ஹரித்துவாரில் மணியோசை - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
8
மானஸாதேவி மலை அடிவாரத்தின் வழியாக ஏதோ ஒரு வண்டி ஓசை எழுப்பியவாறு கடந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது மரக்கிளைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிளிகள் கூட்டமாக பறந்து வானத்தில் சென்றன. பறவைகளின் சிறகடிப்பு சத்தம் கேட்டது. ஆலயத்திலிருந்து வரும் பாதைக்கு தூரத்தில் மனிதர்களின் காலடிகள் பதிந்திராத அடர்ந்த புதர்கள் ஒன்றில் புற்களின் மீது படுத்திருந்த ரமேஷன் தன் கண்களைத் திறந்தான்.
“சுஜா!”
“ம்...?”
“ஏதோ ஒரு வண்டி...”
“ம்...”
புற்பரப்பை விட்டு அவள் எழுந்து நின்றாள். அவள் முகம் வியர்த்திருந்தது. தலைமுடி அவிழ்ந்து சிதறிக் கிடந்தது. அவள் கழுத்திலும் கூந்தலிலும் அவனுடைய ஆஃப்டர் ஷேவ் லோஷனின் வாசனை அடித்தது. அவனுடைய மார்பில் அவள் பயன்படுத்தும் ஷாம்பு வாசனை வந்தது.
“மானஸாதேவி மன்னிப்பாளா?”
“தேவிக்கு விருப்பமில்லாதது எதையும் நாம செய்திடலையே சுஜா!”
ஒரு புன்னகையுடன் அவள் எழுந்து சற்று தூரத்தில் போய் அமர்ந்தாள். கொடிகளையும் மரக்கிளைகளையும் கொண்டு இயற்கை உண்டாக்கிய ஒரு பர்ணசாலை அங்கு இருந்தது. அங்கு அமர்ந்துகொண்டு அவள் தன் தலைமுடியை வார ஆரம்பித்தாள்.
‘த்யாயதோ விஷயான் பும்ஸஹ்’
மல்லாக்கப் படுத்தவாறு சிகரெட் புகையை மேலே பரவவிட்டுக் கொண்டு ரமேஷன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“நான் டில்லியை நினைக்கிறேன்.”
மலையின் அடிவாரத்தில் வண்டி போய்விட்டாலும் அதன் இரைச்சல் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. முஸூரியிலிருந்தோ டேராடூனிலிருந்தோ டில்லிக்குப் போகும் வண்டியாக அது இருக்கும். அந்த வண்டி நகரத்தைப் பற்றிய நினைவுகளை அவனிடம் எழுப்பியது.
“ரமேஷ்!”
“ம்...?”
“ஹரித்துவார், டில்லி- இதுல உனக்கு எது ரொம்பப் பிடிச்சிருக்கு?”
அவனிடமிருந்து சற்று தூரத்தில் பச்சைப் புல் வெளியில் அமர்ந்து கொண்டு அவள் கேட்டாள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமமான விஷயம்தான். சில நேரங்களில் டில்லியை மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் அதைப் பிடிக்கவே பிடிக்காது. ஹரித்துவாருக்கு இப்போதுதானே அவன் வந்திருக்கிறான். அதனால் அதை வெறுக்கக்கூடிய அளவிற்கு அவன் இன்னும் போகவில்லை. இரண்டு நாட்கள் முழுமையாக அவன் அங்கு இருந்தால், ஹரித்துவாரை வெறுத்தாலும் வெறுக்கலாம். “நான் இந்த உலகத்துல நிரந்தரமா விரும்புற ஏதாவது இருக்கா?” - சிகரெட் புகையை ஊதி சுற்றிலும் பரவவிட்டவாறு அவன் யோசித்தான். தன் தாயைப்பற்றி நினைக்கும்பொழுது சில நேரங்களில் பாசஉணர்வில் சிக்கி அவன் நிலைகுலைந்து போய் விடுவதும் உண்டு. சில நேரங்களில் எதுவுமே தோன்றாது. மனதில் வெறுப்பு மண்டிக்கிடக்கும்? சுஜா? நாளை அவளைப் பற்றி நினைக்கும்போதுகூட வெறுப்பு தோன்றலாம். ‘என்னை என்னாலயே புரிஞ்சிக்க முடியலையே!’- அவன் புற்களின் மீது குப்புறப்படுத்தவாறு அவளைப் பார்த்தான். ‘ஆனா, இந்த நிமிடத்துல நான் உன்னை விரும்புறேன். இந்த பூமியிலேயே நான் ரொம்ப விரும்புற மனிதப்பிறவி நீதான்’ என்றான் அவன்.
“இந்த வாழ்க்கையில நான் சம்பாதிச்சது என்ன?’ - பச்சைப் பசேலென விரிந்து கிடந்த புற்களின் மீது படுத்துக் கொண்டு நீலப்புகையில் மூழ்கிக் கிடந்த அவன் யோசித்தான். ‘சம்பாதிச்சது என்ன? ஆயிரத்து நானூறு ரூபா சம்பளம் கிடைக்கிற ஹிரோஸியோட வேலையா? வாங்கப்போற காரா? போன குளிர்காலத்துல லத்தீன்’ அமெரிக்காவுக்குப் போய் வந்த பயணமா? அம்மாவோட அன்பா?’ - அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”
பச்சைப் புற்களின் மீது பரவிக் கொண்டிருந்த சிகரெட் புகையிலிருந்து முகத்தை உயர்த்தாமல் அவன் சொன்னான்: “உன்னைப் பற்றித்தான்...”
“என்னைப்பற்றியா?”
“ஆமா... என் வாழ்க்கையிலேயே என்னோட ஒரே சம்பாத்தியம் நீதான்.”
பர்ணசாலையைவிட்டு அவள் எழுந்து ஓடிவந்தாள். அவளுடைய கண்கள் எப்போதும் விரிவதைவிட பெரிதாக விரிந்தன. வியர்வை அரும்பியிருந்த தன்னுடைய முகத்தை அவனுடைய பின்கழுத்தில் வைத்து அவள் அழுத்தினாள். ‘இல்ல... நான் எதையும் சம்பாதிக்கல. இந்த வாழ்க்கையில நான் ஒண்ணுகூட சம்பாதிக்கல’ - அவனுக்குத் தோன்றியது. ‘நான் அடைய விரும்பினேன். அவ்வளவுதான். அடைஞ்சேன்னு நினைக்கிறது ஒரு தோணல். அதுதான் உண்மை’ - அதைச் சொல்வதற்காக அவன் தயாரானபோது உப்பு படர்ந்திருந்த அவளுடைய முகம் அவனுடைய வாயை முழுமையாக மூடி முடித்திருந்தது.
“ரமேஷ், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.”
அது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆயிரம் முறைகளாவது அதை அவனிடம் கூறியிருப்பாள். அதற்கேற்றபடி நடந்தும் காட்டியிருப்பாள். அவனிடமிருந்து எழுந்த அவள் சற்று தூரத்திலிருந்த ஒரு மரத்திற்குக்கீழே போய் நின்றுகொண்டு சொன்னாள்: “ரமேஷ், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்குது.”
‘அப்பாவிப் பொண்ணு!’
அவன் தனக்குள் கூறிக்கொண்டான். வானத்தைப் பார்த்தவாறு படுத்தவாறு இன்னொரு சிகரெட்டை எடுத்து அவன் கொளுத்தினான். மேலே வானம் அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளித்தது. மெதுவாகப் புகையை ஊதியவாறு படுத்திருந்த அவன் விருப்பப்பட்டான்: ‘இந்த வானத்தோட ஒரு பகுதியா நான் இருக்கக்கூடாதா? இந்த நீலக் கடலோட ஒரு துளியா நான் இருக்கக்கூடாதா?’
அவனுடைய கண்கள் மீண்டும் மூடின. எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, குரங்குகளுடனும் கிளிகளோடும் பேசி முடித்துவிட்டு திரும்பிவந்த சுஜா அவனுக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்து சொன்னாள்: “ரமேஷ், நீ என் உயிர்...”
பசி தோன்றியபோது அவர்கள் புதரைவிட்டு வெளியே வந்து ஒற்றையடிப்பாதை வழியாக அடிவாரத்தை நோக்கி நடந்தார்கள். அப்போது ஒன்றோடொன்று நெருக்கமாக நின்றிருந்த இரண்டு சிவலிங்கங்களை அவர்கள் பார்த்தார்கள். மஞ்சளும், எண்ணெயும் படிந்திருக்கும் சிவலிங்கங்களுக்கு முன்னால் ஒரு கரிந்துபோன மண்விளக்கு இருந்தது.
“இது நானும் நீயும், ரமேஷ்...”
அவள் சிவலிங்கங்களுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள். தயங்கியவாறு அந்த சிவலிங்கங்களில் ஒன்றின் மீது அவள் தன் கையை வைத்தாள். “நானும் நீயும்தான் இந்த சிவலிங்கங்கள்...” என்று கூறியவாறு அவள் அவற்றை இறுக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் முழுமையான அன்பு இருந்தது.
மலையைவிட்டு எவ்வளவு இறங்கினாலும், அது முடிவது மாதிரியே தெரியவில்லை. கீழே இறங்குவது மேலே ஏறுவதைவிட மிகவும் கஷ்டமாக இருந்தது. சிறிது சறுக்கினால்கூட தலைகீழாக கவிழ்ந்து மலையின் அடிவாரத்தில் போய் விழுந்து உயர்விட வேண்டிய சூழ்நிலைதான் உண்டாகும். எண்ணிக்கையிலடங்காத பக்தர்களின் பாதச்சுவடுகள் பதிந்த ஒற்றையடிப்பாதை வழியாக அவர்கள் கீழ்நோக்கி இறங்கினார்கள். ஹரித்துவாரின் கட்டடங்கள் இங்கிருந்து நன்றாகத் தெரிந்தன. தூரத்தில் உச்சி வெயிலில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதி... மரங்களுக்கப்பால் அது வெயிலில் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.
“ஒண்ணு, ரெண்டு, மூணு...”
படிகளில் இறங்கும்போது சுஜா எண்ணத் தொடங்கினாள்.
கடைசி படியில் இறங்கி அவள் பாதையில் நடந்தபோது ஒரு பரிதாபமான குரல் கேட்டது.
“பிள்ளைகளே...”
அவர்கள் முன்பு பார்த்த வயதான கிழவிதான். பாதையோரத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் கிழவி அவர்களை நெருங்கி வந்தாள்.,
“தேவிக்கு பூக்களைக் கொடுத்தாச்சா பிள்ளைகளே!”
முணுமுணுக்கும் பலவீனமான, நடுங்கும் குரல்.
“ஆமா, அம்மா.”