கள்ளன் பவித்ரன் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7146
எதுவுமே நடக்காதது மாதிரி வியாபாரி எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
வியாபாரியின் நடவடிக்கைகளிலும், நடந்து கொள்ளும் முறைகளை வைத்தும் தன்னால் எதையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் பவித்ரனின் பயம் இன்னும் முழுமையாக நீங்காமல் அப்படியே இருந்தது. தான் கொண்டு வந்தது திருட்டுப் பொருள்தான் என்ற உண்மை தெரிந்தாலும் அவர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியே அவர் அதைக்கண்டு பிடிக்காமல் இருந்தாலும், ஒரு மாதிரியான அறிவைக் கொண்ட கிழவன் கைமள் ஒரு வேளை இங்கிருந்து திருடிக் கொண்டு போகப்பட்ட சிலைதான் அது என்பதைக் கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை உண்டானாலும் தனக்கு பிரச்சினைதான் என்று நினைத்தான் பவித்ரன்.
தான் கொண்டு வந்தது இங்கிருந்து கொண்டு போன திருட்டு பொருள்தான் என்பதை அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னால், தான் செய்த குற்றத்தை தானே ஒப்புக் கொள்வதுதான் சரியான விஷயமாக இருக்கும் என்று நினைத்தான் பவித்ரன்.
"முதலாளி.." - பவித்ரன் என்னவோ சொல்வதற்காக வாயைத் திறந்தான்.
வியாபாரி தலையை மெதுவாக அவன் பக்கம் திருப்பினார். அவரின் பிரகாசமான கண்கள் பவித்ரனின் முகத்தை ஆராய்ந்தன.
பவித்ரனுக்கு அதற்குமேல் பேச்சே வரவில்லை. ஒரு வகையான பதைபதைப்புடன் அவன் நான்கு திசைகளிலும் கண்களை ஓட்டினான்.
அவன் வாய் திறந்து எதையாவது கூறுவதற்கு முன்பு உள்ளே பாத்திரங்களின் சத்தம் கேட்டது. வாசல் கதவோரத்தில் கைமள் வந்து நின்றார். அவரின் பார்வையில் இதற்கு முன்பு தான் பார்த்திராத ஒரு மதிப்பு தெரிவதை பவித்ரனால் உணர முடிந்தது. தன்னுடைய இதயம் படுவேகமாக அடிப்பதை அவனே கேட்டான்.
"என்ன கைமள்?"- வியாபாரி மிடுக்கான குரலில் கேட்டார்.
கைமள் பதில் சொல்வதற்குச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் முதல் முறையாக பவித்ரனின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.
எங்கேயோ ஒரு ஆபத்திற்கான அறிகுறி சூசகமாக மறைந்திருப்பதைப் புரிந்து கொண்ட வியாபாரி தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். அவர் கைமள் இருக்குமிடத்தை நோக்கி நடந்தார். கைமள் மீண்டும் உள்நோக்கி நடந்தார். வியாபாரி அவருக்குப் பின்னால் நடந்து போய் பவித்ரனின் பார்வையிலிருந்து மறைந்தார்.
கால்களுக்கு ஓடும் சக்தி இருந்திருந்தால், அந்த நிமிடத்திலேயே பவித்ரன் தலை தெறிக்க ஓடியிருப்பான். மீண்டுமொரு முறை அந்த மார்க்கெட்டிற்கோ வியாபாரியின் முன்போ வராத அளவிற்கு அவன் நிரந்தரமாக உலகத்தின் எந்த மூலையை நோக்கியாவது ஓடி மறைந்திருப்பான்.
உள்ளே பாத்திரங்கள் உண்டாக்கிய சத்தம் கேட்டது. கைமள் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றார். அவர் பவித்ரனையே ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தவாறு நின்றார். பிறகு அவனைப் பார்த்து கண்களால் ஜாடைகாட்டி உள்ளே அழைத்தார். அங்கே பாத்திரங்களின் குவியலை எதிர்பார்த்து நுழைந்த பவித்ரனின் கண்களில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நடைபாதை தெரிந்தது. அங்கேயும் இங்குமங்குமாய் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றின் மேல்படாமலும், மிதிக்காமலும் நடந்து செல்வதற்கு பவித்ரன் மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. நடந்து சென்ற பாதை ஒரு பெரிய ஹாலில் போய் முடிந்தது. அங்கு சூரியனைப் போன்ற ஒரு பல்ப் பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதை பவித்ரன் கவனித்தான்.
ஹாலின் பல மூலைகளிலும் பல கிழவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கைகளிலும் முன்னாலும் செம்பு, பித்தளைப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. அவர்களில் சிலர் பாத்திரங்களைத் தட்டி ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தனர். பாத்திரங்களைத் திருப்பிக் கொண்டும் தடவிக் கொண்டுமிருந்தனர்.
பவித்ரன் அங்கு வந்தவுடன் அவர்கள் எல்லோரும் அவனையே வைத்த எண் எடுக்காது பார்த்தார்கள்.
ஹாலின் தூரத்து மூலையிலிருந்த கதவை கைமள் மெதுவாகத் தட்டினார். அந்தக் கதவு உள்ளேயிருந்து திறக்கப்பட்டது. கதவைத் திறந்து பிடித்திருந்த கிழவன் தான் ஏற்கெனவே பார்த்த ஆள்தான் என்பதைப் புரிந்து கொண்டான் பவித்ரன். கதவைத் தாண்டி ஒரு சிறு பாதை இருந்தது. அதன் எல்லையில் இன்னொரு கதவு.
கைமள் கதவைத் திறந்து பிடித்தவாறு நின்றார். பவித்ரன் உள்ளே நுழைந்தான். அவன் நுழைந்ததும், கைமள் கதவை வெளியே இருந்தவாறு பலமாக அடைத்தார்.
பெரிய ஒரு மேஜைக்குப் பின்னால் சிம்மாசனம் போல் காணப்பட்ட ஒரு நாற்காலியில் வியாபாரி அமர்ந்திருந்தார்.
பிரகாசித்துக் கொண்டிருந்த மேஜை மேல் துருப்பிடித்த அந்த சிலை இருந்தது.
"உட்காரு பவித்ரா"- எதிரில் இருந்த நாற்காலியை விரலால் சுட்டிக் காட்டியவாறு வியாபாரி சொன்னார். அவரின் குரலில் இதற்கு முன்பு அவன் கேட்டிராத உரிமையோடு கூடிய ஒரு கிண்டல் தெரிந்தது.
கால்கள் மிகவும் பலமிழந்து போயிருந்ததால், பவித்ரன் வியாபாரி சொன்ன அடுத்த நிமிடமே உட்கார்ந்தான். பயங்கரமான ஒரு விசாரணையை தான் இப்போது சந்திக்கப் போகிறோம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.
"இதற்கு நான் எவ்வளவு விலை தரணும்?"- வியாபாரி கேட்டார்.
அவரின் குரலில் கிண்டல் பலமாக இருப்பதை பவித்ரனால் உணர முடிந்தது. அவன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தான் தலை குனிந்தவாறு. சரியாகச் சொல்லப் போனால் ஒரு திருடனைப் போலவே அவன் அமர்ந்து அந்த பொம்மையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படி அமர்ந்திருந்தபோது, பவித்ரனே அதிர்ச்சியடைகிற மாதிரி அவனுடைய தலைக்குள் ஒரு சிந்தனை புகுந்து ஓடிக் கொண்டிருந்தது.
பளிச்சென்று ஒரு உண்மை அவன் கண் முன்னால் தெரிந்தது. சிலையின் மார்புப்பகுதி இலேசாகச் சிதைந்திருந்தது. அந்த சிதைந்த பகுதி முன்பிருந்த மாதிரி இல்லாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. படர்ந்திருந்த துருவை அவர்கள் உரசிப் பார்த்திருக்க வேண்டும்!
எது எப்படியோ சிலையில் தெரிந்த அந்த பிரகாசம் தங்கத்தின் விளைவால் உண்டானது என்பதைப் புரிந்து கொள்ள பவித்ரனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.
ஒரு பொன்னால் ஆன சிலை!
அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பவித்ரனுக்கு நீண்ட நேரம் ஆனது. அது தெரிந்ததும், தன்னுடைய நரம்புகள் வழியாக சூடாக ஏதோவொன்று பாய்ந்தோடுவதை அவனால் உணர முடிந்தது. பயத்தின், குற்றவுணர்வின் பாதிப்பை ஒரு பக்கம் தூக்கியெறிந்து விட்டு சுகமான அந்த வெப்பக்காற்று அவன் உடம்பெங்கும் படர்ந்து, புதுவிதமான ஒரு சந்தோஷ அனுபவத்தை அவனிடம் உண்டாக்கியது.
"எடை போடுங்க. நியாயமா என்ன தரணுமோ, அதைத் தாங்க"- பவித்ரன் சொன்னான். "என்னோட உழைப்பும் கஷ்டமும் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?"
அவன் அப்படி அடக்கமான குரலில் பேசியது வியாபாரிக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுகிற நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் இலேசாக ஆடினார்.