கள்ளன் பவித்ரன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7142
இது உண்மையாகவே நடந்த ஒரு கதை.
கேரள அரசாங்கம் ஏழைகளுக்கென்று அமைத்துக் கொடுத்த இலட்சம் வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அந்தச் சிறு வீட்டில் பவித்ரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு திருடனும் அவனுடைய குடும்பமும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டான் பவித்ரன். கண்ணில்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அவன் திருட ஆரம்பித்து விடுவான் என்பதற்காகத் தான் அவனுக்கு கள்ளன் பவித்ரன் அல்லது திருடன் பவித்ரன் என்ற பெயர் எல்லோராலும் தரப்பட்டது.
அவன் சம்பாதித்ததே அந்த ஒரு பெயரைத்தான். கணக்கே இல்லாமல் சிறு சிறு திருட்டுக்களைச் செய்ததன் மூலம் அவன் பெரிதாக சம்பாதித்து விட்டான் என்று கூறிவிடுவதற்கில்லை. அப்படிச் சம்பாதித்து தன்னுடைய மனைவிமார்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிர் காலத்திற்காக சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் சொல்வதற்கில்லை.
அந்தக் கவலை பவித்ரனின் மனதில் இருக்கவே செய்தது.
தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வந்து சேர்ந்தபிறகு பெரிய அளவில் இருக்கிற திருட்டை மட்டுமே இனி மேல் செய்வது என்று அவன் தன் மனதிற்குள் தீர்மானம் செய்து வைத்திருந்தான்.
இருந்தாலும் திருடன் பவித்ரன் என்ற பட்டப்பெயர் அவனை விட்டு நீங்காமலே இருந்தது. கழுவினாலும் மறைக்க முயற்சித்தாலும் போகாத அளவிற்கு ஒரு கறையைப் போல தன்னுடைய பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழியைப் போல ஒட்டிக் கொண்டிருந்த திருடன் என்கிற அந்தப் பட்டத்தை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மனதில் வருத்தமும் இனம்புரியாத முன் கோபமும் உண்டானதென்னவோ உண்மை.
பவித்ரனுக்கு இரண்டு மனைவிகளும், அவர்கள் மூலமாக ஆறேழு பிள்ளைகளும் இருந்தார்கள். இரண்டு மனைவிகளும் தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் வசித்துக் கொண்டிருந்தார்கள். முதல் மனைவி இலட்சம் வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்தாள். இரண்டாவது மனைவி அவளுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இருந்தாள். பாதி எல்லோருக்கும் தெரிந்தும் பாதி யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும் பவித்ரன் அவ்வப்போது அவளைப் போய் பார்த்துவிட்டு வருவான். கையில் பணமிருக்கும்போது, அவள் கையில் ஏதாவது தருவான்.
பவித்ரன் பொதுவாக திருடுவதற்காகப் போவதில் அவன் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் சிறிது கூட விருப்பம் இல்லைதான். இருந்தாலும் அவன் போகாவிட்டால், அவர்களுக்குத் தேவையான எதையும் வாங்க முடியாது என்ற உண்மை அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், அவர்கள் அவனது திருட்டுத் தொழிலை ஆதரிக்கவே செய்தார்கள்.
பெரும்பாலும் அவன் சிறு சிறு திருட்டுக்களைத்தான் செய்து கொண்டிருந்தான். ஐந்து தேங்காய்களைத் திருடுவான். இல்லாவிட்டால் ஒரு குலை முற்றாத நிலையில் இருக்கும் பாக்கைத் திருடுவான். நாற்றுகள் இருந்தால் பத்து பிடி நாற்றுகளைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் விற்பான். நெற்கதிர் நன்றாக முற்றியிருந்தால், நான்கைந்து கட்டுகளைத் திருடிக் கொண்டு போய் விற்று, அதை வைத்து தன்னுடைய குடும்பத்தை அவன் காப்பாற்றுவான்.
பொதுவாக திருடும் பொருட்களை விற்று கள்ளு குடிப்பதில்லை என்ற கொள்கையைப் பவித்ரன் வைத்திருந்தான். யாரோ ஒருவருக்குச் சொந்தமான பொருளைத் திருடுவது தப்பான ஒன்று என்பதையும், அதை விற்றுக் கிடைக்கும் பணத்தில் கள்ளு குடிப்பது என்பது அதைவிட மிகப்பெரிய பாவச் செயல் என்பதையும் சிறு வயது முதற்கொண்டே பவித்ரன் நன்கு அறிந்திருந்தான். அதனால் திருட்டுப் பொருட்களை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வேறு எதையும் வாங்காமல் நேராக அதைத் தன்னுடைய வீட்டில் கொண்டு போய் கொடுப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
பவித்ரனின் இந்தத் தனித்துவ குணத்தை அவனின் வீட்டைச் சேர்ந்தவர்களும் ஊர்க்காரர்களும் மட்டுமல்ல- போலீஸ்காரர்களும் கூட நன்கு தெரிந்திருந்தார்கள். அதனால்தான் பாத்திரங்களைத் திருடியது நிச்சயம் பவித்ரனாக இருக்காது என்று போலீஸ்காரர்கள் நினைத்தார்கள். அவன் அந்தப் பாத்திரங்களைத் திருடியிருந்தால், அதை விற்ற பணம் கட்டாயம் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்குமே! கடைசியில் அவனும் வீடு வந்து சேர்ந்திருப்பானே!
அன்று பகல் முழுவதும் பவித்ரனைத் தேடி எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார்கள் போலீஸ்காரர்கள். ஆனால், அவன் அவர்கள் கண்களிலேயே படவில்லை. அவனுடைய வீட்டிலும் அவர்கள் ஒரு கண் வைத்துக் கொண்டு இருந்தார்கள். முதல்நாள் மதிய நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிய பவித்ரன் அதற்குப் பிறகு இப்போதுவரை திரும்பி வரவில்லை. அவன் வீட்டிற்கு வந்தவுடன், அந்தத் தகவலை உடனே தங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென அவனுடைய எதிரியும், அதே ஊரைச் சேர்ந்தவனுமான ஒரு ஆளிடம் கூறிவிட்டு, அவன் சாதாரணமாக இருக்கக்கூடிய மற்ற இடங்களைத் தேடி அவர்கள் புறப்பட்டனர்.
ஆனால், பவித்ரன் எங்குமே தென்படவில்லை. அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமே இல்லாததால், யாரிடமும் அவனைப் பற்றி விசாரிப்பதே வீண் என்றெண்ணினார்கள் போலீஸ்காரர்கள்.
திருட்டுப் போன பாத்திரங்களின் சொந்தக்காரனான மாமச்சனைப் பொறுத்தவரை, அவற்றைத் திருடியது நிச்சயம் திருடன் பவித்ரன்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் இருந்தான். அவன் அப்படி நினைத்ததற்கு காரணங்கள் இருந்தன. பவித்ரன் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்ள இரண்டு சம்பவங்கள் காரணமாக இருக்கலாம் என்று அவன் நினைத்தான்.
அந்த ஊரில் ஒரு சிறு நெல் அரைக்கும் மில்லைச் சொந்தமாகக் கொண்டிருந்தான் மாமச்சன். ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் அலைந்து திரிந்து வந்த பவித்ரன் யாருமில்லாமல் தனியாக மில்லில் அமர்ந்திருந்த மாமச்சனிடம் தனக்கு ஒரு வேலை உடனடியாக வேண்டுமென்று கேட்டான். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, அவ்வளவுதான் தனக்குத் தேவை, சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்றான் அவன்.
"இங்கே எந்த வேலையும் காலி இல்லையே!" - மாமச்சன் சொன்னான், "சம்பளத்துக்கு ஆள் வைக்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லையே!"
"சம்பளம் இல்லேன்னா பரவாயில்ல... எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுங்க போதும்"- பவித்ரன் சொன்னான்.
பவித்ரனைப் பொறுத்தவரை தன்னுடைய பெயருக்கு முன்னால் இருக்கும் 'திருடன்' என்ற அடைமொழியை எப்படியாவது இல்லாமற் செய்ய வேண்டும். அது ஒன்றுதான் அப்போதைய அவனுடைய ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால், மாமச்சனின் மனதிற்குள்ளோ அவனைப் பற்றி வேறுவிதமாக சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. சம்பளம் வேண்டாம் என்று அவன் கூறுகிறானென்றால், வேறு வகையில் ஏதாவது வருமானம் வரும்படி செய்து கொள்ளலாம் என்று அவன் தனக்குள் கணக்குப் போடாமலா இருப்பான் என்று அவன் நினைத்தான்.