இதோ இங்கு வரை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
எனினும், மனம் அந்தப் படகுத் துறையிலேயே நின்றுவிட்டிருந்தது. முன்னோக்கி நகரும் ஒவ்வொரு அடியும் வாழ்க்கையின் சகல அதிர்ஷ்டங்களிலிருந்தும் தன்னைத் தூரத்திற்குக் கொண்டு செல்வதைப் போல அவன் உணர்ந்தான்.
படகுத்துறை பின்னால் ஒரு சிறு துரும்பைப் போல தெரிந்தது. வேறொரு பெண் படகுத் துறையில் இறங்கிவிட்டிருந்தாள். அவர்கள் துடுப்புப் போடப்போட விலகிப் போய்க் கொண்டேயிருந்தார்கள். அந்தப் படகுத்துறையின் புனிதத்தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
“அடுத்த படகுத் துறையில படகை நிறுத்துவோம்”- விஸ்வநாதன் சொன்னான். சொல்லி முடித்தபோது அவன் மனதிற்குள் நினைத்தான். “நான் ஏன் அப்படி சொன்னேன்? காதல் உணர்வு மனதில் தோன்றிவிட்டதோ?”
அதெல்லாம் இல்லை. அவன் எத்தனையோ இளம்பெண்களைப் பார்த்திருக்கிறான். வாழ்க்கையின் எத்தனையெத்தனையோ துறைகளைச் சேர்ந்த இளம்பெண்கள் அவர்கள்! விலைமாதர்கள், அறிவாளிகள், நவீன ஓவியம் வரையும் பெண்கள், பணக்காரிகள், ஹிப்பிப் பெண்கள், பல மொழிகள் பேசக்கூடிய, பல கலாசாரங்களைக் கொண்ட, பல சமுதாயங்களின் சட்டங்களைப் பின்பற்றி வாழும் எத்தனையெத்தனை பெண்கள். அவர்கள் யாரிடமும் தோன்றாத உணர்ச்சி ஒன்றும் இப்போது பார்த்த பெண்ணிடம் தோன்றிவிடவில்லை. வெறுமனே இன்னொருமுறை பார்த்தால் என்ன என்றொரு தோணல்... அவ்வளவுதான். படகோட்டி கூறியதைப்போல அந்தப் பெண் ஒத்துவரக் கூடியவளாக இருந்தால், ஒரு இரவு அவளுடன் சேர்ந்து தூங்கினால் என்ன என்றொரு வெறி... இறுக அணைத்துப் படுக்க வைத்து பயணத்தில் புதிய ஒரு அனுபவத்தின் கனமான துளிகள் விழுந்து முடியும்போது, வெற்றி வீரனைப் போல மிடுக்காக நடக்க வேண்டும் என்றொரு விருப்பம்...
படகு மெதுவாகப் படகுத்துறையை நோக்கி நகர்ந்தது. அதிகபட்சம் அதை அடைவதற்கு இரண்டு ஃபர்லாங் தூரம் இருக்கும்.
“அவ அங்கேயிருந்து போகமாட்டான்னு எனக்குத் தெரியும்”- படகோட்டி பெருமை மேலோங்கக் கூறிய வார்த்தைகளை அவன் கேட்டான்: “சரக்கு அப்படி...”
புதியதோர் படகுத்துறை. புதியதோர் இடம். படகுத்துறைக்கு அருகில் இருந்த ஒரு தேநீர்க்கடையிலிருந்து மெதுவாகக் கிளம்பி ஒலிக்கும் ரேடியோவின் சத்தம்... அதிகாலை வேளை... ஒரு ஊர்... சில மனிதர்கள்...
2
மூன்று நான்கு வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்த ஒரு நகரத்திற்கு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு போனபோது, அங்கு ஒரு பாதை கூட தெரியாமல் நின்றுபோன ஒரு அனுபவம் அவனுக்கு ஏற்கெனவே உண்டாகியிருக்கிறது. அதைப்போல எத்தனையெத்தனையோ அனுபவங்களை அவன் மனதில் நினைத்துப் பார்க்கலாம். முன்பு வசித்துக் கொண்டிருந்த அறைக்கு முன்னால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய மனிதனைப்போல நடந்து போகவே அவனுக்கு எப்போதும் முடிந்திருக்கிறது. உடனிருக்கும் யாராவது கூறி புரிய வைக்கும்போதுதான் வெட்கத்துடன் அவனே புரிந்து கொள்வான்- அய்யோ... “இந்த இடத்தில்தானே நான் வசித்தேன். இந்தப் பாதைகள் வழியாக நான் எத்தனை தடவைகள் இங்குமங்குமாக நடந்திருக்கிறேன்” என்பதையே.
ஆரம்ப காலத்தில் தன்னுடைய ஞாபகக் குறைவைப் பற்றி அவனுக்கொரு குறை இருந்தது. அதற்குப் பிறகு அவனுக்கே புரிந்துவிட்டது... அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது விஸ்வநாதன் என்றும் எப்போதும் ஒரு புதிய மனிதனாகவே இருந்து வந்திருக்கிறான். அவனை ஏமாற்றுவதற்காகப் பூமியின் எல்லா பகுதிகளிலும், மூலைகளிலும் மனிதர்கள் என்றும் ஏதாவது காரியங்கள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு புதிய வீடு, ஒரு புதிய கடைவீதி, ஒரு புதிய சுவர்... இப்படி ஏதாவதொன்று.
இங்கும் அதுதான் நடந்தது. ஒரு பகலிலும் ஒரு இரவிலும் சுற்றியும் கூட அது தன்னுடைய ஊர்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனைச் சுற்றிக் குழுமிய மனிதர்கள் அனைவரும் அவனை ஒரு விநோதமான பிறவியைப் பார்ப்பது போல வெறித்துப் பார்த்தார்கள். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்டதால் யாருடைய முகங்களையும் அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
அவர்களுக்கு விஸ்வநாதன் யாரென்று தெரியவேண்டும். தான் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியன் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதே மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்தது விஸ்வநாதனுக்கு. விஸ்வநாதன் எதற்காக அந்த ஊரில் வந்து தங்குகிறான் என்பதற்கான காரணம் அவர்களுக்குத் தெரிந்ததாக வேண்டும். அவனுக்கு அந்த ஊரை மிகவும் பிடித்திருந்தது. அங்கு இரண்டோ, நான்கோ நாட்கள் தங்கியிருந்து ஏதாவது உபயோகமாகச் செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தான் விஸ்வநாதன். எவ்வளவு சொல்லியும் அவர்களுடைய சந்தேகங்கள் தீர்வமாகத் தெரியவில்லை. அவர்களின் நம்பிக்கையின்மை தன்னைச்சுற்றி இப்போதும் ஆரோக்கியமற்ற ஒரு வாசனையைப் போல சூழ்ந்து நிற்பதை அவனால் உணரமுடிந்தது.
பக்கத்து அறைகளில் சாராயம் குடித்துக் கொண்டிருக்கும் முரட்டுத்தனமான மனிதர்கள் குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பேசுவது அவனைப் பற்றித்தானோ? வராந்தாவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள் வாசல் பலகைகளுக்கு மேலே எட்டிப் பார்ப்பது அவனுடைய அசைவுகளைப் பார்ப்பதற்காகத்தானே இருக்க வேண்டும்.
காலையில் படகுத்துறையில் இருந்த தேநீர்க்கடையில் ஆரம்பித்த அவர்களின் ஆர்வம் இப்போது மாலை வரை விடாது சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
விஸ்வநாதனுக்கு கிராமங்கள் மீது வெறுப்பு தோன்றியது. நகரங்கள் மீது அதே நேரத்தில் விருப்பமும். அங்கு யாரும் யாரைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். மக்கள் மத்தியில் அழுது கொண்டு கிடந்தாலும் திரும்பிப் பார்ப்பதற்கோ கை கொடுத்துத் தூக்குவதற்கோ யாரும் வரமாட்டார்கள்.
“இந்த ஊரில் அஞ்சாறு மாதங்கள் தங்குவதற்கு அங்காவது வசதியான இடம் இருக்குமா?”
காலையில் தன்னைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மனிதர்களின் சந்தேகங்களை நீக்குவதற்காக அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்.
அந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஆவி மேலே வந்து கொண்டிருந்த புட்டுத்துண்டுகளுக்கு மத்தியில் அவர்கள் மீண்டும் மூழ்கி விட்டார்கள். “வசதியான இடம்னா எப்படி?”- வாயல் ஜிப்பாவும் லுங்கியும் அணிந்து தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் அதிகாரத் தொனியில் கேட்டான்.
“வசதியான இடம்னா... எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம உட்கார்ந்து கொஞ்சம் வேலை செய்யிறதுக்கான ஒரு அறை.”
“வசதியான இடம். இந்தப் பகுதியில எந்த இடத்துலயும் வெளியில இருந்து வர்றவங்க தங்குற அளவுக்கு ஹோட்டல் இல்ல”- அந்த ஆள் சொன்னான். அவனுடைய குரலில் விருப்பமின்மை, வெறுப்பு இரண்டும் அடியோட்டமாகக் கலந்திருந்தது நன்றாகவே தெரிந்தது.
“ஹோட்டல் வேணும்னு அவசியம் இல்ல. ஏதாவது காலியா இருக்குற கடை அறையோ இல்லாட்டி சின்ன ஒரு வீடோ...”