இதோ இங்கு வரை - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
“பார்த்தீங்கள்ல... நீங்க எங்கெல்லாம் பார்க்கிறீங்கன்னு தெரியுதுல்ல... அப்பன் வரட்டும். நான் சொல்லுறேன்.”
விஸ்வநாதன் மெதுவான குரலில் விசித்தான். எவ்வளவோ தன்னைக் கட்டுப்படுத்தியும் பழகிப்போன பழக்கங்கள் ஒவ்வொன்றாக வெளியே வருவதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே தமாஷாக இருந்தது.
“நான் சொன்ன அதை இல்ல”- அம்மிணி வருத்தின் ஈரம் கலந்த குரலில் தன்னை நியாயப்படுத்த முயற்சித்தாள்.
“அவனோட ஒரு கால் வீங்கி இருக்கும்.”
அது ஒரு புதிய தகவலாக இருந்தாலும் விஸ்வநாதன் அப்போது அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஈதல்முறையாக அம்மிணியின் முகத்தில் இலேசான படபடப்பின் சாயல் தெரிந்தது. அவள் என்னதான் முயற்சி செய்தாலும், அந்தப் படபடப்பு மேலும் அதிகரிக்கவே செய்தது.
“அம்மிணி, உன் கால்ல வீக்கம் இருக்கா?” - விஸ்வநாதன் கேட்டான்.
“அந்த அளவுக்குச் சந்தேகம் இருந்தாலும் நீங்களே பார்த்துக்கோங்க”- அம்மிணி தன் கால்களை நீட்டிக் காட்டினாள். பழைய முகம்... பிரகாசமான, மனதில் பாடல் வரவழைக்கும் முகம்... அதை மேலும் பிரகாசமாகக்க முயற்சித்தாள்.
“முழங்காலுக்கு கீழே இல்ல”- விஸ்வநாதன் மீதியைச் சொல்லாமல் நிறுத்தினான்.
“முழங்காலுக்கு மேலயா?” - அம்மிணி கேட்டாள்.
குதலில் நடுக்கம்... கன்னத்தில் சிவப்பின் ஆக்கிரமிப்பு.... படபடப்பையும் வெட்கத்தையும் மறைத்து வைக்க அவள் முயற்சிக்க, அவை எதிர்பார்ப்பையும் தாண்டி அதிகமாக வெளிப்பட்டன.
“சரியாகச் சொல்லணும்னா பரிசோதிக்கப் பார்த்தாத்தான் தெரியும்” என்னதான் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் நாக்கு சூழ்நிலைக்கேற்றபடிதான் செயல்படுகிறது.
“அந்த அளவுக்குச் சந்தேகம் இருந்தா....” - அம்மிணி தரையில் நடந்து கொண்டிருந்த ஒரு ஈ பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.
“இருந்தா...”
அதற்குப் பதில் இல்லை. விஸ்வநாதன் அந்த ஒரு நிமிடத்தில் உண்மையான விஸ்வநாதனாக மாறினான். அவன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘விஸ்வநாதா. இப்போ இது வேண்டாம். நீ எதற்கு இந்தப் பெண்ணைக் கட்டிப்பிடிச்சு முத்தமிடுறே, அவளோட இனிமையான சிரிப்பைக் கேட்டு எதற்காக நீ பைத்தியம் பிடிச்சவனைப் போல ஆகுற, இந்த வேகம் உன் வழியை வேறு பக்கம் திருப்பி விடும். உன் வழி இது இல்ல. அவள் உன்னைக் கட்டிப் பிடிக்கட்டும். கால்களில் பின்னட்டும். கைகளால் கழுத்தில் சுற்றட்டும். அவளைத் தூக்கிக் கொண்டு எதற்காக நீ அறைக்குள் வர்றே,’
அவிழ்ந்த பாவாடை கட்டப்பட்டிருந்த இடத்திற்குக் கீழே. அம்மிணியின் நிர்வாணமான வயிற்றுக்கு மேலே ஒரு வியர்வைத்துளி வழிந்து கொண்டிருந்தது.
“இருக்கு?”
“அம்மிணி, என் மேல கோபமா?”
அம்மிணி எழுந்து நின்றாள். முண்டைத் தேடி எடுத்து, இடையை மூடினாள். அவன் மீது கோபப்பட்டாள்.
அவளின் குரலில் மறைந்திருந்த உண்மைத்தன்மை விஸ்வநாதனை அதிர்ச்சியடையச் செய்தது. எல்லா லட்சியங்களும் தாறுமாறாக ஆனதைப் போல, எல்லா உத்வேகங்களும் ஒன்றுமில்லாமற் போனதைப் போல இருந்தது.
“நான் மட்டுமா தப்பு செய்தேன்?” -கோழையைப் போல, குற்றவாளியைப் போல குரலைத் தாழ்த்திக் கொண்டு அவன் கேட்டான். “ஆமா...” - அம்மிணி சொன்னாள். உறுதியான குரல். வாசற்கதவைப் பிடித்து நின்றவாறு அவ்வப்போது வெளியே பார்த்துக் கொண்டே நடுங்கும் குரலில் அவன் கேட்டான் : “எப்படி,”
அம்மிணி உதடுகளைக் கடித்தாள்.
அவளுடைய சிவந்த, கலங்கிய கண்களில் நீர் வளிச்சிட்டது. தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையில் குற்றம் சுமத்துவதை அவனால் வாசிக்க முடிந்தது. ஒரு விஷயமும் இல்லாமல், அம்மிணி அவனை அங்கிருந்து போகும்படி சொன்னாள்.
10
அலையடித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலுக்கும் அடங்கி ஒதுங்கிக் கிடக்கும் ஏரிக்கும் நடுவில் ஒரு சிறு கதை இருந்தது.
கடலுக்கு மேலே மழை பெய்தது. மழைத்துளிகள் அலைகளுக்கு நடுவில் விழுந்து மறைந்து போயின. புதிய துளிகள் வெற்றி முழக்கம் இட்டவாறு உயரத்திலிருந்து குதித்து வந்து நீர்ப்பரப்பில் விழுந்து தலை மோதி இறந்தன. கடல் ஒரு வெற்றி வீரனைப் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தது.
ஏரிக்கு மேலே மழை பெய்தது. முதலில் வந்த மழைத்துளிகள் அங்கேயும் தோற்று அழிந்தன. மழைத்துளிகளின் பிணங்களால் ஏரியின் அடிப்பகுதி நிறைந்தது. பிணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. பிணங்களை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு ஏறி உயர்ந்து கொண்டே வந்தது. ஆறுகளும் வாய்க்கால்களும் ஏரியைத் தோற்கடிக்கும் போரில் பங்காளிகளாக மாறின. அவை தங்களின் பலமான கைகளால் ஏறியின் நூறு முகங்களையும் அடித்துத் தள்ளின.
ஏரி சோர்வுற்றது. எதிர்த்து நிற்க முடியாமல் அது மல்லாந்து விழுந்தது. தோல்வியடைந்த ஏரிக்கு மேலே மழை சீறிச் சீறி பெய்து கொண்டிருந்தது. முடிவே இல்லாத நீர் பெருக்கம். ஏரி இறந்தது. ஏரிக்கு மேலே நீர் பெருகியது. கரைகளுக்கு மூச்சுவிட முடியவில்லை. வாய்க்கால்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டன. ஆறுகள் தங்கள் பாய்ச்சலை நிறுத்திக் கொண்டன. நின்றுவிட்ட வாய்க்கால் நீர் மீதும் இறந்துவிட்ட ஆற்று நீர் மீதும் மழை தொடர்ந்து சிறிதும் இரக்கமே இல்லாமல் பெய்து கொண்டிருந்தது. அற்றின் ஜடம் நீருக்குக் கீழே கிடந்தது. வாய்க்கால் மூழ்கி மறைந்து நீரோட்டம் நின்றது. ஏரியின் இனிமேல் இடமில்லை. கரைகளுக்கு மூச்சை அடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல கரைகளின் தற்கொலைகள் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்தது.
வயல்கள் மூழ்கின. வரப்புகள் மூழ்கின. ஆதரவற்றுப் போன வாய்க்கால் நீர் கண்டபடி ஓடியது. வசிப்பிடங்களின் ஓரங்களில் அது ஓடிக்கொண்டிருந்தது.
ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்த கரையின் அளவு குறைந்தது. அதற்கப்பால் இருந்த வெற்றிவீரனான உடல் ஆர்ப்பரித்தும் கொண்டிருந்தது. “என்கிட்ட வா... என்னுடன் வந்து அடைக்கலம் ஆகிவிடு...” உதவிக்கு வருவதாகக் கடல் கூறிய வாக்குறுதி இரவு பகல் எந்நேரமும் கேட்டுக் கொண்டேயிருந்தது.
ஏரி அந்த அழைப்பைக் கேட்டது. ஆதரவற்ற, கைவிடப்பட்ட முகத்துடன் அது எதையும் காதில் வாங்காதது மாதிரி நடித்துக் கொண்டு படுத்திருந்தது. கை கால்கள் செயலற்றுப் போன போராளி.
ஏரிக்கரையிலிருந்த மனிதர்கள் அந்த அழைப்பைக் கேட்டார்கள். அவர்களின் வயல்கள் நீருக்கடியில் கிடந்தன. ஆறுகளும் வரப்புகளும் மழையின் பயமுறுத்தலுக்குக் கீழ்ப்படிந்தன.
ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்து கரையை அகற்ற வேண்டிய சூழ்நிலை வரும் நாட்கள்... கரை உடையுமா, மனதிர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு வேளை மழையே அதை உடைக்கலாம்.
இரண்டு நீர் நிலைகளுக்கு நடுவிலிருந்து அந்தச் சிறு கதையை மழை நக்கி எடுத்துக் கொண்டு போனால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். அதுவே உடையவில்லையென்றால், அதை மனிதர்கள்தான் அகற்ற வேண்டும். அதற்கு மனிதர்கள் தயார்தான். ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் அது என்றாலும், அதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் வழிந்துவிடும். விளை நிலங்கள் பாழாகிவிடும். வாழ்க்கை பாதிக்கப்படும்.