இதோ இங்கு வரை - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
அங்கு கவலை என்ற ஒன்று இருக்கிறதா? இல்லாவிட்டால் கவலையின் ஒரு சாயல் மட்டும் அங்கு விழுந்திருக்கிறதா? இப்போதுகூட அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை யாரிடம் போய் அவன் கேட்பான்? அவனுடைய கேள்விக்கு யாராலாவது பதில் சொல்ல முடியுமா? பைலியிடம் கேட்டான்: “இந்த ஓவியத்துல இருக்குறது நீங்கதான். இது பாரதி...” அதைப் பார்த்து தன் தொடையில் ஓங்கி அடித்தான். விழுந்து விழுந்து விரித்தான். அட்டகாசம் பண்ணினான். “இது மனிதப் பிறவிகளா? நான் நினைச்சேன்...” தன்னுடைய முகத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத மனிதனிடம் அவனுக்குப் பரிதாப உணர்ச்சிதான் உண்டானது.
பைலியை இப்போது கூட முழுமையாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள தன்னால் முடியுமா என்ற சந்தேகம் விஸ்வநாதனுக்கே உண்டானது. ஒருவேளை பைலியின் கடைசி கட்டத்தில் அவனைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை தனக்குக் கிடைக்கலாம் என்று விஸ்வநாதன் நினைத்தான். அந்த நேரத்திற்காக விஸ்வநாதன் காத்திருந்தான். ஏராளமான முகங்களைக் கொண்ட மனிதனின் ஒரு முகத்தை மட்டும் பார்ப்பதற்குக் காத்திருப்பது என்பது முட்டாள்தனமான செயல் என்று அவன் நினைக்காமல் இல்லை. எனினும், அதைத் தன்னால் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அந்தக் காத்திருப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது.
சிவராமன் அண்ணனை ஒருநாள் அழைத்துக் கொண்டு போய் அவன் சாராயம் வாங்கிக் கொடுத்தான். சாராயம் குடிக்கும் பழக்கம் இல்லை என்று அதிலிருந்து தப்புவதற்குப் பாவம் அந்த மனிதர் முதலில் முயற்சி செய்து பார்த்தார். ஆனால், முழுமையாக ஊற்றப்பட்ட குவளைக்கு முன்னால் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க அவரால் முடியவில்லை. குடிக்க ஆரம்பித்தவுடன், அது ஒரு தொடர் குடிசைப் போல் ஆகிவிட்டது. அதோடு அறிவுரைகளும். “பைலி கூட அதிகமா நெருங்கிப் பழக வேண்டாம். அவனையும் அவனோட அண்ணனையும் இந்த ஊர்க்காரர்கள் ஒதுக்கி வச்சு எவ்வளவோ வருடங்களாச்சு. பழகுறதுக்குத் தகுதியில்லாத மனிதன். மிகவும் மோசமானவன். கோபம் வந்தால் எது வேணும்னாலும் செய்வான். தனி மனிதனா கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒரு ஊர்ல வந்து வசிக்கிறதுனால சொல்றேன். சார், அவன்கூட நீங்க வச்சிருக்குற நட்பு கெடுதல்லதான் போய் முடியும்”? சிவராமன் அண்ணன் சொன்னார்.
விஸ்வநாதன் ஒரு கீழ்ப்படிதல் உள்ள சிறுவனைப் போல் அவர் சொன்னவை முழுவதையும் காது கொடுத்துக் கேட்டான். நேரம் செல்லச் செல்ல அவனுக்கே வெறுப்புத் தோன்றிவிட்டது. எனினும், பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். “கொஞ்சம் நிறுத்துடா” என்று கூறினால்போதும், அவர் தன்னுடைய பேச்சை வேறு திசை நோக்கித் திருப்பிக் கொள்வார். ஆனால், பைலியைச் சுற்றிப் பேச்சு இருப்பதே நல்லதென்று தோன்றியதால் அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட கூறவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.
அன்று இரவுதான் ஜானு பெரியம்மாவைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். திரும்பி வந்தபிறகு சிவராமன் அண்ணனுடன் சேர்ந்து எல்லா அறைகளிலும் நுழைந்து அவன் பார்த்தான். அன்றுதான் முதல் தடவையாக உள்ளேயிருந்த அறைகளுக்குள் அவன் நுழைகிறான். அழுக்கு, தூசி ஆகியவற்றின் நாற்றத்தைக் கொண்ட அறைகளில் ஒரு விருந்தாளியைப் போல நின்றிருந்தபோது அவனுடைய உடலில் குளிர்ச்சி படர்ந்தது. பழைய அறைகள்... நினைவுகளின் கல்லறைகள்... “இந்த அறையிலதான் ஜானு இறந்து கிடந்தா...” - விஸ்வநாதன் அதைக் கேட்டவாறு நின்றிருந்தான்.
“இப்பவும் நாற்றமடிக்குதுல்ல?” - சிவராமன் அண்ணன் கேட்க, விஸ்வநாதன் தலையை ஆட்டினான். “ஹோ... கடைசி கட்டத்துக்கு வந்தவுடன் வயிற்றுக்குக் கீழே குளத்தைப் போல ஒரு புண். அங்கே புக்கள் துளைச்சிக்கிட்டு இருக்குறதை என் கண்களால் பார்த்தேன். சாகுறதுக்கு முந்தின நாள் என்னை அழைச்சு சொன்னா : “என் சிவராமன் அண்ணே... நான் செய்த பாவத்திற்காக பலனை நான் அனுபவிக்கிறேன். என் முகத்தைக் கொஞ்சம் பாருங்க. இப்போ நான் யாருக்கும் வேண்டாதவளா போனேன். கடைசி காலத்துல வாய்ல தண்ணி ஊத்துவான்னு ஒரு நன்றி கெட்டவளை நான் வளர்த்தேன். இப்போ அவகூட இல்லாமப் போயிட்டா.”
“அவள் எங்கு போனாள்?”- விஸ்வநாதன் கேட்டான்.
“ஒருத்தன்கூட அனுப்பினதா தகவல்... அதற்குப் பிறகு இதுவரை அவளை யாரும் இங்கே பார்க்கல.”
தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகளுக்கும் அவளை வளர்த்த தாய்க்கும் இடையில் உண்டான ஒப்பந்தப் பத்திரத்தில் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதா? தான் பார்க்காத, அறியாத அந்தச் சகோதரியின் பக்கம் இருந்தான் விஸ்வநாதன். “அப்படி எதுவும் அதுல எங்கேயும் இல்ல. இந்த பைலி...” - சிவராமன் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்: “அவள் கையில் இருந்த பணம் முழுவதையும் அது இதுன்னு சொல்லி வாங்கிட்டான். கடைசி காலத்துல அவள்கிட்ட இருந்த ஏழெட்டு பவுன் நகைகளைக் கூட எடுத்துக் கொண்டு அடகு வச்சு கள்ளு குடிச்சவனாக்கும் அந்தப் பிசாசு... இந்த விஷயத்தை அவள் சொன்னப்போ, எனக்கே ரொம்பவும் வருத்தமாப் போச்சு. ’நான் செய்த கெடுதலுக்குப் பலனை நான் அனுபவிக்கிறேன்’னு சாகுற நேரத்துல அவள் நினைக்க ஆரம்பிச்சுட்டா.
செத்துக் கிடக்கிறப்போ அவள் தங்கச்சியும் அவளோட ஆளுங்களும் வந்து செய்ய வேண்டியதைச் செய்தாங்க. இல்லாட்டி இன்னும் அழுகி நாறிப்போய் கிடக்கணும். அவளுக்கு உடம்புக்கு ஆகாம போனவுடனே பைலி இந்தப் பக்கமே காலடி எடுத்து வைக்கல. செத்துப்போன செய்தி தெரிஞ்சவுடன் ஊர்க்காரங்க பலரும் வந்தாங்க. ஆரம்ப காலத்துல இருந்து பழக்கமானர்வளும், பற்று வரவு வைத்துக் கொண்டவர்களும். பிறகு... என்னைப் போல இருக்குற சாதாரண ஆளுகளும். அதற்குப் பிறகு கூட அந்த மகாபாவி இந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கல. பிறகு... இப்பத்தான்... சார், உங்களைப் பார்க்குறதுக்காக அவன் இந்த வீட்டுப் பக்கம் வர்றான். சார், வேற எதுவும் எனக்குத் தோணல. அவன் இந்தத் திண்மையில வந்து உட்கார்றதையும், சத்தம் போட்டு சிரிக்கிறதையும் பார்க்குறப்போ எனக்கு வெறி பிடிச்ச மாதிரி இருக்கு. மனிதனா பிறந்தா ஏதாவதொரு மனிதகுணம் இருக்க வேண்டாமா?”
விஸ்வநாதன் அன்பு இரவு முழுவதும் அந்தக் கேள்வியைத் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான். கேட்க வேண்டியதுதான். இந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும்பொழுது பைலியின் மனம் சுட்டிருக்க வேண்டும். இந்தச் சுவர்களைப் பார்க்கும்போது அவனுடைய சங்கு வெடித்திருக்க வேண்டும்.
‘அப்படியென்றால்...’- விஸ்வநாதன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்: ‘என் விஷயம்,’ இந்தச் சூழ்நிலையில் நான் கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கணும். இந்தக் காற்றின் மணம் என்னை மூச்சு விடாம பண்ணி படுக்க வைத்திருக்கணும். இந்த வீட்டின் அமைதியான நடுநிசி நேரங்கள் என்னைப் பைத்தியம் பிடிக்க வைச்சிருக்கணும்...