இதோ இங்கு வரை - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
இன்று அந்தக் கதையை அகற்றுகிறார்கள்.
“பார்க்க வர்றியா?”- பைலி கேட்டான்.
“இல்ல...”- விஸ்வநாதன் சொன்னான். அவன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவோ தடவைகள் கரை உடைவதைப் பார்த்திருக்கிறான். தன் தந்தையுடன் போய் மூச்சை அடக்கிக் கொண்டு நின்று பார்த்திருக்கிறான். மண்ணுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தும்பாவால் வெட்டி கீழே இறக்குவதை ஒருவித பதைபதைப்புடன் அவன் பார்த்துக் கொண்டு நின்றிருப்பான். இப்போது கதை உடையுமா? ஏரியிலிருந்து அலறிக் கொண்டு ஓடப் போகும் நீர்ப்பாய்ச்சல் அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்களையும் கடலில் கொண்டு போய் சேர்த்து விடுமோ?- இந்த எண்ணங்களுடன் சிறுவன் விஸ்வநாதன் நின்றிருப்பான்.
கடைசியில் அந்த பயம் குறைந்துகொண்டே வந்தது. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு அரங்கேறும் ஒரு நாடகக் காட்சியில் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நிமிடங்களைப் போலவே, அதைப் பார்க்கும்போது அவனுக்கு இருக்கும். எனினும், ஊர்க்காரர்களுக்கு இப்போதும் அது ஒரு புதிய விஷயமாகவே தெரிகிறது. பைலிக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். ஒரு திருவிழாவின் கொண்டாட்டத்தை தனக்குள் ஏந்திக் கொண்டிருக்கும் ஆறு வயது சிறுவனின் உற்சாகம் அவனிடம் இருந்தது. இதுவரை பார்க்கவில்லையென்றால் இப்போது பார்க்க வேண்டும். விஸ்வநாதன் சொன்னான்: “எனக்கு உடம்பு சரியில்லைன்ற மாதிரி இருக்கு கொஞ்சம் ஜலதோஷம்...”
ஜலதோஷம்! பைலி ஒரு பெரிய நகைச்சுவைக்குத் தலைகுனிந்தான். ‘ஜலதோஷம் இருக்கும்போல- பைலி தனக்குள் கூறிக் கொண்டான்.
போக வேண்டுமென்றால் பைலியுடன் சேர்ந்து விஸ்வநாதன் போகலாம். ஆனால், சமீபகாலமாக அவனுக்கு இந்த விஷயத்தில் பயம் வந்துவிடுகிறது. பைலியின் நடத்தை எப்போது தன்னுடைய சமநிலையைத் தவறச் செய்யும் என்பது அவனுக்கே தெரியாது. அவனுடைய அசைவுகளைப் பார்த்து கொண்டிருக்கும்போது, எதை வேண்டுமென்றாலும் செய்வதற்கும் கூறுவதற்கும் உள்ள சுதந்திரத்தை அவன் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, கட்டுப்பாட்டின் கயிறுகள் ஒன்றுக்கொன்று உரசி பலமிழப்ப தென்னவோ உண்மை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வின் ஆவேசத்தில் தானே ஏதாவது செய்துவிடுவோமோ என்ற படம் சமீபகாலமாக அவனுக்கு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக மது அருந்துகிற நேரங்களில் அந்தக் கட்டுப்பாடு தன்னை மிகவும் தொல்லைக்குள்ளாக்கும் நெருப்பாக இருப்பதைப்போல் அவன் உணர்வான்.
“ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு இருந்தா போதாது”- இறங்கி நடக்கும்போது வாசலில் நின்றவாறு பைலி உரத்த குரலில் அழைத்து சொன்னான் : “நல்ல ஒரு நாளா பார்த்து கோழியைப் போல வீட்டுக்குள்ளே உட்கார்ந்துக்கோ.”
அவன் போன பிறகும் விஸ்வநாதன் அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தான். பைலிக்குள் துடித்துக் கொண்டிருந்த இளமைத் துடிப்பு விஸ்வநாதனைக் கோழையாக்கியது. இனியும் அவன் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் அவன் வயதில் குறைந்தவனாக ஆக வேண்டியிருக்கிறது.
மங்கலான வெயில் அழகில்லாத ஒரு பெரிய குன்றைப் போல வாசலில் பரவியிருந்தது. தூரத்தில் கிராமத்துப் பாதை வழியாக நோட்டீஸ் வண்டி போய்க் கொண்டிருக்க வேண்டும். புதிய திரைப்படம். செண்டை அடிப்பதால் உண்டாக அலைகள் வாசல்வரை கேட்டுக் கொண்டிருந்தது.
‘இந்த ஊர் என்னை உள்ளே பிடிச்சு இழுத்துப் போகுதோ?’ - விஸ்வநாதன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் : ‘இங்கேயிருந்து இனிமேல் போகவே முடியாதுன்ற மாதிரி சூழ்நிலை வருமோ? அறியாமல்... என்னை அறியாமலே... இந்த ஊரைப்பற்றி நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபகாலமா இந்தப் பழக்கம் ரொம்பவும் அதிகமாயிடுச்சு. நாளை இந்த மண்ணுல என்ன நடக்கும்ன்ற ஆர்வத்தோடு மட்டுமே இன்னைக்கு ராத்திரி என்னால உறங்க முடியுது. ஆர்வம் நிரந்தரமான ஒரு பிணத்தைப் போல அதிகமாகிக்கிட்டேயிருக்கு. ஒருவேளை இது தன்னோட பழைய உறவுக்காரன்றதை மண்ணு புரிந்து கொண்டிருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வந்து சேர்ந்த விருந்தாளியை வரவேற்க அது கடமைப்பட்டிருக்கலாம். எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாலும், இடையில் அவ்வப்போது ஒரு பயம் உள்ளே நுழைஞ்சி தொந்தரவு செய்யத்தான் செய்யுது. இந்த இடத்துல நிரந்தரமா தங்கியிருக்குறதுக்கா நான் வந்திருக்கேன்? மற்ற எல்லா இடங்களும் சத்திரங்கள்னும் இந்த ஊர் மட்டும் வீடுன்னும் தோண ஆரம்பிச்சிடுச்சுன்னா அதற்குப் பிறகு தப்பிக்கிறதுக்கு வேற வழியே இல்ல. அதற்கு முன்னாடி...’
நாணு காப்பியும் பலகாரமுமாய் வந்து, அலுமினியப் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தரையில் விரித்து உட்கார்ந்து கொண்டு சொன்னான் : “ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.”
அதில் ஆர்வம் இல்லாததால் பாத்திரத்தின் மூடியை அவன் திறந்தான். நடுவில் ஒடிந்த மூன்று நான்கு தடிமனான தோசைகள், சிதறிக்கிடக்கும் இரத்தமும் சலமும் போல சட்னி...
“ஊர் முழுக்க தெரிஞ்சிடுச்சு...”- நாணு சொன்னான்: “எல்லாரும் என்கிட்டதான் கேக்குறாங்க. நான் என்ன பதில் சொல்லணும்?”
“என்ன கேள்விப்பட்டோ?” -வெறுப்பு தோன்றியபிறகு அவன் கேட்டான்.
“கேக்குறேன்னு வருத்தப்படக் கூடாது.”
“இல்ல...”
“எல்லாரும் சொல்றாங்க - பைலி ஆசான்கூட சேர்ந்து திரியிறதுக்கும் அந்த ஆளுக்கு கள்ளு வாங்கிக் கொடுக்குறக்கும், எப்போ பார்த்தாலும் அங்கே போயி இருக்குறதுக்கும் காரணம் அந்த ஆளோட மகளை...”
விஸ்வநாதன் அடுத்த நிமிடம் தலையை உயர்த்திப் பார்த்தான். ஆபத்தான ஒரு பேச்சு. சிறிய ஒரு லாபத்தின் கூர்மையான நுனியில் சிக்கி பெரிய இலட்சியங்களை இழக்க வேண்டியது வருமோ? நாணு ஒரு அறிவுரை கூறும் தீவிரத்துடன் சொன்னான் : “நடந்ததெல்லாம் சரி. வந்தது மாதிரியே தனியா போயிடணும். எப்படி வேணும்னாலும் நடந்துக்கங்க. இந்த ஊர்ல இளைஞர்கள் நினைச்சா நடக்காத விஷயமா? ஆனா அதைத்தாண்டிப் போகக் கூடாது.”
விஸ்வநாதன் வாயே திறக்கவில்லை. ‘வேற யாருக்குத் தெரிஞ்சாலும் பரவாயில்ல. பைலிக்குத் தெரியாம இருந்தா போதும். அப்பச்சனுக்குத் தெரிஞ்சா? அந்த ஆள்கிட்ட எதையாவது சொல்லி சரி பண்ணிடலாம்’ - விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான்.
கைகழுவிவிட்டு வரும்போது நாணு ஒரு புதிய செய்தியைச் சொன்னான். “சங்கரி அம்மா வீட்டுக்கு வேற புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காப்ல. நான் நேத்து சொன்னேன்ல. இன்னைக்கு நான் அதை நேராவே போய் பார்த்தேன். அடடா... என்ன அழகுன்றீங்க...”
விஸ்வநாதன் வாசலில் அங்குமிங்குமாக நடந்தான். கரையை உடைப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஒரே வெட்டுதான். அதற்கடுத்து நீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும். துளித் துளியாக நீர் ஓடி எந்தவொரு பிரயோஜனம் இல்லை.
“இன்னைக்கு அங்கே வர்றதா சொல்லிடட்டுமா?” நாணு கேட்டான்.
“என்ன?”
“இல்ல... சார், நீங்க வர்றீங்கன்னு சொன்னா அவங்க ஏதாவது சமையல் பண்ணி வைப்பாங்க.”