இதோ இங்கு வரை - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
அப்படி எதுவும் நடக்கவில்லை. மனிதர்களின் குண விசேஷங்கள் கிட்டத்தட்ட வற்றிப்போன இரண்டு மனித உருவங்கள்.
பிறகு பைலி வரும்போதெல்லாம் தன்னையும் மீறி விஸ்வநாதன் கவனிப்பான். ஜானு பெரியம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏதாவதொரு வகையில் மாற்றம் உண்டாகிறதா என்று பார்த்தான். அப்படி உதுவும் நடக்கவில்லை. பிறகு அதற்காகத் தன்னைத்தானே அவன் குறைபட்டுக் கொண்டான். ‘அப்படியொரு செயலைச் செய்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? உனக்குச் சில விஷயங்கள் தெரியும்ன்றதுக்காக நீ அவனைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கே. அதனால உனக்கு அவன் மிருகத்தைப் போல தெரியுறான். உன் கடந்த காலத்தையும் உன் வீட்டைப் பற்றியும் அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிஞ்சா, அப்படித் தெரிந்து கொண்டதை வச்சு அவன் உன் அசைவுகள் ஒவ்வொண்ணையும் கூர்ந்து கவனிச்சான்னா, நீ எவ்வளவு பயங்கரமான ஒரு மிருகமா அவன் முன்னாடி நிற்க வேண்டியது இருக்கும் தெரியுமா,’
மிருகங்களுக்கிடையே உண்டாகும் மோதலில் இம்மாதிரியான தத்துவ சிந்தனைக்குச் சிறிதுகூட இடம் இருக்காது. அங்கு வெறும் கடித்தலும் பிடித்தலும் மட்டுமே. வேறு எந்த விஷயத்திற்கும் அங்கு இடமில்லை. எதிரியின் அசைவுகளைக் கவனிக்க வேண்டும். அவ்வளவுதான். அதை விட்டு போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் மனதைப் படிக்க வேண்டியது அதன் வேலையாக இருக்காது. வெற்றிக்கான பாதை அதுதான்? அது மட்டும்தான்.
இதுவரை நடந்த விஷயங்களை எண்ணிப் பார்க்கும்போது அனுகூலமே அதிகம். எதிரியுடன் நெருங்கிப் பழக முடிந்ததுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய விஷயம். அந்தச் சிறிய ஒதுக்கப்பட்ட குடும்பத்திற்கு வேறொரு இடத்திலிருந்து வந்த அன்பு கொண்ட, கள்ளங்கபடம் சிறிதும் இல்லாத விருந்தாளி மிகப் பெரிய ஆனந்தமாக ஆகியிருக்கிறான். அப்பச்சனுக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான். பைலிக்கு எதையும் கூறக்கூடிய, எப்படிப்பட்ட துணிச்சலான செயலுக்கும் தயாராக இருக்கக் கூடிய ஒரு நண்பன் இந்த ஊரிலேயே கிடைத்திருக்கிறான். அம்மிணிக்கு?
அந்தக் கேள்வி ஒரு பெரிய விடுகதையையே உள்ளடக்கியிருந்தது. பல நேரங்களில் அந்த விடுகதையை அவிழ்க்க அவன் முயன்றிருக்கிறான். அப்போதெல்லாம் மேலும் மேலும் சிக்கல்கள் உண்டாவதையே அவன் பார்த்திருக்கிறான். பதில் இல்லாத ஒரு விடுகதை. அப்பச்சனின் சந்தேகம் படர்ந்த கண்களுக்குக் கீழே அந்த இளம்பெண் நகைச்சுவையாகப் பேசி விளையாடினாள். அப்பச்சனும் பைலிக் குஞ்ஞும் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறிதும் எதிர்பாராமல் விஸ்வநாதன் அங்கு செல்லும்போது, தேவையில்லாதததைப் பேசுவதில் கூட அவள் மிகவும் ஆர்வமாக இருப்பாள். அவளை நெருங்கித் தொடலாம் என்றால் அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை. எங்கே கத்தி விடுவாளோ என்ற பயம் காரணம் இல்லை. எதிர்த்து விடுவாளோ என்ற பயத்தாலும் அல்ல. அதெல்லாம் உண்டாகத்தான் செய்யும். எனினும், ஒரு இடத்தில் விழும்வரை போராட வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. அந்த இடத்திற்கு ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருவதற்குத் தேவையான அனுபவமும் உழைப்பும் அவனிடம் இருக்கவே செய்கிறது. பிறகென்ன? விஷயத்தைத் தெரிந்து கொண்டு பைலிக்குஞ்ஞும் அப்பச்சனும் தன்னை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற பயம் காரணமா, அதுவும் இல்லை.
தன் மனம் கெடுவதற்குக் காரணமான பெண்ணின் வயதான தாய், தந்தைமார்களை ஏற்கெனவே அவன் பார்த்திருக்கிறான். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர்களின் அசையும் கேடுகெட்ட நாக்குகளைப் பேச விடாமற் செய்ய எந்த ஆயுதத்தையும் எடுத்துப் பயன்படுத்துவதற்கான ஆத்மதைரியம் அவனிடம் இருக்கிறது. பிறகு ஏன் அவன் அப்படி நடந்து கொள்கிறான்?
ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. இந்தச் சிறிய லாபம் கிடைக்கிறது என்தற்காக, இனி கிடைக்க இருக்கிற வேறு பல பெரிய லாபங்களை இழக்க அவன் விரும்பவில்லை.
இந்த நட்பு இதே மாதிரி நிலவிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் செய்ய வேண்டிய வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. அது நடக்கும் என்று உறுதியான பிறகு, இல்லாவிட்டால் அது நடந்து முடிந்தபிறகு, மற்ற விஷயங்களுக்கு நேரம் இருக்கும் பட்சம், அப்போது அதைப் பற்றி அவன் நினைக்கலாம்.
வீட்டில் அம்மிணி மட்டுமே இருந்தாள். அது தெரிந்துதான் பிற்பகல் நேரம் பார்த்து அவன் அங்கு சென்றான். எனினும், பெரிய அந்த வீட்டின் நடுவில் நான்கு பக்கங்களிலும் மழைத் தூறல்கள் விடாமல் விழுந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்குள் அவளும் தானும் மட்டுமே இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதும் அந்த நினைப்பு ஒர புழுவைப் போல மண்ணில் நெளிந்து நடக்க ஆரம்பித்தபோதும் தன்னையுமறியாமல் அவனுக்கு ஒரு நடுக்கம் உண்டானது.
“உட்காருங்க.”
அம்மிணி விடுவது மாதிரி இல்லை.
“அப்பன் வர்றது வரை நான்தான் இங்கு இருக்கேனே. பிறகு என்ன பயம்?”
அம்மிணிக்குப் பயமில்லை. அம்மிணி என்ன கேட்டாலும் சிரிப்பாள். யாருமில்லாத வேளைகளில் அவள் தேவையற்ற விஷயங்களையே பேசுவாள்.
“சுசீலா வீட்டுக்கு வந்திருந்தாளா?”- அம்மிணி கேட்டாள். கண்களில் ஒருவித திருட்டுத்தனமான சிரிப்பு. “வந்திருப்பா. என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரியாச்சே.”
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் ஒரு உண்மையைச் சொன்னான் “நான் அவளைக் கவனிக்கிறதே இல்ல...”
அம்மிணி தமாஷான ஒரு விஷயத்தைக் காதில் வாங்கினாள். அவள் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள். “பெண்களைக் கவனிக்காத ஒரு ஆள். என்கிட்ட எதற்கு இந்த வேஷம் போடணும்? சில நேரங்கள்ல பார்க்குற பார்வையைப் பார்த்தா போதுமே. நானே உட்கார்ந்து ஒரு மாதிரி ஆயிடுறேன். அம்மா. அப்பனோ வேற யாராவதோ எங்கே பார்த்துடப் போறாங்களோன்னு நானே பயந்து பயந்து நின்னுக்கிட்டு இருக்கேன்.”
“அம்மிணி உன்னை நான் அப்படிப் பார்க்குறேனா?”
“இல்ல இல்ல... பயங்கரமான ஆள்தான். தேள்ல எதுவும் போடாம முன்னடி வந்து நிக்கவே பயமா இருக்கு. யாராவது பார்த்துடப் போறாங்களேன்ற கூச்சம்கூட கொஞ்சமும் இல்ல. அப்படிப்பட்ட ஆள்தான் சுசீலாவைப் பார்க்காம இருப்பாராம்.”
விஸ்வநாதன் தன் நிலையில் உறதியாக இருந்தான். இந்த இளம் பெண்ணிடம் எப்படி நெருங்குவது என்ற கேள்வி இப்போதும் பிடிபடாமல் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது.
“அவளோட காலைப் பார்த்திருக்கீங்களா?”
அம்மிணி கேட்டாள்.
“இல்ல”
வெளியே மழை மேலும் அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் வெப்பத்தின் பரவல். கைலி முண்டுக்குக் கீழே தெரிந்த அம்மிணியின் கால் பகுதியைப் பார்த்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவனைப் போல அவன் கேட்டான் : “அம்மிணி, உன் கால்ல இருக்குற மாதிரி நிறைய அழகான சின்னச்சின்ன முடிகள் இருக்குமா என்ன?”
அம்மிணி மூக்கில் விரல் வைத்தாள்.