ஹரித்துவாரில் மணியோசை - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
‘பாவத்தின் சின்னம்தான் இந்த உருவம். ஹரித்துவாரில் மனிதர்கள் தினமும் வந்து கழுவுற பாவம் மனித வடிவத்துல இருக்கிறதுதான் இந்த உருவம்.’
தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரமேஷன்.
அந்த உருவம் அவர்களை நோக்கி கையை நீட்டியது. ரமேஷன் தன் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை வெளியே எடுத்தான். அதைப் பார்த்து அந்த உருவத்தின் இரத்தக் கண்கள் ஒளிர்ந்தன. உருவம் பணத்தை வாங்கிக் கொண்டு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மண்டையோட்டிலிருந்து சில பூக்களை எடுத்து சுஜாவுக்கு நேராக நீட்டியது. பூக்களை வாங்கியபோது சுஜாவின் கை நடுங்கியது.
அந்த உருவம் இருட்டைக் கிழித்துக் கொண்டு பாதையில் ஏறியது. இருட்டில் வசிக்கிறது, இருட்டில் அலைகிறது...
தேவர்களின் ஊரான இதே ஹரித்துவாரில் சொர்க்கத்தின் நுழைவாயிலான இந்த ஹரித்துவாரில், கடவுள்களுடன் ஒரு பூதமும் நடக்கிறது. தெய்வங்கள் குளிர்ந்துபோன சிலை வடிவில் இருக்கிறார்கள். பூதமோ இரத்தமும் சதையும் கொண்டு வாழ்வதுடன் உணவுக்காக யாசித்தும் திரிகிறது. குளிர்ந்துபோய் அசைவே இல்லாமல் இருக்கும் சிலைகளைவிட அவன் உயிருள்ள பூதத்தை மிகவும் விரும்பினான். ‘திருமூர்த்திகளே... மஹாமுனிவர்களே... என்னை மன்னித்து விடுங்கள்...’ - அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ஒடுக்கலான லோவர் சாலையின் வழியாக அடைக்கப்பட்ட கடைகளைத் தாண்டி அவர்கள் நடந்தார்கள். எங்கும் பயங்கரமான அமைதி நிலவியது. தூரத்தில் கங்கை நதி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
“ரமேஷ், நாம திரும்பிப் போவோம்.”
சுஜாவிற்கு உள்ளில் பயம் தோன்றியது. நள்ளிரவு தாண்டிய நேரம். வெறிச்சோடிப் போன, அறிமுகமில்லாத பாதை.
“பயப்படாதே, சுஜா.”
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அவளைத் தன் உடம்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் பயணத்தைத் தொடர்ந்தான். ஹரித்துவாருக்கு தினந்தோறும் எண்ணிக்கையிலடங்காத பக்தர்கள் வருகிறார்கள், போகிறார்கள். அவர்கள் கங்கையில் மூழ்கி ஆலயங்களைப் பார்த்துவிட்டு திரும்பிப் போவதுதான் எப்போதும் நடப்பது. அவர்களில் எத்தனைப் பேர் ஹரித்துவாரைப் பார்க்க முயற்சி செய்திருப்பார்கள்? அவர்களில் எத்தனைப் பேர் அந்த உருவத்தைப் பார்த்திருப்பார்கள்? ஹரித்துவாருக்கு பல முகங்கள் இருக்கின்றன. பகலில் இருப்பது ஒன்று. இரவில் இருப்பது வேறொன்று. ப்ரம்மகுண்டத்தில் காணும் முகமல்ல ஸப்ஜிமண்டியில் காணும் முகம்.
டில்லிக்குத் திரும்பிப் போவதற்கு முன்பு ஹரித்துவாரின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பார்க்க வேண்டும். யாரும் பார்த்திராத இந்த தெய்வ உலகத்தின் முகங்கள் எல்லாவற்றையும் காண வேண்டும் என்று முடிவெடுத்தான் ரமேஷன். நேரம் செல்லச் செல்ல சுஜாவின் பயம் மாறியது. ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு பாதைகளில் அவர்கள் நடந்தார்கள்.
பாதையின் இடது பக்கத்தில் கங்கை நதி ஓடிக் கொண்டிருந்தது. நதி பாதையைத் தொட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. வலது பக்கத்திலிருந்து வந்த ஒரு சாக்கடை பாதையைக் கடந்து நதியில் கலந்து கொண்டிருந்தது. நதியும் சாக்கடையும் ஒன்று சேரும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் உயர்ந்து நிற்கும் சுவர்களுக்கு இடையில் கோவில் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். யாருடைய கோவில் அது? அவர்கள் அந்த ஆலயத்தை நோக்கி நடந்தார்கள்.
சுவரிலிருந்த கதவு திறந்து கிடந்தது. கற்கள் பதித்த ஒரு நீளமான முற்றம். இங்குமங்குமாய் யாரெல்லாமோ அங்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். நதியைப் பார்த்துக் கொண்டு மூன்று ஆலயங்கள் இருந்தன.
முற்றத்தின் வழியாக நடக்கும்போது தங்களின் காலடிச்சத்தமே பெரும் பறை போல் ஒலிப்பதை அவர்களே உணர்ந்தார்கள்.
நதிக்கும் ஆலயங்களுக்கும் நடுவில் அவர்கள் நின்றார்கள். வலது பக்க எல்லையில் இருந்த ஆலயம் பாசி பிடித்திருந்தது. எனினும், சுவர் ஓவியங்கள் முழுவதும் அழிந்துபோய் விடவில்லை. கொக்குகளுடன் சேர்ந்து காணப்படும் புறாக்கள், இன்னொரு இடத்தில் ஒன்றையொன்று கொத்துவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் மயில்கள்... சிறகை விரித்து ஆடும் மயில்களைத் தானே பொதுவாகப் பார்க்க முடியும்? கண்களில் கோபம் தெரிய நின்றிருக்கும் மயில்களை அவர்கள் முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறார்கள்.
உறுதியான கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் விக்கிரகங்களைப் பார்க்க முடியவில்லை. நடுவிலிருக்கும் சிறிய ஆலயத்திலும் விக்கிரகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் இடது பக்கமிருந்த கோவிலுக்குள் சென்றார்கள். அங்கு சுவர் ஓவியங்களோ கொத்து வேலைப்பாடுகளோ எதுவும் இல்லை. கோவிலுக்குள் ஒரு பழைய விக்கிரகம் மட்டும் இருந்தது. முகமும் தலையும் தேய்மானம் ஆனதால், அந்த விக்கிரகத்தில் இருப்பது யார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாரென்று தெரியாத தெய்வமே, உன்னை நாங்கள் வணங்குகிறோம் -அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.
ஆள் அரவமற்ற ஆலயங்களுக்கு முதுகைக் காட்டியவாறு அவர்கள் அமர்ந்தார்கள். முன்னால் நிலவொளியில் நதி நன்கு தெரிந்தது. நீரில் மீன்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. முழங்காலில் முகத்தை வைத்தவாறு கங்கை நதியைப் பார்த்தவாறு அவர்கள் அமர்ந்திருந்தார்கள். ‘சாகர மன்னரின் பத்தாயிரம் மகன்களையும் பாவத்திலிருந்து விடுவித்த கங்கையே, நீ என்னோட சின்னச் சின்ன பாவங்களை கழுவித் துடைப்பேல்ல? பகீரதனின் தேர்ச் சக்கரங்கள் உண்டாக்கிய தடங்களுக்கு மேலே ஓடிக் கொண்டிருக்கும் நதியே, நீ சிரிக்கிறியா?” - தனக்குள் பேசிக் கொண்டான் ரமேஷன்.
“ரமேஷ்...”
“ம்...?”
“நீ என்ன எதுவுமே பேசாம இருக்கே?”
“நான் சிந்திச்சிக்கிட்டு இருந்தேன்.”
அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘எந்த மாதிரியான அனுபவங்களையெல்லாம் நான் கடந்து வந்திருக்கேன்? எட்டு வயசுல நான் என் தந்தையோட சிதைக்கு நெருப்பு வச்சேன். ட்ரவுசர் அணிஞ்ச வயசுல நான் கஞ்சா இழுத்தும் விலை மாதர்கள்கிட்ட போயும் என் அம்மாவை இடைவிடாம அழவச்சேன். போன குளிர் காலத்துல ஸெஞ்யோர் ஹிரோஸியோட ஊர்ல இருந்த ஒரு மதுக் கடையில் நான் தேவையில்லாம பிரச்சினைகள் உண்டாக்கினேன். ஆறு மாதங்களுக்கு முன்னாடி ஒரு நாள் அளவுக்கதிகமா பங்க் சாப்பிட்டுட்டு மூணு நாட்கள் மருத்துவமனையில் மரணத்தோட போராடிக்கிட்டு கிடந்தேன். அப்படியெல்லாம் நடந்தது நான்தான். இப்போ அதே நான் ஹரித்துவார்ல, நள்ளிரவு நேரத்துல, ஆள் அரவமில்லாத கோவில்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.”
எப்படிப்பட்ட நான்!
“இப்படி இருந்தா நான் தூங்கிடுவேன்.” சுஜாவின் தலை ரமேஷனின் மார்பின்மீது சாய்ந்தது.
“பேன் இருக்கான்னு பாரு.”
அவளுடைய தலையில் இல்லாத பேன்களைத் தேடியவாறு அவன் உட்கார்ந்திருந்தான். அவள் மெதுவான குரலில் ஒரு பாட்டைப் பாடினாள். கங்கை நதி அமைதியாக அவர்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. நிலவில் மூழ்கிய அமைதியான கோவில்கள்.