இதோ இங்கு வரை - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
பாரதி தலையை ஆட்டினாள்.
‘அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவன் அந்த இடத்திற்கே போனான். போகும்போதே அவனுக்கு நன்றாகத் தெரியும்? உடனே அந்த இடத்திற்குத்தான் திரும்பி வரப்போவதில்லை என்ற விஷயம்.
மூன்று வயதுள்ள குழந்தை வாசலில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவன் போனான். மீனாட்சியின் கன்னங்களில் கடைசி கடைசியாக இருந்த பளபளப்பும் இல்லாமற்போய்விட்டிருந்தது. அவள் கண்டபடி திட்டியதை அவன் கேட்டான். அவள் அழுவதைப் பார்த்தான். “பாரதி இறந்துட்டா...”- மீனாட்சி அழுதாள் : “என் மகள்... என் தங்க மகள்... டேய் மோசக்காரா” மீனாட்சியின் வறண்டுபோன நிர்வாணத்தின் ஆழங்களில், புதைந்துகிடந்தவாறு அவன் முழுவதையும் கேட்டான். ‘பாரதி இறந்துட்டா. எப்படி இறந்தா? யாருக்குமே தெரியாது.
ஒரு நாள் ஆற்றின் கரையின் மணலைத் தோண்டிக் கொண்டிருந்த நாய்கள் அவளுடைய முண்டின் ஒரு பகுதியைத் தோண்டி வெளியே போட்டன. போலீஸ் வந்து பார்த்தபோது உடல் அழுக ஆரம்பித்திருந்தது. அவளைக் கொன்றது யார்? அவளுடைய தாய்க்கும் அது தெரியவில்லை. போலீஸிடம் எல்லா விஷயங்களையும் எப்படிக் கூற முடியும்? அவள் பலருடனும் போய்க் கொண்டிருந்தாள். கடைசியில் அவள் போனது மூன்று நான்கு கள்ளு குடிக்கும் ஆட்களுடன். காலம் அவளை அப்படி ஆக்கிவிட்டது. காலத்தின் போக்கில் ஒரு நாள் வடக்கில் இருந்து வந்த ஒரு வாத்துக்காரன் அவளைக் கர்ப்பிணி ஆக்கினான். குழந்தை பிறந்தபோது ஊர்க்காரர்கள் எல்லாருமே பெண்ணின் தாயை வாய்க்கு வந்தபடி மோசமாகப் பேசினார்கள். பிறகு அவர்கள் பெண்ணின் விலை என்ன என்று விசாரித்தார்கள். பின் வாங்கிக் கொண்டிருந்த இளமையும் கூடிக் கொண்டிருந்த முதுமையும் அந்தத் தாயை ஒரு அதிகத் தொகையைச் சொல்ல வைத்தது. விலை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. ஊரில் இனிமேல் யாருக்கும் ஆசை பாக்கி இல்லை என்ற நிலை வந்தபோது, இரண்டு வருடங்கள் கடந்தபிறகு, இரவு நேரங்களில் வெளியே போகும் பழக்கம் ஆரம்பித்தது. மணலில், இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட, பட்டினியால் பாதிக்கப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட இளம்பெண்ணின் அழுகி நாறிப்போன பிணம் ஒரு நாள் கிடந்தது. போஸ்ட்மார்ட்டம் முடிந்து, குழிக்குள் போட்டு மூடினார்கள்.
இரவில் உறங்கவில்லை. பூனைகள் வரவில்லை. எனினும் வாத்துக்கள் அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தன. வாசலில் அலைந்து கொண்டிருக்கும் மனிதனின் நிழல்... நிலவு... அப்பச்சன் தூக்கம் கலைந்து எழுந்தான்.
“என்னடா பைலி?”
பைலி பதிலெதுவும் கூறவில்லை.
“சொல்லு. உனக்கு என்ன மனக் கஷ்டம்,”
பைலி சொல்ல மாட்டான்.
“எதுன்னாலும் நாம சரி பண்ணிடலாம்.”
“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”? பைலி அழுதான் “நாம இந்த ஊரைவிட்டுப் போகிடலாம்.”
மறுநாள் காலையில அப்பச்சனைப் பாயில் காணவில்லை. வெயில் அதிகமானபோது, ஒரு பெண் குழந்தையுடன் அவன் வந்தான்.
“இந்தா... உன் மகள்...” அண்ணன் தம்பியிடம் சொன்னான்: “நம்ம மகள்... நான் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிட்டு வந்தேன். அந்தத் தேவிடியாளுக்கு ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி ஆச்சு...”
“லட்சம் ரூபாய்”? பைலி சொன்னான்.
பைலியின் நாக்கு குழைந்தது : “லட்சம் ரூபாய்...” பைலி பொறித்த மீனின் வாசனையை வெளியே துப்பினான். அவனுடைய கை பட்டு ஒரு குவளை சாய்ந்தது. மேஜையில் வழிந்த கள்ளு கீழே மணலில் போய் அடைந்தது. “லட்சம் ரூபாய்...” - பைலி விரலை உயர்த்திக் காட்டினான். வெளியிலிருந்து வேகமாக வீசிய காற்றில் அவனுடைய தலைமுடி பயங்கரமான சித்திரங்கள் வரைந்தவாறு காற்றில் பறந்து கொண்டிருந்தது. “லட்சம் ரூபாய்...” பைலி குலுங்கிக் குலுங்கி அழுதான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். “லட்சம் ரூபாய் தந்தா...”- பைலி சொல்ல முயற்சித்தான் : “பத்து ரூபாய்க்கு வாங்கின எங்க அம்மிணியை நாங்க யாருக்கும் கொடுக்கமாட்டோம். ஒண்ணு ரெண்டு இல்ல. லட்சம் ரூபாய்...”
விஸ்வநாதன் மேலும் ஒரு குவளைக் குடித்தான். உள்ளுக்குள் சலனங்கள். எதிரிக்கு இதயம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் அங்கு ஈரம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டபோது சிறிதும் எதிர்பார்க்காமல் மதகை உடைத்துக் கொண்டு பரிதாப உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.
“உனக்கு அவள் மேல ஒரு கண்ணு இருக்குன்னு எனக்கு ஒரு சந்தேகம். அப்படி ஏதாவது இருக்குன்னு தெரிஞ்சா, அன்னைக்கி உன் குடலை மண்ணு தின்னும். சொல்லிடுறேன்”... பைலியின் வார்த்தைகள் காற்றில் தவழ்ந்து வந்தன. எங்கோ இருக்கும் ஒரு ஊர் வரை அந்த வார்த்தைகள் போய்ச் சேர்ந்தன.
“நான் இன்னும் குடிக்கணும். என் அம்மிணி கண்ணை நான் பார்க்கணும்.”
எதிரியின் பலவீனம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் போரில் மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். மர்மமான ஒன்று அது.
விஸ்வநாதனின் கண்களில் புதிய ஒரு பிரகாசத்தின் ரேகைகள் தெரிந்தன.
9
முதல் வாரம் ஒரு ரூபாய் வாடகை. இரண்டாவது வாரம் வந்தபோது, கேட்காமலே வாடகையை இரண்டு ரூபாயாக விஸ்வநாதன் உயர்த்திக் கொடுத்தான். ஒவ்வொரு வாரம் முடியும்போதும், ஒரு ரூபாய் அவன் அதிகமாகக் கொடுத்தான். இப்போது நடப்பது ஆறாவது வாரம். ஆறு ரூபாய். இப்படியே போனால் வாரத்திற்கு ஐம்பதோ, நூறோ கூட இந்தச் சிதிலமடைந்த குடிசைக்கு வாடகை கொடுக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகலாம்.
எனினும், ஏதோவொரு உள்ளுணர்வால் உந்தப்பட்டதைப் போல ஒவ்வொரு வாரமும் முடியும்போது தொகையை அவன் அதிகப்படுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி தருவதற்குக் காரணம் என்ன? ஒருவேளை வீசி எறிந்துவிட்டு போகக் கூடிய விஷயங்களில் அதிகப்படியான ஒன்றாக அது இருக்கட்டும் என்று உள்ளுக்குள் யாரோ இருந்து கொண்டு நிரந்தரமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து கூறியிருக்கலாம்.
இடையில் ஒரு ஓவியம் வரைந்தான். அதை முழுமையாக முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டி வந்தது என்பதுதான் உண்மை. என்னவோ எங்கேயோ போதாது போல தோன்றியது. இப்போதுகூட அது முடிவடைந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் உள்ளுக்குள் திருப்தியின்மை என்ற புண் இருந்து கொண்டு வேதனை தந்து கொண்டிருந்தது. நிர்வாணக் கோலத்தில் இருக்கும் இளம்பெண்ணின் கண்களில் கவலையின் ஆழமான நிழல் பரவலாக இருக்கிறது. இடுப்பைக் கைகளால் சுற்றி அணைத்தவாறு, அங்கு முத்தமிடும் ஆண் முகத்தின் சந்தோஷத் தோற்றம்... வித்தியாசம்... எல்லாம் திருப்திதான். ஒன்றே ஒன்றைத் தவிர... அந்த மனிதனின் கண்களில் நிறைந்திருக்கின்ற தாகத்தை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.