களில் இருக்கும் கிராமங்களில்கூட வக்கிரம் பிடித்த, கொடூரத்தன்மை கொண்ட அவர்களின் கண்களைத் தேடி அவன் அலைந்தான். கடைசியில் அந்தத் தேடலுக்கு எந்தவிதப் பிரயோஜனமும் உண்டாகவில்லை என்று அவனுக்கே தோன்றியபோது, அந்த லட்சியம் மறைந்து போனது. ஆனால், இப்போது, இறுதியில்-
“அவங்க இப்போ எங்கே இருக்காங்க?”
“யாரு?”
“அந்த வாத்து மேய்ப்பவர்கள்.”
“இந்த ஊர்லதான் இருக்காங்க. அந்த வழக்கு இப்போ மறைஞ்சு போன ஒண்ணு. இருபது வருடங்கள் ஓடிப்போச்சே!”
சிவராமன் நாயர் சொன்னார்.
ஒரு நிமிடம் அவன் மரத்துப் போன மாதிரி ஆவிட்டான். இங்கு, இந்தப் பகுதியில் அவன் தேடிக் கொண்டிருந்த எதிரிகள்... சிவராமன் நாயரின் நாக்கு வழியாக நடந்த சம்பவங்கள் வெளியே வருகின்றன. பைலிக்குஞ்ஞு இப்போதும் ஊரை நடுங்கச் செய்து கொண்டிருக்கிறான். இரண்டு கொலைச் செயல்களின் கரை விழுந்த அவனுடைய கைகளைப் பார்த்து ஊர்க்காரர்கள் இப்போதும் பயப்படுகிறார்கள்.
“அப்பச்சன் ரொம்பவும் அமைதியான ஆள். அன்னைக்கு நடந்த சம்பவங்களுக்குப் பிறகு அந்த ஆளை வெளியே அதிகம் பார்க்க முடியல.”
“நான் அவங்களைப் பார்க்கணும்”- விஸ்வநாதன் சொன்னான். “காரணம் ஒண்ணும் இல்ல. சும்மா பார்க்கணும்னு ஒரு விருப்பம். அவ்வளவுதான்” அவனுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த நெருப்பு மெதுவாகப் படர ஆரம்பித்தது. அதன் ஆக்கிரமிப்பு கண்களை அடைந்து அதையும் தாண்டிப் போகப் போகிறதா?
“பைலியை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்”- சிவராமன் நாயர் சொன்னார்: “அந்த ஆளு அந்தச் சாராயக் கடையிலதான் எப்பவும் இருப்பான்.”
விஸ்வநாதன் வாசலில் இறங்கினான். என்னவோ சில குறைகள் அவனிடம் இருக்கவே செய்கின்றன. இந்த ஊருக்கு அவன் புதியவன். யாருக்கும் தெரியாதவன். ஒரு ஆள்கூட அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.
நினைவில் முதல்நாள் இரவு வலம் வந்தது. சாராயக் கடையில் தான் பார்த்த முரட்டுத்தனமான மனிதர்களில் இதற்குமுன் பார்த்த ஒரு முகத்தைப் பார்த்தோமா என்று அவன் யோசித்தான். அடுத்த அறைகளில் இருந்து கேட்ட முரட்டுத்தனமான குரல்களில் கேட்டு மறந்துபோன ஒரு குரலும் இருந்ததா என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தான்.
அவன் வாசலில் இங்குமங்குமாக நடந்தான். ஒரு மங்கலான நிலவு ஓலைகளுக்கு மேலே தெரிந்தது. தூரத்தில் எங்கோ ஒரு குழந்தையை அதன் தாய் அடித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் அழுகுரல் காற்றில் தவழ்ந்து வந்தது. பக்கத்து வீட்டுத் திண்ணையிலிருந்து ஒலித்த ராமநாமம் தன்னுடைய தளர்ந்துபோன கால்களை நீட்டிக் கொண்டு யாராலும் கவனிக்கப்படாமல் கடந்து போய்க் கொண்டிருந்தது.
“சிவராமன் அண்ணே, நீங்க தண்ணி அடிப்பீங்களா?”
“அய்யோ சார், இல்ல...”
ஒரு பெரிய தவறான செயலுக்கு வற்புறுத்துவதைப் போல கிழவர் ஒதுங்கி நின்றார். விஸ்வநாதன் வெறுப்புடன் அந்த முகத்தைப் பார்த்தான்.
எனக்கு உங்களைத் தெரியாதுன்னு நீங்க நினைக்கிறீங்க. அப்படித்தானே? என் குழந்தைப் பருவ நினைவுகளில் குழைந்து போன நாக்குடனும் பின்னிப் பிணைந்த பாதங்களுடனும் நடந்து வந்து ஆர்ப்பட்டம் பண்ணுற? எப்போ பார்த்தாலும் பொண்டாட்டியை அடிச்சு உதைக்கிற சிவராமன் அண்ணனை எனக்குத் தெரியும்னு ஒருவேளை உங்களுக்குத் தெரியாம இருக்கலாம்’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.