இதோ இங்கு வரை - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6897
எந்தவொரு பதிலும் சொல்லாமல் விஸ்வநாதன் அந்தக் கண்களையே பார்த்தான். உன் தேவை எவ்வளவு அற்பமா இருக்கு, பைலி? நீ கொஞ்சம் மது அருந்ததே. இதை விட்டால் வேற ஒண்ணுமே இல்ல. என் இலட்சியம் எவ்வளவு பெருசு தெரியுமா? நான் உனக்கு ஒரு சொட்டு மது கூட தரப்போகிறது இல்ல. ஆனால், நீ எனக்கு உன் உயிரைத் தர வேண்டியது வரும். தரலைன்னா, நான் அதை உன்கிட்ட இருந்து வாங்கிக்குவேன். ஆமா... உனக்கு என்ன பதைபதைப்பு? என் கண்களை நேருக்கு நேரா பார்க்க நீ பயப்படுறே. எனக்குத் தெரியும். கண்களை நேருக்கு நேரா பார்க்குற விஷயத்துல உனக்கு ஒருநாள் கூட வெற்றி கிடையாது. ஒரு கெட்ட நேரத்துல உன் மனசாட்சிக்கு விரோதமான ஒரு செயலைச் செய்திட்டு, அதோட குற்ற உணர்வுல இருந்த தப்பிக்கிறதுக்கும், பயத்துல இருந்து விடுபடுறதுக்கும் இப்படியொரு வேஷத்தைப் போடுற உன்னால பாவங்களையும் கொடூரங்களையும் வஞ்சம் தீர்க்குற எண்ணத்தையும் கேன்ஸர் செல்களைப் போல பெருக்கிப் பெருக்கி ரசிக்கிற என் கண்களைப் பார்த்துக்கிட்டு எவ்வளவு நேரம் இருக்க முடியும்?- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.
“பைலி ஆசான்... அப்படித்தானே?”
“ஆமா... பைலி பேனாக்கத்தியை விரித்து நகம் வெட்ட ஆரம்பித்தான்.”
“நேற்று கடைக்கு வந்திருந்தாப்லயா?”
“ம்...”
“அதற்குப் பிறகு? பைலியின் கண்கள் குறுகிச் சிறிதாயின. குற்றத்தைக் கண்டுபிடித்து நிரூபிக்க முயற்சிக்கும் போலீஸ்காரனின் முகபாவனை.
“அதற்குப் பிறகு?”- எதுவும் புரியாததைப் போல விஸ்வநாதன் கேட்டான்.”
“கடையில இருந்து எங்கே போனாப்ல?”
குரல் உயர்ந்தது.
விஸ்வநாதன் பதில் சொன்னான். கிராமத்து மொழியில் அந்தப் பதில் இருந்தது: “ஒரு பொண்ணை அனுபவிக்கப் போனேன். அது நல்லபடியா முடிஞ்சது.”
எதிரியின் உதடுகள் சிறிதாகத் துடித்தன. எந்த நேரத்திலும் அது தன் மீது பாயுமென்றும் கடித்துப் புண்ணாக்கும் என்றும் விஸ்வநாதன் நினைத்தான்.
அறைக்குள் படு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. விஸ்வநாதன் புட்டியைக் குவளைக்குள் கவிழ்த்தான். புட்டியை மேஜை மீது ஓசை வரும்படி மூன்று நான்கு முறைகள் அடித்தான். வாசலில் வேலைக்காரன் வந்து நின்றான். “இன்னொரு அரைபுட்டி கொண்டு வா”- விஸ்வநாதன் சொன்னான்.
வேலைக்காரன் மேலும் சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்தான். அவன் எதிர்பார்த்திருந்த கட்டளை பைலியிடமிருந்து வந்தது.
“ஒரு குவளை கொண்டு வாடா!”
மீண்டும் ஒன்றோடொன்று வெறித்துப் பார்க்கும் கண்கள். பக்கத்து அறைகளில் நாக்குகள் முழுமையாகச் செத்துப் போயிருந்தன. தாழ்ந்த குரலில் அவை என்னவோ பேசிக் கொண்டன.
“இந்த இடம் ரொம்ப மோசம்”- பைலி விரித்த பேனாக் கத்தியை மேஜை மீது குத்தியவாறு சொன்னான்.
“ஆமா...”- விஸ்வநாதன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
புட்டி வந்தது- அதோடு குவளையும். வேலைக்காரப் பையன் இரண்டு குவளைகளையும் அடுத்தடுத்து வைத்து புட்டியைத் திறந்தான். ஒரு குவளையில் ஊற்றி முடித்தவுடன், விஸ்வநாதன் அவனுடைய கையிலிருந்து புட்டியை வாங்கினான். “பயமுறுத்தி தண்ணி அடிக்க வேற ஆளைப் பார்க்கணும்”- அவன் சொன்னான்.
வேலைக்காரன் ஒரு நிமிடம் பைலி ஆசானின் முகத்தையே உற்றுப் பார்த்தான். பிறகு அந்த இடத்தைவிட்டு அவன் நகர்ந்தான். விஸ்வநாதன் புட்டியை மேஜை மீது வைத்தான். குவளை காலியானபோது இன்னொரு குவளை நிறைந்து கொண்டிருந்தது. அந்த விரல்களின் அதிகாரத்தைப் பார்த்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.
எதிரியின் கண்களையே அவன் பார்த்தான். குவளையை உயர்த்தியவாறு பைலி ஒரு வெற்றி வீரனைப் போல சொன்னான்: “இந்த ஊர்ல அரண்மனையில மது அருந்துற ஒரு ஆளு கூட எனக்கு நூறு மில்லி வாங்கித் தந்துட்டுத்தான் குடிப்பான்.”
விஸ்வநாதன் காலியான குவளையைக் கீழே வைத்தான். இது ஒரு தருணம். இந்தத் தருணம் முன்னோக்கி நகராது. தடுத்து நிறுத்தப்பட்ட இந்த நிமிடம் என் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்குது. இங்கே தோற்றால் வாழ்க்கையிலேயே நான் தோற்றுட்டேன்னு அர்த்தம். தனக்குள் விஸ்வநாதன் கூறிக் கொண்டான்.
எழுந்து நின்றான்.
பைலி குவளையை உயர்த்தினான். கண்கள் எதிரியின் முகத்தில் இருந்தன. குவளை மெதுவாக உயர்ந்தது. உதடுகளை இது நெருங்கியபோது அது நடந்தது.
குவளை பலகையில் போய் அடித்து உடைந்தது. பலகை வழியாகச் சாராயம் வழிந்தது. பக்கத்து அறைகளில் பெஞ்சுகள் கிறீச்சிட்டன. வராந்தாவில் பாத ஓசைகள். வாசலில் பயந்து, இறுகிப் போன முகங்கள்.
கத்தியை உருவி எடுப்பான் என்றும், குத்துவான் என்றும் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. பைலி ஒரு சிலையைப் போல, பார்த்தவாறு நின்றிருந்தான். இதற்கு முன்பு இப்படியொரு காட்சியை யாரும் பார்த்ததில்லை.
“பயமுறுத்தி பார்த்தாப்ல... அப்படித்தானே?”- விஸ்வநாதன் கேட்டான்.
பைலி அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. சிறுத்துப் போன கண்களில் நெருப்பு எரிந்தது. கை விரல்கள் கத்தியின் கைப்பிடியில் இருந்தவாறு துடித்தன.
புட்டியில் மீதியிருந்த சாராயம் முழுவதையும் குவளையில் ஊற்றி ஒரு பிச்சைக்காரனிடம் தருவது மாதிரி, அந்தக் குவளையை விஸ்வநாதன் நீட்டினான். அவன் சொன்னான்: “இன்னும் குடி.”
பைலி குவளையைப் பார்க்கவே இல்லை. விஸ்வநாதனின் முகத்திலிருந்து விலகாத கண்களில் குரூரத்தின் நிழல்கள் தெரிந்தன.
“எவ்வளவு ஆச்சு?”- விஸ்வநாதன் அந்தக் கண்களை அலட்சியம் செய்துவிட்டு வேலைக்காரனிடம் கேட்டான். அவன் தொகையைச் சொன்னான். அதை எடுத்துக் கொண்டு வாசலில் கூட்டமாக நின்றிருந்த மனிதர்களை நோக்கி நடந்தபோது, பின்னால் பைலியின் குரல் கேட்டது.
“நாளை ஒருநாள் இருக்கு...”
“என்ன?”- விஸ்வநாதன் திரும்பி நின்றான்.
“உன் ஆயுள் காலத்தைச் சொல்றேன்”- பைலி எழுந்து நின்றான்.
தரையில் இனியும் குருதி சிந்தும். விஸ்வநாதன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அலைகளுக்கு நடுவே பைலியின் முகம் படிப்படியாக வெளிறியது.
“சிரமப்பட வேண்டாம்”- விஸ்வநாதன் சொன்னான்: “நான் நாளைக்கு அங்கே வர்றேன்” மனதிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பயந்த நிலையில் இருந்த எதிரியிடம் அவன் சொன்னான்: “உன் வீட்டுக்கு நான் வர்றேன்.”
பின்னால் குசுகுசுப்புகள். விஸ்வநாதன் வெளியேறினான்.
“இந்த ஊர்ல நான் திரும்பவும் ஒரு பிரச்சினையாக ஆகியிருக்கேன்”- அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.