இதோ இங்கு வரை - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
பைலியைப் பற்றி யார் பேசுவார்கள்? சொந்த வீட்டிலேயே அவன் இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருப்பதற்கு வழியில்லை. வாரக் கணக்கில், மாதக்கணக்கில் காணாமல் போவதும் திடீரென்று ஒருநாள் பயமுறுத்துவதைப்போல தோன்றி எல்லாருக்கும் தலைவலியை உண்டாக்குவதுமாக இருக்கிற பைலி ஒரு இரவில் காணவில்லை என்பதற்காக யார் ஆர்ப்பாட்டம் பண்ணப் போவது?
நாணு ஒருவேளை செய்தியை வெளியே கூறாமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் அதற்கான காரணம் இன்னும் வராமல் இருக்கலாம். ஊர்க்காரர்கள் பழைய குசலம் விசாரிப்புகளையும் பழைய தமாஷ்களையும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
தேநீர்க் கடையை விட்டு வெளியே வந்தபோது வீட்டிற்குப் போகவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அந்தச் சூழ்நிலையில் புதிதாகச் சிறிது பயம் தன்னிடம் வந்து சேர்ந்திருப்பதைப்போல் அவன் உணர்ந்தான். எந்தச் சூழ்நிலையிலும் முன்பு தெரிந்தவர்களும் ஆர்வம் கொப்புளிக்கும் முகங்களைக் கொண்ட குழந்தைகளும் அங்கு வந்து குழுமி ஒருவரோடொருவர் தள்ளி இடித்துக் கொள்வது மாதிரி ஒரு சூழ்நிலை உண்டாகிவிடுமோ என்று அவன் நினைத்தான்.
அதனால் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் தமாஷாக என்னவோ சொல்லி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டார்கள். வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஆண்கள் அவனைப் பார்த்ததும் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து வாய் திறந்து சிரித்தார்கள்.
எல்லாம் எப்போதும் போலவே இருந்தது.
கடைசியில் ஏரிப் பகுதிக்கு வந்தான்.
இளம் வெயில் காய்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில், மழைக்குப் பிறகு வந்த காலைப் பொழுதில் ஆர்வத்துடன் வானத்தை ஆராய்ந்து பார்க்க வந்த கிளிகளின் ஆர்ப்பாட்டம். கரைக்கு அருகில் சிப்பி பொறுக்கும் குழந்தைகள் கூட்டம். தூரத்தில் விரித்துப் போடப்பட்டிருக்கும் படகுகளின் பாய்கள். எதிர் கரைக்கு மெதுவாக நீந்திக் கொண்டிருக்கும் அங்கே உட்கார்ந்த விஸ்வநாதன் சிறிது நேரம் தன்னை மறந்து தூங்கிவிட்டான். கண் விழித்தபோது மதியம் நெருங்கிவிட்டிருந்தது. நீருக்கு மேலே படகுகள் உறங்கியவாறு நின்றிருந்தன. அங்கு பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனுக்குப் பயமாக இருந்தது. திரும்பி விட்டான்.
தூரத்தை அடைந்தபோது வயலில் நிறைய ஆட்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் மனிதர்கள் அவன் வருவதை அறிந்து வரவேற்க வேண்டும் என்பதற்காகவே ஒற்றையடிப் பாதையில் நிறைய பேர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
உடலில் சோர்வு இருந்தது. உறக்கம் வருவது மாதிரியும் இருந்தது. எனினும் அந்தச் சூழ்நிலையில் அவர்களைப் பார்த்து அவன் புன்னகை புரிந்தவாறு நிற்க வேண்டியதிருக்கிறது.
அவனுடைய தந்தையின் நண்பர்கள், தூரத்து உறவினர்கள் ஆச்சரியப்பட்டு மலர்ந்த கண்களுடன் நின்று கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகள்... ஒரு பெண்ணின் உரத்த குரலில் எழுந்த அலறல் “என் மகனே...”- சங்கரி சித்தி. உணர்ச்சிவசப்பட்டு கண்களைத் துடைத்துக்கொள்ளும் சிவராமன் அண்ணன். உணர்ச்சிப் பெருக்கில் நின்று கொண்டிருக்கும் சுசீலா...
அவனுக்குள் வெறுப்பு படர்ந்து எரிந்தது. முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஒரு காட்சிப் பொருளைப் போல விஸ்வநாதன் அவர்களுக்கு மத்தியில் நடந்து சென்றான்.
“இப்போதான் நீ யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சதா?” - அப்பச்சன் கேட்டான். “எனக்கு உன்னைப் பார்த்தவுடனே நீ பார்னு தெரிஞ்சுபோச்சு. நீயே அதைச் சொல்றியா பார்ப்போம்னு இது நாள் வரை நான் காத்துக்கிட்டு இருந்தேன்...”- தொடர்ந்து அவன் சொன்னான்.
ஆரம்ப ஆர்வம் அடங்கிய ஊர்க்காரர்களும், போவதற்கு மனமே இல்லாத சித்தியும் அந்த இடத்தை விட்டுப் போனபிறகு, வெயில் மேற்குப் பக்கமாகச் சாய ஆரம்பித்தபோது, அப்பச்சன் அங்கு வந்தான்.
“நான் இங்கே வந்தது பைலிக்குஞ்ஞுவைத் தேடி...”
விஸ்வநாதன் அதற்குப் பதிலெதுவும் கூறவிலலை.
“நேற்று சாயங்காலம் அவன் இங்கே வந்திருந்தானா?”
“வந்திருந்தாப்ல.”
“உங்க ரெண்டு பேருக்கும் இடையில அடிபிடி சண்டை ஏதாவது உண்டாச்சா?”
விஸ்வநாதன் தரையைப் பார்த்தவாறு உணர்ச்சியற்ற குரலில் முணுமுணுத்தான்.
“சின்னதா...”
“காரணம்?”
“ரெண்டு பேரும் நல்லா குடிச்சிருந்தோம். அந்த நாணுவைக் காரணமே இல்லாம அடிச்சப்போ, நான் இடையில தலையிட்டு நியாயம் பேசினேன். அப்போ எனக்கும் அடி விழுந்தது. நான் திருப்பி அடிச்சேன்.”
அப்பச்சன் நீண்ட நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.
“இதுவரை அவன் வீட்டுக்கு வரல.”
விஸ்வநாதன் பதிலெதுவும் சொல்லாமல் இருக்கவே, அப்பச்சனே பதிலையும் சொன்னான் : “வருவான். எங்கேயாவது போய்ப் படுத்துக் கிடப்பான்.”
“சாயங்காலம் முடிஞ்சதும் இங்கேயிருந்து ஆள் கிளம்பியாச்சு. காலைல வர்றதா சொல்லிட்டுப் போனாப்ல...”
நீண்டு கொண்டிருந்த அமைதி.
கடைசியில் விஸ்வநாதன் கேட்டான்: “நான் யார்னு தெரிந்தபிறகும், என்னை எப்படி வீட்டுக்குள்ள அனுமதிக்க முடிஞ்சது?”
“கமலாக்ஷியோட மகன்றதுனால...”
மீண்டும் அமைதி.
“பைலிக்குத் தெரியுமா?”
“தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயமா அவன் வீட்டுக்கு வரவிட்டிருக்க மாட்டான்.”
“பைலிக்கு என்னைத் தெரியலையா?”
“பைலி கமலாக்ஷியையே தெரிஞ்சிக்கலையே!”
“உங்களுக்கு?”
“எனக்கு அவளைத் தெரியும். அவளை முழுமையாத் தெரிஞ்சு வச்சிருந்த ஒரே ஆள் நான்தான்.”
“அப்போ...”
விஸ்வநாதனுக்கு அந்தக் கதை தெரியும். தெரிந்த கதையின் தெரியாத பகுதிகளில் வெளிச்சம் விழுகிறது. பலவற்றைப் பற்றிய கருத்துகள் மாறுகின்றன.
“அப்போ...”- அப்பச்சனின் குரலில் பல வருடங்களுக்கு முந்தைய நாட்கள் புத்துணர்ச்சி உண்டாக்கிக் கொண்டு காட்சியளித்தன.
“மூன்று மனைவிமார்களுக்கு மத்தியில் ஒரு மனைவி நிம்மதி இல்லாமல் இருந்தாள். அவளுக்கு அன்பு தேவை. அக்காவும், தங்கையும் ஒண்ணு சேர்ந்து கணவனைச் சுற்றி இருக்குறப்போ, எங்கோ வெளியில் இருந்து வந்தவள் மாதிரி அவள் விலகி இருந்தாள். அமைதியான குணத்தைக் கொண்டவனும், நல்லவனுமான ஒரு வாத்துக்காரன் அவள் மனதில் இடம்பிடித்தான். ‘என்னை இங்கேயிருந்து கொண்டு போயிடுங்க’ என்று அவள் அப்பச்சனின் காலைப் பிடித்துக் கேட்டுக் கொண்டாள். ‘என் மகனையும் என்னையும் இந்த நகரத்துல இருந்து காப்பாத்துங்க. ரெண்டு வாத்துகளைப்போல நாங்க வாத்துகளோடு வாத்துகளா சேர்ந்து இருந்துர்றோம்’ என்றாள் அவள்.
உன் அப்பனுக்கு அவளைப் பார்த்து பயம். கடைசியில அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சது. அவளை அவன் அடிச்சான். அவள் எதையும் மறக்கல. எல்லா விஷயங்களையும் ஒத்துக்கிட்டா”- அப்பச்சன் சொன்னான்.
தவறு இழைத்த கணவன் அவளுடைய அந்த தைரியத்துக்கு முன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றுவிட்டான். ஒவ்வொரு நாளும் அவளுக்கு அடி, உதை கிடைத்தது. தினமும் அவள் அப்பச்சனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் போய் வந்தாள். ஒரு பழைய காதல் கதையின் விரசமான காட்சிகளை விஸ்வநாதன் கண்களைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தான்.