இதோ இங்கு வரை - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
அப்படியே சொன்னாலும் அதை யாராவது நம்பத்தான் தயாராக இருப்பார்களா? அதையும் பரீட்சித்துத்தான் பார்த்துவிடவோமே என்று அவன் நினைத்தான். பின் பிறப்பைத் தெரிந்த ஒரு மனிதர் இதோ இங்கே இருக்கிறார். வேணும்னா இப்பவே நான் சொல்லத் தயார். சிவராமன் அண்ணே, என்னை உங்களுக்குத் தெரியலையா? நான் கத்தியால குத்தப்பட்டு இறந்த வாசுவோட மகன்... விஸ்வநாதன். இங்கே வந்து சேர்ந்தப்போ தெரியாத்தனமா சித்தியைப் பார்த்துட்டேன். பிறந்து வளர்ந்த ஊர்ன்றதாலயோ என்னவோ இங்கேயிருந்து உடனே போகுறதுக்கு எனக்கு மனசு வரல. நான் யார்ன்றதை யார்கிட்டயும் சொல்லமாட்டீங்கள்ல?- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
ஒருவேளை அவன் கூறியதை அவர் நம்பியிருக்கலாம். அப்படி நம்பவில்லையென்றால் ஆதாரங்களைத் திரட்டி மனிதர்களையும் இடங்களையும் சாட்சிகளாக நிறுத்தி அவரை அவன் நம்பிக்கை வரும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் அவனுக்குக் கிடைக்கப் போகிற அனுகூலம் என்ன? எதுவுமே இல்லை என்பதே உண்மை. யாரிடமும் கூறமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு, அவர் சொல்லி நாளை பொழுது புலர்வதற்கு முன்பே ஊர் முழுவதும் விஷயம் பரவியிருக்கும். அந்தக் காற்சட்டை அணிந்து வந்தது யாருன்னு தெரியுமா? செத்துப்போன வாசுவோட மகனாக்கும். அது, அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொள்வார்கள். இரண்டு நாட்களுக்கு ஆர்வம் நிறைந்த பல முகங்களை அவன் பார்க்க வேண்டியது வரும். பலரிடமும் இன்முகத்துடன் பேச வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மூன்றாவது நாள் விஸ்வநாதன் அவர்களுக்கு ஒரு புதுமையான விஷயமாக இல்லாமல் போய்விடுவான். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எழுந்த அந்தச் சுவையான விஷயம் வெகு சீக்கிரமே பாய்க்குள் மங்கிப்போய் சுருட்டி மூடப்பட்டு விடும்.
நான் செல்ல மாட்டேன், விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான். யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அப்படி அவன் கூறிவிட்டால், அந்த நிமிடத்திலேயே அவனுடைய வாழ்க்கையின் அமைதித் தன்மை இழக்கப்பட்டு விடும். பிறகு எந்தச் சமயத்திலும் திரும்பப் பெற முடியாத அளவிற்கு அதன் பிரகாசம் நிரந்தரமாக இல்லாமற் போய்விடும்.
சுசீலா தேநீருடன் வந்தாள்.
“பால் இருந்ததாடீ?” சிவராமன் அண்ணன் கேட்டார்.
“ஆட்டைக் கறந்தேன்.”
“புத்திசாலிப் பொண்ணு”
கிராமத்து அழகு வெட்கப்பட்டு ஒதுங்கி நின்றது. என்னதான் விலக்கினாலும், அவனையே அறியாமல் அவனுடைய கண்கள் அவள் மீது ஆழமாகப் பதியவே செய்தன. நல்ல உடல் வளத்துடன் சுசீலா இருந்தாள்.
“போ... நான் வர்றேன். குவளைகளை எடுத்துட்டுப் போ.”
தன் தந்தை காணாதது மாதிரி, அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் விஸ்வநாதன் பார்க்கிற மாதிரி அவள் ஒதுங்கி நின்றிருந்தாள். அவ்வப்போது அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்படிப் பார்க்கும்போது அவளுடைய கன்னங்கள் சிவந்தன. அவனுக்கு அவள்மீது பரிதாப உணர்ச்சி உண்டானது. நான் கையில தூக்கி நடந்திருக்க வேண்டிய பெண்ணு இவ, அவன் தனக்குள் கூறிக் கொண்டான். ஒருவேளை அவனுடைய மனைவியாகக் கூட சுசீலா ஆகியிருக்கலாம். தன்னுடைய இழப்புகளில் அவளுடைய இளமையும் கன்னித் தன்மையும்கூட அடங்கியிருக்கின்றன என்பதை அவன் கவலையுடன் நினைத்துப் பார்த்தான்.
குவளை காலி ஆனது. சிவராமன் அண்ணனின் நகைச்சுவை கலந்த பேச்சு, சுசீசலாவின் கண்களில் இருந்த ஒளி, மாலை தவழ்ந்து கொண்டிருக்கும் வாசல் வழியாகப் பின்பாகத்தை அசைத்தவாறு நடந்து போய்க் கொண்டிருக்கும் அந்த இளம் பெண்ணின் கொள்ளை அழகு, ஒரு பழைய உறவின் மறு பிறப்பு... நினைக்க நினைக்க விஸ்வநாதனுக்கு எல்லாமே விளையாட்டாகத் தோன்றியது.
5
விஸ்வநாதன் பிறந்தபோது அவனுடைய தந்தை ஒரு படகோட்டியாக இருந்தான். ஒருமுறை படகின் சொந்தக்காரன் தேவையில்லாமல் என்னவோ கூறிவிட்டான். வாசு அந்த ஆள் எப்படி அப்படிப் பேசலாம் என்று திருப்பிக் கேட்டான். வாக்குவாதம் முற்றியது. அவ்வளவுதான், அந்த மனிதனை வாசு அடித்து விட்டான். அந்த வேலை அந்த நிமிடமே அவனுக்கு இல்லாமற் போனது.
விஸ்வநாதனுக்கு ஞாபகம் தெரிந்த நாளில் அவனுடைய தந்தை ஒரு லாரியில் ஓட்டுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த வேலையும் வேண்டாம் என்று கூறிவிட்டு, ஒரு பழைய காரை அவன் விலைக்கு வாங்கினான். அதை வாடகைக் காராக மாற்றினான். பத்துமைல் சுற்றளவில் இருந்த ஒரே ஒரு வாடகைக் கார் அதுதான். வீட்டிற்குப் பணம் எந்தச் சமயத்திலும் வந்து சேர்ந்ததில்லை. இருந்தாலும் அவனுடைய தந்தையின் ஜிப்பா பையில் எப்போதும் பண நோட்டுக்கள் இருந்தவண்ணன் இருக்கும். ஜானு மலடியாக இருந்தாள். மனைவி பிள்ளை பெறவில்லை என்றதும் வாசு ஜானுவின் தங்கையையும் மனைவியாக ஆக்கிக் கொண்டான். கமலாக்ஷி! பிரசவம் ஆகி அவள் மிகவும் இளைத்துப் போய்க் காணப்பட்டதால், வாசு சங்கரியையும் மனைவியாக்கிக் கொண்டான்.
அவனுடைய தந்தை கர்ப்பமாக்கிய பெண்கள் இடையில் அவ்வப்போது அவனைத் தேடி வீட்டிற்கு வந்தார்கள். மூக்குப்பொடியை உள்ளே இழுத்துக் கொண்டே ஜானு பெரியம்மா அவர்கள் மீது பாய்ந்து விழுந்தாள். அவனுடைய தாய் எதுவும் பேசவில்லை. தன் தாயின் மடியில் மல்லாக்கப் படுத்தவாறு வாசலில் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆரவாரத்தைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் விஸ்வநாதன். வாசலில் போடப்பட்டிருந்த உரலில் தன் பின் பாகத்தை இறக்கி வைத்துவிட்டு, முழங்காலுக்கு மேலே முண்டை தூக்கிக் கட்டியவாறு கலகலகவென்று சிரித்துக் கொண்டும், இடையில் அடிக்கொருதரம் தன் அக்காவிற்கு உதவிக்கொண்டும் சங்கரி சித்தி ஒரு தேவதையின் குறும்புத்தனங்களுடனும் அழகுடனும் அங்கு தோன்றிக் கொண்டிருந்தாள்.
சங்கரி சித்தி தினமும் குளித்தாள். மாலை நேரம் வந்துவிட்டால் ஏணியில் ஏறி முல்லைப்பூ பறித்து தன் தலையில் சூடுவதை வாழ்க்கையாகக் கொண்டிருந்தாள். அவளை எப்போதும் நறுமணம் சூழ்ந்தவண்ணன் இருந்தது.
பெரியம்மா எப்போதும் குளித்ததில்லை. மூக்குப் பொடியின் சகிக்க முடியாத வாசனை மூக்கில் படும்போதெல்லாம் பெரியம்மாவைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்துவிடும். எல்லாமே புலர்காலைப் பொழுதின் குளிர்ச்சியைப் போல தெளிவற்ற நினைவுகள்...
நினைவுகள்மீது விடாமல் மழைபெய்து கொண்டிருந்தது. நினைவுகளின் வயல்களில் நீ நிறைந்து வழிந்தது. ஆறுகளின் கரைகள் நீரால் நிறைந்து காணப்பட்டன. மழைக்காலத்தின் மத்தியில் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக நீரில் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவை எங்கிருந்து வந்தன என்பது அவனுக்குத் தெரியாது. முடிவற்ற காலத்திற்கு அப்பாலிருந்துகூட இருக்கலாம். உடம்பில் வரிகள் இருக்க, இறக்கைகளை அசைத்தவாறு அவை மிதந்து வந்தன. மிதந்து வரும்போது ஆண் வாத்துக்கள் பெண் வாத்துக்கள்மீது வேகமாக ஏறின. நீரில் மூழ்கி மேலே வந்த பெண் வாத்து தூரத்தை நோக்கி ஓடியது. ஆண் வாத்திற்குச் சிறிதுகூட தாகம் அடங்கவில்லை.