இதோ இங்கு வரை - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
விஸ்வநாதன் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பொறுக்கி எடுத்தான். உணர்ச்சிகளை முன் எச்சரிக்கையுடன் எடுத்து முகத்தில் அணிந்து கொண்டான். மிகவும் கவனமாக அவன் இருக்க வேண்டியிருக்கிறது. அம்மிணிக்குச் சந்தேகம் ஏற்படலாம். ஒன்றோ இரண்டோ நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு அவள் அதைக் கூறலாம். அப்படியென்றால் இரண்டில் ஒன்றுதான். ஒன்று விஸ்வநாதன் சாவதற்கு இப்போதே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் தெரியாமல் அவன் ஊரைவிட்டு ஓடிவிட வேண்டும்.
பேச்சின் திசையை மாற்ற எவ்வளவு முயற்சி செய்தும், கடைசியில் பைலி அதே விஷயத்திற்குத்தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தான். இப்போது வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச அவனால் இயலாது.
விஸ்வநாதன் பொறுமையாக பைலி சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
மாலை நேரத்திற்குச் சற்று முன்பு நாணு அங்கு வந்தான். கையில் ஒரு சிறு பலகாரப் பொட்டலம் இருந்தது. “சார், நீங்க தின்றதுக்காக வீட்டுல தயாரிச்சது... அவிச்ச சீனிக்கிழங்கு”
“இதெல்லாம் தேவையா?” - விஸ்வநாதன் கேட்டான் : “அந்தக் குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுத்தியா?”
“வைத்தியர்கிட்ட கொண்டு போய் காட்டினேன். கொஞ்சம் மருந்துப்பொடியும், மருந்தும் தந்தாரு. இப்போ பரவாயில்ல...”
விஸ்வநாதனுக்கு நாணுவின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கிற, குழந்தைகளை வளர்க்க முடியாத, அவர்களிடம் கொண்டிருக்கும் பாசத்தை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஏழை தந்தையைப் பற்றிய நினைப்பு ஒருவேளை அவனிடம் ஞாபகங்களைக் கிளறச் செய்திருக்கலாம்.
நாணு உள்ளே போக முயன்றான். சிறிது தேநீர் தயாரிக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.
“இங்கே வாடா” -அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பைலி எழுந்து நின்றான். அந்தக் குரலின் பயங்கரத்தன்மை விஸ்வநாதனை அதிர்ச்சியடையச் செய்தது. “என்னையா?” நாணு திகைத்து நின்றான்.
“உன்னைத்தான். உன்னை இல்லாம வேற யாரை? உன் அப்பனையா?”
நாணு மெதுவாக அருகில் வந்தான். முகத்தில் பயத்தின் கீற்றுகள் வந்துபோய்க் கொண்டிருந்தன. “நீ நேற்று ராத்திரி எங்க வீட்டுக்கு வந்தேல்ல?” பைலி கேட்டான்.
“ஆமா... வந்தேன்.”
“எதுக்கு வந்தே?”
“நான்... நான்... சாரைத் தேடி வந்தப்போ...”
அவன் முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு அடி முன்னால் வைத்து வானமே அதிர்கிற குரலில் பைலி கத்தினான்:
“சாரைத்தேடி நடுராத்திரி நேரத்துல எங்க வீட்டுக்கு வருவே. அப்படித்தானேடா?”
நாணு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான். அவனுடைய பயம் நிறைந்த கண்கள் தரையிலிருந்து விஸ்வநாதனின் முகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தபோது, ஒரு அடி விழுந்தது. நாணு ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தான்.
“நேரா பாருடா. திருட்டுத் தேவிடியா மகனே.”
தரையில் கிடந்த அவனைத் தூக்கி நிறுத்தியவாறு பைலி சொன்னான் : “நீ எங்க வாத்துகளுக்கு விஷம் கொடுத்துட்டே...”
“இல்ல... இல்ல...”- நாணுவின் குரல் மிகவும் பரிதாபமாக ஒலித்தது. மீண்டும் அடி விழுந்தது. நாணு சுவரில் மோதிக் கீழே விழுந்தான். அவன் தலையைத் தூக்கக் கஷ்டப்படுவதை விஸ்வநாதன் பார்த்தான்.
கடைவாயிலிருந்து சிவப்பாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இடுப்பிலிருந்த பேனாக் கத்தியை எடுத்து பைலி ஒரு பைத்தியம் பிடித்தவனைப் போல நடந்தான். நாணுவின் அருகில் சென்று குனிந்து அவன் பேனாக்கத்தியை ஓங்கினான்.
நாணு முனகினான், மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டான்.
“உண்மையைச் சொல்லுடா? நாயே. யார் சொல்லி நீ அதைச் செஞ்சே?”
நாணு கைகளை உயர்த்தி, ‘என்னை அடிக்காதீங்க’ என்று சைகை செய்தான். பைலியின் உதடுகளின் ஓரத்தில் குரூரமான ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
“உண்மையைச் சொன்னா நீ தப்பிக்கலாம்.”
நாணு எதுவும் கூற முடியாமல் கவிழ்ந்து விழுந்தான். அவனுடைய முனகல் சத்தம் வீட்டின் சிறு வராந்தாவில் கேட்டது.
“நான் இல்லை... நான் இல்ல...”- அவன் சொன்னான்.
பேனாக்கத்தியின் உரை வேகமாக அவனுடைய முதுகெலும்பு மீது போய் விழுந்தது. ஒரு உரத்த அழுகைச் சத்தம் அடுத்த நிமிடம் அங்கு கேட்டது. நாணு மல்லாக்க விழுந்து கைகளையும் கால்களையும் ஆட்டினான். ஒரு புழுவைப் போல துடித்தான். அவனுடைய கால்களை மிதித்தவாறு பைலி கத்தியை விரித்தான். பிசாசுத்தனமான முக வெளிப்பாடு.
“உண்மையைச் சொல்லு. இல்லாட்டி நீ சாகுறது நிச்சயம்”
அவன் சொன்னால், சொன்னது கண்களுக்கு முன்னால் நடக்கும் என்ற விஷயம் உறுதியாக விஸ்வநாதனுக்குத் தெரியும். ஏதாவது உடனடியாகச் செய்யாவிட்டால், எந்த அர்த்தமும் இல்லாமல் ஒரு கொலைச் செயலுக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டியதிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது.
“அவனை விடு, பைலி”- விஸ்வநாதன் படுத்துக் கொண்டே சொன்னான்.
“விடவா?”- பைலி விழுந்து விழுந்து சிரித்தான் : “இவனை விடவா? இவன் குடலை நான் எடுக்கப் போகிறேன்.”
“எதுக்கு?”
“இவன்தான் நேற்று ராத்திரி அங்கே வந்து கடவுளுக்குப் பொறுக்காத ஒரு காரியத்தைச் செஞ்சவன்...”
“இல்ல...” -விஸ்வநாதன் மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் குறும்புத்தனத்தை ஒத்துக் கொள்ளும் குழந்தையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் : “அதை செஞ்சது நான்...”
ஒரு நிமிடம் பைலி அசைவற்று நின்றுவிட்டான். அடுத்த நிமிடம் முகம் திடீரென்று செத்துப் போனது மாதிரி ஆகிவிட்டது. செத்துப்போன முகத்தில் இரத்தம் மீண்டும் வேகமாகப் பரவியபோது அவன் கத்தினான்:‘’
“இல்ல... இல்ல...”
“நான் சொன்னது உண்மை” - விஸ்வநாதன் எழுந்து நின்றான்.
“சார், இவனை விடணும்ன்றதுக்காகப் பொய் சொல்லக் கூடாது.”
விஸ்வநாதன் முணுமுணுத்தான் : “ஒரு பிணத்தைக் காப்பாத்துறதுக்கு நான் ஏன் முன் வரணும்?”
ஏரியின் மீது இருட்டு மூடிக்கிடந்தது. திசைகள் இருட்டுக்கு அப்பால் இருந்தன குளிர்ந்த காற்று வீசும்போது, நீரில் வளையங்கள் உண்டாயின. அவ்வப்போது சிறிய மீன்கள் படகிற்கு அருகில் குதித்துச் சாடி ஒரு ஊசி விழும் ஓசையை உண்டாக்கிக் கொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தன.
விஸ்வநாதன் ஓசை எதுவும் உண்டாக்காமல் துடுப்பைப் போட்டான். அருகில் சில நேரங்களில் பைலியின் முனகல் சத்தம் கேட்டது. சங்கிலியால் அவன் கட்டப்பட்டுக் கிடந்தபோது, தொடர்ந்து அடிகள் வாங்கிய நாயின் கடைசி நேர முனங்கள்தான் விஸ்வநாதனுக்கு ஞாபகத்தில் வந்தது.
பைலிக்கு சுயநினைவு மீண்டு வந்து கொண்டிருந்தது. எந்தவிதத்தில் பார்த்தாலும், அது நல்லதுதான். கடைசி நிமிடங்கள்... அவற்றின் குரூரமான நகங்களைப் பதிய வைக்கும்போது, அதன் வேதனையை அவன் தெரிந்து கொள்ளட்டும்.