இதோ இங்கு வரை - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
அண்ணனின் வழி தவறிப்போன உறவை எதிர்க்கும் தம்பி. தம்பியின் எதிர்ப்புகளுக்கு முன்னால் ஊமையாகிப்போன அண்ணன். யார் எதிர்த்தாலும் மேலும் மேலும் நெருக்கமாகிக் கொண்டிருக்கும் ஒரு உறவு.
“உன் அப்பன் என்னைக் கொல்லணும்னு நினைச்சான். நான் அவனோட எதிரியா ஆனேன். பைலிக்குஞ்ஞுக்கு கமலாக்ஷிக்கிட்ட ஆத்திரம். அவளைப் பார்க்குற இடங்கள்லாம் வச்சு அவளை அவன் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் பேசுவான். கொல்றதாக் கூட சொல்லுவான்!”
ஒரு காரணம் உண்டாக்குவதற்காக எல்லாரும் காத்திருந்தார்கள். எல்லா மனங்களிலும் நெருப்புத் துண்டுகள் புகைந்து கொண்டிருந்தன. ஒருவரையொருவர் பார்க்கும் நிமிடங்களில் அன்பு இல்லாததைப் போல் காட்டிக் கொண்டார்கள். காரணம் உண்டாக்குவதற்காக, காரணம் உண்டாக்கினான் பைலி.
“உன் அப்பன் அதைச் சொல்லி என்னைக் கொல்ல வந்தான். கடைசியில அவன் செத்துட்டான். உன் தாய் எனக்கு எல்லாமாக இருந்தா. அந்தப் போராட்டத்துல பைலி நினைச்சதைச் சாதிச்சிட்டான்.”
எல்லா முடிந்தபிறகுதான் யாரும் எதையும் அடையவில்லை என்று எல்லோருக்கும் தெரிந்தது.
“என்னைக்காவது ஒருநாள் நீ வருவேன்னு எனக்குத் தெரியும். எங்கேயிருந்தாலும் உனக்குன்னு ஒரு பிடிவாதம் மனசுல இருக்கும். அது எனக்குத் தெரியும். நீ கமலாக்ஷியின் மகனாச்சே! உன் ஒவ்வொரு அசைவையும் நான் உன்னிப்பா கவனிச்சேன். உன் ஒவ்வொரு பார்வையையும் நான் கவனமாப் பார்த்தேன். எந்தச் சூழ்நிலையிலயும் எதுவும் நடக்கும்னு என் மனசுல பட்டுக்கிட்டே இருந்துச்சு. என் வாத்துகள் செத்துப்போ யாரும் சொல்லாமலே ஆரம்பத்திலேயே அதைச் செய்த ஆள் யார்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. பைலிக்கிட்ட நான் சொல்லல. சொன்னா அவன் எதைச் செய்யவும் தயங்கமாட்டான். என்னால உன்கிட்ட அதைக் கேட்க முடியாது. நீ அவள் வயித்துல பிறந்தவனாச்சே!”
விஸ்வநாதன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அந்த முகத்தையே பார்த்தவாறு படுத்திருந்தான். ‘என் மனசு மாறல. என் தாகம் இப்போது கூட குறையல. இந்தக் கதைகளெல்லாம் என்னைக் குளிர வச்சிட முடியாது’ - அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
போகும் நேரத்தில் அப்பச்சன் சொன்னான் : “நீ இனிமேல் இந்த ஊர்ல இருக்க வேண்டாம். பைலிக்குத் தெரியிறதுக்கு முன்னாடி நீ இங்கேயிருந்து கிளம்பிடணும். அவனுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சுன்னா? அவன் என்ன செய்வான்னு சொல்லவே முடியாது.”
“நான் போகுறதுக்குத்தான் வந்தேன்” - விஸ்வநாதன் சொன்னான் : “கட்டாயம் போயிடுவேன். ஒருவேளை நாளைக்கோ இல்லாட்டி இன்னைக்கோ...”
“அது எனக்குப் புரியுது. அதுக்காக நான் இங்கே வரல. போறதுக்கு முன்னாடி இவ்வளவு விஷயங்களையும் உன்கிட்ட நான் சொல்லணும்னு நினைச்சேன்” அப்பச்சன் வெளியேறி நடந்தான்.
“காதலன்!”
அவன் போன வழியைப் பார்த்து விஸ்வநாதன் காறித்துப்பினான்.
மாலை நேரத்திற்குச் சற்று முன்பு நாணு மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து பைலியின் பிணத்தைப் பார்த்த விவரத்தைச் சொன்னான். அவன் மிகவும் பதைபதைத்துப் போயிருந்தான்.
எங்கேயோ ஏதோ சில சந்தேகங்கள்.
முந்தின நாள் சண்டை முடிந்து, பைலி எப்போது போனான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியவேண்டும். அவன் போகும்போது பைலி அடி வாங்கி சுயநினைவில்லாமல் கீழே கிடந்தான். பைலிக்கு அப்போது சுயநினைவு வந்தது என்று அவன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தான்.
விஸ்வநாதன் எந்தக் கேள்விக்கும் தெரிவாகப் பதில் கூறவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் அலட்சியமான முனகல்கள் மட்டுமே பதில்களாக இருந்தன.
“பைலியின் பிணத்தை முதல்ல பார்த்தது மீன் பிடிக்கிறவங்கதான். நல்லா வீங்கிப் போய் இருக்குது.”
“ஏரியிலா, கடலிலா?” - விஸ்வநாதனுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
“ஏரியில்...”
அந்தப் பதில் விஸ்வநாதனைக் கவலைப்படச் செய்தது. உடலில் என்றால், ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்து கரையில் கொண்டு போய் தள்ளியவன் தான்தான் என்று மனதில் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அப்படியென்றால் இப்போது நடந்திருப்பது தன்னால் அல்ல என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.
சோர்வடைந்து, தளர்ந்து, செயலற்றுப்போன ஒரு மனிதன் ஏரியில் மூழ்கி இறந்துவிட்டான் என்றே எல்லாரும் நினைத்திருக்கிறார்கள்!
“இன்னைக்கு ராத்திரி நான் வரமாட்டேன்” - கடைசியில் தயங்கிக் கொண்டே நாணு சொன்னான்.
“வரவேண்டாம்.”
“குழந்தைக்கு ஒண்ணுமே முடியல.”
“சரி...”
அவனுடைய பயத்தை விஸ்வநாதனால் புரிந்து கொள்ள முடிந்தது. பரிதாபமான ஒரு மனிதன்!
“இந்த வீட்டுல ராத்திரி தங்கி, தேவையில்லாம எதுக்கு போலீஸ்காரர்கள்கிட்ட அடி வாங்கணும்?”
இப்போது பைலியின் பிணம் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டிருக்கும். துணியால் மூடப்பட்டிருக்கும் பிணத்தை வாங்குவதற்காக அப்பச்சனும் அம்மிணியும் மருத்துவமனையில் காத்து நின்றிருப்பார்கள்.
13
இரவு முழுவதும் அவன் விழித்துக் கொண்டு படுத்திருந்தான். காய்ந்த இலைகள் காற்றில் பறக்கும்போதெல்லாம், அவன் திடுக்கிட்டு எழுந்திருப்பான். எதிரி வழிவாங்கும் எண்ணத்துடன் கட்டாயம் வருவான் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அப்பச்சன் வருவான் என்று அவன் நினைக்கவில்லை. கமலாக்ஷியின் மகனை நேருக்கு நேர் பார்த்துப் பேச அவனுக்குக் கஷ்டமாக இருக்கும் என்று விஸ்வநாதனுக்குப் பட்டது. அவன் எதிர்பார்த்தது முழுவதும் அம்மிணியைத்தான். வாசுவின் மகனைப்போலத் தானே பைலியின் மகளும்!
நினைத்துப் பார்க்கும்போது எல்லாமே எதிர்பாராமல் நடந்த விஷயங்கள்தான். அவளுக்கு அவனிடம் காதலோ, மோகமோ எதுவும் இல்லை என்பது தெளிவு. சதையின் மொழி மட்டுமே விஸ்வநாதனுக்குத் தெரியும். அம்மிணிக்கு மற்றொரு மொழி தெரிவது மாதிரி தெரியவில்லை. ஒன்றுசேரும் நிமிடங்களை ஓடவிடாமற் செய்ய வேண்டுமென்ற, மதிப்பு மிக்கதாக ஆக்க வேண்டுமென்ற விருப்பம் அவளுக்கு இருக்கிறது. அதைத்தாண்டி எதுவும் இல்லை.
இரவு நீண்டு கொண்டேயிருந்தது. எந்தச் சலனமும் இல்லாத முற்றம். இடையில் அவ்வப்போது ஒற்றையடிப்பாதையில் மெதுவான குரலில் பேசியவாறு நடந்து செல்லும் மனிதர்கள்... நிறுத்தாமல் கத்திக் கொண்டிருக்கின்ற வண்டுகள்... இடையில் கொஞ்சம் பெய்து மறைந்த சாரல் மழை...
நள்ளிரவு நேரத்திற்குச் சற்று முன்னால் அவன் சாமான்களைப் பெட்டியில் அடுக்கி வைத்தான். பொழுது புலர்வதற்கு முன்பு அவன் ஊரைவிட்டுக் கிளம்பிவிட வேண்டும். அதற்கு முன்னால் அவன் செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது.
அவன் வெளியில் இறங்கினான். இரவின் கடைசி மிதி கல்லில் சாய்ந்து உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் கிராமத்தின் குறட்டை ஒலியைக் கேட்டுக் கொண்டே அவன் நடந்தான்.