இதோ இங்கு வரை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
மன்னிப்பு கேட்பதைப் போல, வெட்கப்பட்டு தலைகுனிந்தவாறு விஸ்வநாதன் சொன்னேன் “நாணுவைக் கொஞ்சம் தேடிப்பிடி... எனக்கு உடனடியா ஒரு வீடு வேணும்.”
அவன் தலையை உயர்த்திப் பார்க்கவேயில்லை. படகோட்டியின் முகத்தில் பரவியிருக்கும் ஆச்சரியத்தை அவனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்க முயற்சிக்காமல் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்துவிட்டு நீருக்குள் அவன் இறங்கினான்.
நீர் ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டு, காதுகளையும் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு அவன் இருந்தான். நீர் அவனையும் இழுத்துக்கொண்டு ஓடியது. கீழ்நோக்கி, கீழ் நோக்கி... மரத்தின் வழியாக கை, கால்களை அசைக்காமல் கடந்து போகும் ஒரு அனுபவம். இறுதியில் தலையைத் தூக்கிப் பார்த்தபோது, படகு மேலே ஒரு பொட்டைப் போல நின்றிருந்தது. கண்களைச் சுற்றிலும் நீர். எண்ணினால் எண்ண முடியாத அளவுக்கு சிறிய அலைகள்...
விஸ்வநாதன் அங்கே திகைத்துப் போய் படுத்திருந்தான். சிறுசிறு மீன்கள் அவ்வப்போது குதித்தோடிக் கொண்டு வந்து அவனுடைய மார்பைக் கொத்திக் கொண்டிருந்தன. தொப்புளில் வாலால் கிச்சுக் கிச்சு மூட்டின. குறும்புத்தனம் செய்த சந்தோஷத்துடன் தூரத்தை நோக்கி ஓடின. நீரலைகளிலிருந்து அவற்றின் சந்தோஷத்தைத் தெரிந்து கொண்ட விஸ்வநாதன் தன்னை முழுமையாக நிர்வாணமாக்கினான். நீரலைகள் அவனைச் சுற்றிக் கொண்டன. முத்தம் இட்டன். தூங்கச் செய்தன. விஸ்வநாதன் கண்களை மூடி மல்லாக்கப் படுத்தினான். அவனுடைய கண்களுக்கு மேலே நீர் ஒரு தோலைப் போல மூடிகிடந்தது. நீரலைகள் அவன்மீது வந்து மோதின. கண்களைத் திறந்து பார்த்தபோது, சூரியன் கீழே இறங்கிவிட்டிருந்தது.
அவன் மீண்டும் ஆழங்களை நோக்கி மூழ்கினான். கால்களை அசைத்து ஒரு முதிர்ச்சி பெற்ற மீனைப் போல கீழ் நோக்கி, கீழ் நோக்கி அவன் நீரைத் துழாவிக் கொண்டு இறங்கினான். மீண்டும் மேலே வராமல் இருந்தால். நீருக்கு மத்தியிலிருந்த சிறிது காற்றை இழுக்கக் கூடிய சக்தி தனக்குக் கிடைத்திருந்தால்”- இப்படியெல்லாம் அவன் நினைத்துப் பார்த்தான்.
அடியில் மணல் கிடந்தது. அவன் அங்கு வந்திருப்பது தெரிந்தவுடன் அந்த மணல்கள் மெதுவாக உருண்டு இடம் மாறின. அங்கு உட்காரவும், காற்பாதங்களின் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு அங்கு பயணம் செய்யவும் அவன் ஆசைப்பட்டான். இது எதுவும் முடியாமல் பூமிக்கு மேலே கால்களைப் பரப்பி வைத்துக் கொண்டு பரந்து கிடக்கும் ஆகாயத்திலிருந்து குடம் குடமாகக் காற்றை இழுத்து சுவாசித்து இவ்வளவு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஸ்வநாதன் என்ற மனிதன்மீது அவனுக்கு இரக்கமும் வெறுப்பும் உண்டானது.
அங்கிருந்த மணலை அவன் ஒரு கை நிறைய எடுத்தான். அப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தாலும், முடியாமல், ஒரு ஹைட்ரஜன் பலூனைப் போல நினைத்துப் பார்க்க முடியாத வேகத்துடன் அவன் அங்கிருந்து மேல் நோக்கி உயர்த்தப்பட்டான். தரையில் மோதி மேல் நோக்கி எழும்பும் ஒரு ரப்பர் பந்தைவிட தன்னுடைய நிலை அப்படியொன்றும் பெரிதில்லை என்பதை நினைத்தபோது அவனுடைய மனதில் வருத்தம் உண்டானது.
எப்போதும் பூமியிலேயே கிடந்து வாழ்வதற்காகச் சாபமிடப்பட்ட தன்னுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே வெறுப்பாக இருந்தது. நீண்ட, ஆர்வம் கலந்த, வெறுக்கப்பட வேண்டிய சுவாசம்.
கையிலிருந்த மணலில் கொஞ்சம் கீழே விழுந்திருந்தன. மீதியிருந்த மணலை அவன் வெறி மேலோங்கப் பார்த்தான். சூரிய வெப்பத்தில் முகத்தை மூடிக் கொண்டு கவிழ்ந்து படுத்திருக்கும் நிர்வாணமான கறுப்பு நிறக் கன்னிகள். அவன் அவற்றை முத்தமிட்டான். என் மணல் என் ஆற்றில் உறங்கிக் கிடந்த, எனக்காகக் காத்துக்கிடந்த, என் மணல்... அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.
அந்த மணலை மீண்டும் நீருக்குள் போட அவனுக்கு மனம் வரவில்லை. உள்ளங்கையில் கிடந்தவாறு அவை தன்னிடம் என்னவோ யாசித்துக் கேட்பதைப் போல அவன் உணர்ந்தான். விரல்களைச் சற்று விலக்கினால் போதும், அவை காணாமல் போய்விடும். மீண்டும் ஒருமுறை பார்க்க முடியாத, ஆழங்களை நோக்கி வீசியெறியப்படும் சிறு குழந்தைகளின் ஊமைத்தனமான கெஞ்சுதல் அவளைப் பாடாய்ப்படுத்தியது. உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டிருந்த பத்தோ பதினைந்தோ மணல் துகள்களை மீண்டும் நீருக்குள் போடுவது என்பது ஒருவகையில் பார்க்கப் போனால் கண்ணில்லாத கொடுமைச் செயல் என்பதைப் போல் விஸ்வநாதன் உணர்ந்தான்.
அவன் திடீரென்று நான்கு பக்கங்களிலும் பார்த்தான் வெறிச்சோடிப் போன கரைகள்... பரவிக் கிடக்கும் தென்னை மரங்களுக்குக் கீழே மேய்ந்து கொண்டிருக்கும் ஒட்டிப் போன பசுக்கள் அங்கு யாரும் இல்லை.
விஸ்வநாதன் அந்த மணல் முழுவதையும் நாக்கால் நக்கினான். ஒருவித மயக்க உணர்வுடன், குதூகலத்துடன் தொண்டை வழியாக அந்த மணல் கீழ்நோக்கி இறங்கிச் செல்வதை அவன் ரசித்தவாறு படுத்திருந்தான். தொடர்ந்து அவன் கொஞ்சம் நீரைக் குடித்தான்.
“என் மணல்... என் நீர்... என் பூமி.”
அவன் ஒரு நீரில் வாழும் உயிரினத்தைப் போல நீருக்கு மேலே படுத்து உருண்டான். வானத்திற்கு மேலே போகவேண்டும் என்ற ஆர்வத்துடன் வாய் நிறைய நீரை வைத்துக் கொண்டு, மேல்நோக்கி பீச்சினான். தொடர்ந்து கண்களை மூடியவாறு மேலேயிருந்து நிமிட நேரத்திற்குப் பொழிந்த மழை நீரை அவன் ஏற்றுக் கொண்டான்.
வெயில் நீருக்கு அடியிலிருந்து கிளம்பி மேலே வந்தது. நீர் வெப்பமாக ஆரம்பித்தது. விஸ்வநாதனின் தோலை இளம் வெப்பத்தைக் கொண்ட நதிநீர் வந்து மோதிக் கொண்டிருந்தது.
பூமியின் மணித்துளிகள் வேலை செய்து முடித்து நீருக்குள் நுழைந்தன. பூமியில் எல்லாரும் ஆச்சரியப்பட்டு வாழ்த்தும் அதை அங்கு குறிப்பிட்டுக் கூறும்படி யாரும் கண்டுகொள்ளவேயில்லை. வீசி எறியப்பட்ட துணிகளைப் போல மணித்துளிகள் நீரில் கலந்து மறைந்தன. நீர் வளையங்களும், மீன்களும் சிறு சிறு அலைகளும் பாசிகளின் வேர்களும் அதைப் பார்த்து ஒதுங்கின. யாரும் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதை உணர்ந்ததும் மூழ்கிக் கொண்டிருந்த மணித்துளிகள் தலைக்கு மேலே கைகளைக் கூப்பியவாறு ஆழங்களை நோக்கி வேகமாகப் பாய்ந்தன. அங்கு அவற்றின் மரணம் அவற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
சுற்றிலும் அழிந்து கொண்டிருந்த செயலற்றுப்போன மணித்துளிகளைப் பற்றி விஸ்வநாதனும் நன்கு தெரிந்து வைத்திருந்தான். எதிரிகளின் செயல் அவனை வெறி கொள்ளச் செய்தது. அவன் உரத்த குரலில் கத்தியவாறு, விழுந்து விழுந்து சிரித்தான். வெற்றி வீரனின் குரூரமான உற்சாகத்துடன் அவன் அந்த மணித்துளிகளை ஏளனம் செய்தான்.