இதோ இங்கு வரை - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
பதைபதைத்துப்போன அப்பச்சனின் முகத்திற்குக் கீழே ஒன்றல்ல பத்தல்ல நூற்றுக்கணக்கான வாத்துகள் நீரோட்டத்தில் கலந்து சாகின்றன. பழிவாங்கிய உணர்வுடன் கலங்கி ஓடும் நீர் அந்த வாத்துக்களுடன் கீழ்நோக்கி ஓடி மறைகிறது.
என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருக்கும் எதிரி...
ஆற்றை நெருங்கியபோது யாரோ சொல்வது காதில் விழுந்தது: “கரையை வெட்டியவுடன், நீர் ஓட ஆரம்பிச்சிடுச்சு.”
“கடலில் போய் சேரட்டும்”- அவன் கையிலிருந்த புட்டியை ஆற்றில் வீசி எறிந்தான்.
11
கண் விழிக்கும்போது நேரமாகிவிட்டிருந்தது. உடம்பு பயங்கரமாக வலித்தது. தலைக்குள் முந்தின இரவைப் பற்றி நினைவுகள் நிறைந்திருந்தன. அவை ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன. கட்டிப்பிடிக்கிற, கட்டிப்பிடிக்கும்போது மூச்சுவிட முடியாமல் தவிக்கிற, தாகமெடுத்த இளம்பெண். துடிக்கும், துடித்து இறக்கும் வாத்துகள்...
நாணு கேட்டான் : “சாப்பிடுறீங்களா? எழுப்பினா கோபப்படுவீங்கன்னு நினைச்சுத்தான் நான் எழுப்பல...”
“பசிக்கல.”
“தேநீர் கொண்டு வந்து வச்சிருக்கேன். எடுத்துட்டு வரட்டுமா?”
“ம்...”
ஆற ஆரம்பித்திருந்த தேநீரைக் குடிக்கும்போது நாணு சந்தேகம் கலந்த குரலில் கேட்டான் : “நேற்று ராத்திரி எங்கே போயிருந்தீங்க? நான் இந்த ஊர் முழுவதும் தேடியாச்சு.”
அதற்கு விஸ்வநாதன் பதில் எதுவும் கூறவில்லை. உண்மையைச் சொன்னால் அவன் நம்புவது மாதிரி தெரியவில்லை.
“சரியாக ஆளுதான்”- நாணு வருத்தத்துடன் சொன்னான்: “நாங்க பொழுது விடியிறது வரை இங்கே காத்திருந்தோம். கடைசியில பொழுது புலர்றதுக்கு முன்னாடிதான் அந்தப் பெண்ணைக் கொண்டு போய்விட்டேன். அங்கே போனா? அந்தப் பொம்பளை வாய்க்கு வந்தபடி திட்டோ திட்டுன்னு திட்ட ஆரம்பிச்சுடுச்சு...”
“எதற்கு?”
“அவங்களுக்கு ராத்திரி கிடைக்க வேண்டியதுகூட கிடைக்காமப் போச்சே. அதனாலதான்...”
“அவங்களுக்கு ஏதாவது வேணும்னா? கொடுத்துடுவோம்.”
“அதெல்லாம் வேண்டாம்.”
நாணு எப்போதும் தன் பக்கம்தான் இப்பான் என்ற விஷயம் விஸ்வநாதனுக்கு நன்கு தெரியும். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. குடித்து சுயநினைவில்லாமல் விழுந்த இரவு நேரங்களில்கூட இந்த அளவுக்கு சோர்வு அவனிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பெண்ணின் சதைகளில் இந்த அளவுக்கு வெறியும் பலமும் மறைந்திருக்கின்றன என்பதையே நேற்றுத்தான் அவன் தெரிந்து கொண்டான். “நான் வீடுவரை கொஞ்சம் போயிட்டு வந்திடட்டுமா?”- நாணு கேட்டான் : “பொழுது விடிஞ்ச பிறகு அங்கே போகவே இல்ல. ஒரு குழந்தைக்கு உடம்புக்கு முடியல. கெட்டது ஏதாவது பிடிச்சிருக்குமோன்னு தோணுது. ஒரு மைலுக்கு இந்தப் பக்கம் நின்னாக்கூட குழந்தை இருமுறது கேக்குது”- அவன் முணுமுணுத்தான்.
விஸ்வநாதன் நாணு சொன்னதை வெறுமனே கேட்டவாறு படுத்திருந்தான். தந்தையின் குரல், தந்தையின் கவலை. நாணுவின் தேவை வெளிப்படையானது. விஸ்வநாதன் எழுந்து சூட்கேஸைத் திறந்து பத்து ரூபாய் எடுத்து நீட்டினான் : “இந்த ரூபாயை வச்சு மருந்து வாங்கிக் கொடு. மீதியை கையில வச்சுக்கிட்டு கண்டபடி செலவழிச்சிடாதே. வீட்டில கொடுத்திடு.”
பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மனிதனின் முகத்தில் ஒரு நிலவு பிரகாசித்தது. முந்தைய இரவில் தனக்கு உண்டான இழப்பைச் சொல்லி ஒரு பகல் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த மனதில் சிறிதும் எதிர்பார்க்காமல் உண்டான உற்சாகம்...
மீண்டும் வந்து படுத்தான். உறக்கம் வரவில்லை. வேறு எங்கும் போகவும் தோன்றவில்லை. வெறுமனே கண்களை மூடியவாறு படுத்துக்கிடந்தாலே போதும் என்றிருந்தது அவனுக்கு. இரவில் நடைபெற்ற சம்பவங்கள் கண்ணுக்குள் அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருந்தன. வந்த நிமிடத்திலிருந்து போன நிமிடம் வரை ஒருவித இறுக்கத்துடன் ஒருமுறைகூட அந்த நிலையிலிருந்து விலக சம்மதிக்காத பம்பரத்தைப் போல இருந்த அம்மிணி...
ஒரு கனவில் தான் மூழ்கிவிட்டோமோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது. திடுக்கிட்டு எழுந்தபோது வாசலில் பைலியின் உரத்த குரல் கேட்டது. கெட்ட வார்த்தைகளின் திட்டிக் கொண்டிருந்தான். யாரை என்று தெரியவில்லை. ஊர்க்காரர்கள் எல்லாரையும் கண்டபடி பேசிக் கொண்டிருந்தான். சவால் விட்டான் : “எல்லாரையும் கொன்னுடுவேன். குத்திக் கீழே தள்ளிடுவேன்” என்றான்.
விஸ்வநாதன் புன்சிரிப்புடன் எழுந்தான். பைலி திண்ணைக்கு அருகில் வந்து நின்றான். கால் நிலையாக நிற்கவில்லை. வார்த்தைகள் அர்த்தமே இல்லாமல் அவன் வாயிலிருந்து சரமாரியாக வந்த கொண்டிருந்தன.
“உட்கார வேண்டியதுதானே.”
“நான் உட்கார்றதுக்காக வரலைடா”- பைலி கத்தினான்.
“பிறகு எதுக்கு சத்தம் போடணும்?”
“கொல்லப்போறேன்... நான் எல்லாரையும்..”
“என்னையுமா?”
“நீ யாருடா குப்பை? உன்னையும் கொல்லுவேன். உன் அப்பனையும் கொல்லுவேன்.”
“ஏன் எல்லாரையும் கொல்லணும்?”
“கொல்லணும்னு அவசியம் இல்லடா, நாயே.”
எனினும், கடைசியில் அவன் சொன்னான். சொல்லும்போது கண்களில் நீர் நிறைந்துவிட்டது. மதுவின் ஆவி சுட்டு வெந்துபோன தொண்டை... நடந்த சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்ல அவன் மிகவும் பாடுபட்டான். தடுமாறிய தொண்டை வழியாக, விட்டுவிட்டு வந்த வார்த்தைகள் வழியாக விஷயம் வெளியே வந்தது. சாயங்காலம் வந்தபிறகுதான் பைலிக்கு விஷயமே தெரிய வந்தது. காரையில் அப்பச்சன் வாத்துக்களை அழைத்துக் கொண்டு போய் சிறிது நேரம் ஆனபிறகு, பைலி தூரத்திலுள்ள மாட்டுச் சந்தைக்குப் போய்விட்டான். சந்தை நாளின்போது செய்யும் தரகர் வேலைக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். அன்றும் அது கிடைத்தது. அதை வைத்து பைலி நன்றாகக் கொண்டாடினான். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது அம்மிணி அழுது கொண்டிருந்தாள்... அப்பச்சனும் அழுது கொண்டிருந்தான்.
இருநூறுக்கும் மேற்பட்ட வாத்துகள் ஒரே நேரத்தில் இறந்துவிட்டன. முதலில் ஏதாவது நோய் பிடித்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். எனினும், சந்தேகம் இருந்தது. திரும்பி வந்தபோது சந்தேகப்பட்டது உண்மை ஆகிவிட்டது. வாத்துகள் உணவு தின்ற இடத்தில் கிடந்த பொட்டையும் பொடியையும் கொத்தித் தின்ற இரண்டு கோழிகள் செத்து விழுந்து கிடந்தன. ஒரு கூடையிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு ஒருவித நாற்றம் வந்தது. “எதிரிகள் யாரோ செய்த வேலை அது. இந்த ஊர்ல இருக்குற யாரோதான் அதைச் செய்திருக்காங்க. ஆனா? இந்த பைலி ஆள் யாருன்னு கண்டுபிடிப்பான். கண்டுபிடிச்சபிறகு, அந்தத் தப்பைச் செஞ்சவன் யாராக இருந்தாலும் உயிரோட இருக்க முடியாது. அவன் வயித்தைக் கிழிச்சிடுவேன். கழுத்தைக் கடிச்சு தனியா எடுத்திடுவேன்”- பைலி கத்தினான்.
“வாத்துக்கள் எல்லாமே செத்துப்போச்சா?” -கவலை உண்டானவனைப் போல விஸ்வநாதன் விசாரித்தான்.
“மூன்று கூட்டம் வாத்துக்கள் இருந்துச்சுன்னா? ஒரு கூட்டம் செத்துப்போச்சு. ஒரு கூடையில இருந்த உணவைத் தின்ன வாத்துகள் மட்டும் செத்திருக்கு. வாத்துகள் செத்துப்போனதுக்காக நான் கவலைப்படல. இந்த ஊர்ல இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யிற அளவுக்கு ஒரு நாய் வளர்ந்திருக்குன்னா... அவன் யாருன்னு உடனடியா தெரியணும். யாராக இருந்தாலும் அதுதான் அவனோட கடைசி கெட்ட செயலா இருக்கணும்.”