கள்ளன் பவித்ரன் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7146
பவித்ரன் சொந்தத்தில் தானே ஒரு மில் தொடங்கத் தீர்மானித்தான். மாமச்சனின் மில்லைவிட எந்தவிதத்தில் பார்த்தாலும் சிறந்த ஒரு மில்லாக அது இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தான் அவன்.
ஜானகி அவனுடைய அந்த தீர்மானத்தைக் கேட்டதும் மூக்கில் விரல் வைத்து நின்று விட்டாள். "இது நடக்கக்கூடிய விஷயமா?" என்று அவள் வியப்புடன் கேட்டாள்.
"நடக்காம பிறகு...?"- பவித்ரன் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.
அப்படி வெறுமனே சொன்னதோடு பவித்ரன் நின்றுவிடவில்லை. மில் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் அப்போதிருந்தே மிகவும் தீவிரமாக அவன் ஈடுபடவும் தொடங்கினான். மார்க்கெட்டைத் தாண்டி இருந்த ஐந்து செண்ட் நிலத்தை அவன் உடனடியாக விலைக்கு வாங்கினான். கடைகள் இருக்குமிடத்திலிருந்து பார்த்தாலும், மார்க்கெட் இருக்குமிடத்தின் முக்கியத்துவத்தை வைத்துக் கொண்டு பார்த்தாலும் மாமச்சனின் மில் இருக்குமிடத்தைவிட நிச்சயமாக பவித்ரன் வாங்கியிருக்கும் இடம் எல்லாவகைகளிலும் மிகவும் பொருத்தமான இடமே என்று எல்லோரும் சொன்னார்கள். இத்துடன் மாமச்சனை பவித்ரன் மண்ணைக்கவ்வ வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் என்று உறுதியாக எல்லோரும் நம்பினார்கள்.
பவித்ரன் எப்படி இவ்வளவு சீக்கிரமாக பணக்காரனாக ஆனான் என்ற ரகசியத்தை அவிழ்ப்பது என்பது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லை. அவரவர்கள் தங்கள் மனம்போனபடி கற்பனை பண்ணிக் கொண்டு, அவர்களகாவே ஏதாவது ஒரு கதையை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது£ன். அவனுக்கு எங்கிருந்தோ புதையல் கிடைத்திருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டார்கள். ஆனால், எப்படி அந்தப்புதையல் அவனுக்குக் கிடைத்தது என்பதுதான் யாருக்குமே தெரியவில்லை. சிலர் கள்ளநோட்டு அடிதிததன் மூலம் பவித்ரன் பணக்காரனாகியிருப்பானோ என்று சந்தேகப்பட்டார்கள். வேறு சிலரோ அவன் பாரசீகத்துக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் கூட்டத்துடன் தொடர்பு இருக்கிறதென்று பேசிக் கொண்டார்கள்.
இந்த மாதிரியான கதைகளைக் கேட்டு பவித்ரன் தனக்குள் சிரித்துக் கொள்வான். தமயந்தி தன்னை விட்டு போனது எவ்வளவு நல்ல விஷயம் என்று அவன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். இல்லாவிட்டால் இதே மனிதர்கள் வாய் கூசாமல் தமயந்தியையும், அவளுடைய தங்கையையும் வைத்துத் தான் தான் பணம் சம்பாதித்து பெரிய மனிதனாக ஆனதாகக் கூட சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
"கஷ்டப்பட்டு உழைக்கணும்"- தன்னைப் பார்க்க வந்தவர்கள் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும்போது பவித்ரன் சொன்னான். "பிறகு... கடவுளோட கருணை நம் மேல இருக்கணும்."
எது எப்படியோ ஒருநாள் மார்க்கெட்டையொட்டி பவித்ரன் புதிதாக வாங்கிய நிலத்திற்குப் பக்கத்தில் ஒரு லாரி வந்து நின்றது. அடித்தளம் அமைப்பதற்கான கருங்கற்களை அந்த லாரி ஏற்றி வந்திருந்தது.
அதே நாளன்று அதற்குப் பிறகு பல முறைகள் லாரி வருவதும், பொருட்களை இறக்குவதுமாகவே இருந்தது.
அடுத்த நாள் மில் கட்டும் வேலை தொடங்கியது.
அந்த நிமிடமே ஊர்க்காரர்கள் திருடன் பவித்ரனுக்கப் பின்னால் அணி திரண்டு நிற்க ஆரம்பித்தார்கள். மில்லுக்குத் தேவையான இயந்திரமும் மற்ற கருவிகளும் ஜப்பானிலிருந்து கப்பலில் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டதும் எல்லோரும் உணர்ச்சிமயமாகி விட்டார்கள். மாமச்சனின் மில்லை ஒரு வழி பண்ண வேண்டும் என்பது ஒரு பொதுத்தேவை என்பது மாதிரி நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
நெல் அரைக்கப் போகும் பெண்கள் பவித்ரனைப் பார்த்து வெட்கம் கலந்த குரலில் கூறினார்கள்.
"அண்ணே... சீக்கிரம் மில்லைக் கட்டி முடிங்கண்ணே... அந்த மாட்டோட மில்லுக்கு அரிசி அரைக்கப் போனா, அதை ஒழுங்கா அரைச்சுத் தர்றது இல்லே. பாதி அரிசியும் பாதி தவிடுமா இருக்கும். நாங்க வேற வழியே இல்லாம அங்கே போய்ட்டு இருக்கோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மில்லைத் தொடங்கினீங்கன்னா, நாங்க எல்லோரும் இங்கே வந்துடுவோம்ணே."
மில் வேலை துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியத்திற்குள்ளானவள் ஜானகிதான். தன் கணவனுக்கு சித்து வேலை ஏதாவது தெரிந்திருக்குமோ என்று அவள் சந்தேகப்படத் தொடங்கினாள். இல்லாவிட்டால் இப்படியெல்லாம் காரியங்கள் நடக்குமா என்று அவள் சிந்திக்கலானாள்.
மில் என்று சொன்னவுடன் மில் உருவாகி விட்டது!
தன் கணவனிடம் தனக்கு ஏதாவது வேண்டும் என்று கேட்பதற்கே அவள் பயந்தாள்.
பவித்ரனின் மில் எல்லோரும் எதிர்பார்த்தது மாதிரியே வெற்றிகரமான விஷயமாக அமைந்தது. இவ்வளவு நாட்களும் இதற்கென்றே காத்திருந்ததைப் போல பெண்கள் அவனின் மில்லுக்கு கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கினார்கள். தன்னை மாரியாதை ராமனென காட்டிக் கொண்டு நடந்த மாமச்சனின் செயல்கள் நாளடைவில் அவர்கள் யாருக்குமே பிடிக்காமல் போய்விட்டது.
பவித்ரன் மில் வேலைக்காக வெளியிலிருந்து ஒரு ஆளைக் கொண்டு வந்திருந்தான். கணேசன் என்ற பெயரைக் கொண்ட அந்த இளைஞன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். பெண்களிடம் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டு பொழுதைக் கழிக்கும் குணத்தைக் கொண்டவனல்ல அவன். வேலை செய்கிற நேரத்தில் அதைத்தவிர வேறு எந்த சிந்தனையும் அவனுடைய மனதில் இருக்காது.
பவித்ரனின் மில்லில் எந்தவித திருட்டுத்தனமும் இல்லை என்று அங்கு நெல் அரைக்கப் போன பெண்கள் எல்லோருமே சொன்னார்கள். அவ்வளவுதான்- மாமச்சனின் நிலைமை நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. நெல் அரைப்பதற்காகச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து, நாளடைவில் யாருமே அங்கு போவதில்லை என்ற சூழ்நிலை உண்டானது.
பவித்ரன் மில் தொடங்கப் போகிறான் என்ற செய்தியைக் கேட்டு, ஆரம்பத்தில் அதைப் பற்றி கிண்டலடித்துப் பேசிய மனிதர் மாமச்சன். 'பவித்ரன் நெல் அரைக்கப் போகும் மில்லைக் கட்டப் போகிறானா இல்லாவிட்டால் பெரிய காட்டன் மில் எதுவுமா' என்று தன்னைப் பார்ப்பவர்களிடம் கிண்டல் பண்ணி கேட்டவர் அவர். தன்னைத்தவிர வேறு யாராலும் மில்லை நடத்த முடியாது என்று உறுதியான நம்பிக்கையில் தான் அவர் இப்படியெல்லாம் பேசினார்.
பவித்ரனின் ஆச்சரியப்படும்படியான வளர்ச்சியைப் பார்த்து மாமச்சன் உண்மையிலேயே வியப்படைந்து போனார். மாமச்சனை இப்படி ஒரேயடியாக வேலையில்லாமல் உட்கார வைக்க வேண்டுமென்பதற்காகத்தானே பவித்ரன் இப்படியொரு வளர்ச்சியையே அடைந்தான்?
திருடன் பவித்ரன் எப்படி பணக்காரனானான் என்ற ரகசியத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட ஊர்க்காரர்கள் அவன் எப்படி மாமச்சனை ஒன்றுமில்லாத மனிதராக ஆக்குகிறான் என்பதைப் பார்ப்பதிலேயே அதிக ஆர்வத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால், மாமச்சன் இந்த விஷயத்தில் ஆர்வத்துடன் இருக்க முடியாதே! தான் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது நன்கு தெரிந்தபிறகும், அவருடைய சிந்தனை இன்னொரு விஷயத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. பவித்ரன் எப்படி பணக்காரனாக ஆனான் என்பதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் மறுவேலை என்று நினைத்தார் அவர்.