கள்ளன் பவித்ரன் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
"என்ன குருப்பு, என்ன விஷயம்?"- ஆர்வத்துடன் கேட்டான் பவித்ரன்.
"சார், உங்களைப் பார்க்கணும்னு ஒரு பொண்ணு கார்ல உட்கார்ந்திருக்கு."
"பொண்ணா?"- பவித்ரன் எழுந்து நின்றான். அவன் அடுத்த நிமிடம் இங்கிருந்தே காருக்குள் பார்த்தான்.
அவன் பார்ப்பதை கவனித்த அந்தப் பெண் காரின் பின்னிருக்கையில் அமர்ந்தவாறு, தலையை வெளியே நீட்டினாள்.
வெளியே தெரிந்த பெண்ணின் முகத்தைப் பார்த்து பவித்ரன் அதிர்ந்து போய்விட்டான். உள்ளே உட்கார்ந்திருந்தது தமயந்தியின் தங்கை பாமா என்பதைப் புரிந்து கொண்டான்.
"இது அவளோட தங்கச்சியாச்சே!"- பவித்ரன் தன்னை மறந்து கூறினான்.
"ஆமாம்..."- குருப்பு தன்னுடைய குரலைச் சற்று தாழ்த்தியவாறு நடந்த சம்பவத்தை விளக்கினான்."ஸ்டாண்ட்ல காரைப் போட்டு உட்கார்ந்திருந்தேன். அப்போ இந்தப் பொண்ணு வந்து கார்ல ஏறுச்சு. காரை ஸ்டார்ட் பண்ண சொல்லுச்சு. சரின்னு காரைக் கிளப்பினேன். கொஞ்ச தூரம் வந்தபிறகு, காரை இங்க விடச் சொல்லுச்சு. இதென்னடா வம்பாப் போச்சுன்னு நான் காரை நிறுத்திட்டேன். காரை விட்டு இறங்கச் சொன்னேன். இந்தப் பொண்ணு இறங்க முடியாதுன்னு சொல்லிடுச்சு. நானே பிடிச்சு இறக்கிடலாம்னு பார்த்தா, செஞ்சு பார், பார்க்கலாம்னு இந்தப் பொண்ணு சொல்லுது. சார், உங்கக்கிட்ட என்னவோ பேசணும்னு நினைக்குது போலிருக்கு!"
சிறிது நேரம் தான் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப் போய்விட்டான் பவித்ரன். பாமா தன்னை எதற்காகப் பார்க்க வந்திருக்கிறாள் என்பதைப் பற்றி எவ்வளவு நேரம் யோசித்துப் பார்த்தாலும், அவனால் அதைப் பற்றிய ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஏதாவது தான் செய்ய வேண்டியதிருந்து, அதை உடனடியாகச் செய்யாமல் விட்டால் கூட தேவையில்லாமல் தனக்குப் பிரச்சினைதான் வரும் என்பதையும் அவன் நினைக்காமலில்லை. மில்லின் முன்னால் அவளை அதிக நேரம் காருக்குள் உட்கார வைத்திருப்பது கூட, அவ்வளவு நல்ல விஷயமில்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.
"சரி... ஒரு காரியம் செய்..."- பவித்ரன் சொன்னான்."அவளை இறங்கி வரச் சொல்லு. நான் மில்லுக்கு உள்ளே இருக்கேன்."
"கார்?"
"கார் அங்கேயே நிற்கட்டும். அவ விஷயம் என்னன்னு தெரிஞ்சிட்டு போனா போதும்."
மில்லுக்குள் நுழைந்து வந்த பாமினியை பார்த்த பவித்ரன் உண்மையிலேயே அசந்து போனான்.
அவள் நன்றாக வளர்ந்துவிட்டிருந்தாள். அழகோ பல மடங்கு கூடியிருந்தது.
முன்பே அவளுடைய உடல் வனப்பையும் உடல் வளர்ச்சியையும் பவித்ரன் கவனித்ததுதான். வயதிற்கு வந்த பிறகு அவளின் உடல் வளர்ச்சி நிச்சயம் படுவேகத்தில் இருக்கும் என்பது கூட அவன் ஏற்கெனவே நினைத்திருந்ததுதான். இருந்தாலும், முகத்தில் புன்சிரிப்புடன் தன் முன்னால் வந்து நின்றிருந்த பாமினியின் மார்பு கிண்ணென்று இருந்ததையும் காந்தமாக இழுத்த இடுப்புப் பகுதியையும் பார்த்தபோது அவை பவித்ரன் கற்பனை பண்ணி வைத்திருந்ததைத் தாண்டி இருந்தன. எந்த ஆணையும் மனதில் சஞ்சலம் உண்டாக்கக்கூடிய ஒரு கவர்ச்சியான சிரிப்பு பாமினியின் உதட்டிலும் கண்களிலும் குடிகொண்டிருப்பதை பவித்ரனால் உணர முடிந்தது.
"என்ன பாமா?"- பவித்ரனின் குரலில் அவனையும் மீறி ஒருவித மயக்கம் கலந்திருந்தது.
அவள் எதுவுமில்லை என்று தலையை ஆட்டினாள். பிறகு பொதுவான ஒரு வெட்கத்துடன் அவன்முன் அவள் தலைகுனிந்து நின்றாள். மேஜையின் ஒரு மூலையில் விரலால் அவள் சுரண்டிக் கொண்டிருந்தாள்.
"ஏதாவது விசேஷமா?"- எதுவுமே இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டே பவித்ரன் கேட்டான். அதற்கு அவள் எதுவுமில்லை என்று தலையை ஆட்டினாள். அதற்குப் பிறகு அவளைப் பார்த்து வேறு என்ன கேட்பது என்ற தயக்கத்துடன் அவன் நின்றிருந்தான். தாவணிக்குள் பாமினியின் ப்ளவுஸ் திடீரென்று உண்டான ஒரு பரபரப்பாலோ என்னவோ உயர்வதும் தாழ்வதுமாய் இருப்பதை அவன் கவனிக்காமலில்லை.
"நீ இப்போ படிக்கிற இல்ல?"- பவித்ரன் அவளிடம் கேட்டான்.
"டுட்டோரியலுக்கு இப்போ போய்க்கிட்டு இருக்கேன்"- பாமினி சொன்னாள். "அங்க இருந்து வர்றப்போ, அண்ணனோட காரைப் பார்த்தேன். அப்ப அதுல ஏறிப் பார்த்தா என்னன்னு ஆசை வந்திச்சு. ஏறினேன். ஏறின பிறகுதான் கையில காசு இல்லைன்ற விஷயமே ஞாபகத்துல வந்தது. சரி... விஷயத்தை அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு நினைச்சுத்தான் இங்கே வந்தேன்!"
"இதுதான் விஷயமா?"- பவித்ரன் ஒரு வகை நிம்மதியுடன் வாய்விட்டு சிரித்தான். "நான் நினைச்சேன், நீயும் உங்கக்காவைப் போல ஏதோ ஒரு பிரச்சினையோடு வந்திருக்கேன்னு..."
அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டு பாமினியின் முகம் திடீரென்று வாடிவிட்டது. அவளின் முகத்தில் இதுவரை இருந்த சிரிப்பு எங்கேயோ போய் மறைந்து கொண்டது. கவலையும் கோபமும் அவளை மேலும் அழகியாக ஆக்கியதாக பவித்ரன் நினைத்தான்.
"நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்" பவித்ரன் சொன்னான்.
"சரிதான். அதற்காக இப்படியா வாய்க்கு வந்தபடி பேசுறது?" - அவள் தலையை ஒரு மாதிரி வெட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். "ஒரு வயித்துல பிறந்திருக்கோம்னா எல்லாரும் ஒரே மாதிரியாத்தான் இருக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லையே!"
அவள் வெளியேறி நடக்கிறாள் என்பது தெரிந்ததும் பவித்ரனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அவன் அவளுடன் ஓடிச் சென்று, அவளைத் தடுத்தான். ஆனால், அவள் நிற்பதாகத் தெரியவில்லை.
"அண்ணே... உங்களைப் பார்க்கணும்னு மனசுல தோணினதுனாலதான் நான் இங்கேயே வந்தேன். ஆனா, உங்களுக்கு என்னைப் புரிஞ்சுக்கவே முடியலைண்ணே..."- போகும்போது தடுமாறிய குரலில் அவள் சொன்னாள். ப்ளவ்ஸுக்குள்ளிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, என்ன நடந்தது என்பது தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்த டிரைவரின் முகத்தில் வீசி எறிந்துவிட்டு அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் எதுவும் தராமலும் அதே நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் கையாள வேண்டிய ஒரு சம்பவம் அது. இளமையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு பெண் வெளிப்படுத்தும் கிறுக்குத்தனமான செயல்களில் ஒன்றுதான் அவளின் வரவு என்ற அளவில்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. விளையாட்டுத்தனமான ஒரு பெண்ணின் நடவடிக்கையே அது. ஆனால், பவித்ரனால் சாதாரணமாக அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பாமினியின் வரவை அப்படிப் பார்க்கவில்லை. மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிய அந்தச் சிறு சம்பவம் அவனை ஒரேயடியாக அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
அதற்குக் காரணம் இல்லாமலில்லை. பெரிய மனுஷியாவதற்கு முன்பே பாமினியின் வசீகரிக்கக்கூடிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பவித்ரனை பல நேரங்களில் காந்தமென ஈர்த்திருக்கின்றன. இந்தப் பெண் வளர்ந்து வரும்போது என்ன மாதிரி வருவாள் என்று அன்றே அவன் மனதில் கற்பனை பண்ணி மெய்மறந்து போயிருக்கிறான்.