கள்ளன் பவித்ரன் - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7137
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் பாத்திரங்களைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் வேறு ஏதாவது பாத்திரங்களையோ சிலைகளையோ அங்கிருந்து எடுக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை என்பதுதான். தன்னுடைய நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவான அறிவுடன் இருக்கும் பவித்ரன் அப்படி எந்தப் பொருட்களையும் திருடாமல் இருந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!
அந்தப் பாத்திரங்களை எப்படியாவது எடுத்துவிட்டால் யாருடைய தொந்தரவும் இல்லாமல் பாமினியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாமே என்ற சிந்தனை அவனின் தேடலுக்கு உந்து சக்தியாகவும், பலமாகவும் இருந்தது. மாமச்சனைப் பற்றி கவலைப்படாமல் பாமினி தன்னிடம் வந்திருந்தால், இந்த தேடலுக்கு அவசியமே இல்லை. இருந்தாலும், அதற்கு அவள் தயாராக இல்லாத போது, பவித்ரனுக்கு இதை செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாமல் போய்விட்டது.
16
ஐந்து மாதங்கள் கழிந்து ஒரு நாள் பவித்ரனின் கார் பாமினி படிக்கும் டுட்டோரியல் அருகில் வந்து நின்றது.
பாமினி அப்போது வகுப்பில் இருந்தாள். வெளியே காரின் ஓசை கேட்டதும் அவளுக்கு வெளியே வந்திருக்கும் கார் யாருடையது என்பது புரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவளின் இதயம் படுவேகமாக அடிக்கத் தொடங்கியது.
ப்ரின்ஸிப்பால் ஆளை விட்டு அனுப்பி பாமினியை வகுப்பறையை விட்டு வெளியே வர வைத்தார்.
எதிர்பார்த்ததைப் போல் வெளியே பவித்ரன் இருப்பதைப் பார்த்ததும், அவள் மனதில் ஒருவித பரபரப்பு உண்டானது. அதே நேரத்தில் டிரைவர் குருப்பின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் கம்பீர வெளிப்பாட்டையும் பார்த்ததும் அவளிடமிருந்து பரபரப்பு இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து கொண்டது.
குருப்பு மிகவும் ஆர்வமாக நின்றிருப்பதைப் போலிருந்தது. தன்னுடைய முதலாளியின் சந்தோஷத்தையும், கவலையையும் அந்தந்த சூழ்நிலைக்கேற்றபடி தன்னிடமும் ஏற்றுக் கொண்டு அதை முகத்தில் வெளிப்படுத்தும் அவன் குணம் உண்மையிலேயே யாரையும் ஆச்சரியப்பட வைக்கக்கூடிய ஒன்றுதான். "வா... குழந்தை..."- குருப்பு காரைக் கண்களால் காட்டியவாறு அவளை அழைத்தான். "உடனே உன்னை அழைச்சிட்டு வரணும்னு சார் சொல்லி அனுப்பினாரு."
பவித்ரன் அந்தப் பாத்திரங்களை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் என்பதை அந்த நிமிடத்தில் பாமினி புரிந்துகொண்டாள். தனக்கு உண்டான மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் சொன்னாள்.
"குருப்பு அண்ணே... நீங்க போங்க. வகுப்பு முடிஞ்சதும், நான் அங்கே வர்றேன்."
அது சரியாக வராதென்றும், உடனே அவள் தன்னுடன் வந்தால்தான் சரியாக இருக்குமென்றும் பிடிவாதமாகச் சொன்னான் குருப்பு, பாமினி அதை ஒப்புக் கொள்ளவில்லை. வகுப்பறையிலிருந்து நேராக வெளியே வந்து பவித்ரனின் காரில் தான் ஏறினால் அது பலவிதப்பட்ட பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்குமென்றும் தேவையில்லாத அவப்பெயருக்கு இந்தச் சம்பவமும் ஒரு மூல காரணமாக இருந்து விடுமென்றும் அவள் அவனிடம் விளக்கமாகச் சொன்னாள். அதனால் எந்தவித காரணத்தைக் கொண்டும் தான் இப்போது காரில் ஏறிவர முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள் பாமினி.
குருப்பு ஏமாற்றத்துடன் திரும்பினான்.
சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத்குரிக்கரும், இரண்டு போலீஸ்காரர்களும் சேர்ந்துதான் திருடுபோன அந்தப் பாத்திரங்களைக் கைப்பற்றியது. அவர்கள் அதற்காக பெரிய தேடுதல் வேட்டை எதையும் நடத்தவில்லை. மில்லுக்குள் பவித்ரனின் தனியறையிலிருந்த மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தன, அந்தப் பழைய அண்டாவும் கிண்டியும் குடமும்.
பணமும் புகழும் வந்து சேர்ந்த பிறகு தன்னைச் சரியாக பவித்ரன் கவனிக்கவில்லை, மரியாதை செலுத்தவில்லை என்ற மனக்குறை அவன் மீது குரிக்களுக்கு இயற்கையாகவே இருந்தது.
தன்னுடைய காணாமல் போன பாத்திரங்களை வாங்குவதற்காக வந்து நின்ற மாமச்சனின் முகத்தில் பழைய பிரகாசமும், உற்சாகமும் திரண்டு காணப்பட்டன. பாத்திரங்களின் வெளிப்பகுதியில் தன்னுடைய பெயரின் முதல் எழுத்துக்கள் அடையாளமாக இருந்ததை மாமச்சன் காட்டினார். அடிக்கொரு தரம் ஒரு வெற்றி வீரனைப் போல அவர் பவித்ரனை கடைக்கண்களால் பார்க்கவும் தவறவில்லை.
பவித்ரன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். மக்கள் மத்தியில் தன்னை மீண்டும் 'திருடன் பவித்ரன்' என்ற அடையாளத்துடன் நிற்கும்படி செய்த பயங்கரமான சதிவேலைகளை அவன் மனம் அப்போது அசை போட்டுக் கொண்டிருந்தது.
கணவனைத் தெய்வமாக வழிபடும் பத்தினிப் பெண்ணான தன்னுடைய மனைவி இருக்க, கண்ணில் கண்ட விலை மாதுக்கள் மீது தான் ஆசை வைத்ததற்கு தனக்குச் சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்று அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். யாரையும், குறிப்பாக பெண்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் அவ்வளவு எளிதில் நம்பிவிடக்கூடாது என்ற பாடம் அவனுக்கு இந்தச் சம்பவங்களின் மூலம் கிடைத்தது.
மில்லில் இருந்து கைவிலங்கு போட்டுத்தான் பவித்ரனை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்றார்கள். தேய்ந்து மறைந்து போய்விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த ஒரு திருட்டு வழக்கை மீண்டும் உயிர்ப்பித்து உண்மையைக் கண்டுபிடித்த மிடுக்குடன் இருந்தார் சப்இன்ஸ்பெக்டர் கோபிநாத் குரிக்கள்.
ஊர்க்காரர்கள் சிலரும் சிறுவர்களும் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்ப்பதற்காக பவித்ரனுக்குப் பின்னால் நின்றிருந்தார்கள். அவர்கள் 'கலபில'வென்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் பவித்ரனின் வளர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம் ஊர் முழுக்க எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயமாக ஆனது. பவித்ரனுக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள் வியாபாரியின் கடையைப் பற்றியும் அங்கிருக்கும் ரகசிய கதவைப் பற்றியும் பரபரப்பாய் பேசினார்கள்.
வியாபாரியின் கடை எங்கு இருக்கிறது என்பதை பாமினியிடம் தான் சொல்லாமல் விட்டது உண்மையிலேயேதான் செய்த புத்திசாலித்தனமான காரியம் என்பதைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தான் பவித்ரன். சிறையிலிருந்து திரும்பி வந்தவுடன் தான் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றி அவன் தன்னுடைய மனதில் தெளிவாக திட்டம் தீட்டி வைத்திருந்தான்.
கூடியிருந்த ஊர்க்காரர்கள் மத்தியில் யாராவது தன்னை 'திருடன் பவித்ரா' என்று அழைக்கிறார்களா என்பதைக் கவனித்தவாறு நடந்தான் திருடன் பவித்ரன்.