ஹரித்துவாரில் மணியோசை - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
“இனி எப்பவாவது நீங்க இங்கே வருவீங்களா?”
நடந்து கொண்டிருக்கும்பொழுது ரமேஷனின் தோள்மீது கையைப் போட்டவாறு அவினாஷ் கேட்டான்.
“நாங்க இனியும் வருவோம். ஒரு நாள்...”
“எப்போ?” அவினாஷ் ரமேஷனைத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.
“தேன்நிலவுக்கு...”
ரமேஷனின் தோளில் சுற்றியிருந்த தன்னுடைய கையை அடுத்த நிமிடம் அவினாஷ் எடுத்தான். அவன் அதே இடத்தில் அப்படியே நின்றான்.
உங்களுக்குத் திருமணம் ஆகலையா?”
“இல்லை...”
“அப்படின்னா பதிவேட்டில் எழுதினது...?”
ஆமாம்... பதிவேட்டில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ரமேஷன் பணிக்கர் என்றுதானே எழுதப்பட்டது?
“எதிர்காலத்துல இருந்தகொண்டு நான் அதை எழுதினேன், நண்பனே!”
அவர்கள் காரில் ஏறினார்கள். சரவிளக்குகளே, திரைச்சீலைகளே, கொலுசுகள் அணிந்த காற்பாதங்களே விடை தாருங்கள்.
10
“இது என்ன ரமேஷ்?” ஒட்டப்பட்ட ஒரு கவருடன் வராந்தாவில் வந்து நின்ற சுஜா கேட்டாள். ரமேஷனின் சூட்கேஸில் அந்த கவர் இருந்தது. கவரின் மீது முகவரி எதுவும் எழுதப்படவில்லை.
“பிரிச்சுப் படிக்கலாம்.”
பைப்பை வாயிலிருந்து எடுக்காமல் அவன் சொன்னான். சில நாட்களுக்கு முன்பு அவன் தன் தாய்க்கு எழுதிய கடிதமது. அவளிடம் அந்தக் கடிதத்தை காட்டிவிட்டு தபாலில் போடலாம் என்று அவன் நினைத்திருந்தான். ஹரித்துவாருக்கு வரும் அவசரத்தில் அவன் அதை மறந்துவிட்டான்.
“நான் படிக்கலாமா?”
“நிச்சயமா...”
அதைப் படிக்கும்பொழுது அவளுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? கண்களில் ஒரு மலர்ச்சி இருக்குமே! மகிழ்ச்சியால் அவள் துள்ளிக் குதித்துவிட மாட்டாளா?
“என் அன்பான அம்மாவுக்கு...” சுஜா கவரைப் பிரித்து படிக்கத் தொடங்கினாள். “கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது நான் கிராமத்திற்கு வந்து அம்மா, உங்களை இங்கு அழைத்து வருவதாக இருக்கிறேன். என்னாலும் சுஜாவாலும் இனிமேலும் காத்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் வந்து அந்தச் சடங்குகளை மங்களகரமாக நடத்தித் தர வேண்டும். சுஜாவின் தந்தை இந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தனியாக எழுதுவார்.”
கடிதத்தைப் படித்த அவள் கண்கள் மலர்வதை அவன் பார்த்தான்.
“ஏன் இந்தக் கடிதத்தை போஸ்ட் பண்ணல?”
“உன்கிட்ட காட்டிட்டு போடலாம்னு நினைச்சேன்.”
அவன் கடிதத்தைத் திரும்பவாங்கி அதற்குக் கீழே இதைச் சேர்த்தான்: “நான் நேற்று ஹரித்துவாருக்கு வந்தேன். என்னுடன் சுஜாவும் இருக்கிறாள் என்பதைச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கே நான் என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவப்போகிறேன். ‘வீரமித்ரோதய’த்தில் சொன்னது அம்மா, உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?
‘கங்காத்வாரே குஸாவர்த்தே பில்வகே நீலபர்வதே
தீர்த்தோதகே கலு ஸ்னாதா புனர்ஜன்ம ந வித்யதே!’
இன்று இரவு நான் குஸாகாட்டிற்குச் செல்கிறேன். இறந்து போனவர்களுக்குச் சொந்தமான இடம் அது. அங்கே உட்கார்ந்து நான் என் தந்தையை நினைப்பேன்...”
கடிதத்தை இன்னொரு கவரில் போட்டு ஒட்டி முகவரியை எழுதியபோது அவள் கேட்டாள் “நான் போய் போஸ்ட் பண்ணட்டுமா?”
அருகிலேயே ஒரு தபால்பெட்டி இருந்தது. கடிதத்தைக் கையில் பிடித்தவாறு அவள் நடந்து செல்வதை வராந்தாவில் உட்கார்ந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் மலை அடிவாரத்தில் முஸுரி எக்ஸ்பிரஸ் போய்க் கொண்டிருக்கும் சத்தம் இங்கு கேட்டது. நேரம் விலை மதிப்புள்ளது. நாளை இதே எக்ஸ்பிரஸ்ஸில் டில்லிக்குத் திரும்பச் செல்ல வேண்டும். ஹரித்துவாரில் வெறுமனே உறங்கி நேரத்தை வீணடித்து விடக்கூடாது.
“ஐ ஃபீல் லைக் கோயிங் அவுட்...”
அவன் எழுந்து புஷ் சட்டையை எடுத்து அணிந்தான். பெடஸ்டல் விளக்கிற்கு அருகில் பீட்டர் ஹாண்டேயின் ஒரு நாடகத்தைப் படித்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். பாத்திக்ஷேடின் வழியாக வந்த வெளிச்சத்தில் அவளின் தலைமுடி பொன்நிறத்தில் மின்னியது.
“இந்த நேரத்துல வெளியே போகணுமா, ரமேஷ்? உறங்கலையா?
முதல்நாள் இரவிலும் அவன் உறங்கவில்லை. பகல் முழுவதும் அலைந்து நடந்து கொண்டிருந்தான். மானஸாதேவியின் மலைமீது ஏறிய களைப்பு இன்னும் போகவில்லை.
“இது ஹரித்துவாரில் நம்மோட கடைசி இரவு. வா சுஜா.”
“எங்கே ரமேஷ்?”
“குஸாகாட்டுக்குப் போவோம். என் அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்யணும்.”
அவள் புத்தகத்தை மூடி வைத்தாள். அவிழ்த்துவிடப்பட்ட தலைமுடியுடன், காலில் செருப்புகூட அணியாமல் அவள் அவனுடன் வெளியிலிறங்கினாள். டில்லியில் இருக்கும்போதுகூட சில நேரங்களில் அவள் இப்படி நடப்பதுண்டு. அந்தச் சமயத்தில் சாந்திநிகேதனில் எங்கேயோ பார்த்த ஏதோ ஒரு வங்காள இளம்பெண் அவள் என்று அவனுக்குத் தோன்றும்.
நேரம் நள்ளிரவாகிவிட்டது. ஹரித்துவார் முழுவதும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. ஆள் அரவமே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கும் பாதை. நேற்று சரஸ்ஸின் போதையில் அலைந்து நடந்த இரவு மீண்டும் வந்திருக்கிறது.
குஸாகாட் லோவர் சாலைக்கு அப்பால் எங்கோ இருந்தது. வழி தெரியவில்லை. நேராக நடந்தால் அங்கு போய் சேராமல் இருக்க முடியாது. அதுவரை ஒன்றிலிருந்து வேறொன்றிற்கு கிளைவிட்டுப் போகும் தெருக்கள் வழியே நடக்க வேண்டும். குஸாகாட்டை இலக்கு வைத்து அந்தப் பின்னிரவு நேரத்தில் அவர்கள் நடந்தார்கள். ‘தத்தாத்ரேய மகரிஷியே, நாங்க வர்றோம்’ - அவர்கள் மனதிற்குள் கூறிக் கொண்டார்கள்.
ஊப்பர் ஸடக்கையும் லோவர் ஸடக்கையும் இணைக்கக்கூடிய தெரு ஒன்றில் அவர்கள் திரும்பினார்கள். அடர்த்தியான இருட்டு, இரு பக்கங்களிலும் சிதிலமடைந்த சுவர்கள்.
“ரமேஷ், நீ என்னை எங்கே கொண்டுபோற?”
அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். இதே தெருவிலும் அவன் நேற்று இரவு அலைந்து திரிந்திருக்கிறானே!
இருட்டில் என்னவோ அசைவதைப்போல இருந்தது.
“என்ன அது?”
அவனுடைய கையைப் பிடித்திருந்த அவளின் பிடி இறுகியது. ஒரு கருத்த உருவம் இருட்டில் எழுந்து நின்றது. திரிசூலத்தின் நுனி மின்னியது. திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தவாறு அது அவர்களுக்கு நேராகத் திரும்பியது.
“ரமேஷ்...”
இருட்டில் அவர்களுடைய முகத்தில் இரத்தம் சுண்டிப்போனதை அவன் பார்க்கவில்லை. நேராகத் திரும்பி அவன் கேட்டான்.
“என்னை ஞாபகத்துல இருக்கா?”
ஒரு நிமிடம் பயங்கர அமைதி நிலவியது. உருவத்திற்கு என்னவோ சொல்லவேண்டும்போல் இருந்தது. வெளியில் தொங்கிக் கொண்டிருந்த நீளமான நாக்கு அதற்கு வழிவிட்டால்தானே!
சுஜாவின் தோளைப் பிடித்துக் கொண்டு பாதையின் ஓரத்தில் ரமேஷன் நடந்தான். உயர்த்திப் பிடித்த திரிசூலத்துடன் அந்த உருவம் அவர்களைப் பின்தொடர்ந்தது.
“யாருன்னு தெரியுதா?”
“நேற்று பார்த்தேன்னு சொன்ன உருவம்... அதுதானே?”
அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
லோவர் சாலையில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த உருவத்தின் மீது வெளிச்சம் விழுந்தது. சுஜா உருவத்தைத் தெளிவாகப் பார்த்தாள்.