இதோ இங்கு வரை - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
பைலி சிறிது இப்படியும் அப்படியுமாக நெளிந்தான். சுய நினைவற்ற தளங்களில் இருந்து கொண்டு அவன் உரத்த குரலில் பிதற்றினான். படகு வேகமாக ஓடியது.
உணர்வு வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ஒருவேளை அவன் உணர்வு நிலைக்கு வராமல் இருந்திருந்தால், மீண்டும் கடந்தவற்றையெல்லாம் திரும்பச் செய்ய வேண்டியதிருக்கும்.
‘தன்னைத் திறந்து காட்டக்கூடிய நேரம் அப்போது வந்துவிட்டிருந்ததா?’ விஸ்வநாதன் தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொண்டான்.
‘அதற்கான நேரம் வரவில்லை’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது எது எப்படி இருந்தாலும் அந்த ஒரு நிமிடம் அவனையும் மீறி அவனுடைய நாக்கு சொல்லிவிட்டது. ‘நான்தான் விஸ்வநாதன். நீ வெட்டிக் கொலை செய்த வாசுவின் மகன். இங்கிருந்து ஓடிய விஸ்வநாதன்’ மனம் கட்டுப்பாட்டிலாமல் இருந்தது. அதனால்தான் அந்த ஆபத்து உண்டானது. அருகில் முனகிக் கொண்டிருந்த நாணு அதைக் கேட்பான் என்பதை அவன் நினைக்கவில்லை.
சில நிமிடங்களில் ஊரில் ஒரு புதிய செய்தி எல்லா இடங்களிலும் பரவும் என்பதை அவன் சிறிதுகூட சிந்திக்கவில்லை. அடக்கி வைத்திருந்த ஆத்திரங்களின் பாய்ச்சலாக இருந்தது அது. என்னவெல்லாம் தான் புலம்பினோம் என்பது அவனுக்கு ஞாபகத்தில் இல்லை. “இன்னைக்கு உன் வாத்து... நாளைக்கு நீ... பிறகு உன் அண்ணன்... உன் மகள்...” வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவளைப்போல் அவன் உரத்த குரலில் சொன்னான்: “நான் வந்ததே அதற்குத்தான்.”
நினைவு திரும்ப வந்தபோது, பைலி தரையில் விழுந்து கிடந்தான். நெற்றி பிளந்து வழிந்த இரத்தம், நீளமான முடிகளுக்கு நிறம் பூசியிருந்தது. ஒரு இறுகிய சத்தம் தொண்டைக்குழிக்குள் கேட்டது. அங்கு ஏதோ வெடிப்பதைப்போல் மெல்லிய ஓசை. நினைவு திரும்பிய கரடு முரடான முகத்தில் இரத்தத்தின் ஈரம்... நாணு துள்ளி எழுந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றுகொண்டு கேட்டான் : “நீங்க சொன்னது உண்மையா? வாசு அண்ணனோட... வாசு அண்ணனோட மகனா நீங்க?”- அந்தக் கேள்வியில் ஒரு ரகசியம் தன்னுடைய இறுதிமூச்சை விடுகிறது என்பதை அறிந்தபோது, விஸ்வநாதன் அதிர்ந்து போனான்.
“ஒரு ஆள்கிட்டகூட இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது. சொன்னா...”
நாணு தலையை ஆட்டினான் : “நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். ஒரு ஆள்கிட்ட கூட சொல்லமாட்டேன்.”
“சரி... கிளம்பு. நாளைக்குக் காலையில வந்தா போதும்.”
நாணு போனபிறகுதான், அவன் வாசலில் இருட்டு இருப்பதைப் பார்த்தான். வீட்டைச் சுற்றிலும் இருந்த தனிமைச் சூழல் பயத்தை வரவழைக்கும் சத்தங்களை உண்டாக்கியது. மாலை இரவின் காட்டுக்குள் நுழையவும், இரவு கிராமத்தைத் தளரச் செய்து உறங்க வைக்கவும், வீட்டிற்குள் இருட்டு தங்கியிருக்கவும் செய்தபோது அசைவற்ற, சுயநினைவற்ற, கை - கால்கள் கட்டப்பட்ட உடல் அவனுக்குப் பக்கத்தில் பயமுறுத்துவதைப் போலக் கிடந்தது. ஒரு முறை பதுங்கியவாறு நடந்து சென்று அவன் அதை ஆராய்ந்து பார்த்தான். அமைதியான நதிப்பகுதி, நிறைந்த ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, கரையில் நீரோட்டத்தைப் பார்த்து பயந்து நின்று கொண்டிருக்கும் ஆமையைப் போல சிறிய படகு...
பைலி மீண்டும் முனகினான். கை, கால்களை நீட்ட முயன்று தோல்வியுற்று, அவன் உடலை இப்படியும் அப்படியுமாக ஆட்ட, படகின் ஓரங்கள் குலுங்கின.
“யார் அது?” - பைலி கேட்டான். குரலில் பயமில்லை. சவால் இல்லை.
புதியதொரு சூழ்நிலையுடன் அறிமுகமாகிக் கொள்ள இயலாத இக்கட்டான நிலை அந்தக் கேள்வியில் தொனித்தது. நீண்ட நேர உறக்கத்திற்குப் பிறகு கண் விழிக்கும்போது மண்டைக்குள் நுழையும் அறிமுகமற்ற உணர்வின் பாதிப்புகளை விட்டெறிய அவன் செய்யும் முயற்சி...
விஸ்வநாதன் துடுப்பை எடுத்து இருட்டில் வேகமாகத் துழாவினான். இருட்டில் பைலி உரத்த குரலில் சத்தம் போடுவதை அவன் கேட்டான். உரத்த குரலில் கூப்பாடு போடுவதைத்தான் அவன் எதிர்பார்த்தான். வெளியே வந்தவை கெட்ட வார்த்தைகள். விஸ்வநாதன் புன்னகைத்தான். இப்போது இடம் தெரிந்திருக்கும். எங்கு இருக்கிறோம் என்பது புரிந்திருக்கும்.
கட்டப்பட்டிருக்கும் எதிரி கேட்கிறான்: “என்னை எங்கே கொண்டு போற?”
ஒரு நிமிடம் அந்தக் கேள்விக்குப் பதில் கூறவேண்டுமா என்று அவன் யோசித்தான். சொல்லாம். எதிர்பாராத மரணத்தின் கறுத்த முகத்தை அடைந்து அல்லல் படுவதைவிட அது நல்லது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு துழாவலும் மரணத்தை நோக்கித்தான் நம்மைக் கொண்டு போகின்றன என்ற அறிவு யாருக்கும் சுகமான ஒரு அனுபவமாக நிச்சயம் இருக்காது. அதனால் அவன் சொன்னான் : “உன்னைக் கொல்லப்போறேன்.”
“ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருக்கும் கரையை அடையிறது வரைதான் இந்தப் படகுல உனக்கு இடம். பிறகு நீரோட்டத்தோடு, கரையோடு சேர்ந்து கடலை நோக்கிப் போக வேண்டியதுதான். அங்கே உன் தலைவிதியைத் தீர்மானிக்குறதுக்கான வாய்ப்பை உனக்கு நான் விட்டுத் தர்றேன்” - விஸ்வநாதன் சொன்னான். பைலி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. ஒரு உதவி கேட்டு அவன் கெஞ்சுவான் என்று விஸ்வநாதன் எதிர்பார்த்தான். அந்தக் கெஞ்சுதலின் வாழ்க்கையின் சாபல்யத்தை அடைந்து விடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்.
விஸ்வநாதன் துடுப்பை மடியில் வைத்தவாறு, தீப்பெட்டியை உரசினான். முதல் தீக்குச்சி எரிவதற்கு முன்பே அணைந்தது. மற்றொரு தீக்குச்சி விரலின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. நடுங்கி நடுங்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சிறு ஜுவாலை ஒளியில் பைலியின் முகத்தை ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்தபோது-
உறங்கிக் கொண்டிருக்கும் முகம். இரத்தத்துளிகள் விழுந்திருக்கும் வீரனின் கம்பீரமான முகம். தோளுக்குக் கீழே துடுப்பு உண்டாக்கிய புதிய காயத்திலிருந்து வெளிவந்து புதிய இரத்தத்தின் கறுப்பு நிறம்.
மீண்டும் இருட்டு. இனி பார்க்க முடியாது. பார்த்து முடிக்கும்போது, என்னவோ எங்கோ தளர்ந்து விழுவதைப்போல் தோன்றுகிறது. அதை அனுமதிக்கக் கூடாது.
துடுப்பை எடுத்தான். புதிய ஒரு வெறியுடன், புதிய ஒரு சபதத்தின் சூட்டில் வேகமாக ஓடியது.
திசைகள் தெரியவில்லை. நான்கு திசைகளிலும் நான்கு நிறங்களில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் இரவிலும் பகலிலும் கண்விழித்தவாறு இருந்தால்...
இருட்டில் படகோட்டியின் கஷ்டத்தின் ஆழம் புதிய பிரார்த்தனைகளுக்குப் பிறவி கொடுக்கிறது.
ஏரிக்கும் கடலுக்குமிடையே இருக்கும் கரையைப் பற்றிய கற்பனைகள் இருட்டில் இரண்டறக் கலந்துவிட்டன. ஒரு உண்மையைப் போல, கரூரமான ஒரு உண்மையைப் போல, இருக்கும் அலைகளும்...
கடைசியில் சத்தம் கேட்டது. அலைகள் அழைத்துக் கொண்டிருந்தன. ‘இதோ நான் இங்கே இருக்கேன்... இங்கே’ ஒவ்வொரு முறையும் துடுப்பு நீருக்குள் செல்லும்போதும், அந்தக் குரல் மேலும் மேலும் தெளிவாகக் கேட்டது. ஈரமான கைகளை உயர்த்திக் காட்டி அலைகள் உரத்த குரலில் சொல்லின : ‘இங்க வா... இங்க வா.’