கள்ளன் பவித்ரன் - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
அவளுடைய கவலைக்கும் பதைபதைப்பிற்கும் மனமாற்றத்திற்கும் காரணம் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு அதற்கேற்றபடி தான் நடப்பதே சரியானது என்ற முடிவுக்கு பவித்ரன் வந்தான். அதனால் பாமினி அழுது முடிக்கும் வரை அவன் அவளுக்காக பொறுமையாகக் காத்திருந்தான். அதற்குப் பிறகு அவன் அவளைப் பார்த்து நிதானமாக கேள்விகளைக் கேட்டான். அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முற்பட்டான் அவன்.
ஹோட்டலறையில் தானும் பவித்ரனும் சென்றமுறை தங்கிய விஷயம் எப்படியோ தமயந்திக்குத் தெரிந்துவிட்டது என்றாள் பாமினி. அதைத் தொடர்ந்து வீட்டில் பயங்கர பூகம்பமே உண்டாகிவிட்டது என்றாள் அவள். மாமச்சன் எல்லோரையும் தீர்த்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்று வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு பாய்ந்து வந்ததாக அவள் சொன்னாள். ஆனால், அவரைத் தடுத்து நிறுத்தியது தான்தானென்றும், அங்கு நிலைமை ஒரு எல்லைக்குமேல் போனவுடன் தான் பவித்ரனுடன் சேர்ந்து வாழப்போவதாக அவர்களிடம் சொன்னதாகச் சொன்னாள் பாமினி. பவித்ரன் தன்னை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக தான் சொல்லியதாக அவள் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு தமயந்தி அடங்கிப் போய் விட்டாளாம். ஆனால், மாமச்சன் அதே நிலையில்தான் நின்றிருந்தாராம். கடைசியில் ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னதும், தான் அமைதியாக இருப்பதாக அவர் சொன்னாராம். தன்னுடைய வீட்டிலிருந்து முன்பு பவித்ரன் திருடிக் கொண்டு போன கிண்டி, அண்டா, குடம் மூன்றையும் அவன் மாமச்சனிடம் திருப்பித் தரவேண்டும் என்பதே அது. அப்படி பவித்ரன் அவற்றைத் திருப்பித் தந்தால், பாமினியை அவன் அழைத்துச் சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தலாமாம்.
"அந்தப் பாத்திரங்கள் திருடுபோன பிறகு அவர்கிட்ட இருந்த லட்சுமியே தன்னைவிட்டு போயிட்டதா அவர் நினைக்கறாரு. அதுதான் விஷயமே..."- பாமினி அழுகைக்கு மத்தியில் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். "இருந்துச்சுன்னா, அந்தப் பாத்திரங்களை அவர்கிட்டயே திரும்பக் கொடுத்திடுங்க, பவித்ரன் அண்ணே. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்னா அதைத் தவிர வேற வழியே இல்ல..."
பவித்ரன் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அந்த அண்டாவையும், கிண்டியையும், குடத்தையும் மீண்டும் எப்படி எடுப்பது என்பதைப் பற்றித்தான் அவனுடைய முழு சிந்தனையும் இருந்தது. மாமச்சன் வேறு எதைக் கேட்டாலும் எங்கிருந்தாவது கொண்டு வந்து தருவதற்கு அவன் தயாராக இருந்தான். ஆனால், இந்தப் பாத்திரங்களை எப்படி கொண்டு வந்து தருவது என்பதில் அவனுக்கே சந்தேகமாயிருந்தது.
"ம்... நான் முயற்சி பண்ணி பார்க்குறேன்"- அவன் பாதி மனதுடன் சொன்னான்.
"அண்ணே, நீங்க முயற்சி பண்ணினா கட்டாயம் அது நடக்கும்"- பாமினி அவனை உற்சாகப்படுத்தினாள். எப்படியாவது அந்தப் பழைய பாத்திரங்களை கண்டு பிடித்து மாமச்சனின் கையில் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் அதிகமாக இருப்பது தெரிந்தது.
நீதி, நேர்மை ஆகியவற்றைப் பார்ப்பவனும் கட்டுப்பாடு உள்ளவனுமான பவித்ரன் அன்று பாமினியைத் தொட வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. பாத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்த பிறகுதான் எல்லா விஷயங்களும் என்று அவன் தனக்குள் உறுதி எடுத்திருந்தான். தடுமாறும் குரலில் அவன் அதை பாமினியிடம் சொல்லவும் செய்தான். ஒரு வேளை இனிமேல் அவளை அவன் பார்க்க வேண்டிய நிலை வராமல் போனாலும் போகலாம் என்று சொன்னபோது அவன் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவர்கள் மீண்டும் சந்திப்பதாக இருந்தால், அதற்கு முன்பு அந்த காணாமல் போன அண்டாவும், கிண்டியும், குடமும் மாமச்சனின் கையில் நிச்சயம் போய் சேர்ந்திருக்கும்.
அடுத்த ஐந்து மாதங்களும் காணாமல் போன அந்தப் பாத்திரங்களைக் கண்டுபிடிக்கும் வேலையிலேயே செலவழித்தான் பவித்ரன். மில்லிலும், வீட்டிலும் அவனுடைய கவனம் குறைந்தது. அவனின் புதிய புதிய முயற்சிகளை எதிர்பார்த்துக் காத்திருந்த ஊர்க்காரர்கள், அவன் புதிதாக எதுவும் தொடங்காமல் இருக்கவே, பயங்கர ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயர் கிடைப்பதற்காக கடுமையாக உழைத்த பவித்ரன், திடீரென்று அமைதியாக இருப்பதுபோல் எல்லோருக்கும் தோன்றியது. எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத ஒரு மனிதனாக அவன் ஆனான்.
மில்லின் வாசலில் புளிமரத்திற்குக் கீழே பெஞ்சைப் போட்டுக் கொண்டு என்னவோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த பவித்ரனைப் பார்த்து ஊர்க்காரர்கள் பலரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் அவனைப் பற்றி தாங்களாகவே கற்பனை பண்ணி பல கதைகளையும் ஊரில் பரப்பினார்கள்.
மில்லில் இருந்து வரும் வருமானம் கணிசமாகக் குறைந்தது. கணேசன் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் பணத்தைத் திருடுகிறான் என்று பவித்ரனிடம் பலர் சொன்னார்கள். ஆனால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. எல்லா நாட்களிலும் சாயங்கால நேரம் வந்துவிட்டால் பவித்ரனின் கார் நகரத்திற்குப் போவதையும், பொழுது விடியும் நேரத்தில் அது திரும்பி வருவதையும் ஊர்க்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பகல் முழுவதும் மில்லின் ஏதாவதொரு மூலையிலோ புளியமரத்தடியிலோ பவித்ரன் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருப்பதையும் அவர்கள் பார்த்தார்கள்.
நகரத்தில் பவித்ரனுக்கு புதிதாக யாரோ ஒரு பெண்ணுடன் உறவு உண்டாகிவிட்டது என்றும், அதனால்தான் பாமினியை அவன் உதறியெறிந்துவிட்டான் என்றும் யாரோ ஒரு ஆள் ஒரு புதிய கதையை ஊரில் பரப்பிவிட்டான். சிலர் அந்தக் கதையை தமயந்தி வரை கொண்டு போனார்கள். அதைக் கேட்டு அவளுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக்கூட இருந்தது.
"அப்படின்னா என் தங்கச்சி தப்பிச்சா..."-தமயந்தி சொன்னாள். "என் வேலை குறைஞ்ச மாதிரியும் ஆச்சு."
பவித்ரன் எல்லா இரவுகளிலும் வியாபாரியின் கடைக்குள் இருந்தான் என்பது தான் உண்மை. அண்டாவும், கிண்டியும், குடமும் அந்தப் பாத்திரக் குவியல்களுக்குள்தான் எங்காவது இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினான் அவன். கடைக்குள் எங்கோ வேண்டுமென்றே வைத்துவிட்டு, அவற்றைத் திருப்பித் தரக்கூடாது என்பதற்காக கைமள் பொய் சொல்லியிருக்க வேண்டும் என்று பவித்ரனின் உள் மனது சொல்லிக் கொண்டிருந்தது. எப்படியும் அந்தப் பாத்திரங்களைத் திரும்ப எடுத்தே ஆக வேண்டும் என்று அவன் மனதிற்குள் முடிவெடுத்தான். அதனால் ஒரு திருடனுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பொறுமை குணத்துடன் அவன் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு இரவிலும் தான் பாத்திரங்களைத் தேடிய இடத்தை சாக்பீஸால் அடையாளமிட்டு வைத்தான். அடுத்தநாள் அந்த அடையாளத்திலிருந்து அவனின் தேடுதல் வேட்டை தொடரும்.