இதோ இங்கு வரை - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
காலையில் ஆரம்பித்தது. அதிகாலை வேளையில் பைலி ஆசான் எழுப்பிவிட்டான். சமீபகாலமாகப் பெரும்பாலான நாட்களில் காலை வேளைகளில் அதுதான் நடக்கிறது. வீட்டிற்குள் நுழைந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு காபி குடித்துவிட்டுத்தான் அவன் புறப்படுவான். ஒரு வகையில் பார்க்கப் போனால் அது நல்லதுதான். ஊரின் மாறிப் போன முகம் இப்போது கிட்டத்தட்ட அவனுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டது. சிறு பையனாக இருந்தபோது பார்த்து மறந்து போன பல மனிதர்களின் முகங்கள் இப்போது அவனுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன. பல கதாபாத்திரங்களும் மண்ணை விட்டு மறைந்து போயிருக்கின்றன. அவனுடன் அப்போது சேர்ந்து விளையாடியவர்கள் எல்லாரும் இப்போது தாய்களாகவும் தந்தைகளாகவும் இருக்கிறார்கள். அப்போது பிரபலமாக இருந்த பலரும் இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கை நீட்டி பிழைத்துக் கொண்டிருந்தவர்களின் அடுத்த தலைமுறை மிகப் பெரிய கட்டிடங்களில் வாழ்ந்து கொண்டு ஊரை விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்காமலே பலரும் வந்திருந்தார்கள். குறிப்பாக விசாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானவர்களிடம் மட்டும் சுற்றி வளைத்து எந்தவொரு சந்தேகமும் தோன்றாத மாதிரி கேட்டு அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டான் அவன்.
சிவராமன் அண்ணனை சமீப நாட்களாக அதிகம் பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் ஒருவேளை பைலி இங்கு வருவதாக இருக்கலாம். ஒருவேளை அதுவே ஒரு தோணலாகக் கூட இருக்கலாம். அதற்குக் காரணம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் நேரத்திலேயே சிவராமன் அண்ணன் வயல் பக்கம் போய்விடுவார். அவர் திரும்பிவரும்போது விஸ்வநாதன் அங்கு எங்காவது இருந்தால்தானே.
அவ்வப்போது சுசீலா ஒரு மின்னலைப்போல அவன் கண்களில் படுவாள். ஆரம்பத்தில் அவன்மீது அவளுக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லாமற் போயிருக்கலாம். ஊரிலேயே மிகவும் மோசமான மனிதனுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் புதிதாக வந்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது என்ற வருத்தம் அவளுடைய பார்வையில் தொக்கி இருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.
ஒரு மனிதன் எவ்வளவு நாட்களுக்குத் தன்னுடைய புதுத் தன்மையைப் புதிய ஒரு சூழ்நிலையில் சிறிதும் மங்காமல் நிலை நிறுத்த முடியும்? விஸ்வநாதன் கவலையுடன் நினைத்தப் பார்த்தான். புதிய முகங்களுக்கு மத்தியில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தங்கி நின்று சீக்கிரமே காணாமல் போகும் தன்னுடைய புத்தம் புது தன்மையின் நிலையற்ற நிலையை நினைத்து விஸ்வநாதன் மனதிற்குள் கவலைப்பட்டான்.
“எனக்கு இன்னும் குடிக்கணும் போல இருக்கு” பைலி சொன்னான். விஸ்வநாதன் முழங்கைகளில் தலையை வைத்து சாய்ந்து படுத்திருந்தான்.
“உன் பணம் எதுவும் தேவையில்ல...”
படகு ஒருமுறை சுற்றியது. பிறகு நீரோட்டத்தோடு சேர்ந்து கீழ் நோக்கி ஓடத் தொடங்கியது. ஒரு ஈட்டியின் வேகத்தில் அது ஓடியது. பைலி ஆசான் துடுப்பைக் கையிலெடுக்க ஆரம்பித்தபோது, விஸ்வநாதன் அதைத் தடுத்தான். அவன் சொன்னான் “இப்படியே போகட்டும் அடுத்து வர்ற படகுக் துறையில நாம இறங்குவோம்.”
விஸ்வநாதன் துடுப்பைக் கையில் எடுத்தான். நீரோட்டத்தை அனுசரித்து துடுப்பைப் போட்டு படகின் வேகத்தை அவன் சரிப்படுத்தினான்.
“தேவாலயத்தைத் தாண்டி ஒரு சாராயக்கடை இருக்கு. அங்கே பொரிச்ச மீன் கிடைக்கும்”, பைலி சொன்னான்.
அந்த மனிதன் மதுமீது கொண்டிருந்த தாகம் விஸ்வநாதனை வெட்கப்படச் செய்தது. எவ்வளவு அருந்தினாலும் போதுமென்று தோன்றாத ஒரு மனம். ஒரு ஞாயிற்றுகிழமையைக் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்க வேண்டாமா? காலையில் வந்து எழுப்பி மதுவை நோக்கி அழைத்துச் செல்லும்போது, இந்தப் பயணம் இந்த அளவுக்கு நீளும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
கரைகள் அவர்களுக்கு ஓடிவர முயற்சித்தன. மேலே காற்று வீசிக் கொண்டிருக்க வேண்டும். தென்னை ஓலைகள் சுழலில் சிக்கிக் கொண்டதைப்போல இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தன. படகுத்துறைகள்... மழைக்குப் பிறகு தோன்றிய வெயில்... பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெண்களின் உடல்கள்... உரத்த குரலில் பாடிய படகுப் பாடல்களைத் தாங்கிச் செல்லும் காற்று...
எதிர்பார்த்ததைவிட பைலியுடன் படுவேகமாகத் தான் நெருங்கிவிட்டதை விஸ்வநாதன் நினைத்துப் பார்த்தான். ஆரோக்கியமற்ற முதல் சந்திப்பைச் சொல்லி வருத்தப்படக் கூடிய பைலியைத்தான் அவன் எதிர்பார்த்தான். ஆனால், பிறகு பார்த்தபோது பைலி அவனை ஞாபகத்திலேயே வைத்திருக்கவில்லை. புதிய ஒரு நண்பனைப் பார்க்கும்போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சி அவன் முகத்தில் ஒளி உண்டாக்கியது. அப்பச்சனுக்கு முன்னால் அவன் ஒரு சிறு குழந்தையைப் போல இருந்தான். குறும்புத்தனங்கள் நிறைந்த கள்ளங்கபடமில்லாத, அண்ணனுக்குப் பயப்படக் கூடிய ஒரு இளைஞனின் செயல்கள்... அந்த முகம் விஸ்வநாதனை ஏமாற்றமடையச் செய்தது. ‘எனக்கென்று சேர்த்து வைத்திருக்கும் பிடிவாதமும் குரூரமும் படிப்படியாக இழக்கப்பட்டு கடைசியில் ஒன்றுமில்லாமற் போய் விடுமா’? விஸ்வநாதன் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான்.
‘அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் ஒரு நல்ல நடிகன். என் இலட்சியங்களுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு மாறுதலும் உண்டாகாது.
ஒருநாள் ஒருவரோடொருவர் கட்டிப்பிடிச்சு நிக்கிறப்போ எதிரியின் உடல்ல இருந்து உயிர் என் கைகளுக்கு மாறும். அதை சதின்னோ வஞ்சனைன்னோ எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனால், நான் தாக்குப் பிடிக்கிறது அந்த நிமிடத்துலதான் இருக்கு’? விஸ்வநாதன் தனக்கு கூறிக் கொண்டான்.
பைலி துடுப்பை விஸ்வநாதனிடமிருந்து வாங்கினான். படகு நீரோட்டத்தை விட்டு விலகிக் கரையை நோக்கி நகர்ந்தது. தேவாலயத்தின் உயரமான நிழல் நீர்மீது படர்ந்திருந்தது. தேவாலயத்தின் வாசலில் இங்குமங்குமாக வெள்ளை ஆடைகள் தெரிந்தன. காற்றில் புதிய கள்ளின் வாசனை தவழ்ந்து வந்தது.
தெற்கு திசையில் ஒரு கிராமத்தில் தேக்கி வைக்கப்பட்ட நீரும். வரப்புகளில் கை தட்டினால் ஓசை எழுப்பிக் கொண்டு பறந்தோடி வரும் வெள்ளைக் கொக்குகளும் இருந்த ஒரு பழைய மழைக்காலத்தில் வானத்தில் கார்மேகங்களின் ஊர்வலம்... எப்போது பார்த்தாலும் மழைபெய்த வண்ணம் இருக்கும் மழைச்சாரல் பட்டு வாத்துக்கள் இப்படியும் அப்படியுமாக ஓடும். அவர்களுக்குத் தேவையற்ற சிந்தனைகள்தான் எப்போதும். வயல்களை விட்டு வேறு வயல்களைத் தேடிப்போகும் பாத யாத்திரையின் ஒரு கட்டத்தில் பைலி சொன்னான் : ‘நான் சிறையில இருந்து வெளியே வந்த நாட்கள். பொண்ணுன்னு சொன்னா எனக்கு உயிர் வந்த மாதிரி... அந்த அளவுக்குத் தாகம் எடுத்து திரிஞ்சேன் நான். ஜானுன்ற மலட்டுத் தேவடியாவின் வியர்வை வழிந்து கொண்டிருக்கும் மார்பு... ஒரு சரியான பெண்ணை விதை போட்டால் முளைக்கிற மண்ணைத்தேடி அலைஞ்சேன்...’