கள்ளன் பவித்ரன் - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
அதைக் கேட்டதும் பவித்ரன் ஒருமாதிரி ஆகிவிட்டான். அவள் முன்னால் தான் சிறுத்துப் போய் நிற்பது போல் அவன் உணர்ந்தான்.
"அப்பன் பேரு தெரியாத ஒரு குழந்தையைப் பெத்துக்க எனக்கு ஒண்ணும் தயக்கம் இல்ல. நான் யாரைப் பார்த்தும், ஏன் என் அக்காவைப் பார்த்துக் கூட பயப்படுறதுக்கு தயாரா இல்ல. ஆனா, என் குழந்தையோட அப்பன் ஒரு கள்ள நோட்டுக்காரன்னு சொன்னா அதை என்னால எப்படி சகிச்சிக்க முடியும்?"
அதைச் சொல்லிவிட்டு அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். தான் பணக்காரனாக ஆனது கள்ள நோட்டு அடித்ததன் மூலம் அல்ல என்ற உண்மையை பலமுறை பவித்ரன் திரும்பத் திரும்பச் சொல்லியும், அவள் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவன் சொல்வது எதையும் கேட்க தனக்கு ஆர்வமில்லை என்பதைப் போல அவள் உரத்த குரலில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
கடைசியில் அவளின் அழுகையை நிறுத்துவதற்காக பவித்ரன் தான் பணக்காரனாக ஆன கதையை, உண்மையான கதையை அவளிடம் விளக்கமாகச் சொன்னான். எதையும் அவன் மறைக்கவில்லை. எதையும் சொல்லாமல் விடவும் இல்லை.
கதையை முழுமையாக அவன் சொல்லி முடித்தவுடன், அவனையே உற்றுப் பார்த்தாள் பாமினி. அவளின் நனைந்து போன கன்னங்களிலும், சிவந்து போய் காணப்பட்ட மூக்குகளிலும், உதடுகளிலும் ஒரு புன்சிரிப்பு தவழ்வதை அவன் விருப்பம் மேலோங்க பார்த்தான்.
அடுத்த நிமிடம் அவள் அவனை முத்தமிட்டவாறு சொன்னாள். "செல்லத்திருடா!"
15
கதையின் எல்லா விஷயங்களையும் விளக்கமாக பாமினியிடம் சொன்ன புத்திசாலியான பவித்ரன் ஒரு விஷயத்தை மட்டும் அவளிடம் கூறாமல் மறைத்து விட்டான். வியாபாரியின் கடை எங்கிருக்கிறது என்ற விஷயத்தையும், எந்தத் தெருவில் அது இருக்கிறது என்பதையும் அவன் சொல்லாமலே இருந்துவிட்டான்.
ஹோட்டல் அறையை விட்டு திரும்பி வரும்போது கள்ளங்கபடமில்லாத குரலில் பாமினி அவனைப் பார்த்து கடை எங்கே இருக்கிறது என்ற விஷயத்தைக் கேட்கவே செய்தாள். பவித்ரன் அவளின் அந்தக் கேள்வியை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. "அதை இப்போ நீ தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?" என்று அவன் அவளைப் பார்த்து திரும்பக் கேட்டதும், அவள் பதிலே சொல்லாமல் அமைதியாக விட்டாள்.
அன்று இரவு இந்த விஷயத்தைப் பற்றி மாமச்சனுக்கும் தமயந்திக்குமிடையே ஒரு பெரிய சண்டையே உண்டாகிவிட்டது. கடை எங்கிருக்கிறது என்ற உண்மை தெரியாமல், தன்னால் பவித்ரனை ஒன்றுமே செய்ய முடியாது என்றார் மாமச்சன். அந்த விஷயம் மட்டும் தெரிந்தால் பவித்ரனுக்கு எதிராக தன்னால் எதாவது செய்ய முடியும் என்று உறுதியான குரலில் சொன்னார் அவர்.
தமயந்தி அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. "அதுனால எதுவும் ஆகப்போறது இல்ல"- அவள் சொன்னாள்.
"கடைசியில இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டு இருக்குற காக்காவோட கதைமாதிரி ஆயிடும். நீங்க கதவை உடைச்சு கடைக்குள்ள நுழைவீங்க. ஒரு வேளை பாம்பு கொத்தி நீங்க செத்தாலும் சாகலாம். அதுனால இப்ப இந்த விஷயமா எங்கேயும் போக வேண்டாம்."
விரக்தியின் எல்லைக்கே போய்விட்ட மாமச்சன் முழு உலகத்தையும் மனதிற்குள் சபித்தவாறு தூங்குவதற்காக படுத்தார். அடுத்த அறையில் அக்காவும் தங்கையும் பொழுது புலர்வது வரை குசுகுசுவென தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை அவர் கேட்டார். அவர்கள் அப்படி என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும், அந்த அளவுக்கு ரகசியத்தை பவித்ரனிடமிருந்து பாமினி பெற்று வந்ததற்காக மாமச்சன் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
பவித்ரனைப் பொறுத்தவரை பித்துப்பிடித்த மனிதனைப் போல அவன் இருந்த நாட்கள் அவை. பாமினி எப்போது தனக்கு அருகில் இருப்பாள் என்று சதாநேரமும் அவன் ஏங்கிக் கொண்டிருந்தான். இளம் மாமிசத்தின் ருசியை அறிந்த ஓநாயைப் போல அவன் மனதில் எப்போதும் 'காமத்தீ' எரிந்து கொண்டே இருந்தது.
அதே நேரத்தில், அவன் மனதில் இருந்த அந்த உணர்ச்சி மேலும் அதிகமாகக் கூடிய விதத்தில் நாட்கள் செல்லச் செல்ல பாமினி பவித்ரனை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தாள். பல நாட்கள் பாமினியை அழைத்து வருவதற்காகச் சென்ற டிரைவர் குருப்பு, அவள் இல்லாமல் வெறும் காருடன் திரும்பி வந்தான். அதைப் பார்த்ததும், பல வகைகளிலும் நினைக்க ஆரம்பித்துவிட்டான் பவித்ரன். தன்னைப் பார்ப்பதற்கும், தன்னுடைய காரில் ஏறுவதற்கும் பாமினி ஏன் தயங்க வேண்டும் என்பதற்கான காரணத்தை பலமுறை சிந்தித்துப் பார்த்தும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நாள் வருவது வரட்டும் என்று தீர்மானித்து டுட்டோரியலில் இருந்து பாமினி வருகிற வழியில் காருடன் போய் பவித்ரன் அவளுக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு பாமினி நடந்து போனாள். அதற்காக பவித்ரன் அவளை விட்டு விடவில்லை. அவளுடன் நடந்து சென்று சற்று அதிகார தோரணையில் அவளை அவன் அழைத்தான். "வாடி இங்கே..."
அவன் அப்படி அழைத்ததும் பாமினி நின்றாள். அவளுடன் இருந்த அவளின் தோழிகள் உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு நடந்து போனார்கள்.
பவித்ரன் காரைக் கொண்டு வரும்படி குருப்பைப் பார்த்து சைகை செய்தான். கார் வந்து நின்றதும் பதைபதைப்பு கலந்த ஒரு பார்வையுடன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பாமினி அதற்குள் ஏறி உட்கார்ந்தாள்.
இந்த முறை ஹோட்டலில் அறை எடுப்பதற்கு பவித்ரனைப் பொறுத்தவரை அவனுக்கு எந்தவிதமான தயக்கமோ படபடப்போ கிடையாது என்பதுதான் உண்மை. கவுண்ட்டரில் உட்கார்ந்திருந்த ஹோட்டலின் மேனேஜர் அவர்கள் இருவரையும் பார்த்ததும், ஏதோ இதற்கு முன்பு அறிமுகமானவர்களைப் போல ஒரு புன்சிரிப்பை உதட்டில் தவழவிட்டான். அதைப் பார்த்ததும் பவித்ரனுக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் வந்தது.
அறைக்குள் நுழைந்ததும் பவித்ரன் பாமினியைக் கட்டிப் பிடிப்பதற்காக முன்னால் வந்தான். பல நாட்கள் எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவனுடைய பொறுமையெல்லாம் முழுமையாகப் போய்விட்டிருந்தது. இருந்தாலும் அவனடைய பொறுமையின்மையையும், ஆவேசத்தையும் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நீட்டிய அவன் கைகளில் சிக்காமல் விலகிப் போய் நின்ற பாமினி சொன்னாள். "என்னைத் தொடாதீங்க."
அவள் அப்படிச் சொன்னதும் யாரோ தன்னை அறைந்ததைப் போல் உணர்ந்தான் பவித்ரன். அவர்கள் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்து அவள் இப்படியொரு வார்த்தையை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை என்பதை நினைத்துப் பார்த்த பவித்ரன் மனதளவில் தளர்ந்து போனான். அதை மேலும் அதிகரிக்கும் விதத்தில் பாமினி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.