ஹரித்துவாரில் மணியோசை - Page 35
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
நதிக் கரையோரம் மனதில் பயத்தை உண்டாக்கும் இருட்டில் அவன் திரும்பி நடந்தான். வழியில் தியானத்திலிருந்த சந்நியாசிகளை மட்டும் பார்த்தான். ஊப்பர் ஸடக்கும் அவினாஷின் ஹோட்டலும் சுஜாவும் எங்கோ தூரத்தில் இருந்தார்கள். ‘நான் அங்கு போய் சேர்வேனா?’ என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவனுடைய காதுகளில் இப்போதும் மன்வந்தர சக்கரவர்த்திகளின் தேர்ச் சத்தம் ஒலித்தது. த்ரேதாயுகங்கள் முடியும்போது த்வாபரயுகங்கள் பிறக்கின்றன. புதிய புதிய யுகங்கள்; புதிய புதிய அவதாரங்களும் சப்தரிஷிகளும் யுகங்கள் மஹாயுகங்களாகின்றன.
‘இந்த மகாநாடகத்தின் முடிவு எங்கே? என் தெய்வமே!’ - கால்கள் குழைந்தபோது தொண்டையில் வெளிவராத ஒரு முனகலுடன் அவன் பாதையில் விழுந்தான்.
13
சுஜா சூட்கேஸில் மற்ற ஆடைகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பாதி மூடிய கண்களுடன் ரமேஷன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எதுவும் செய்ய முடியாது. உறங்கக்கூட முடியாத நிலையில் இருந்தான்.
கட்டிலில் கிடந்த சாம்பல் நிற பேண்ட்டையும் கைத்தறி சட்டையையும் சுட்டிக் காட்டி சுஜா சொன்னாள்:
“ரமேஷ், நீ இப்போ அணிய வேண்டிய ஆடைகள்...” சூட்கேஸ்கள் இரண்டையும் பூட்டினாள். அவள் சொன்னதை அவன் கேட்டானோ என்னவோ!
ஹரித்துவாரில் இனி அவர்கள் இருக்கப்போவது சில மணி நேரங்கள் மட்டுமே. எவ்வளவு வேகமாக மூன்று நாட்களும் கடந்தோடியிருக்கின்றன! மூன்று மணி நேரத்தைவிட வேகமாக ஓடி முடிந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு இந்த அறைதான் அவர்களின் வீடாக இருந்தது. இந்த அறை எதற்கெல்லாம் சாட்சியாக இருந்திருக்கிறது! இந்த சுவர்களுக்கு இடையில் இப்போதும் எரிந்த சரஸ்ஸின் மணமிருக்கிறதே! இந்த அறை அவர்களின் காதல் நாடகங்களைப் பார்த்தது. அவர்களின் கண்ணீர் விழுந்ததுதான் இந்த தரைவிரிப்பு.
ரமேஷனும் சுஜாவும் போய்விட்டபிறகு வேறு யாராவது இந்த அறைக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் ஆடிய நாடகத்தை வேறு யாராவது இங்கு ஆடுவார்களா? இங்கு இனியும் ஒரு பெண்ணின் கண்ணீர் விழுமா? இந்தச் சுவர்களுக்கிடையில் இனியும் சரஸ்ஸின் புகை நிறைந்திருக்குமா?
கீழே பாதையில் தன்னுடைய சைக்கிள் ரிக்ஷா மீது சாய்ந்தவாறு ஹனுமான் நின்று கொண்டிருக்கிறான்.
“ரமேஷ்...”
அவன் கண்களைத் திறக்க முயற்சித்தான்.
“ஆடையை மாற்று. ஹனுமான் காத்து நின்னுக்கிட்டு இருக்கான்.”
அவள் வற்புறுத்தியபோது எதுவும் பேசாமல் அவன் பேன்ட்டையும் சட்டையையும் எடுத்து அணிந்தான். படிகளில் இறங்கும் போது கைப்பிடியை பலமாகப் பிடித்துக் கொண்டான்.
“எட்டு மணிக்கு முன்னாடி திரும்பி வரணும்.” அவினாஷ் ஞாபகப்படுத்தினான். “பத்து மணிக்கு வண்டி... எட்டு மணிக்கு முன்னாடி வந்துட்டா சாப்பிட்டு முடிச்சு நிதானமா ஸ்டேஷனுக்குப் போகலாம்.”
அவன்தான் டேராடூன் எக்ஸ்பிரஸ்ஸில் டில்லிக்கு இரண்டு இருக்கைகள் ‘புக்’ செய்தான்.
ரிக்ஷா ஹர்கீபௌடியை நோக்கி ஓடியது. ஹோட்டலிலிருந்து ப்ரம்மகுண்டத்திற்கு நடக்கக்கூடிய தூரம்தான். மூன்று நான்கு ஃபர்லாங் தூரம் வரும். ஆனால், ரமேஷனால் ஒரு அடிகூட நடக்க முடியாது.
“ரமேஷ், நீ தூங்குறியா?”
அவள் அவனைக் குலுக்கி அழைத்தாள். எதுவும் சொல்லாமல் பாதி திறந்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். மதியம் வெளியே செல்லும்போது பார்த்த ரமேஷனல்ல இது. முகம் மிகவும் சிறுத்துப்போயிருந்தது. கண்கள் உள்ளே போயிருந்தன.
“உனக்கு என்னாச்சு ரமேஷ்?”
அவள் அவனுடைய கையை எடுத்து மடியில் வைத்து அதை மெதுவாகத் தடவினாள். அவன் என்னவோ சொல்ல நினைத்தான். ஆனால், நாக்கு வரவில்லை. அவளுடைய மடியில் இருந்த அவனுடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது.
இந்த அளவிற்கு செயல்படமுடியாதவனாக அவனை அவள் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.
“ரமேஷ்...”
“ம்...?”
அவளுக்குள் என்னவோ கூறவேண்டும்போல் இருந்தது. ‘என்னை இப்படி வைக்கக்கூடாது’ என்னை இப்படி கண்ணீர்விட வைக்கக் கூடாது’ என்று அவள் கூற நினைத்தாள். ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவனுடைய கையை தன்னுடைய கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
“எத்தனை மணிக்கு வண்டி மேம்ஸாப்?”
ரிக்ஷா மிதிப்பதற்கிடையில் ஹனுமான் கேட்டான்.
ரிக்ஷா ஹர்கீபௌடியை நெருங்கிக் கொண்டிருந்தது.
“பத்து மணிக்குத்தான் ஹனுமான்.”
“இன்னைக்கே போறீங்களா மேம்ஸாப்?”
“ஆமா...”
அவளுடைய தாய் அவளுக்காகக் காத்திருப்பாளே! அவளுடைய தந்தை வந்திருப்பான். ரமேஷனுக்காக ஸெஞ்யோர் ஹிரோஸி காத்திருப்பார். திங்கட்கிழமை அவன் அலுவலகத்திற்குப் போகவில்லையென்றால் அவனுடைய வேலை மிகவும் பாதிக்கும். தவிர நாளை சாயங்காலம் செஸ் விளையாட்டு வேறு இருக்கிறது. ஸெமி ஃபைனல் வரை போயாகிவிட்டதே! யாருக்குத் தெரியும்... இந்த வருடத்தின் டில்லி மாநில சேம்பியன் அவனாகக் கூட இருக்கலாம்!
டில்லி அவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒருநாள்கூட தாமதமாகக் கூடாது.
நாளை இந்த நேரத்தில் அவர்கள் டில்லியில் இருப்பார்கள். அவள் ஓவிய வகுப்பில் இருப்பாள். அவன் அமீர் ஸயீத்கானுடன் செஸ்போர்டில் படைகளை வெட்டிக் கொண்டிருப்பான்.
“இனியும் ஹரித்துவாருக்கு வருவீங்களா மேம்ஸாப்?”
ஹனுமானின் குரலில் கவலை தெரிந்தது. ‘கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு ஹனுமான்? இந்த வாழ்க்கையில எவ்வளவு பேரை நாம இப்படி பார்க்கிறோம்? மறக்கவும் செய்யிறோம்!’ - அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
“மேம்ஸாப், நீங்க கடிதம் எழுதுவீங்களா?’
“உனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாதே!”
அதை யோசிக்காமல் ஹனுமான் அப்படியோ கேள்வியைக் கேட்டான். அடுத்த நிமிடம் அவனுடைய முகம் வாடியது.
ஹர்கீபௌடியில் ரிக்ஷா நின்றது. வாகனங்கள் அதற்குமேல் போவதை தடை செய்திருக்கிறார்கள். ப்ரம்மகுண்டத்திற்குப் போகும் நபர்கள் ஹர்கீபௌடியில் பிரதான சாலையில் இறங்கி கால்நடையாக நடந்து செல்லவேண்டும்.
“ரமேஷ்!”
பேசாமலிருந்தாலும் அவன் தூங்கவில்லை. அவனுடைய கண்களுக்கு முன்னால் இப்போதும் கடந்து போய்க் கொண்டிருக்கும் யுகங்கள்தான் தெரிந்தன. காதுகளில் மன்வந்தர சக்கரவர்த்திகளின் தேரொலிகள்!
‘தமேவ சரணம் கச்ச
சர்வபாவேன பாரத
தல்ப்ரஸாதால் பராம் சாந்திம்
ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி சாஸ்வதம்...’
மானஸாதேவியின் மலையின் உச்சியில் கேட்ட சன்னியாசியின் முனகல் சத்தம் காதுகளில் மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தது.
“ரமேஷ், உனக்கு என்ன ஆச்சு?”
அவள் அவனைக் குலுக்கி அழைத்தாள். அவன் ரிக்ஷாவை விட்டு கீழே இறங்கினான்.
“நான் காத்திருக்கவா?”
“வேண்டாம், ஹனுமான். ஹோட்டலுக்கு நாங்க நடந்தே போயிடுவோம்.”
அவள் கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.
“வேண்டாம், மேம்ஸாப் வேண்டாம்.”
அவள் பணத்தை நீட்டியபோது, அவன் அதை வாங்க மறுத்தான். பணத்தை வாங்காமலே ஹனுமான் ரிக்ஷாவில் ஏறி மக்கள் கூட்டத்தில் மறைந்தான்.