இதோ இங்கு வரை - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
குரூரமான ஒரு சந்தோஷத்துடன், பயங்கரமான ஒரு வெறியுடன் நீர் பிளந்து மாறின. அலைகளின் கர்ஜனை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மிகவும் அருகில் கீழே காதுகளுக்கு அடியில் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது.
எனினும், சிறிதும் பிடிபடாத ஒரு ஆச்சரியத்தைப் போல கடல் தூரத்தில் தூரத்தில் போய்க் கொண்டேயிருந்தது. நாக்கை இங்கும் உடலை அங்கும் வைத்து நின்று கொண்டிருக்கும் ஒரு அபூர்வப் பிறப்போ கடல்.
குளிர்ந்த காற்றுக்கு வேகம் அதிகரித்தது. தளர்ந்துபோன தோள்களிலிருந்து வியர்வைத் துளிகள் கீழே வழிந்தன. ‘இதோ ஒரு நிமிடம்’- இதயம் ஆவேசக் குரலில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தது. ‘நீ தேடி நடந்த நிமிடம்... உனக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறப்பு நிமிடம்...’
திடீரென்று கடலின் சத்தம் குறைந்தது போல் இருந்தது. உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்த ஒரு இசைக்கருவி திடீரென்று தன் சத்தத்தின் அளவைக் குறைத்துக் கொண்டது போல் அது இருந்தது. அதற்கான காரணத்தைத் தேடுவதற்கு முன்பு, தலைக்கு மேலே உருண்டையான கற்கள் வந்து விழுந்தன. முகத்தில் வந்து மோதும் நீரின் கனமான திவளைகள். இருட்டைப் பார்க்க முடியவில்லை. கடலின் அழைப்பைக் கேட்க முடியவில்லை. கண்களுக்கு முன்னால், காதுகளுக்கு முன்னால் மழையின் ஆர்ப்பாட்டமான ஜால வித்தைகள். “பைலி”- அவன் உரத்த குரலில் அழைத்தான். மைல்களுக்கப்பால் எங்கோயிருந்து பைலி திட்டுவது காதில் விழுந்தது. கெட்ட வார்த்தைகளால் ஏசுவது கேட்டது.
படகுக்குள் மழை சீறி விழுந்தது. துடுப்பு பலமிழந்து நழுவியது.
இப்போது படகு நீரால் நிறையும். பாதங்களை மூழ்கச் செய்யும் நீர் நிமிடங்களுக்குள் இடுப்புவரை வந்துவிடும். ஒரு ஓட்டை விழுந்த பாத்திரத்தைப்போல படகு ஆழங்களை நோக்கி ஓசையெழுப்பியவாறு போகும். அப்போது பைலி -
மழை அலறி அழைத்தது. மழையின் கர்ஜனை இரத்த நாளங்களை உறையச் செய்தது.
நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன் - விஸ்வநாதனுக்கு அப்படித் தோன்றியது. ‘என் எதிரி எனக்கு இல்லாமற் போகிறான். பலமான வேறொரு எதிரி அவனை என் கையில இருந்து தட்டிப் பறிக்கிறான்.’
படகு ஒருமுறை கூற்றித் திரும்பியது. பிறகு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் கையில் அது விளையாட்டுப் பொருளாக மாறியது.
விஸ்வநாதன் பைலியின் உடலை ஆராய்ந்து பார்த்தான். இடுப்பில் தான் வைத்த பேனாக்கத்தி அப்படியே இருக்கிறது. பைத்தியத்திற்கு நிகரான ஒரு வெறியுடன் கட்டுக்களை அறுத்து முடித்தபோது, ஒரே ஒரு பிராத்தனைதான் மனதில் இருந்தது. ‘ஏன் எதிரியை எனக்குத் திரும்பவும் தா. வேறொரு சந்தர்ப்பம், சந்தோஷத்தின் வேறொரு வேளை... எனக்குத் தேவை அதுமட்டும்தான்.’
“நீந்திப் போ” - விஸ்வநாதன் மழையைவிட உரத்த குரலில் அழைத்துச் சொன்னான் : “கரையைப் பிடிச்சுக்கோ” பைலி அதற்கு ஏதாவது பதில் கூறினானா என்பது தெரியவில்லை. அதற்கு முன்பாகப் படகு சரிந்தது.
“பைலி”- விஸ்வநாதன் இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு செவிடனின் காதுகளின் கூறுவது மாதிரி அழைத்துச் சொன்னான்: “பைலி... எனக்குப் பின்னால் நீந்து...”
இருட்டு! அலறும் ஆர்ப்பரிக்கும் இருட்டு, மழையின் கர்ஜனை.
பக்கத்திலேயே மேற்கு திசையில் கடல். விஸ்வநாதன் எதிர்திசையை நோக்கி நீந்தினான். ஏரியின் சந்தோஷமும் அவனைக் கிண்டல் பண்ணியது. மழையின் வெற்றி அவனுடைய காதுகளே அடைத்துப் போகும்படி கூவி அழைத்தது.
கண்களே கூசிப்போகும்படி வந்த ஒரு மின்னல் நீரில் மிகவும் நீளமாகக் கோடுகள் உண்டாக்கியது. பிறகு காதுகளே செவிடாகும் வண்ணம் இடி முழங்கியது. அங்கு தூரத்தில் எங்கோ கரையில் ஒரு வைக்கோல் போர் எரிந்து கொண்டிருந்தது.
விஸ்வநாதன் அந்த நெருப்புச் சிகரங்களை நோக்கி நீந்தினான்.
12
வெளிச்சம் முகத்தில் அடிப்பதற்கு முன்பே அவன் எழுந்தான்.
இனிமேலும் படுத்திருந்தால் கண் விழிக்கும்போது சாயங்காலமாகிவிடும். இன்று அப்படி உறங்க முடியாது. ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க நூறு நூறு கண்கள் முயலும்.
உடம்பு பயங்கரமாக வலித்தது. காயம்பட்ட தசைகள் அங்குமிங்குமாய் இழுத்துக் கொண்டு தாங்க முடியாத வேதனையைத் தந்து கொண்டிருந்தன. மீன் கொத்திய காயங்கள் புண்களாக மாற முயற்சித்துக் கொண்டிருந்தன.
‘குளிக்கணும். முடி முழுவதும் மணல்...’
காலை நேரத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு, பழைய உறவினர்களுக்கு உற்சாகமான, பிரகாசமான, சுத்தமான ஒரு விஸ்வநாதனை அவர்கள் பார்க்கும்படி செய்ய வேண்டும்.
மழை சற்று குறைந்திருந்தது. மணலில் ஓடிக் கொண்டிருந்த மழை நீருக்கும் வேகம் குறைந்திருந்தது. அழகான, அமைதியான ஆற்று நீர்... ஆங்காங்கே படகுகள்...
முந்தைய இரவின் முடிவு எங்கே இருந்தது? அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. மிகவும் சோர்வடைந்து போய் பாதங்கள் தரையைத் தோட்ட நிமிடமோ, இல்லாவிட்டால் தவழ்ந்து ஏறி மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தலைக்குப் பின்னால் முடிவே இல்லாமல் வந்து விழுந்து கொண்டிருக்கும் மழைத்துளிகளின் சுகமான தாளத்தைக் கேட்டவாறு கண்களை மூடிய நிமிடமா, இருக்காது. அதுவும் இரவின் ஒரு பகுதி மட்டுமே.
மீண்டும் கண் விழித்தபோது மழை இல்லை. இருட்டு நிறைந்திருந்த கரை - ஏரியின் மீது வீசும் குளிர்ச்சியான மழைக்காற்று... அடுத்த மழைக்காக இப்போதே தாயாராகும் வானம்... கரை தந்த முன்னெச்சரிக்கைகளுடன் தட்டுத்தடுமாறி வீட்டை அடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சுடன் திண்ணையில் விழுந்ததும்கூட இரவின் பகுதிகள்தான்.
இப்போது தமாஷாக இருக்கின்றது.
வீடு...?
அங்கு போய்ச் சேரும்வரை தான் சீரான மனநிலையுடன் இல்லை என்பதை நினைக்கும்போது அவனுக்கே வெட்கமாக இருந்தது. எல்லாக் கரைகளையும் வீடுகளாக்கி, எல்லா வீடுகளையும் கரைகளாக்கிய விஸ்வநாதனுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை ஆச்சர்யத்துக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால், அப்போது அவன் அப்படித்தான் இருந்தான் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
குளித்து ஆடைகளை மாற்றி அவன் வெளியேறினான். பைலிக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான ஊமைத்தனமான ஒருவித ஆர்வம் அவனையும் அறியாமல் அவனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்த வைத்தது. யாராவது ஏதாவது சொல்கிறார்களா? தேநீர்க்கடையில் தன்னை உற்றுப் பார்க்கும் கண்கள் ஏதாவது இருக்கிறதா?
அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் மழையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பெருக்கெடுத்து வந்த புது வெள்ளத்தைப் பற்றியும், மழையில் அடித்துச் செல்லப்பட்ட படகுகளைப் பற்றியும் தாழ்ந்த குரலில் கவலையால் பீடிக்கப்பட்டவர்களைப் போல அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் தன்னுடைய முட்டாள்தனம் அவனுக்கே புரிந்தது.