
ஆள் அரவமற்ற முற்றத்தில் விஸ்வநாதன் நின்றான். தலைக்குள் மரத்துப்போன மாதிரி ஒருவித அமைதி.
சிறிது கூட அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆள் இல்லாத வீடு. யாரும் இல்லாத முற்றம்.
திறந்து கிடக்கும் வாசற் கதவுகள். வனமாக உள்ளே நுழைந்து ஆராய்ந்த போது கண்ணில் பட்டவை வெறுமனே கிடக்கும் அறைகள் மட்டுமே.
வீட்டுச் சாமான்களைக் கூட காணவில்லை. வாசலில் இருந்த வாத்துக்களையும். அப்பச்சன் போய்விட்டான். அம்மிணி போய் விட்டாள். வாத்துக்கள் கூட்டம் போய்விட்டது. எல்லோரும் போய்விட்டார்கள்.
‘நான் மட்டும் இங்கே இருக்கேன்’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை. அவனுக்கு முன்னால் ஒரு காட்சி தெரிகிறது.
இருட்டுக்கு மத்தியில், உறக்கச் சுவடுகள் நீந்திச் செல்லும் வாத்துகள்.
படகில் அழுது கொண்டிருக்கும் இளம் பெண்.
கவனமாக, முழு பலத்தையும் பயன்படுத்தி துடுப்புப் போடும் கைகள்.
அந்தக் கைகளில் பயத்தின் நடுக்கம் தெரிகிறதா?
பழைய உறவின் சங்கிலிகள் அந்தக் கைகளில் அறுந்து தோங்கிக் கொண்டிருக்கின்றனவா, சுதந்திரமற்ற கைகள் செலுத்திக் கொண்டு போகும் படகு எங்கேயாவது போய்ச் சேருமா?
அவர்கள் எங்கு போகிறார்கள்?
விஸ்வநாதனுக்குத் தெரியாது.
விஸ்வநாதனுக்குத் தன்னுடைய இலக்கு என்ன என்றுகூட தெரியாது.
நாளை கிராமம் கண்விழிப்பது புதிய ஒரு கதையுடன் இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தோன்றியதைக் கூறுவார்கள்.
இந்த ஊரில் கதைகள் முளைப்பதற்கும் வளர்வதற்கும் ஏற்ற மண் இருக்கவே இருக்கிறது. அவை முளைக்கட்டும். வளரட்டும். தூரமான காலத்திற்கு அப்பால் எங்கேயாவது போய் அழுகிச் சாகட்டும்!
வாத்துகளுக்கு உணவு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் காலியாக இருக்கும் கூடைகள். முற்றத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் குளிர்ந்த காற்றில் வாத்துக்களின் வாசனை.
‘நான் எங்கே போறேன்?’
-விஸ்வநாதன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். யாரும் எங்கிருந்தும் பதில் எதுவும் சொல்லவில்லை என்பது தெரிந்ததும், மெல்லிய ஒரு சுகத்தை அவன் உணர்ந்தான்.
நீரோட்டத்தினூடே படகு வேகமாக ஓடியது. உறங்கிக் கொண்டிருந்த கரைகள் பின்னோக்கிச் சரிந்து விழுந்தன.
படகின் முனையால் கிழித்த நீர் மட்டும் கண்களில் வந்து தெரித்துக் கொண்டிருந்தது.
இருண்ட ஆறு. நீரோட்டத்தில் மூழ்கி இறந்த ஆறு.
விஸ்வநாதன் மல்லாந்து படுத்திருந்தான்.
தலைக்குள் என்ன இருக்கிறது?
ஒன்றுமில்லை.
இன்று இரவு மலரும் இதற்கு முன்பு சந்தித்திராத? சந்தோஷத்தின் எதிர்பாராத நிமிடங்களா?
நிச்சயமில்லை.
தூரத்தில், பொழுது புலர்வதற்கான அறிகுறி. படகின் படிகளில் உட்கார்ந்துகொண்டு, தாடையில் கை வைத்தவாறு விஸ்வநாதன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
படகு ஒருமுறை மேலே குதித்து மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. நீரோட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு திருப்பத்தில் சூரியனின் கதிர்கள் ‘பளிச்’சென தெரிந்தன.
படகு அந்தத் திருப்பத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. கவனமாக இல்லையென்றால் படகு சாய்ந்துவிடும்.
விஸ்வநாதன் துடுப்பை எடுத்தான். படகின் வேகம் குறைந்தது.
கைகளின் சதைகளில் நீரோட்டத்தின் வலிமை கூர்மையான ஊசிகளைப்போல் தைத்தது.
படிப்படியாக வேகம் குறைந்த படகு, மிகவும் கவனமாக எச்சரிக்கை உணர்வுடன் திருப்பத்தில் திரும்பியது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook