கள்ளன் பவித்ரன் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
அவரின் நெற்றியிலிருந்த ஒரு நரம்பு துடிப்பதை பவித்ரன் கவனித்தான்.
"ஐம்பது ரூபா தர்றேன்"- அமைதியைக் கலைத்துக் கொண்டு கடைசியில் வியாபாரி சொன்னார்.
பவித்ரனுக்கு அதைக் கேட்டு நாக்கே வாயில் ஒட்டிக் கொண்டது போலாகிவிட்டது. ஐம்பதாயிரம் ரூபாய்...
மீண்டும் சுய உணர்விற்கு வந்த திருடன் பவித்ரன் சொன்னான்.
"அவ்வளவுதான் முடியும்னா..." அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
"சரி... எழுபத்தஞ்சு வச்சுக்கோ"- பவித்ரன் சிலைக்கான விலையைப் பற்றி பேரம் பேச ஆரம்பிக்கிறான் என்பதாகப் புரிந்து கொண்ட வியாபாரி அடுத்த நிமிடம் சொன்னார்.
அதைக் கேட்டு பவித்ரனின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நீர் கோர்த்திருந்ததால் மங்கலாகத் தெரிந்த பார்வைக்கு அப்பால் வியாபாரியின் கழுத்துக்கு மேலே இருந்த தலை சந்திரனைப் போல பிரகாசமாகத் தெரிந்தது பவித்ரனுக்கு.
"வியாபாரத்தை முடிச்சிக்குவோமா?"- வியாபாரி கேட்டார்.
"தாராளமா..."- கைகளால் தொழுதவாறு சொன்னான் பவித்ரன்.
11
அரசாங்கத்தின் இலட்சம் வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் இன்னும் வசித்துக் கொண்டிருக்காமல் வேறு ஏதாவது நல்ல வீடு பார்த்து போய் இருக்கும்படி பலரும் பவித்ரனுக்கு ஆலோசனை சொன்னார்கள். அரசாங்கம் இலவசமாகத் தந்த வீட்டில் இனிமேலும் இருப்பது அவனுக்குப் பொருந்தாத ஒரு விஷயம் என்பதையும், அவனுடைய தற்போதைய உயர்ந்த நிலைக்கும் அந்தஸ்துக்கும் அந்த வீட்டில் வசிப்பது கவுரவக் குறைச்சலான ஒன்று என்பதையும் அவர்கள் பலமுறை அவனிடம் சொன்னார்கள்.
அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தாலும், பவித்ரன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை என்பதே உண்மை. தன்னுடைய இப்போதைய வசதிக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது தன்னுடைய சிறு வீட்டில் தான் வாழ்ந்த வாழ்வுதான் என்பதை அவன் முழுமையாக நம்பினான். புதிதாக ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவும் மேஜை விசிறியும் வாங்கிவைத்து வீட்டுக்கு அழகு சேர்த்தான்.
வாசலில் பூச்செடிகளும் குரைப்பதற்கு ஒரு நாயும் வந்து சேர்ந்தவுடன் அந்தக் குடியிருப்பிலேயே பவித்ரனின் வீடு தனியாகத் தெரிய ஆரம்பித்தது.
வியாபார விஷயங்களில் ஒரு கண்டிப்பான மனிதனாக நடந்தான் பவித்ரன். 'சிறு சிறு திருட்டுக்கள் பண்ணும்போது பதுங்கியும் மறைந்தும் நடந்து கொண்டிருந்த பழைய திருடன் பவித்ரனா இந்த அளவிற்கு புத்திசாலித்தனத்துடனும் காரியத்தில் கண் உள்ளவனாகவும் நடப்பது' என்று எல்லோருமே ஆச்சரியப்பட்டுப் பார்த்தார்கள். ஜானகியே நெல் அரைக்க வந்தாலோ, அரிசி மாவரைக்க வந்தாலோ அதற்கான கூலியைச் சரியாகத் தர வேண்டும் என்று கறாராகச் சொன்ன பவித்ரனை எல்லாப் பெண்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ கடன் சொன்னாள் என்பதற்காக தன்னுடைய சொந்த மனைவியின் கூடையை பவித்ரன் கணேசனிடம் சொல்லி பிடித்து வைத்துக் கொண்டான் என்ற விஷயம் தெரிய வந்த போது எல்லோரும் அவனை ஒரு மகிழ்ச்சி கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
பவித்ரனின் இந்த உயர்வைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்து போனவர் மாமச்சன்தான். அவரின் மில் பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. அவரின் வருமானம் படிப்படியாகக் குறைந்தது. எல்லோரும் தன்னை ஒரு தவறான மனிதன் என்ற எண்ணத்துடன் பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரின் மனம் மிகவும் கவலைப்பட்டது. அந்தக் கவலை காரணமாக அவரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவரின் கன்னங்களில் குழிவிழ ஆரம்பித்தது. கண்களில் முன்பிருந்த பிரகாசம் போய்விட்டது. இருந்தாலும் தன்னால் வேறு எதுவும் செய்ய முடியாததால், தினந்தோறும் காலை நேரம் வந்துவிட்டால் தவறாமல் மில்லுக்கு அவர் வந்துவிடுவார். அவரைத் தேடி அங்கு யாரும் வரவில்லையென்றாலும், எல்லா நாட்களிலும் அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இயந்திரத்தை இயங்கச் செய்வார். சிறுது நேரம் ஓடிய பிறகு அதை நிறுத்திவிட்டு, அவர் வெறுமனே மில்லின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருப்பார். திருடன் பவித்ரனை எப்படி மண்ணைக் கவ்வ வைப்பது என்ற ஒரே விஷயத்தைப் பற்றி அவர் மனம் சதாநேரமும் சிந்தித்தபடியே இருக்கும். பவித்ரனை வீழ்ச்சியடையச் செய்வதற்கு தனக்கு ஒரு வழி கிடைக்காமல் போகாது என்று உறுதியாக நம்பினார் அவர்.
பணமும் வருமானமும் குறைந்து போனாலும் தமயந்திக்கு மாமச்சனிடம் உள்ள அன்பு சிறிதும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாமச்சனின் இப்போதைய வீழ்ச்சிக்கு தான்தான் காரணம் என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.
"ஒரு நாளு நாம எல்லாத்தையும் பார்க்கத்தானே போறோம்! இருக்குற எல்லாமே காணாமப் போகப் போகுது"- அவள் மாமச்சனை சமாதானப்படுத்தும் விதமாகச் சொன்னாள். "திருடின பணம் எப்படி நிரந்தரமா ஒரு ஆளுக்கிட்ட தங்கி நிற்கும்? வந்தது போலவே ஒருநாளு அது போகத்தான் போகுது."
தமயந்தி சொன்ன வார்த்தைகள் மாமச்சனின் மனதிற்கு அப்போதைக்கு இதமாகத் தோன்றினாலும், பவித்ரன் முழுமையாக வீழ்ச்சியடைந்து கீழேவிழும் நாள்வரை காத்திருக்கும் பொறுமை அவருக்கு இல்லை. தான் இப்படி வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதையும், உடனடியாக ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் நல்லதாக இருக்கும் என்று மாமச்சன் மனதிற்குள் சிந்தித்தார். எதுவும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கும் போது, அவரின் மூளையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனைகள் தோன்றி அலைமோதிக் கொண்டிருந்தன. பவித்ரனின் மில்லுக்கு நெருப்பு வைக்க வேண்டும்- பலவித சித்து வேலைகளைக் கற்று வைத்திருக்கும் ஏதாவதொரு மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வந்து பவித்ரனுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும்- இப்படியெல்லாம் பலவகைகளிலும் அவன் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இப்படிப்பட்ட மோசமான செயல்களில் ஈடுபடுவதற்கான மன தைரியம் தனக்கு இல்லை என்பதையும் அவர் அறியாமலில்லை.
மாமச்சனின் குடும்ப உறவுகள் இந்த இடைப்பட்ட காலத்தில் அடியோடு தகர்ந்து போய் விட்டிருந்தன. இந்த வயதான காலத்தில் தன்னுடைய தந்தை தமயந்தி என்கிற ஒரு கீழ்த்தரமான பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டு வாழ்வது அவரின் மகளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவள் மில்லிற்கு நேரடியாகச் சென்று மாமச்சனுடன் இந்த விஷயத்திற்காக ஒரு பெரிய சண்டையே போட்டாள். இனிமேல் தனக்கு தந்தை என்று யாருமில்லை என்று கோபமாகச் சொன்ன அவள் மில்லை விட்டு இறங்கிப் போனவள்தான், இந்த நிமிடம் வரை அவள் அவரைத் தேடி இந்தப் பக்கம் வந்ததேயில்லை. இந்த உலகத்தில் தனக்குச் சொந்தமென்றிருந்த ஒரே ஒரு உறவும் மாமச்சனுக்கு இல்லை என்று ஆகிவிட்டது.