இதோ இங்கு வரை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
“எங்கு வரை?”- யாரும் கேட்கவில்லை. கேட்கக் கூடிய ஆளுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் தேவையும் இல்லை. எனினும் விசாரிக்கிறார்கள். “எங்கே போறாப்ல?” மீண்டும் அதே பதில்தான். “இங்கு வரை... இங்கு வரை...” இங்கு என்பது மிகவும் ரகசியமானது. யாரும் யாருக்கும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
அருகிலுள்ள வீட்டிற்குப் போகிறபோது கூட, விசாரிக்கக் கூடிய ஆனிடம் கூறும் பதில் ‘இங்கு வரை’ என்பதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கென்றே இருக்கிற சில தனிப்பட்ட நோக்கங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பொதுவாக யாருக்கும் இல்லை. எனினும், வெறுமனே அவர்கள் அதைப் பற்றி விசாரிக்கிறார்கள். ஒரு நழுவல்தனமான பதிலில் அவர்கள் நிறைவடையவும் செய்கிறார்கள்.
வயல்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கும் வரப்பு வழியாக சைக்கிளை ஒட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஆளும் சைக்கிளும் நீருக்குள் விழ வேண்டியதிருக்கும். இரண்டு பக்கங்களிலும் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க முடிந்தால், வேலை முடிந்து நடந்து செல்லும் பெண்களைப் பார்க்கலாம். மாலை நேரத்தின் விரல்கள் நீரில் வரைந்து கொண்டிருக்கும் ஓவியங்களைப் பார்க்கலாம்.
வயல்கள் முடிந்தன. நிலங்கள்... தென்னந்தோப்புக்கு மத்தியில் மனிதர்கள் நடந்து உண்டாக்கிய பாதை. பாதையின் இறுதி ஒரு சிறு ஒற்றையடிப்பாதையில் போய் முடிகிறது. இரு பக்கங்களிலும் முற்செடிகள் அடர்ந்து கிடக்கின்றன. சட்டையில் முற்கள் தொட்டு கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன.
“எங்கே?”- அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“இங்குவரை...”- பதில்.
“எங்கே?”
“இங்கு... இதோ... இங்கு... இங்கு வரை...”
‘காலத்தின் கெட்ட நாற்றமெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் நீரில் ஒரு பஞ்சுத்துண்டைப் போல மிதந்து போய்க் கொண்டிருக்கிற என்னை இந்த ஊரிலேயே இருக்கும்படி செய்தது அந்தப் பெண்தானா?’
நினைக்க நினைக்க அந்த சந்தேகம் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. ‘அவளோட மார்பகங்களில்தான் சூரியன் உதித்ததா? அவளின் கையிடுக்கில்தான் என் கண் இமைகளின் நிழல் கறுப்பு நிறத்தில் அடையாளங்கள் இட்டனவா?’
நீரில் அலைந்து நீரில் முடிய வேண்டிய என் வாழ்க்கையில் ஒரு தங்குமிடத்தை இருக்கும்படி செய்தது அந்தப் பெண்ணின் நனைந்த தொடைகளின் அசைவா?
அப்படி இருக்க முடியாது.
அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தாள். இந்த அளவுக்கு நிறம் அவளுக்கு இல்லை. அவளோட தலைமுடி சுருண்டமாக இல்லை. பின் பகுதியை மறைக்கிற அளவுக்கு முடி நீளமாக இருந்தது. இதைப்போல தோளைத் தொட்டுக்கிட்டு இருக்கிற சுருள் சுருளான தலைமுடியை அப்போ நான் பார்க்கல. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும். அன்னைக்குக் காலையில அந்தப் படகுத் துறையில அம்மிணியைப் பார்த்திருந்தா கூட, இதேதான் நடந்திருக்கும்’- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.
அம்மிணி ஒரு தட்டில் இரண்டு வேக வைத்த முட்டைகளைக் கொண்டுவந்து வைத்தாள். “சாப்பிடு”- அப்பச்சன் சொன்னான். அவனுடைய குரல் மிகவும் சாந்தமான ஒன்றாக இருந்தது.
‘என்னால நம்பவே முடியல. இந்த மனிதன் எப்படி என் அப்பாவையும் அம்மாவையும் கொன்னான்? பழைய ஒரு இரவுல தன் தம்பியின் கைகளில் கோடரியைக் கொடுத்து ‘வெட்டுடா’ன்னு உரத்த குரல்ல சத்தமா சொல்லுற அளவுக்கு இந்த மென்மையான குரலுக்கு எங்கேயிருந்து உயிர் வந்தது?’ - விஸ்வநாதன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
பைலிக்குஞ்ஞு வெளியே போயிருந்தான். இரவில் வந்தாலும் வரலாம். இல்லாவிட்டால் இல்லை. முதல்நாள் இரவில் சாராயக் கடையில் ஏதாவது நடந்தது என்று விஷயமே அப்பச்சனுக்குத் தெரியவில்லை. விஸ்வநாதன் சொல்லித்தான் அவனுக்கே அந்த விஷயம் தெரிகிறது. அது தெரிந்தபோது, குறிப்பாகக் கூறும்படி ஏதோ நடந்திருக்கிறது என்பது மாதிரிகூட அவன் காட்டிக் கொள்ளவில்லை. இது எப்போதும் நடக்கக் கூடிய ஒன்றுதானே என்பது மாதிரி இருந்தது அப்பச்சனுடைய நடவடிக்கை. அதே நேரத்தில், ஒரு தவறான எண்ணம் அவனுக்கு உண்டானதைப் போல் தோன்றியது. அதை அவன் சொன்னவுடன், அந்த நிமிடமே விஸ்வநாதன் அதற்குத் திருத்தம் கூறவும் செய்தான். “இப்போ இங்கே வந்ததற்குக் காரணம் நான் கோழை என்பதற்காக அல்ல. மன்னிப்புக் கேக்கும்ன்றதுக்காகவும் நான் வரல. உங்க தம்பி எனக்கு புல் மாதிரி. நீங்களும்தான். உங்க தம்பிகிட்ட இன்னைக்கு இங்கு வந்து பார்க்குறதா சொல்லி இருந்தேன். சொன்னதுனால வந்தேன். அவ்வளவுதான்.”
அதைக்கேட்டு அப்பச்சனுக்குக் கோபம் வரும் என்று நினைத்தது விஸ்வநாதனின் தவறு. அந்த ஆள் சிரித்தான். நிராயுதபாணியாக நிற்க வைக்கிற மாதிரி ஒரு வாய் விரிந்த சிரிப்பு. சிரிப்பின் இறுதியில் தனிப்பட்ட முறையில் பல கேள்விகள்.
“பேர் என்ன? எந்த ஊரு? வீட்ல யாரெல்லாம் இருக்காங்க? இந்த ஊர்ல எவ்வளவு நாட்களா இருக்குறதா எண்ணம்?”
அது முடிந்தவுடன், அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பைலிக்குஞ்வின் விவரமில்லாத போக்கு, வாத்துக்களின் பாசம், பைலிக்குஞ்ஞுவின் மகள் அம்மிணியின் குறும்புத் தனங்கள்... ஒரு பழைய உறவினருக்கு வீட்டில் உண்டாகியிருக்கும் புதிய மாறுதல்களை விளக்கிக் கூறுவது மாதிரி இருந்தது அவனுடைய செயல்.
பிரச்சினைகள் நிறைந்த குடும்பச் சூழ்நிலை.
இரண்டு தந்தைமார்களின் மகள். அம்மிணி வாசற்படியில் நின்றவாறு இரண்டு தந்தைகளைப் பற்றியும் புகார் சொன்னாள். இரண்டு தந்தைமார்களும் செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து அவளுக்கு மூச்சு விடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது ஒரு திரைப்படத்திற்கு அழைத்துப் போகும்படி எவ்வளவோ நாட்களாக அவள் கூறிக் கொண்டிருக்கிறாள். அப்பச்சன் அழைத்துப் போகமாட்டான். பைலிக்குஞ்ஞு அவளை அழைத்துச் செல்லத் தயார். ஆனால், அவனுடன் அவள் எப்படி வெளியே செல்வாள்,
யாராவது அவளைப் பார்த்துவிட்டால், அவன் சண்டைக்குப் போய்விடுவான். அவளுக்கு நூறு நாக்குகள் இருக்கின்றன. கதைகளுக்கு மேல் கதைகள் அறையை நிறைத்தன.
முன்பொரு முறை அவள் பைலிக்குஞ்ஞுவுடன் திரைப்படம் பார்க்கச் சென்றாள். நாற்காலியில் அவளை உட்கார வைத்துவிட்டு அவன் வெளியே செல்வதைப் பார்த்தாள். இடைவேளை முடிந்த பிறகும், அவன் வரவில்லை. படம் முடிகிற நேரத்தில் வந்து சேர்ந்தான். முழுமையாகக் குடித்திருந்தான். நடக்கக் கூட முடியவில்லை. கடைசியில் வீடுவரை கைத்தாங்கலாகப் பிடித்து நடத்திக் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது. அப்பச்சன் உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தான். அவனுடைய தம்பியின் செயல்கள் வறண்டுபோய் கோடுகள் விழுந்த முகத்தில் சந்தோஷத்தின் மலர்ச்சியைப் பரவச் செய்தன. அப்பச்சன் ஒரு சன்னியாசி என்று அம்மிணி கூறுகிறாள்.