ஹரித்துவாரில் மணியோசை - Page 36
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
தூரத்தில் மலைகளில் சிவப்பு படர்ந்திருந்தது. மானஸாதேவியின் மலைக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. லோவர் ஸடக் வழியாகவும் ஊப்பர் ஸடக் வழியாகவும் ஆட்கள் ப்ரம்மகுண்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
மஹாவிஷ்ணுவின் இடமான விஷ்ணுகாட்டில் அவர்கள் நின்றார்கள். இங்குதான் துர்வாசர் தர்மத்வஜன் என்ற சூரிய வம்ச மன்னனை சாபத்தால் பாம்பாக மாற்றினார். எல்லா கிருஷ்ண சதுர்த்திக்கும் பாம்பு விஷ்ணுகாட்டிற்கு குளிக்கவரும்.
கவூகாட்டில் பசுவைக் கொன்றவர்கள் பாவ நிவர்த்திக்காக கடலில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு என்று ரமேஷன் நடந்து கொண்டிருந்தான். இந்த இடங்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையே அவன் மறந்துவிட்டான். இடம், காலம் எதைப்பற்றியும் அவனுக்கு நினைவு இல்லை. ஆத்மஜுரத்துடன் அவன் முன்னோக்கி நடந்தான்.
மரங்களுக்குக் கீழே மேய்ந்தபடி நடந்து கொண்டிருந்த ஒரு வெள்ளைப் பசுவின் உடல் முழுக்க வண்ணத் துணிகளைப் போர்த்திருந்தது. கழுத்தில் மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. சன்னியாசிகள், பக்தர்கள் ஆகியோருக்கு நடுவில் மணிகள் ஒலிக்க வெள்ளைப்பசு மேய்ந்து கொண்டிருந்தது- பாவ மோட்சம் கிடைத்த ஆத்மாவைப் போல.
ஒரு வெள்ளைப் பசுவின் ஆத்மசுத்திக்காக ரமேஷனின் மனம் அவனுக்குள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது. அவனுக்குள் பாவம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. குழி விழுந்த கண்களில் தெரிவது பாவத்தின் சிதைகள்தானே!
“ரமேஷ், உனக்கு காய்ச்சல் அடிக்குதுல்ல?”
ரமேஷனின் கையைப் பிடித்தபோது அவளின் கை பலமாகச் சுட்டது. அவனுடைய ஆத்மாவிலிருந்து ஜுரம் உடலுக்குப் படர்ந்து கொண்டிருந்தது.
“நாம திரும்பிப்போவோம்.”
ஒவ்வொரு நிமிடமும் உள்ளே போய்க்கொண்டிருந்த அவனுடைய கண்கள் அவளைப் பயமுறுத்தின.
“எங்கு போவது? இந்த பாதைகள், ஆலயங்கள்- இவற்றை விட்டு நான் எங்கு போவது?” - அவன் நினைத்தான்.
வெளியில் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் ப்ரம்மகுண்டத்திற்குள் நுழைந்தார்கள். விக்கிரமாதித்தன் உண்டாக்கிய பௌடிகள். அங்கு ஏராளமான பக்தர்கள் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தார்கள். நீரில் பேல்ப்பத்தி என்ற புனித இலைகளும் மலர்களும் மிதந்து கொண்டிருந்தன. நீரிலும், கரையிலும் அடுத்தடுத்து இருந்த கோவில்களில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. நதிக்கு நடுவிலிருந்த தீவில் ஹோமகுண்டம் எரிந்து கொண்டிருந்தது. நெருப்பில் நெய்யையும் மற்ற பொருட்களையும் எரித்துக்கொண்டு சன்னியாசிகள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் மலைகள் இருண்டன. வானத்திலிருந்த சிவப்பு நிறம் மறைந்துவிட்டது. அப்போது நதியின் மேற்பகுதி ஜொலித்துக் கொண்டிருந்தது. பக்தர்கள் மலர்களையும், எரிந்து கொண்டிருக்கும் நெய் விளக்குகளையும் நதியில் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நதியின் கரைகளில் கூடியிருந்த பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொல்லிக் கடவுள் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சத்தம் ஒரு புலம்பலைப்போல நதியில் தங்கி நின்றது.
பூஜை முடிந்தது. நதியில் மலர்களும், நெய் திரிகளும் மிதந்து கொண்டிருந்தன. கோவிலைவிட்டு வெளியே வந்த புரோகிதர்கள் இரு கைகளிலும் உயர்த்திப் பிடித்த தீபங்களுடன் படிகளில் இறங்கினார்கள். கடைசி படியில் அவர்கள் வரிசையாக நின்றார்கள்- தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்த தீபங்களுடன், ஆகாயத்தை நோக்கிப் பார்த்த கண்களுடன்.
அப்போது ஹரித்துவாரிலிருக்கும் எண்ணிக்கையிலடங்காத கோவில்களிலிருந்து ஒரே நேரத்தில் மணிகள் ஒலித்தன. சங்கொலிகள் நதிக்கு மேலே கேட்டன. பக்திப் பரவசத்தால் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத பக்தர்களில் சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்கள்.
ரமேஷன் எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தான். காதுகளில் அலைகளைப் போல வந்து மோதும் மணியோசையும் சங்கொலியும் வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்த தீபங்களின் வெளிச்சமும் அவனை அமைதியானவனாக ஆக்கின. அவன் ஒரு ஹோமகுண்டத்தைப் போல பற்றி எரிந்து கொண்டிருந்தான்.
கோவிலின் தீபங்கள் எரிந்து முடியும் நிலையில் இருந்தன. நதியில் மிதந்து சென்ற மலர்களும் குறைந்து கொண்டிருந்தன. அந்த இடம் ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.
மணி எட்டரை ஆகியிருந்தது.
“ரமேஷ்!”
சுஜா அவனைக் குலுக்கி அழைத்தாள். ஹரித்துவாரில் அவர்கள் இன்னும் ஒன்றரை மணி நேரமே இருக்க முடியும். ஹோட்டலுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். அவனுக்கு இப்போதும் நல்ல காய்ச்சல் அடித்தது. ஏதாவதொரு மாத்திரையை உட்கொள்ளச் செய்ய வேண்டும். பிறகு நேராக ஸ்டேஷனுக்குப் போக வேண்டும்.
“இப்படி உட்கார்ந்திருந்தால் வண்டியைத் தவறவிட்டுட மாட்டோமா ரமேஷ்?”
அவள் ஞாபகப்படுத்தினாள். அவனுடைய தோளில் கையை வைத்தபோது, கழுத்தில் நெருப்பின் வெப்பம் இருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் எந்தவித அசைவும் இல்லாமல் நதியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். கண்களுக்கு முன்னால் இப்போதும் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. காதுகளில் மணிகளின் ஓசையும் சங்கொலியும், அலைகளின் சத்தமும்... இப்போதும்.
‘இப்படி இருந்தால் காய்ச்சல் அதிகமாகும்ல, அடக் கடவுளே!”
சுஜா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ப்ரம்மகுண்டத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. மலர்களும், நெய் விளக்குகளும் நதியில் கொஞ்சம் மிதந்து போய்க் கொண்டிருந்தன. நதிநீரில் போகாத சில தீபங்கள் படிகளின் ஓரத்தில் கிடந்தன- காற்றில் நடுங்கிக் கொண்டிருந்த நெருப்பு நாக்குடன்.
“ரமேஷ், எழுந்திரு...”
“நாம நாளைக்குப் போவோம்”
அவளுக்கு நன்கு பழக்கமான அவனுடைய குரல் அல்ல அது. அவள் பதைபதைப்புடன் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
“என்னை கஷ்டப்படுத்தாதே ரமேஷ்”
“நீ போ!”
“நான் எங்கே போறது ரமேஷ்? நீ இல்லாம நான் எங்கே போறது?”
அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
அவன் எதுவும் பேசாமல் தூரத்தில் எங்கோ பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். கோவில்களில் விளக்குகள் முழுமையாக அணைந்து கொண்டிருந்தது. அணைந்து போன நெய் விளக்குகள் நதியில் ஏராளமாகக் கிடந்தன.
“ரமேஷ்!”
அவளுடைய குரல் அழுகையாக மாறியது.
அவன் ஒரு சிலையைப்போல அசைவே இல்லாமல் உட்கார்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் அவள் திகைத்துப்போய் நின்றிருந்தாள் - நீண்டநேரமாக. பிறகு அவளும் ஒரு படியில் அவனுக்கு அருகில் அமர்ந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போயிருந்த அந்த இடத்தில் அவளுடைய அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது.
சிறிது நேரம் சென்றதும் டேராடூன் எக்ஸ்பிரஸ் மலை அடிவாரத்தில் ஓசை எழுப்பியவாறு கடந்து போனது.