ஹரித்துவாரில் மணியோசை - Page 38
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7360
யமுனையின் மீது இருக்கும் நீளமான பாலம். தோபிகாட். நிகம் போத்காட்டில் சிதைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பின்னால் அகன்று அகன்று போய்க் கொண்டிருக்கும் செங்கோட்டை.
அவள் முடியை வாரவோ, முகத்தைக் கழுவவோ செய்யவில்லை. மனதில் இருந்த பயம் அவளை மூச்சு விட முடியாமற் செய்தது. சிதறிக்கிடந்த தலைமுடியுடனும், நீர் நிறைந்த கண்களுடனும் அவள் வண்டி ஸ்டேஷனில் நிற்பதற்காகக் காத்திருந்தாள்.
ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த டிரைவர் ஷ்யாம்லாலை அவள் பார்த்தாள். அவன் ஓடிவந்து பெட்டிகளை எடுத்தான்.
“இறங்கு ரமேஷ்.”
“எதுக்கு?”
அர்த்தமில்லாத கேள்வி. நேற்று ப்ரம்மகுண்டத்தில் இருக்கும்பொழுது கேட்ட, ஒரு மாதிரியான, இதற்கு முன்பு கேட்டிராத அதே குரல்.
அவள் அவனுடைய கையைப் பிடித்து வெளியில் இறக்கினாள்.
“ரமேஷுக்கு சுகமில்ல... காய்ச்சல்...”
தன்னையும் ரமேஷனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம்லாலைப் பார்த்து அவள் சொன்னாள்.
டில்லி மண்ணில் கால் வைத்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது. அவளுக்கு ஹரித்துவார் ஒரு பயமுறுத்தும் கனவாக இருந்தது.
“டாடி வந்துட்டாரா ஷ்யாம்லால்?”
“வந்துட்டாரு, சோட்டி மேம்ஸாப்”
ஸ்டேஷனிலிருந்து வெளியே நடக்கும்போது அவன் சொன்னான்: “காலையில நான் கார் கொண்டு வந்திருந்தேன்.”
“ரமேஷனுக்கு உடல் நலமில்ல... அம்மா இப்பவும் கோபமா இருக்காங்களா?”
“இல்ல, சோட்டி மேம்ஸாப். காலையில இருந்து வெளியே வெளியே பார்த்துக்கிட்டே இருக்காங்க.”
டாக்டர் நந்ததாவின் க்ளினிக்கை அடைந்தபோது அவள் காரை நிறுத்தினாள். அவள் ரமேஷனையும் அழைத்துக் கொண்டு க்ளினிக்கிற்குள் நடந்தாள். அவருக்கு அவர்களை ஏற்கெனவே நன்கு தெரியும்.
“ரெண்டு பேரும் எங்கேயிருந்து வர்றீங்க?”
ரமேஷனையும் சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தவாறு டாக்டர் நந்தா கேட்டார்.
“ஹரித்துவாருக்குப் போயிருந்தோம்.”
“மகரிஷி மகேஷ் யோகியைப் பார்த்தீங்களா?”
“ரிஷிகேஷுக்குப் போக நேரம் கிடைக்கல, டாக்டர்.”
“எங்கே, நேரம் கிடைக்கும்?”
அவர் சுஜாவைப் பார்த்து கண்களைச் சுருக்கிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். ரமேஷனை அவர் திரைச்சீலைக்கப்பாலிருந்து அவர் அழைத்துக் கேட்டார்.
“வந்துட்டாரு டாக்டர்.”
“ஹௌ டூ யூ ஃபைன்ட் ஹரித்துவார்?”
அவள் பதில் சொல்லவில்லை. ஹரித்துவாரைப் பற்றி மனதில் சிந்தித்துப் பார்க்கக்கூட அவளுக்கு இப்போது பயமாக இருந்தது.
“மியர் எக்ஸோஸ்ஷன்.”
திரைச்சீலைக்கு வெளியே வந்து டாக்டர் சொன்னார். திறந்து கிடக்கும் சட்டையுடன் ரமேஷன் அவருக்குப் பின்னால் வந்தான். ஒரு ஊசியும் சில மாத்திரைகளும்.
“முதல்ல சவுத் எக்ஸ்டன்ஷன், ஷ்யாம்லால்.”
“அம்மா காத்திருப்பாங்களே!”
“உடனே திரும்பி வந்துடலாம். பத்தே நிமிடங்கள்.”
கார் நகர்ந்தவுடன் அவள் ரமேஷனின் திறந்து கிடந்த சட்டை பொத்தான்களைப் போட்டு விட்டாள். அவனுடைய கைகளில் ஊசி போட்ட இடத்தை இலேசாக ஊதிவிட்டு, அவள் அவனுடைய காதுகளில் முணுமுணுத்தாள்: “வலிக்குதா?”
“இல்லை” என்று அவன் தலையை ஆட்டினான்.
கார் ரமேஷனின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. ஷ்யாம்லால் அவனுடைய பெட்டியை எடுத்து மேலே வைத்தான். சுஜா அலமாரியைத் திறந்து அவன் அணிவதற்காக ஒரு பைஜாமாவை வெளியில் எடுத்து வைத்தாள். சமையலறைக்குச் சென்று அவள் தேநீர் தயாரித்தாள். ஆவி வந்து கொண்டிருந்த தேநீருடன் சேர்த்து மாத்திரைகளையும் அவனை அவள் உட்கொள்ள வைத்தாள்.
“ஹிரோஸிக்கு நான் ஃபோன் செய்யறேன். எங்கேயும் போகக்கூடாது. கட்டிலைவிட்டுக் கீழே இறங்கவேண்டாம்.”
நீட்டிப் படுத்திருந்த ரமேஷனை கழுத்துவரை அவள் போர்வையால் மூடிவிட்டாள். அதற்குப் பிறகு கட்டிலுக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவனுடைய முகத்தில் தன்னுடைய முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டு அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நான் உடனே திரும்பி வருவேன். அரை மணி நேரத்துல...”
ஷ்யாம்லால் வெளியே பொறுமையுடன் காத்திருந்தான். உதட்டில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறு அவள் படிகளில் இறங்கி வந்தாள்.
சுஜா போனவுடன், ரமேஷன் அறையில் தனியாகப் படுத்திருக்க, தேரொலிகள் அவனுடைய காதுகளில் மீண்டும் கேட்க ஆரம்பித்தன. யுகங்களுக்கிடையில் அமைதியும் வெறுமையும் அவனை வந்து அணைத்துக் கொண்டன. அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். உட்கார முடியவில்லை என்று ஆனபோது, அவன் அறைக்குள் இங்குமங்குமாக நடந்தான். உட்காரவும் படுக்கவும் நடக்கவும் முடியாமல் ஒரு பைத்தியக்காரனைப் போல அவன் அறையைச் சுற்றி நடந்தான். கடைசியில் கதவைத் திறந்து வெளியேறினான்.
அறையில் தொடர்ச்சியாக தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. பின்னாலிருந்து யாரோ என்னவோ சொன்னார்கள். யாரோ அழைத்தார்கள். எதையும் காது கொடுத்துக் கேட்காமல் வெறும் பைஜாமா மட்டும் அணிந்துகொண்டு கால்களில் செருப்பு இல்லாமல் அவன் நடந்தான். காதுகளில் ப்ரம்மகுண்டத்தின் மணியோசை கேட்டது. சங்கொலி முழங்கியது. வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்த தீபங்களைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் கண்களுடன் அவன் முன்னோக்கி நடந்தான்.
டில்லியில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது.
நினைவு வரும்போது அதிகாலை நேரம் ஹரித்துவாருக்குச் செல்லும் ஏதோ ஒரு பாசஞ்சர் வண்டி. அதில் அவன் தரையில் சுருண்டு படுத்திருந்தான். அவனைச் சுற்றிலும் சன்னியாசிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று நின்று மேலும் அதிகமான பயணிகளை நிறைத்துக் கொண்டு வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
தாகத்தால் தொண்டை எரிந்தது. குடிப்பதற்கு ஒரு துளி நீர்... மீண்டும் அவனுக்கு நினைவு இல்லாமற் போனது.
ஹரித்துவாரை வண்டி அடைந்தபோது, மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. மீண்டும் அவன் ஹரித்துவார் மண்ணில் கால் பதித்தான். இந்த முறை அவன் நகரத்திலிருந்து வந்திருக்கும் பணக்காரனோ நவநாகரீக மனிதனோ அல்ல. எல்லாவற்றையும் வேண்டாமென்று உதறிவிட்டு வந்த பிச்சைக்காரன்...
பிரம்மகுண்டத்தை நோக்கி நடைபழகும் ஒரு குழந்தையைப்போல அவன் நடந்தான். லோவர் ஸடக்கிற்கு அருகில் வெறிச்சோடிப் போயிருந்த ஒரு பாதையை அடைந்ததும் அவன் நின்றான். கண்கள் ஒன்றிரண்டு முறை மூடித் திறந்தன. விளக்கு மரத்திற்குக் கீழே அந்த உருவம் மல்லாக்கப் படுத்திருந்தது. இரத்தம் வழியும் நாக்கு அறுந்து கீழே கிடந்தது. தூரத்தில் திரிசூலம் தனியாகக் கிடந்தது. வாய்க்கு மேலும் பாதி திறந்த கண்களிலும் எறும்புகள்...
இறந்து கிடக்கும் அந்த உருவத்தைத் தாண்டி வேகவேகமாக அவன் ப்ரம்ம குண்டத்தை நோக்கி நடந்தான்.
நதியில் ஏராளமான மலர்களும், தீபங்களும் யாக நெருப்பைச் சுற்றிலும் உயர்ந்து மேலெழும் வேதமந்திரங்கள்... நெஞ்சிலடித்துக் கொண்டு அழும் பக்தர்கள்...
புரோகிதர்கள் உயர்த்திப் பிடித்த தீபங்களுடன் கோவில்களை விட்டு வெளியே வருகிறார்கள். சங்கொலிகள் முழங்குகின்றன. ப்ரம்மகுண்டத்தில் மணியோசை தொடர்ந்து ஒலிக்கிறது.
இந்த தீபங்களிலிருந்தும் இந்த மணியோசையிலிருந்தும் ரமேஷனுக்கு விடுதலையேயில்லை.
நிரந்தரமாக.