இதோ இங்கு வரை - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
“நான் கொஞ்சம் தண்ணி அடிக்கணும்!”
சிவராமன் அண்ணன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.
“வர்றீங்களா?”
“அய்யோ, இல்ல...”
“அப்படின்னா நான் போயிட்டு வர்றேன்!”
ஒற்றையடிப் பாதை வழியாக இறங்கியபோது, அவர் அவனுடன் நடந்து கொண்டே சொன்னார்: “வழி தெரியலைன்னா, நான் அங்கே வரை கொண்டுவந்து விடுறேன்!”
“வேண்டாம். நேற்று நான் போயிருக்கேனே!”
கிழவருக்கு ஒரு மாதிரி ஆயிவிருக்க வேண்டும்.
“நாளைக்குப் பார்க்கலாம்.”
“ம்...”
விஸ்வநாதன் வயலில் இறங்கினான். வானத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவொளி வயல் முழுக்க நிறைந்திருந்தது. வயல்களிலேயே அது தன்னை அடக்கிக் கொண்டு விட்டதைப் போல் இருந்தது.
6
தன் தந்தையையும் தாயையும் கொலை செய்த ஒரு மனிதனிடம் அன்பு உண்டாக வழியில்லை. அந்த மரணங்கள் கண்களுக்குக் கீழே கை, கால்களை உதைத்துக் கொண்டு கொஞ்சம் சொஞ்சமாக அமைதியாக ஒடுங்குவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நேரத்தில், குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு விஷயம்- குற்றவாளிகள் ஓடிப் போனார்கள். போலீசுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அனாதைகளாகக்கப்பட்ட வாத்துக்களைக் காப்பாற்ற வந்த புதிய மனிதர்களுக்கிடையே அடிபிடி தகராறுகள் உண்டாயின. ஊர் எதுவும் பேசாமல் ஊமை ஆனது. அன்று மனம் முழுக்க குத்து விழுந்து கீழே விழும் பைலிக்குஞ்ஞுவின் உருவம்தான் நிறைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த உருவத்தின் நிறம் மங்கியது. குற்றவாளிகளைப் போலீஸ்காரர்கள் பிடித்தார்கள். சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு பல தடவைகள் திரும்பத் திரும்ப அவன் சொன்னான்: “என் அப்பாவை வெட்டினதை நான் பார்த்தேன். என் கழுத்தைப் பிடிச்சு நெறிக்க பைலிக்குஞ்ஞு வந்தப்போ, அதைத் தடுக்க வந்த என் அம்மா மேல ஒரே வெட்டு... எனினும் தேவையான ஆதாரங்கள் அதற்கு இல்லாமற் போயின. ஆதாரங்கள் இல்லாமல் அப்பச்சன் வெளியே வந்து விட்டான். பைலிக்குஞ்ஞுவிற்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவன் மீது விஸ்வநாதனுக்கு உண்டான மனநிலை மாறியது. ஒருவித பரிதாப உணர்ச்சி அவன் மீது உண்டானது. இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு...
பரிதாப உணர்ச்சி தனக்குள் இருந்த இன்னொரு வெறி உணர்வைக் குளிரச் செய்துவிட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டதே அதற்குப் பிறகு நீண்டகாலம் கடந்த பிறகுதான். பைலிக்குஞ்ஞு பைலி ஆசானாகப் பக்கத்து அறையில் இருக்கிறான் என்பது தெரிந்தபோது அந்தப் பழைய வெறி மீண்டும் தலையை உயர்த்தியது. பைலி ஆசான் என்னைப் பார்த்தா எப்படி இருக்கும்?- அவன் தனக்குள் கூறிக்கொண்டான். கடையில் இருந்த பணியாள் பொறித்த நண்டை கொண்டு வந்து வைப்பதற்காக வந்தபோது சொன்னான்: “உங்களை அங்கே வரும்படி பைலி ஆசான் சொன்னாரு.” அதைக் கேட்டு உண்மையிலேயே அவன் ஆச்சரியப்பட்டு விட்டான். தான் தேடி வந்த மனிதன் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிறான். “எந்த பைலி ஆசான்?”- விஸ்வநாதன் கேட்டான். அதற்குச் சிறுவன் தன் தலையைச் சொறிந்து கொண்டே மெதுவாகக் கூறும்படி சைகை செய்தான். பைலி ஆசான் காதில் விழுந்துவிடப் போகிறது. கேட்டால் தலையைத் துண்டிச்சு விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பார். இதுதான் அந்த சைகைக்கு அர்த்தம். “சத்தமா... கடை முழுவதும் கேட்கிற மாதிரி என்னால சொல்ல முடியும். எந்த நாய்டா அது?”- விஸ்வநாதன் கேட்டான். அதைக் கேட்டு வேலைக்காரச் சிறுவன் அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் முகம் ஒரு மாதிரி வெளிறிப் போய்விட்டது. “அங்கே போய்ப் பார்க்குறதுக்கு நான் யாரு? அவன் வீட்டுப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணியிருக்கேனா?” என்று அவன் கேட்டவுடன், பையன் அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டதைப் பார்த்து, அவன் விழுந்து விழுந்து சிரித்தான். இவ்வளவு காலமாக பைலி இந்த ஊரில் ஒரு அச்சத்தைத் தரக் கூடிய மனிதனாக உலகிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவன் மீது விஸ்வநாதனுக்கு ஒருவித மதிப்பு உண்டானது. இரை வலையைத் தேடி வருவதை எதிர்பார்த்திருக்கும் சிங்கத்தின் பொறுமை உணர்வு அவனிடம் உண்டானது. குவளைகளில் நுரைகள் அவற்றின் பிரதிபலிப்பு என்பதைப் போல மேலே உணர்ந்து கொண்டிருந்தன.
வாசல் கதவு கிறீச்சிட்டது. ஒரு தலை அங்கு தெரிந்தது. அதைப் பார்க்காதது மாதிரி உட்கார்ந்திருந்தபோது தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டது. சவாலுக்கு அழைக்கும் ஒரு பயங்கர வேடம் கட்டிய உருவம் உள்ளே நுழைந்து தலையைத் தூக்கியது. குழி விழுந்த, போதை ஆக்கிரமித்திருக்கும் குரூரம் நிறைந்த கண்கள். வளர்ந்து கன்னங்களில் இறங்கியிருக்கும் நீளமான மீசை ரோமங்கள். பருமனான தோளில் ஒரு துண்டு. கையில் மடக்கிப் பிடித்திருக்கும் கத்தியின் முனையால் தாடியின் கீழ்ப்பகுதியைச் சுரண்டும் எதிரி...
குரைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாயைப் போல பைலி இருந்தான்.
புல்லைப் பார்த்துவிட்டு கண்களை வேறு பக்கம் திருப்புவதை போல அலட்சியமாக விஸ்வநாதனால் நடக்க முடிந்தது. ‘இது என்னோட மிகப் பெரிய வெற்றி. முதல் சந்திப்பில் இப்படி இல்லாமல் வேறொரு மாதிரிதான் என்னால் நடக்க முடியும். அது ஒரு கொலை பற்றிய உருவம்...’- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.
குவளையைப் பாதி நிறைத்தான். காதுகளைக் கைகளால் மூடிக் கொண்டான். பக்கத்து அறைகளில் படு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. பல காதுகளும் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பலகைக்கு அப்பால் வேலைக்காரனின் தலை தெரிந்தது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்த வேலைக்காரன்... “கலக்குறதுக்கு என்ன வேணும் சார்? ஃபேன்டா... கோலா... சோடா...?”- வேலைக்காரன் கேட்டான்.
அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்க, நீர் கலக்காத சாராயம் வயிற்றுக்குள் சென்றது. ஒரு மடக்கு குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு அவன் கேட்டான்: “என்ன கேட்டே?”
“ஒண்ணும் இல்ல”- பையன் பதைபதைப்புடன் சொன்னான். சொல்லிவிட்டு அவன் ஓடிவிட்டான்.
பைலி உள்ளே வந்தான். எதிரில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். நோக்கத்தைப் புரிந்து கொண்டபோது அவன் மீது விஸ்வநாதனுக்கு ஒரு மெல்லிய பரிதாபம் தோன்றவே செய்தது. சிறிதும் அறிமுகமில்லாத இளைஞர்களைப் பயமுறுத்தி மது அருந்தக்கூடிய இந்தக் கதாபாத்திரத்தை விஸ்வநாதன் வேறு எங்குமே பார்த்ததில்லை.
“ஊருக்குப் புதுசா வந்திருக்கிற ஆளு... அப்படித்தானே?”- முரட்டுத்தனமான குரல். வேண்டுமென்றே பணிவை வரவழைத்துக் கொண்டதால் உண்டான பாரத்தைத் தாங்க முடியாத கேள்வி.