இதோ இங்கு வரை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டு மறந்து போன சித்தியின் பெயரை அவன் மீண்டும் கேட்டான்.
“உங்களோட செத்துப்போன அக்காவோட பேர் என்ன?”
விஸ்வநாதனை எடுத்து வளர்த்த அவனுடைய தாயின் அக்காவான பெரியம்மாவின் பெயரை அவன் மீண்டும் கேட்டான்.
அதற்குப் பிறகு அங்கு ஒரு நிமிடம்கூட அவனால் நிற்கமுடியவில்லை. நின்று கொண்டிருக்கும்பொழுது, சுழல்களை நோக்கியும் ஆழங்களை நோக்கியும் தூக்கி எறியப்பட்ட படகோட்டியின் தர்மசங்கடமான நிலை அவனைச் சூழ்ந்து கொண்டது.
அவன் ஆழங்களுக்குள் மூழ்கினான். “போகணும். இங்கே மட்டும் வரவே கூடாதுன்னு நான் எப்படியெல்லாம் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். இருந்தும் கடைசியில்...”
அவனுடைய கால்கள் அவனை வலிய இழுத்துக் கொண்டு போயின.
பின்னாலிருந்து சங்கரியம்மாவின் குரல் கேட்டது “ஒரு ரூபாய்னா கூட போதும் சார்.”
ஒரு வியாபாரத்தின் பிடிவாதத்துடன் பேரம் பேசல் நடத்திக் கொண்டிருந்த பொருளின் சொந்தக்காரி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். நாணு தன்னுடன் வந்து சேரக் கட்டப்படுவதைக் காதுகளுக்குக் கீழே கேட்கும் பெருமூச்சுகளைக் கொண்டு உணர முடிந்தது.
வாய்க்காலையொட்டி இருக்கும் வரப்புகள், வயல்கள், தென்னை மரங்கள், அதிகாலை நேரத்தில் நடந்து கொண்டிருக்கும் பாதங்கள்... இவ்வளவு தூரம் நான் இந்த இரவு நேரத்துல நடந்து வந்தேனா? அவன் ஆச்சரியப்பட்டான்.
அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாணு அவனிடம் என்னவோ கூற முயன்றான். ஒருவேளை அவன் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டிருக்கலாம். இல்லாவிட்டால் வாடகைக்கு வீடு எடுக்கக் கூடிய விஷயம் பற்றிக் கூட இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் திடீரென்று விஸ்வநாதனிடம் உண்டான குண மாறுதலைப் பற்றிக் கூட அவன் ஏதாவது கேட்க நினைத்திருக்கலாம்.
விஸ்வநாதன் அவன் சொன்னது எதையும் காதிலேயே வாங்கவில்லை. ஒரு கடுமையான சூறாவளியில் சிக்கி அவன் பறந்து கொண்டிருந்தான். நான் உடனடியா படகுத்துறைக்குப் போகணும். நான் இப்பவே என் படகை அடையணும். நான் இந்த நிமிடமே இங்கேயிருந்து கிளம்பணும், அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
3
க>ணவன் உயிரோடு இருக்கும்பொழுது அவனுடைய மனைவி விபசாரம் செய்ய ஆரம்பிக்கிறாளென்றால் அவன் கணவனோ அல்ல என்ற நிலையை அடைகிறான். பெண் குற்றவாளியாக ஆகிறாள். கணவன் மரணமடைந்த பிறகு அவள் விபசாரம் செய்தால், அவளும் அவனும் குற்றவாளி இல்லை என்றாகிறார்கள்.
வாசு உயிருடன் இருந்தபோது எவ்வளவு மரியாதையுடன் வாழ்ந்தவள் அவள். அவன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கணவன் ஒரு மிகப் பெரிய வீரன் என்று உயரத்தில் வைத்துப் புகழப்படுகிறான். அவளைக் குற்றம் சொல்வதற்கில்லை. எப்படிச் சொல்ல முடியும்? சொல்லப் போனால் அவளிடம் இளமை இருக்கிறது. வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. இதைத் தவிர அவள் வேறு என்ன செய்ய முடியும்? பெண் தர்ம சங்கடமான நிலைமையிலும் இரக்கப்படக் கூடிய சூழ்நிலையிலும் தள்ளப்படுகிறாள் என்பதே உண்மை.
தன் தந்தை முன்பே மரணத்தைத் தழுவியது பல காரணங்களாலும் நல்லதாகப் போய்விட்டது என்று விஸ்வநாதனுக்குப் பட்டது. தன்னுடைய பெயருக்குக் களங்கம் உண்டாவதற்கு முன்பு அவனால் இந்த உலகை விட்டு போய்விட முடிந்திருக்கிறதே.
ஆற்றுக்கு மத்தியில் தேங்காய் ஏற்றப்பட்ட படகு நகர்ந்து கொண்டிருந்தது. சிறிய நீர்த் திவலைகள் விஸ்வநாதனின் உடம்பில் வந்து மோதிக் கொண்டிருந்தன.
காலையில் கண் விழித்தபோது மிகவும் நேரமாகிவிட்டிருந்தது. அவன் கண்விழித்துப் பார்த்தது படகின் ஓரங்களைத்தான். நீர்த்திவலைகள் தங்கள் கைகள் கொண்டு அந்தத் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தன. தூக்கம் இன்னும் முடியவில்லை.
எப்படித் தன்னால் தூங்க முடிந்தது என்று விஸ்வநாதனுக்குத் தன் மீதே சந்தேகம் தோன்றியது. தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்த பிறகும், தன்னுடைய சொந்தத் தாயின் தங்கை நடத்தும் விபசார இல்லத்திற்குச் சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பிறகும், உறக்கம் அவனை விட்டு நீங்கவில்லை. படகோட்டி ஒரு குவளைத் தேநீருடன் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தான்.
“வர்றப்போ பொழுது புலர்ந்திருச்சு. அப்படித்தானே?”
“ஆமா...”
“எனக்கு எதுவுமே தெரியாது. நல்லா தூங்கிட்டேன்.”
“ம்...”
“போக வேண்டாமா?”
விஸ்வநாதன் அதற்கு உடனடியாகப் பதில் எதுவும் கூறவில்லை போகலாம் என்று கூறுவதற்காக நாக்கு அவனையே அறியாமல் வளைந்தது. இப்போது வரையிலும் அப்படிச் சொல்லித்தான் அவனுக்குப் பழக்கம். இப்போது முதல்தடவையாக எதுவுமே கூறாமல் அவன் இருந்தான்.
“அந்த நாணு காலையில வந்தான்”- படகோட்டி சொன்னான் “நீங்க கண் விழிப்பீங்கன்னு காத்திருந்தான். இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தான். இப்போதான் போனான்.”
“அப்படியா?”
“அந்த வீட்டை ஒரு ரூபாய்க்குத் தர்றதா சொன்னாங்க.”
கையிலிருந்த குவளையைப் படிமீது வைத்துவிட்டு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்த விஸ்வநாதன் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறு படுத்திருந்தான். பதில் ஏதாவது வரும் என்று சிறிது நேரம் எதிர்பார்த்து நின்றிருந்த பிறகு, எந்தப் பதிலும் வராமல் போகவே படகோட்டி குவளையை எடுத்துக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்து போனான்.
தேநீர்க் கடையில் எழுந்த சத்தங்கள், ஒரு வண்டின் முனகலைப் போல தெளிவற்ற முணுமுணுப்பாக ஒலித்தன. தூரத்தில் எங்கோ இருந்த ஒரு தேவாலயத்திலிருந்து நிற்காமல் ஒலித்த மணியோசை தெளிவில்லாத ஒரு அலறலைப் போல் கேட்டது.
அந்தச் சத்தம் நிற்கும் வரை விஸ்வநாதன் தீவிர யோசனையில் மூழ்கியிருந்தான். சிறு பிள்ளைக் காலம் அவனுடைய மனதில் தோன்றி இரைச்சல் உண்டாக்கியது. கிராமத்துப் பாதைகள் வழியாக தலைகளை மூடிக் கொண்டு ஓவியம் என சிறுமிகள் நடந்து செல்லும் ஞாயிற்றுக்கிழமைகள்? மாலை நேரங்களில் மணியோசை எழுப்பும் கோவில்கள், திருவிழாக்கள், கடைகள், தந்தை, தந்தையின் தலைவணங்காத குணம், தாய், வீடு...
இருபது வருடங்களுக்குப் பிறகு கடைசி மணியோசை... பிறகு முழுமையான அமைதி...
காற்றும் நீரலைகளும் சேர்ந்து நடத்தும் சல்லாபத்தை ஒருவித அதிர்ச்சியுடன் விஸ்வநாதன் புரிந்து கொண்டான். இங்கேயிருந்த அப்படி வேற எங்கேயாவது ஓடிப்போக என்னால முடியாது. என் கால்கள் இங்கே கட்டப்பட்டிருப்பவை. வேர்களாக இருந்தா பிய்த்து எறிந்துவிட்டு ஓடிடலாம். இங்கே அது இல்ல. சரியாக சொல்லப் போனா கனமான சங்கிலிகள் கொண்டு நான் கட்டப்பட்டிருக்கேன். அதற்கு மத்தியில் ஒண்ணுமே செய்ய முடியாமப் படுத்திருக்கிறதைத் தவிர எனக்கு வேற வழியே இல்ல!’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
படகோட்டி திரும்பி வந்தான்.
“சரி... என்ன தீர்மானம் பண்ணினீங்க?”