இதோ இங்கு வரை - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6898
7
காலையில் வாசல் முழுவதும் மூப்பு அடையாத பைங்கிளிகள் பறந்து திரிந்து கொண்டிருந்தன. அந்தப் பைங்கிளிகள் தங்கள் குஞ்சுகளுடன் பின்வாங்கின. பிறகு வானில் இங்கும் அங்குமாய் உட்கார்ந்து ஒளிந்து துடித்துக் கொண்டிருந்த முந்தைய இரவு நேர ஐந்துக்களைக் கொத்தி எடுத்துக் கொண்டு போகும் பெண் காகங்களைப் பார்த்தன.
இரவில் நல்ல மழை பெய்திருந்தது. தெற்குத் திசையில் எங்கோ நீரின் இரைச்சல் கேட்டது. தாழ்ந்த ஸ்தாயியில் ஒரு இசையென அது இருந்தது. அதற்குப் பின்னணி இசை ஒலிப்பதைப் போல தூரத்தில் கடலின் ஆரவாரம்...
காலையில் மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. தூரத்தில் தென்னங்கீற்றுகளுக்கு மத்தியில் ஒரு துண்டு கார்மேகம் மறைந்து வெளியே வருவது தெரிந்தது. தொடர்ந்து வீசிய காற்றில் அது காணாமல் போனது. அப்போது ஒரு புதிய கார்மேகம் அங்கு மீண்டும் தோன்ற ஆரம்பித்தது.
‘என் ஊர்ல பெய்யும் மழை மற்ற ஊர்கள்ல பெய்யிற மழைகளை விட ரொம்பவும் வித்தியாசமானது. என் வானத்தின் மேகம், வேறு எந்த இடத்துல இருக்குற மேகங்களை விடவும் வித்தியாசமானது’- விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான்.
காலையில் நாணு வந்தான். தேநீர்க் கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த தோசையையும் காப்பியையும் திண்ணை மீது வைத்துவிட்டு அவன் கேட்டான்: “நேற்று ராத்திரி கடையில ஏதாவது அடிபிடி தகராறு நடந்ததா?”
கேள்வியைக் கேட்டபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இந்த ஊர்ல இவ்வளவு சீக்கிரமா ஒரு செய்திக்குச் சிறகு முளைச்சிடுச்சா? உண்மையா சொல்லப் போனால், அடி எதுவும் நடக்கல. ஒரு டம்ளரை வீசியெறிஞ்சு உடைக்க மட்டுமே செய்தேன். ஆனா, அதைச் சொன்னால் யாருமே நம்புறதா இல்ல. அதுனால வாயை மூடிக்கிட்டேன்.”
“அப்படி செய்திருக்க வேண்டியது இல்ல”- நாணு சொன்னான்.
“என்ன சொன்னே?”
“பைலி ரொம்பவும் மோசமான ஆளு. கொஞ்ச காலம் சிறையில இருந்துட்டு வந்த ஆளு...”
நாணுவிற்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் விருப்பமில்லைதான். என்னதான் விஸ்வநாதனுடன் அவன் நெருக்கமாக இருந்தாலும் பைலி இந்த ஊர்க்காரனாயிற்றே! விஸ்வநாதன் மட்டும்தான் இங்கு வேறெங்கோயிருந்து வந்தவன். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவனுடன் வேற்றூர்க்காரன் ஒருவன் மோதுவதை அவன் பொதுவாக விரும்பவில்லை.
“நாம வந்த விஷயத்தை முடிச்சிட்டு வந்தது மாதிரியே திரும்பிப் போகப் பாருங்க”- நாணு அறிவுரை சொன்னான் : “படம்னா படம். பாட்டுன்னா பாட்டு. அதுக்கு இடையில...”
“அதுக்கு இடையில யாராவது நுழைஞ்சு வெறுமனே பெரிய ஆளாகணும்னு நினைச்சா?”
நாணு திடீரென்று அமைதியாக ஆனான். தான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டதை அவனே உணர்ந்திருக்க வேண்டும். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவன் சொன்னான்: “இல்ல... நான் சும்மா பேச்சுக்காகச் சொன்னேன். பைலிக்கு யாராவது ஒரு ஆளு வந்து கொடுக்குற காலம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்.”
படுத்துக்கொண்டே கையை நீட்டி விஸ்வநாதன் தேநீர் குடித்தான். “பைலி எங்கே வசிக்கிறான்?”- விஸ்வநாதன் கேட்டான்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு நாணு எப்படிப் போக வேண்டுமென்று வழி சொன்னான்: “படகுத்துறை... நீரைத்தாண்டி அடுத்த கரையின் மூலை... அங்கேயிருந்து நேரா போற சாலையில இடது பக்கமாத் திரும்பி வயலைத் தாண்டி.... அதுக்குப் பிறகு இன்னொரு வயல்... வயலின் எதிர்கரை...”
எனக்கு நன்கு தெரிந்த வழிகள்... பழைய கிராமத்துப் பாதைகள்... சின்னப்பையனா இருக்குறப்போ எத்தனையோ தடவைகள் வண்டியோட்டி விளையாடிய ஒற்றையடிப்பாதைகள்... வயல் வரப்புகள்... வயல்கள்...’ விஸ்வநாதன் தனக்குள் பேசிக் கொண்டான்.
படகை விட்டு இறங்கியபோது பார்த்த ஒரு ஆள் பழக்கமில்லை என்றாலும் நன்கு தெரிந்தவன் மாதிரி வாய் திறந்த சிரிப்புடன் கேட்டான்: “எங்கே போறாப்ல?”
“இதோ இங்குவரைதான்”- விஸ்வநாதன் சிரித்துக் கொண்டே நடந்தான்.
ஊரில் உள்ள எல்லாருக்குமே அவனைத் தெரியும். யாருடைய முகங்களையும் அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் பலரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள். சிரித்தவர்களைப் பார்த்து அவனும் சிரித்தான்.
பழைய சந்திப்பில் புதிய சில அலங்காரங்கள் வந்து சேர்ந்திருந்தன. கிருஷ்ணன் நாயரின் தேநீர்க் கடை இப்போதும் அதே இடத்தில்தான் இருக்கிறது. புதிய ஒரு விளம்பரப் பலகையை யாரோ வரைந்திருக்கிறார்கள். அதில் உடல் உறுப்புகள் சீராக இல்லாத ஒரு குழந்தைப் பருவ கிருஷ்ணன் கண்களை விழித்தவாறு புல்லாங்குழல் ஊதிக் கொண்டு அழைத்தவாறு நின்றிருந்தான். ஒரு சிறு வராந்தா புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது. வராந்தாவிற்குக் கீழே படிகள். முன்னால் நான்கைந்து சைக்கிள்கள் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் போர்க்குதிரைகளைப் போல நின்றிருந்தன. “ஒரு சைக்கிளை எடுத்துக் கட்டுமா?” - யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதனாகத் தன்னை நினைத்துக் கொண்டு அவன் கேட்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.
“அய்யோ... எடுத்துக்கங்க... எடுத்துக்கங்க...”- கிருஷ்ணன் நாயர் இப்போதும் வெள்ளை ஆடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் மரியாதை தருகிறார். அது மட்டுமல்ல- அறிமுகமில்லாத தால் குரலில் இனம்புரியாத ஒரு பணிவு வேறு காத்திருக்கிறது. அவர் சொன்னார்: “இதுல ஒரு நல்ல சைக்கிளை நீங்களே தேர்ந்தெடுத்துக்கங்க... அதோ... அந்தக் கடையில இருக்குற சைக்கிள் நல்லா இருக்கும்.”
நீண்டு நீண்டு போய்க் கொண்டிருக்கும் பாதைகள். சிரிக்கும் முகங்கள். திருப்பத்தை அடைந்ததும்- ஒரு மைல் கல்லில் காலை வைத்தவாறு சிகரெட்டைக் கொளுத்தினான். பல வருடங்களுக்குப் பிறகு அவன் இப்போதுதான் சைக்கிளை மிதிக்கிறான். சைக்கிள் ஓட்டுவதை ஒருவேளை மறந்து போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று கூட அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால், மறக்கவில்லை. ஒருமுறை செய்த எந்தவொரு செயலும் மரணமடையும் வரையிலும் மறக்கவே மறக்காது என்று திடீரென்று அவனுக்குத் தோன்றியது. மீண்டும் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தபோது, எதிரில் வந்த ஒரு ஆள் மரியாதை நிமித்தமாகக் கேட்டான் : “எங்கே போறாப்ல?”
“இதோ இங்குவரை...”
“அப்படியா?”- அவனுக்குத் திருப்தி உண்டானது மாதிரி இருந்தது. எதிரே பலமான காற்று வீசியது.
சட்டையின் பின் பாகம் தலையணையைப் போல் வீங்கியிருந்தது. காதில் காற்றின் ரீங்காரம். முடிகளில் காற்று பட்டு சுகமான ஒரு அனுபவம் உண்டானது.
ஏன் எல்லாரும் அவனைப் பார்த்து எங்கு போகிறான் என்பதைக் கேட்க வேண்டும்.
எதற்காகவும் இல்லை. வெறுமனே கேட்டார்கள். அவ்வளவுதான். யாரிடமாவது உண்மையைச் சொன்னானா? அதுவும் இல்லை.
“இதோ... இங்கு வரை...”- இதுதான் அவன் சொன்னது.