கள்ளன் பவித்ரன் - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
அவளின் கருமையான கண்களின் பிரகாசத்தையும் மேலுதடும் கீழுதடும் சிரிக்கும் போது ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும் அழகையும் பார்த்து பல நேரங்களில் தன்னையே இழந்துவிட்டிருக்கிறான் பவித்ரன். அவள் சீச்கிரம் பெரிய பெண்ணாக வளர்ந்து, அதைத்தான் பார்ப்பதற்கான தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் தமயந்தியை விட்டுப் பிரிந்தபிறகு அவன் மனதில் மிகப்பெரிய இழப்பு என்று நினைத்ததே இனிமேல் பாமினியின் படிப்படியான வளர்ச்சியை தன்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்பதுதான். மாமச்சனைப் பற்றி அவன் மனதின் அடித்தளத்தில் மறைந்திருந்த சந்தேகம் கலந்த பொறாமைக்குப் பின்னாலிருந்த சிந்தனை கூட பாமினியைக் குறித்துத்தான்.
பாமினியின் வரவும் அவள் நடந்து கொண்ட விதமும் பவித்ரனின் உஷ்ணமயமான வாழ்க்கையில் குளிர்ச்சியை உண்டாக்கியதென்னவோ உண்மை. தன்னை விட்டு முழுமையாகப் போய்விட்டது என்று நினைத்திருந்த ஒரு விஷயம் தனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வைப் பெற்று மகிழ்ந்தான் பவித்ரன்.
ஒரு வேளை என்றோ தன் மனதிற்குள் பாமினியைப் பற்றி குடிகொண்ட ஆசையின் கீற்று இப்போது அவளிடமும் தன்னைப் பற்றி உண்டாகியிருக்கலாம் அல்லவா என்று அவன் எண்ணினான். அதை வெளிக்காட்டிக் கொள்வதற்காக அவள் ஏன் வந்திருக்கக்கூடாது என்றும் அவன் நினைத்தான்.
தன் கணவன் மனதில் என்னவோ சலனம் உண்டாகியிருக்கிறது என்பதை உறக்கம் வராமல் அவன் இப்படியும் அப்படியுமாக புரண்டு கொண்டு இருந்ததிலிருந்தே ஜானகி புரிந்து கொண்டாள். வியாபார விஷயமாக ஏதோ சில பிரச்சினைகளைப் பற்றி அவன் மனம் அசை போட்டுக் கொண்டிருக்கலாம் என்று அந்த அப்பாவிப் பெண் எண்ணினாள். குறிப்பிட்ட வயதைத் தாண்டிய இந்த நேரத்தில் தன் கணவன் ஒரு சிறு பெண்ணைப் பற்றி மனதில் நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பான் என்று அவள் எப்படி எண்ண முடியும்?
எது எப்படியோ பவித்ரன் தூங்காமல் இருக்கும் நிலையில் தான் தூங்கினால் நன்றாக இருக்காது என்றெண்ணி தூங்காமல் படுத்திருந்தாள் அந்த நல்ல மனைவி. பிரச்சினைகளால் குழம்பிப் போன மனதுடன் கணவன் உறக்கம் வராமல் படுத்திருக்கும்போது, பொறுப்புணர்வு கொண்ட ஒரு மனைவி அருகில் எப்படி குறட்டை விட்டுக் கொண்டு தூங்க முடியும்?
அன்று இரவு தமயந்தியும் ஒரு பொட்டு கூட தூங்கவில்லை. எல்லாம் பொறுப்புணர்வால் வந்தது. அவள் மனதில் பல்வேறு வகையான கணக்குக் கூட்டல்கள் நடந்து கொண்டிருந்தன.
பாமினி மீது பவித்ரனுக்கு ஏற்கெனவே ஒருகண் உண்டு என்பதை தமயந்தி நன்றாகவே அறிவாள். அந்தப் புரிதல்தான் அவளின் கணக்குக் கூட்டல்களின் அடித்தளம்.
13
எது எப்படியோ மறுநாள் அதே நேரம் பார்த்து தன்னுடைய காரை அனுப்பி வைத்து பாமினியை வரவழைத்தான் பவித்ரன். தன்னுடைய செயலைப் பார்த்து டிரைவர் குருப்பிற்கு எந்தவிதமான சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சில விளக்கங்களையும் அவனே சொன்னான். "நேத்து எதுக்காக அவ இங்க வந்தாங்கிறதை தெரிஞ்சுக்கணும் குருப்பு. சந்தேகப்பட வேண்டிய ஆளுங்கதான். அதனாலதான்..."
"கார்ல ஏற மாட்டேன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சுன்னா?"- குருப்புக்குத் தெரிந்து கொள்ள வேண்டியது அது ஒன்றுதான். பல வருடங்கள் டிரைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் என்ற முறையில் வண்டியில் ஏறுபவர்களைப் பற்றியும், அவர்களை யார் ஏற்றுகிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் அவனுக்கு பொதுவாக ஆர்வமே இருந்தது இல்லை.
"ஏறுவா..."-பவித்ரனுக்கு இந்த விஷயத்தில் ஒரு உறுதியான நம்பிக்கை இருந்தது. அவன் போட்ட கணக்கு தப்பாகவில்லை.
பாமினி டுட்டோரியலிலிருந்து திரும்பி வரும் வழியில் முதல் நாள் நிறுத்தியிருந்த அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவளுக்காக காத்திருந்தான் குருப்பு. முதலில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அவள் நடந்து சென்றாலும், குருப்பு விஷயத்தைச் சொன்னதும் பாமினி மகிழ்ச்சியுடன் காரில் ஏறவே செய்தாள். காரில் ஏறுவதற்கு முன்பு தன்னுடனிருந்த தோழிகளைப் பார்த்து "அண்ணன் என்னை வரச்சொல்லி இருக்காரு" என்று சொல்வதற்கு அவள் எந்தவித தயக்கத்தையும் காட்டவில்லை.
தூரத்தில் கார் வருவதைப் பார்த்ததும், புளியமரத்திற்குக் கீழே உட்கார்ந்திருந்த பவித்ரன் எழுந்து உள்ளே சென்றான். அவன் இதயம் அப்போது படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பாமினியின் நெற்றியில் வியர்வை கலப்பில் தெரிந்த சிவப்பு குங்குமத்தைப் பார்த்ததும், இதயத்துடிப்பு மேலும் அதிகமாகியது.
எதற்காக தன்னை அவன் அங்கு வரவழைத்தான் என்பதை உணர்ச்சிவசப்பட்டு கேட்டாள் பாமினி. அதற்கு பதில் சொல்லும் விதத்தில் அவன் காரின் பின்கதவைத் திறந்து, அவளுக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்தான்.
அதற்கு மேல் எதுவும் கேட்காமல் குருப்பு காரை ஸ்டார்ட் செய்தான்.
சிறிது தூரம் கார் சென்றதும் தன்னுடைய இதயத்துடிப்பு சாதாரணமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்ட பவித்ரன் சொன்னான். "இப்போ நாம நகரத்துக்குப் போறோம்."
"அப்படியா?"- பாமினி பயத்துடன் உதட்டில் விரல் வைத்தாள்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேரும்போது மனிதனின் மனம் பலவிதப்பட்ட குறுக்கு எண்ணங்களுடன் செயல்படுவது என்பது உலக நடப்பு ஆயிற்றே! திருடன் பவித்ரனின் வாழ்க்கையிலும் அதுதான் நடைபெற்றது. பணக்காரனாக ஆனபிறகு அவனுடைய மனதிலும் உலகத்திலுள்ள மற்ற புதுப் பணக்காரர்களின் மனதில் உள்ளதைப் போல கீழ்த்தரமான எண்ணங்கள் குடிகொள்ள ஆரம்பித்தன. அவற்றில் ஒன்றுதான் அழகாக இருக்கும் ஒரு இளம்பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு போய் அவளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பது. ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த சமயத்தில்தான் பாமினி அவனைத் தேடி வந்தாள். தான் ஒரு கொடுத்து வைத்த மனிதன் என்று பவித்ரனே நினைத்த இரண்டாவது சந்தர்ப்பம், நகரத்திற்கு அவளைத் தான் அழைத்துப் போவதாகச் சொன்னபோது அதற்குச் சிறிதுகூட எதிர்ப்பு சொல்லாமல் பாமினி தன் அருகில் அமைதியாக அமர்ந்திருந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், தங்கச்சிலை தனக்குக் கிடைத்ததைவிட மிகப்பெரிய அதிர்ஷ்டம் இதுதான் என்று கூட அவன் மனம் நினைக்கத் தொடங்கியது.
ஆனால், மனிதன் தன் மனதில் கணக்குப் போடுவது மாதிரி எல்லா விஷயங்களும் நடக்கும் என்று கூற முடியாது அல்லவா? பவித்ரன் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவன் நினைத்திருந்த மாதிரி சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கவில்லை.
அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம் மனதில் இருக்கும் ஆசையைச் செயல் வடிவில் கொண்டு வருவதற்கு பவித்ரனுக்கு சில தயக்கங்கள் இருந்தன.