கள்ளன் பவித்ரன் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
தனியாக அமர்ந்திருக்கும்போது தன்னுடைய மகள் தனக்கு இல்லாமற் போனதைக் குறித்த வருத்தம் மாமச்சனின் மனதிற்குள் அவ்வப்போது உண்டாகுமென்றாலும், முடிந்தவரை அந்தக் கவலை இல்லாத அளவிற்கு தமயந்தி பார்த்துக் கொண்டாள்.
"போறவங்க போகட்டும்..."- தமயந்தி மாமச்சனுக்கு ஆறுதல் கூறுகிற வகையில் சொன்னாள்."அப்பன் தனியா கிடந்து சாகட்டும்னு ஆசைப்படுகிற மகள் என்ன மகள்! போறதுன்னா அவ போகட்டுமே!"
"யாரு போனாலும் வந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலையே இல்ல..."- பொறுக்க முடியாமல் மாமச்சன் சொன்னார். "அந்தச் சனியன் தலை குப்புற விழுறதை நான் பார்க்கணும். அது ஒண்ணுதான் எனக்கு வேணும்."
"அதைப் பற்றி நீங்க ஏன் உட்கார்ந்து கவலைப்படணும்?" -தமயந்தி சொன்னாள். "அந்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்."
தமயந்தியின் குரலில் அசாதாரணமான தன்னம்பிக்கையும் உறுதியும் வெளிப்படுவதை மாமச்சனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை வேண்டுமென்றே உசுப்பேற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அவர் கேட்டார்.
"ஆமா... நீ என்னத்தைப் பார்க்கப் போற?"
"அது உங்களுக்குத் தெரிய வேண்டாம்"- தன்னம்பிக்கை வெளிப்படுகிற ஒரு புன்சிரிப்பு தோன்றி தமயந்தியின் முகத்திற்கு அது மேலும் மெருகு சேர்த்தது. மாமச்சனுக்கு அதைப் பார்த்தபோது, மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உண்டானது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மாமச்சன் அன்று இரவு எந்தவிதமான கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினார். ஆனால், தமயந்திக்கோ சிறிது கூட உறக்கம் வரவில்லை. பவித்ரன் வாழ்க்கையில் எப்படி வசதி படைத்த மனிதனாக வளர்ந்தான் என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். அந்த உண்மையை மட்டும் தான் கண்டுபிடித்து விட்டால் மாமச்சனின் மனம் தன்னைவிட்டு எப்போதுமே நீங்காது என்பதையும் அவள் நன்றாக அறிந்தே இருந்தாள்.
குறைந்த காலமே பவித்ரனுடன் தான் வாழ்ந்தாலும், அவனுடைய பலம் என்ன என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தாள் தமயந்தி. முன்பிருந்த பவித்ரன் இல்லை இப்போதிருக்கும் பவித்ரன் என்பதையும் அவள் அறியாமலில்லை. மந்திரசக்தியால் என்று கூறுவதைப் போல குறுகிய காலத்திற்குள் மளமளவென்று வளர்ந்திருக்கும் பவித்ரனைப் பற்றி நினைக்கும் போது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. சிறு சிறு திருட்டுகளைச் செய்து கொண்டு, மது அருந்தியும் மது அருந்தாமலும் தெருக்களில் சுற்றி கொண்டிருந்த பழைய பவித்ரன்தான் இப்போது நல்ல வசதி படைத்த மனிதனாகவும், எல்லோருக்கும் தெரிந்த முக்கிய நபராகவும் இருக்கும் பவித்ரன் என்பதை உண்மையாகவே அவளால் நம்ப முடியவில்லை. அவள் எங்கு போனாலும் பவித்ரனின் வளர்ச்சி பற்றி பொறாமை இழையோடிய ஆச்சரியம் ததும்பும் கதைகள்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. குளிக்கும் இடத்திலும், கடைவீதியிலும், வயல்களிலும் கண்ணில் காணும் ஒவ்வொருவரும் பவித்ரனைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கக் கேட்க அவனை தான் இழந்திருக்கக் கூடாதோ என்று அவள் நினைக்க ஆரம்பித்துவிட்டாள்.
இடையில் ஒருநாள் அவள் பவித்ரனைப் பார்த்தாள். மில்லின் முன்னால் ஒரு சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, அவன் திருட்டுத்தனமான ஒரு புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான். அவள் அதைப் பார்க்காதது மாதிரி நடந்து போனாள். பின்பொரு முறை, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வாடகைக் காரின் பின்னிருக்கையில் சாய்ந்தவாறு உட்கார்ந்து அவன் போவதை அவள் பார்த்தாள். அவளைப் பார்த்ததும், பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தவாறு அவன் போய்க் கொண்டிருந்தான். அப்போதும் அவனுடைய உதட்டில் ஒரு கிண்டல் கலந்த புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டு இருப்பதை அவள் பார்த்தாள். தனக்குத் தெரிந்த பெண்கள் சொல்லித்தான் அவளுக்கே தெரியும். அந்த வாடகைக் காரை சமீபத்தில் பவித்ரன் சொந்தமாக வாங்கியிருக்கும் விஷயம். பஸ் நிலையத்திற்கு அருகில்தான் அந்த வாடகைக்கார் எப்போதும் நின்றிருக்கும். ட்ரான்ஸ்போர்ட் பஸ் ஓட்டிக் கொண்டிருந்த வேலாயுதகுருப்புதான் இப்போது அந்தக் காரின் ஓட்டுநர்.
பவித்ரனின் அடுத்த திட்டம் ஊரில் ஒரு திரைப்பட அரங்கு கட்டுவதுதான் என்று பரவலாக ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
இதுவரை நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது அப்படியொரு காரியம் நடக்காமல் இருக்க வழியில்லை என்றே நினைத்தாள் தமயந்தி.
யார் பணக்காரனானாலும் அதைப் பற்றி தமயந்திக்கு ஒன்றுமில்லை. பணம் வரும், போகும். அதைப் பற்றி பொதுவாக அவள் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
மாமச்சனின் மனதில் இருக்கும் கவலையை முழுமையாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவளின் எண்ணமாக இருந்தது. அந்த மனக்கவலை சீக்கிரம் மாறவில்லையென்றால் அந்த மனிதர் அந்தக் கவலைகளிலேயே உழன்று உழன்று ஒருநாள் செத்துப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அவள் நினைத்தாள்.
இது ஒரு புறமிருக்க, அவளுக்கு மாமச்சனை மிகவும் பிடித்திருந்தது என்ற உண்மையையும் நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
12
இரண்டு நாட்கள் கழித்து ஒரு பகல் பொழுது. கடுமையான வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வெப்பக்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பவித்ரன் மில்லின் வாசலில் இருந்த ஒரு புளியமரத்திற்கு அடியில் ஒரு பெஞ்சைப் போட்டு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். மதிய நேரமாக இருந்ததால் மில்லில் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள். காலை முதல் இடைவிடாது ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் அப்போதுதான் சற்று ஓய்வெடுக்கும். மதிய உணவு முடிந்த பிறகு, கணேசன் இலேசாக கண் அயர்வது அப்போதுதான். பவித்ரன் பொதுவாக வீட்டிற்குப் போய் மதிய உணவு சாப்பிடுவதில்லை. அவன் பிள்ளைகளில் யாராவது சாப்பாடு கொண்டு வந்து தருவார்கள். சில நேரங்களில் ஜானகியும் அவர்களுடன் வருவதுண்டு.
சிறிதும் எதிர்பார்த்திராத சம்பவங்கள் தன்னுடைய வாழ்க்கையில் உண்டாக்கிய மாற்றங்களைப் பற்றி அசைபோட்டவாறு பாதி தூக்கத்தில் இருந்த பவித்ரன், சாலையில் ஒரு கார் வந்து நிற்கிற சத்தத்தைக் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தான்.
சாலையில் நின்றிருந்தது பவித்ரனின் கார்தான். டிரைவர் காரை விட்டு இறங்கி வேகமாக பவித்ரனை நோக்கி வந்தான். காரின் பின்னிருக்கையில் யாரோ அமர்ந்திருந்தார்கள். யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பவித்ரன் பார்க்கவில்லை. வாடகைக் கார்தானே. யார் வேண்டுமானாலும் காரில் ஏறுவார்கள், உட்காருவார்கள் நாம் ஏன் அதைப் பார்க்க வேண்டும் என்று சாதாரணமாக இருந்துவிட்டான்.
தன் முன்னால் வந்து நின்ற டிரைவர் வேலாயுதகுருப்பின் முகத்தில் ஏதோ நிழலாடுவதை பவித்ரன் உணர்ந்தான். அவன் என்னவோ தன்னிடம் சொல்லத் தயங்குவதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.