ஹரித்துவாரில் மணியோசை - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
ரமேஷன் டில்லியைப் பற்றி நினைக்கவில்லை. எங்கோ தூரத்தில் அவனுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய தாயையும் எந்நேரமும் தன்னுடைய நிழலாக தன்னுடனேயே இருக்கும் இளம்பெண்ணையும் அவன் மறந்துபோனான். தன்னையே மறந்துவிட்ட அந்த நிமிடத்தில் அவனுடைய மனதில் ஹோம குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பும் மணியோசையும் மட்டுமே இருந்தன. தன்னுடைய கால்கள் தடுமாறுவதைப்போல் அவன் உணர்ந்தான்.
“பாரு...”
ஹோம நெருப்பிலும் மணியோசையிலும் மூழ்கி எல்லாவற்றையும் மறந்துவிட்டு நின்றிருந்த அவனை அவளுடைய குரல் சுயஉணர்வுக்குக் கொண்டுவந்தது.
“ம்...?” திடுக்கிட்டு அவன் கேட்டான்.
“பாரு...”
தன்னுடன் மிக நெருக்கமாக நடந்து கொண்டிருக்கும் இளம்பெண்ணை யார் என அவன் அறிந்து கொண்டான். அவள் சுட்டிக்காட்டிய பக்கம் அவன் பார்த்தான். சிவப்பு மரம்...
எண்ணெய்க் கறை படிந்த படிகளில் இறங்கி அவர்கள் மரத்தை நோக்கி நடந்தார்கள். மலைச்சரிவில் நடந்து வரும்போது ஆச்சரியத்துடன் பார்த்து நின்ற சிவப்பு நிற மரம் இதோ அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அது ஒரு சாதாரண மரம்தான். எல்லா மரங்களையும் போல அதுவும் பச்சை நிறத்தில் தான் இருந்தது. ஆனால், காலம் காலமாக பக்தர்கள் கட்டிய சிவப்பு கயிறுகள் மரத்திற்கு சிவப்பு நிறத்தை தந்தன. கீழிருந்து உச்சிவரை சிவப்புக் கயிறுகள் கட்டப்பட்ட மரம்.
மரத்தடியில் தேவியின் சிலை இருந்தது. எண்ணெயின் பளபளப்பு தெரிந்த சிலையின் மீதும் சிவப்பு கயிறுகள்...
மலைச்சரிவில் வரும்போது வாங்கிய சிவப்பு கயிறுகளை அவன் வெளியே எடுத்தான். அவர்கள் கயிறுகளுடன் மரத்திற்கருகில் நெருங்கி நின்றார்கள்.
“நாம என்ன வேண்டி பிரார்த்திப்பது?”
ரமேஷன் கேட்டான். கயிறை அந்தப் புனித மரத்தில் கட்டும்போது மனதில் எதையாவது நினைக்கவேண்டும். அப்படி நினைக்கும் காரியத்தை தேவி கட்டாயம் நிறைவேற்றுவாள் என்பது பொதுவான நம்பிக்கை.
“சொல்லு சுஜா.”
அவள் பதிலேதும் கூறாமல் தலையைக் குனிந்து நின்றிருந்தாள். தேவியிடம் எதை வேண்டி நிற்க வேண்டும் என்பதை அவள் முன்கூட்டியே தீர்மானம் செய்யாமலா இருந்திருப்பாள்? அது என்னவாக இருக்கும்? தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதாக இருக்குமா? தன் தந்தையைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அல்சர் நோயை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது அவளின் வேண்டுகோளாக இருக்குமா?
“நீ எதையாவது மனசுல நினைச்சு வச்சிருக்கியா?”
அப்போதும் அவள் மவுனமாக தலைகுனிந்து கொண்டுதான் இருந்தாள். அவள் முகத்தில் அவன் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு வெளிப்பாட்டைப் பார்த்தான். மயிலிறகையொத்த அழகான அவள் கண்கள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகளின் ஓரத்தில் வெட்கத்தின் தோற்றம் தெரிந்தது.
தான் எதை மனதில் நினைத்து பிரார்த்திப்பது? ஒரு நிமிடம் அவன் யோசித்தான். ‘எங்கோ ஒரு மூலையில் தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்தாய்... எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய்... அவங்களுக்காக இல்லாம வேற யாருக்காக நான் பிரார்த்திப்பேன்?’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
“நான் என் தாய்க்காக வேண்டிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”
அப்போதும் அவள் பேசாமல் இருந்தாள். கையில் சிவப்பு நிற கயிறை வைத்துக் கொண்டு அவள் மரத்தடியில் நின்றிருந்தாள். கையை உயர்த்தி மரத்தில் எட்டும் தூரத்திலிருந்த ஒரு கிளையில் அவள் கயிறைக் கட்டியபோது, அவள் உதடுகள் மெதுவான குரலில் முணுமுணுத்தன. கண்கள் மூடிக் கொண்டன.
“நீ என்ன வேண்டிக்கிட்டே?”
அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் தோளில் கை வைத்து அவன் வற்புறுத்திக் கேட்டான்: “சொல்லு... உன் அப்பாவுக்காக வேண்டினியா?”
“இல்ல” என்று அவள் தலையை ஆட்டினாள்.
“தேர்வுல முதல் வகுப்புல தேர்ச்சி பெறணும்னு வேண்டினியா?”
“இல்ல...”
“பிறகு?”
அவள் மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். மை இட்டு கறுப்பாக்கிய கண்களில் எரிந்து கொண்டிருந்த தீபங்கள் தெரிந்தன.
“எனக்குப் புரியுது. முட்டாள் பெண்ணே!”
தலைகுனிந்து நின்றவாறு அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
கையில் கயிறை வைத்துக் கொண்டு அப்போதும் ரமேஷன் தயங்கியவாறு நின்றிருந்தான். தேவியிடம் வேண்டிக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. எல்லாவற்றையும் எப்படி தேவியிடம் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தன் தாய்க்கு வேண்டியோ சுஜாவிற்கு வேண்டியோ தேவியிடம் வேண்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.
“சீக்கிரம் ரமேஷ்.”
சுஜா அவனைப் பார்த்துச் சொன்னாள். ஆட்கள் கயிறுகளுடன் அடுத்தடுத்து வருவதும் போவதுமாக இருந்தனர். உதட்டில் பிரார்த்தனையைச் சொல்லியவாறு அவர்கள் கயிறுகளைக் கட்டினார்கள். இலட்சக்கணக்கான கயிறுகளின் எடையைத் தாங்க முடியாமல் மரத்தின் கிளைகள் தரையை நோக்கி வளைந்தன.
“தேவி, வியட்நாம்லயும் பயாஃப்ராய்லயும் இரத்தம் சிந்துவதை நிறுத்தக்கூடாதா?
ரமேஷன் கயிறைக் கட்டினான்.
ஒற்றையடிப் பாதை வழியாக படர்ந்து கிடக்கும் வேர்களைத் தாண்டி, பாறைகளுக்கு மத்தியில் அவர்கள் மெதுவாகக் கீழே இறங்கினார்கள். ‘மானஸாதேவி, விடைகொடு என்றைக்காவது இன்னொருமுறை நான் உன்னோட சந்நிதிக்கு வருவேன். இந்தப் பிறவியில் அல்லது இன்னொரு பிறவியில் மனிதனாக இல்லைன்னா வேற ஏதாவது ஒரு பிறவியா... கட்டாயம் நான் வருவேன்!”
‘த்யாயதோ விஷயான் பும்ஸஹ்
சம்கஸ்தேஷபுஜயத்ரே
சம்கால் சஞ்ஜாயதே காமஹ்
காமால் க்ரோதோபி ஜாயதே’
கீழே சன்னியாசி இப்போதும் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சுலோகங்களைச் சொல்லிச் சொல்லி அவருடைய தொண்டை வற்றிப் போயிருந்தது. சுலோகங்கள் பலவீனமான குரலில் வந்து கொண்டிருந்தன.
“அவர் இப்போ சொன்ன சுலோகத்துக்கு அர்த்தம் என்ன?”
அவன் கையைப் பிடித்துக் கொண்டு மிகவும் இறக்கமாக இருந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கும்போது அவள் கேட்டாள்.
‘அந்த ஸ்லோகத்தின் அர்த்தமா, இளம்பெண்ணே? எவ்வளவோ வருடங்களாக அது என் நாக்கு நுனியில இருந்துக்கிட்டு இருக்கு. பல வருடங்களுக்கு முன்னாடியே என் தாய் அந்த ஸ்லோகங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்காங்க’ என்று எண்ணிக்கொண்ட அவன் சொன்னான்:
“எனக்குத் தெரியாது. நீ தெரியாமலே இருக்குறதுதான் நல்லது.”