இதோ இங்கு வரை - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
“ஒண்ணும் வேண்டாம்.”
“அங்கே போகலியா?”
“இல்ல...”
“அப்படின்னா ஒரு காரியம் செய்வோம். இருட்டின பிறகு, நான் அந்தப் பொண்ணை மெல்ல இங்கு கொண்டு வந்திடுறேன்.”
வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டிருந்தது. ஒரு சவால் உள்ளுக்குள்ளிருந்து முட்டிக் கொண்டிருந்தது. அதை அதன் போக்கில் விட்டான். படபடப்பின் குரல். வெற்றி வீரனின் குரல். முதல் தடவையாகக் கேட்கப்போகும் ஏசல் வார்த்தைகள்...
“அந்தப் பெண்ணைக் கொண்டு வர்றப்போ நீங்க இங்கே இருக்கணும்”- நாணு சொன்னான் : “கண்ட கண்ட கள்ளுக் கடையிலும் சாராயக் கடையிலும் உங்களைத் தேடும்படி என்னை விட்றாதீங்க.” அதற்கு விஸ்வநாதன் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான். ஒரு பதிரி தோல்வியைத் தழுவாமல் கண்ணுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான். அந்தச் சமயத்தில் வந்து என்னவோ கூறிக் கொண்டிருக்கிறான் நாணு என்ற வியாபாரி.
“சரி...”
-விஸ்வநாதன் விரக்தியுடன் சொன்னான்.
அம்மிணி புறப்படும்போது பொழுது புலர்ந்துவிட்டது. கிழக்குத் திசையில் அப்போதுதான் வெளிச்சத்தின் அறிகுறி தெரிந்தது. அது படிப்படியாக அதிகரித்தது. புறப்படுகிற நேரத்தில் அவள் மிகவும் மவுனமாக இருந்தாள். முழுமையான சந்தோஷத்தின் துளிகளைப் பலமாக தாங்கிக் கொண்டிருந்த கால்களை எடுத்துவைத்து, அதிகாலைப் பொழுதின் நதிக்காற்றில் பட்டவாறு நடுங்கிக் கொண்டே அவள் நடந்து மறைவதை விஸ்வநாதன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். பலமான ஒரு எதிரியைக் கீழே விழ வைத்துவிட்ட சந்தோஷம் அவனுடைய மனதில் முழுமையாக நிறைந்திருந்தது. சோர்வு இருந்தது. அடித்துப்போட்ட உணர்வு இருந்தது. எனினும், அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றுவரை எந்த இடத்திலும் தோல்வியைச் சந்தித்திராத தான் இப்போதும் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற சந்தோஷம் அவனுக்கு இருந்தது.
எவ்வளவு பெரிய ஆபத்தையும் அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் ஒரு சிறிய பிரச்சினை உண்டானது. வாத்துக்களுக்கு உணவு வைத்திருக்கும் அறையின் மூலையில், அம்மிணி வருவதை எதிர்பார்த்து அமைதியாக அவன் உட்கார்ந்திருந்தான். நீண்ட நேரம் நீடித்து ஒரு இருமலுக்குக் கூட சுதந்திரமில்லாத ஒரு வெறுப்பைத் தந்த காத்திருப்பு அது. வீடு உறங்கிக் கொண்டிருந்தது. நல்ல இருட்டு. எந்த நேரத்திலும் இருட்டில் பதுங்கிக் கொண்டு அவள் வந்துவிடுவாள். அப்படித்தான் மாலையில் பார்த்தபோது அவள் சொன்னாள். அப்பச்சன் உறங்க வேண்டும். பைலி உறங்குவது ஒரு பெரிய பிரச்சினையில்லை. வந்து விழுந்தவுடன் அவன் உறங்கிவிடுவான். அப்பச்சன் அப்படி இல்லை. பிரார்த்தனை முடிவதற்கே நீண்ட நேரமாகும். அப்படியே படுத்தாலும், உறக்கம் சீக்கிரம் வராது. உறங்கினாலும், ஒரு சிறிய ஓசை கேட்டால்கூட எழுந்து விடுவான்.
அப்படிக் காத்திருக்கும்போது, ஒற்றையடிப்பாதை வழியாக டார்ச் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நாணு அங்கே வந்தான். அவனுடைய குரல் வீட்டிற்குள் விளக்கை எரிய வைத்தது. அவன் விஸ்வநாதனைத் தேடி வந்திருந்தான். “இனி விசாரிக்கிறதுக்கு ஒரு இடம் கூட இல்லை. ஒருவேளை பைலி ஆசான்கூட இங்கே வந்திருப்பார்னு சந்தேகம் உண்டானதுனால...” நாணு சொல்லி முடிப்பதற்குள், “இங்கே யாரும் வரல” என்று உறக்கம் கண்களில் தங்கியிருக்க, அப்பச்சன் சொன்னான். தொடர்ந்து அப்பச்சன் சொன்னான் : “சாயங்காலம் ஆள் வந்திருந்தாப்ல. அப்பவே போயாச்சு.”
நாணு வந்த வழியே திரும்பிச் சென்றான். அப்பச்சன் மேலும் சிறிது நேரம் வாசலிலேயே நின்றிருந்தான். அவனுக்கு நாணு வந்தது சிறிதும் பிடிக்கவில்லை. தூரத்தில் இருந்தாலும், விளக்கின் மங்கலான ஒளியில் அந்த முகத்தில் படிந்திருந்த சந்தேகங்களும் சிந்தனைகளும் விஸ்வநாதனை அச்சமுறச் செய்தது. ஒருமுறை அந்த இடத்திலிருந்து வெளியே வந்து வாத்துக்கள் இருந்த இடத்துக்கு அருகில் அவன் அந்த இடத்தைச் சுற்றி நடந்து ஆராய்ந்தபிறகுதான் அவன் திரும்பி வந்தான். அவ்வளவு நேரமும் அவன் மூச்சை அடக்கிப் பிடித்திருந்தான். ஒரு சுவருக்கு அப்பால் பாதங்களின் ஓசைகள் கேட்டன. கடைசியில் அவன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டான். வாசல் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டது. வீடு மீண்டும் இருட்டினுள் மூழ்கிவிட்டபோது ஒரு நிழலைப் போல அம்மிணி வெளியே வந்து கொண்டிருந்தாள்.
இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே அவனுக்கு அது அதிர்ச்சியாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் அப்பச்சன் பார்த்திருந்தால்?
ஒற்றையடிப்பாதை வழியாக இரண்டு பேர் கட்டியிருந்த ஆடைகளை அவிழ்த்து தோள்வழியாக மூடிக் கொண்டு நடந்து போனார்கள். அவர்களின் மெதுவான பேச்சு நாளின் சிறகை அணைப்பதைப்போல இருந்தது. உள்ளே அம்மிணி மீண்டும் உறங்க ஆரம்பித்திருப்பாள்.
அவன் எழுந்தான். வந்த விஷயம் இன்னும் முடியவில்லை. முடிந்தது அதன் ஒரு பகுதி மட்டுமே.
அகலமான மூன்று கூடைகளில் வாத்துகளுக்குத் தேவையான உணவு வைக்கப்பட்டிருந்தது. பனைமரத்தின் சிறு சிறு துண்டுகள். காலையில் வெளியே புறப்படுவதற்கு முன்பு அவை உண்ணும் உணவு அது. இரவு வேளையில் மூன்று கூடைகள் நிறைய அறுத்து அந்த உணவுப் பொருளை வைத்த பிறகுதான் அப்பச்சன் படுத்துச் செல்வான்.
விஸ்வநாதன் தரையின் ஒரு மூலையிலிருந்து புட்டியை எடுத்தான். இது போதாது. ரொம்பவும் குறைவா இருக்கு - தனக்குள் அவன் கூறிக்கொண்டான். ஒரு கூடைக்கே அதை மிகவும் சிரமப்பட்டு கலக்க வேண்டி வந்தது. அதைக் குலுக்கி மேலே உள்ளதைக் கீழே கொண்டு வந்தும், எல்லா இடத்திலும் அது சரியாகக் கலக்கவில்லை.
புட்டி காலியானது. கடைசி துளியும் உணவில் போய்க் கலப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது, உள்ளுக்குள் ஒரு குளிர்ந்த மயிர்க்கூச்செரிதலை அவன் உணர்ந்தான்.
செயலற்ற நிலையில் பரிதாபமான தோற்றத்துடன் இருக்கும் எதிரியின் முகம் கண்களுக்கு முன்னால் முதலில் தெரிந்தது. ஒரு கிளி அந்த இடத்திற்கு மேலே வந்து உட்கார்ந்து உரத்த குரலில் கத்தியது. வாத்துகள் விழித்து ஓசை உண்டாக்கின.
‘இனிமேல் இங்கே இருக்குற ஆபத்தான விஷயம். பொழுது புலர்ற நேரத்துல எழுந்திருக்குற ஆளாச்சே அப்பச்சன்’- விஸ்வநாதன் தனக்குள் கூறிக்கொண்டான்.
வயல்களையும் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து வேகமாக நடந்தபோது உள்ளே பலவிதக் காட்சிகளும் தோன்றி மறைந்தன. வெளிச்சம் வருவதற்கு முன்பே, ஆர்வத்துடன் உணவைச் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லும் வாத்துகள்... ஓடிக் கொண்டிருக்கும் நீரில் மிதக்கும் தளர்ந்து போன பாதங்கள்... நீரில் நீந்த முடியாமல் ஒரு வாத்து வாடி விழுகிறது. நீரோட்டம் அதையும் இழுத்துக் கொண்டு கீழ் நோக்கி ஓடுகிறது.