
உண்மையாகச் சொல்லப் போனால் பவித்ரனின் அப்போதைய தேவை காப்பி குடிப்பதற்கான காசுதான். ஆனால், அந்த மனிதரின் நடவடிக்கையையும் பேச்சையும் பார்த்தபோது அந்த அளவுக்குத் தான் கீழே இறங்க வேண்டுமா என்று அவன் யோசித்தான்.
"காப்பி குடிக்க காசு தர்றதுக்கு இது என்ன பாவக்காயா?"- பவித்ரன் கோபத்துடன் கேட்டான்.
கடைக்காரர் அவனையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். தான் மனதில் நினைத்ததைப் போல பொருள் அவ்வளவு எளிதாக தன்னுடைய கைகளுக்கு வராது போலிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அந்த மனிதரின் குரல் இலேசாக மாறி ஒலித்தது.
"அப்படின்னா நாம இதை எடை போட்டுப் பார்ப்போம்." அவர் சொன்னார். "ஆனா, ஒரு விஷயம். எடைக்கு ஏற்ற மாதிரி காசு தர முடியாது."
"என்ன காரணம்."
"சரக்கு ஒரிஜினல் கிடையாது..."- அவர் மீண்டுமொரு முறை சிலையை இப்படியும் அப்படியுமாய் புரட்டிப் பார்த்தார். பிறகு தனக்குத்தானே அவர் கூறிக் கொண்டார். "இதுல கலப்படம் இருக்கு..."
பவித்ரன் அவரின் கையைத் தட்டி விட்டவாறு, சிலையைத் துணியில் சுற்ற ஆரம்பித்தான்.
"இவர் எடை போடப்போற தராசுல எந்த தப்பும் இல்லைன்ற மாதிரிதான் பேச்சு..."- அவன் முணுமுணுத்தான்.
கடைக்காரர் அதற்கு எந்த பதிலும் கூறுவதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் வேகமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
வேறு ஒன்றிரண்டு கடைகளில் பவித்ரன் நுழைந்து பார்த்தான். அங்கும் சரியாக வியாபாரம் நடப்பது மாதிரி தெரியவில்லை. அப்போது சாலை பயங்கரமாகத் தகித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய தொண்டை ஒரேயடியாக வற்றிப் போய்விட்டிருப்பதை பவித்ரன் உணர்ந்தான். அவனுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
கடவுளின் கோபம் என்ற ஒரே காரணத்தால்தான் அந்தச் சிலையை இன்னும் தன்னால் விற்க முடியவில்லை என்று அவன் நினைத்தான். ஐந்து, பத்து கிடைத்தால் கூட போதும் அவன் அதை விற்கத் தயாராகவே இருந்தான். இருப்பினும் ஒவ்வொரு காரணத்தால் அது விற்பனையே ஆகவில்லை.
மிகவும் களைத்துப் போய் தன்னால் இனிமேல் நடக்க முடியாது என்று உணர்ந்தபோது, இனிமேல் நடந்து ஒரு பயனுமில்லை. வெறுமனே நடந்து திரிவதை விட்டுவிட்டு வியாபாரியைப் பார்த்து தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு சிலையை அவரிடமே ஒப்படைத்து விடுவதுதான் சரியான செயல் என்று முடிவெடுத்தான். நிச்சயம் அவர் தேநீர் குடிப்பதற்கும் ஊருக்குப் போக பஸ் செலவிற்கும் பணம் தராமல் இருக்க மாட்டார் என்று முழுமையாக நம்பினான் பவித்ரன். அப்படி இல்லாமல் தன்னைப் போலீஸ்காரர்களிடம் அவர் பிடித்துக் கொடுப்பதாக இருந்தாலும், கொடுக்கட்டும் என்றும் அவன் நினைத்தான்.
திருடன் பவித்ரன் பாத்திரக் கடையைத் தேடிச் சென்ற நிமிடத்தில், வியாபாரி தன்னுடைய அதே பழைய இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். கடையில் பொருள் வாங்க வந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து அதைத் தட்டிப் பார்ப்பதும், குலுக்கிப் பார்ப்பதும், விலை பேசுவதுமாக நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாக இருக்க வேண்டுமென்று நினைத்தான் பவித்ரன். முன்பு அவன் பார்த்திராத ஒரு கிழவன் வேலைக்காரனாக அங்கு நின்று அவர்களுக்குப் பொருளை எடுக்க உதவி செய்து கொண்டிருந்தான். அந்தக் கிழவனுக்கு வயது எழுபதோ எண்பதோ கூட இருக்கும்.
பாத்திரங்களை வாங்கிக் கொண்டு அவர்கள் போவது வரை பவித்ரன் ஒரு ஓரத்தில ஒதுங்கி நின்றிருந்தான். வேலைக்காரக் கிழவன் கடைக்குள் சென்றான். வியாபாரி மீண்டும் தடிமனான புத்தகத்தை எடுத்து தனக்கு முன்னால் வைத்தார்.
எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதைப் பற்றியோ என்ன பேசுவது என்பதைக் குறித்தோ ஒரு தீர்மானமான முடிவு இல்லாமலிருந்த பவித்ரன் ஒரு ஓரத்தில் பதுங்கிய மாதிரி நின்றிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ நடப்பது நடக்கட்டும் என்று முன்னால் வந்தான்.
நிழல் அசைவதைப் பார்த்து வியாபாரி தலையை உயர்த்திப் பார்த்தார். பவித்ரனை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு அவருக்கு ஒரு நிமிடம் ஆனது. அவனை அடையாளம் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் அவர் புன்னகைத்தவாறு கேட்டார். "யாரு? பவித்ரனா?"
வியாபாரி தன்னுடைய பெயரை இன்னும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது பவித்ரனின் மனதில் இருந்த குற்ற உணர்வு மேலும் அதிகமாகியது. நேற்று இரவு தன்னுடைய கடைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து பொருளைத் திருடிச் சென்ற திருடன் ஒருவன் தனக்கு முன்னால் நின்றிருக்கிறான் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவருடைய மனதில் எப்படியெல்லாம் சிந்தனைகள் அலைமோதும் என்பதை அவனால் மனதில் கற்பனை பண்ணி பார்க்க முடிந்தது. "பிறகு... என்ன விசேஷங்கள் பவித்ரா?"- வியாபாரி அவனைப் பார்த்து கேட்டார்.
பவித்ரன் அதற்கு பதில் சொல்வது மாதிரி கையிலிருந்த துணிப் பொட்டலத்தை மேஜை மேல் வைத்தான்.
"நீ சரியான ஆளுதான்."- அவனைப் பாராட்டும் வகையில் வியாபாரி சொன்னார். "பொட்டலத்தை அவிழ்த்துக்காட்டு... பார்ப்போம்."
பொட்டலத்தை அவிழ்க்கும்போது பவித்ரனின் கைவிரல்கள் நடுங்கின. இன்னும் சிறிது நேரத்தில் உண்டாகப் போகிற விபத்தை நினைத்துப் பார்த்தபோது அவன் உடம்பெங்கும் பயத்தால் நடுங்கியது. இருந்தாலும் அவன் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை. பழைய துணிக்குள் இருந்த அந்த துருப்பிடித்த சிலையையே வியாபாரி சிறிது நேரம் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் அவர் முகம் புன்னகையால் மலர்ந்தது.
"ஒவ்வொரு பொருளையும் பார்த்தா..."- பாதி தனக்குத்தானேயும் மீதி பாதி பவித்ரனுக்கும் என்பது மாதிரி வியாபாரி சொன்னார். "ஆமா... இது எங்கேயிருந்து உனக்குக் கிடைச்சது?"
அதைக் கேட்டு இடி விழுந்த மனிதனைப் போல செயலற்று நின்று விட்டான் பவித்ரன். அப்போது இரண்டு விஷயங்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது விஷயம்- தன்னுடைய கடையில் முதல்நாள் இரவு பொருள் திருடுபோன விஷயமே இந்த நிமிடம் வரை வியாபாரிக்குத் தெரியாது என்பது இரண்டாவது விஷயம்- இந்தச் சிலை தனக்குச் சொந்தமான ஒன்று என்ற உண்மையே அவருக்குத் தெரியாமலிருப்பது.
தான் தவறு செய்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இதுவல்ல என்பது பவித்ரனுக்குப் புரிந்தது. இருப்பினும், அவனுக்குப் பேச நாக்கு சரியாக வரவில்லை. "கைமள்..."- வியாபாரி உரத்த குரலில் அழைத்தார்.
உள்ளே பாத்திரங்களின் சத்தம் கேட்டது. கைமள் அங்கு வந்தார். இந்த முறையும் அவர் பவித்ரனைப் பார்க்கவேயில்லை.
கணக்கு எழுதிக் கொண்டிருக்கும்போதே வியாபாரி சொன்னார். "இதைக் கொண்டு போயி எடை எவ்வளவு இருக்குன்னு பாருங்க.."
கைமள் கட்டப்பட்ட துணியுடன் சிலையை எடுத்துக் கொண்டு உள்ளே போனார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook