இதோ இங்கு வரை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
தலைவன் “எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டு மீண்டும் புட்டு, கடலை ஆகியவற்றில் மூழ்கிப் போனான். உண்மையாகச் சொல்லப் போனால் விஸ்வநாதன் வெறுமனே கேட்டான். அவ்வளவுதான். ஒரு இரவைவிட அதிகமாக இங்கு இருக்கும் அளவிற்கு அவனிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. மனதில் நினைத்திருக்கும் காரியம் நடைபெறுவதாக இருந்தால், இந்த இரவிலேயே அது நடக்கும். அப்படி நடக்கவில்லையென்றால், அவள் அப்படிப் பட்டவள் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். படகோட்டி திரும்பத்திரும்பக் கூறுகிறானே தவிர, அவனைப் பற்றி அப்படி நினைப்பதற்கு எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும், அவன் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்கும் அவசரமாகப் போக வேண்டியதுமில்லை. யாரும் எங்கும் அவனுக்காகக் காத்திருக்கவுமில்லை. நடப்பதாக இருந்தால் நடக்கட்டும். ஆனால் அதுதான் நோக்கம் என்று உரத்த குரலில் கூறுவதாக இருந்தால், விருப்பமில்லாத பல விஷயங்களுக்கு நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். எதற்குத் தேவையில்லாமல்...
ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது, மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த, உடம்பு முழுக்க ரோமத்தைக் கொண்ட, நெற்றியில் சந்தனக்குறி வைத்திருந்த கரடி கேட்டது. “சார், உங்களுக்கு வீடு கட்டாயம் வேணுமா?”
“ஆமா...”- இல்லை என்று கூறமுடியாதே.
“அப்படின்னா நான் ஒண்ணு செய்யிறேன். இங்கே பக்கத்துல ஒரு சின்ன வீடு இருக்கு. ஆள் இல்லாததால், கவனிப்பே இல்லாம அந்த வீடு கிடக்குது. நான் ஒரு ஆளைவிட்டு அந்த வீட்டை விசாரிக்கிறேன்.”
“ரொம்ப நன்றி.”
அதைக்கேட்டு அந்த மனிதனின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. அவன் சொன்னான். “வீடுன்னு சொன்னா. அது ஒரு சின்ன அறை. அவ்வளவுதான்.”
“அது போதும். படுக்குறதுக்கு இடம் இருக்கும்ல...”
“அதுக்கு எந்தக் குறைச்சலும் இல்ல. பெரிய வசதி எதுவுமே இல்லைன்னாலும், மனிதர்கள் வசித்த வீடாயிற்றே.”
இதற்கிடையில் விஸ்வநாதன் கடைப்பக்கம் போனான். இதற்குமேல் மது அருந்தாமல் இருப்பதே நல்லது என்று பட்டது. இப்போதே தேவைக்கும் அதிகமாக மது அருந்தியாகிவிட்டது.
வாசற்கதவு கிறீச்சிட்டது. தலையை உயர்த்திப் பார்த்தபோது தெரிந்த பல் இளிப்பு அறை முழுவதும் நிறைந்ததைப் போல் இருந்தது.
படகோட்டி எதிரில் இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தான். விஸ்வநாதனைப் பார்த்தவுடன் “அளவுக்கு மீறி குடிச்சிருப்பீங்க போல இருக்கே” என்றான் அவன். அதற்குப் பதிலெதுவும் கூறாமல் விஸ்வநாதன் முழுமையாக மது ஊற்றப்பட்டிருந்த குவளையை அவனை நோக்கி நகர்த்தினான்.
“போன விஷயம் என்ன ஆச்சுடா?”
நான்கு பக்கமும் பார்த்துக் கொண்ட அவன் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்.
“ஒரு ஆள் கிடைச்சான். நான் அப்பவே சொன்னேன்ல- அந்தப் பெண் அந்த மாதிரிதான்னு நான் நினைச்சது சரிதான்.”
“அப்படின்னா ஆள் எங்கே?”
“வெளியே நிக்கிறான். அவன் உள்ளே வரமாட்டான். யாராவது பார்த்தாலோ தெரிஞ்சாலோ ஏதாவது பிரச்சினை ஆயிடும்னு பயப்படுறான்.”
குவளை காலியானது. மீண்டும் அதில் ஊற்றியவாறு அவன் சொன்னான்.
“வா... நாம வெளியே போவோம். இன்னைக்கு இது போதும். சரி... அவன்கிட்ட ஆள் யாருன்னு சொல்லிட்டியா?”
“சொன்னேன். இடத்தைச் சொன்னவுடனே, ஆள் யாருன்றதை அன்பு புரிஞ்சிக்கிட்டான். ஒரு வண்ணானோட மகள் அவ. ஊர்ல இந்த விஷயம் அதிகம் பேருக்குத் தெரியாது. ஊர்க்காரங்களா இருந்தா அந்தப் பெண்ணோட அப்பா கத்தியைத் தூக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இப்போ நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. எல்லா விஷயத்தையும் அந்த ஆளு பார்த்துக்குவான்.”
திடீரென்று விஸ்வநாதனுக்கு மனதில் ஒரு பரபரப்பு வந்தது சேர்ந்ததைப் போல் இருந்தது. காலையில் அவளைப் பார்த்தபோது உண்டான ஆர்வம் இப்போது அவனிடம் இல்லாமற்போலிருந்தது. இப்போது நடக்கப்போகும் விஷயங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தன. சாராயக் கடைக்குப் பின்னால் இருந்த இருட்டில் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
“பத்து ரூபாய்ல ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த ஆளு சம்பதிக்கமாட்டான். நல்ல சரக்கு. சார், நீங்கதான் பார்த்தீங்களே! போதாததற்கு, அவள் இளசு வேற... படிச்ச பொண்ணு. பிறகு... பாக்கெட் மணின்ற பேர்ல ஏதாவது கொடுத்தால், அவ அதுக்குக் கட்டாயம் நன்றியுடன் நடந்துக்குவா.”
ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறுமையாகக் கிடந்த வயல் வரப்புகளில் அல்லது இருண்டு போய்க் கிடக்கும் தென்னை மரங்களுக்கு மத்தியில் நடக்கும் சத்தம்... வீட்டுக் கதவுகளின் கிறீச்சிடல்கள்...
கடைசியில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் புகையை சுவாசித்துக் கொண்டு, வியர்வை நாற்றம் எடுத்த சூடாக இருந்த பெண்ணின் நிர்வாண உடம்புடன் உறவு கொண்டு முடிக்கும் விரசமான மணித்துளிகள்...
“தலைவிதி!”- விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான். “இதற்காகத்தான் நான் இங்கே வந்து தங்கினேனா? கஷ்டகாலம்! ஒரு பகலையும் ஒரு இரவையும் வெறுமனே வீண் பண்ணிட்டேனே.”
எதிர்பார்த்ததைப் போலவே நடந்தது. இல்லாவிட்டால் எதிர்பார்த்ததைவிட மனக் கஷ்டப்படும் வகையில் வேறு ஏதோ நடந்தது. நினைத்தது நடக்காமற் போவதற்கு இங்கு இடமில்லை. யாரிடம் அதைப் பற்றி குறை கூற முடியும்? கூட்டிக் கொடுப்பவர்களிடம் இருப்பதைப் போன்ற பாதுகாப்பு உணர்வு உலகத்தில் உள்ள மற்றவர்களிடமும் இருக்கவே செய்கிறது.
“நான் சொன்னது இந்தப் பொண்ணு இல்ல...” என்று விஸ்வநாதன் சொன்னால் அதற்கு அவன் கூறப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
“இவளைத்தான் நீங்க சொல்றீங்கன்னு நான் நினைச்சேன், சார்.”
அதற்குப் பிறகு கூறுவதற்கு எதுவுமேயில்லை. கூறுவதற்கு என்ன இருக்கிறது? அவனுடைய கையில் விஸ்வநாதன் புகைப்படம் எதையும் கொடுத்தானா? ஏதாவது அடையாளம் சொன்னானா? அந்தப் படகுத்துறையில் குளித்துக் கொண்டிருந்த நின்றிருந்த பெண் என்று படகோட்டி சொன்னான். அவ்வளவுதான்.
இப்போது நின்று கொண்டிருக்கும் பெண்ணும் அதே படகுத்துறையில் குளித்துக் கொண்டிருந்தவள் இல்லை என்று யாரால் கூற முடியும்?
அறையின் மூலையில் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழையும்போது அவள் குழந்தைக்கும் பால் கொடுத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். விளக்கைக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயதைக் கொண்ட பெண் பலமாக அவளை மிதித்தவுடன், கண்களைக் கசக்கியவாறு அவள் எழுந்தாள்.
“இதோ... இவதான்”- அந்தப் பெண்ணின் குரல் முரட்டுத்தனமாக இருந்தது. ஒரு ஆணின் குரலைப்போல அது இருந்தது.
விஸ்வநாதன் எதுவும் சொல்லவில்லை. வெறுப்புடன் அறிமுகமில்லாதவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கும் உணர்வுடன் அவர்களைப் பார்த்தவாறு நின்றிருந்தான். ஒரு பெண் ஒரு தாய்... ஒரு தூக்கம் கலைந்து போனதன் வெறுப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முகம்.